வேங்கடம் முதல் குமரி வரை 5/007-019

7. செவிசாய்த்த விநாயகர்

ரு சிறு கதை. ஆம் பள்ளிச்சிறுவராக இருந்த போது நாமெல்லாம் படித்தக்கதைதான். வகுப்பில் வரிசையாக பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லோரும் ஏழு, எட்டு வயது நிரம்பாதவர்களே. திண்ணைப் பள்ளிக் கூடந்தானே. வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பையன்களில் சிலர் பாடத்தைக் கேட்கிறார்கள், சிலர் விளையாடுகிறார்கள். சிலர் முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கு ஓர் எலி வளை, வளைக்குள் ஓர் எலி எதனையேர் இழுத்துக் கொண்டு செல்கிறது. இதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு பையன். பாடம் நடத்திக் கொண்டிருக்கிற உபாத்தியாயர் திடீரென்று அந்தப் பையனைப் பார்த்து கேட்கிறார்:

'அடே! நான் சொல்லுகிறதெல்லாம் உன் காதில் நுழைகிறதாடா' என்று எலியையே கவனித்துக் கொண்.டிருந்த பையன் படக் கென்று 'ஆமா சார் எல்லாம் நுழைந்து விட்டது வால் மாத்திரம்தான் நுழையவில்லை சார்' என்று பதில் சொல்லுகிறான். இத்துடன் இந்த ஹாஸ்யக்கதை முடிந்து விடுகிறது. நாமும் கேட்டுக் களித்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பதிலைக் கேட்டு அந்த வாத்தியார் சும்மாவா இருந்திருப்பார்? பயலே! பாடத்தைக் கவனிக்காமல் எலி வளையில் நுழைவதையா அத்தனை அக்கறையோடு கவனித்துக் கொண்டே இருந்திருகிறாய் என்றுதான் கேட்டிருப்பார் -

இந்த வாத்தியார் வேலையையே தன் சீமந்த மைந்தனான விநாயகரிடம் செய்திருக்கிறார், சிவபெருமான். அந்தக் கதை தெரிய வேண்டாமா! கதை இதுதான். அன்பில் என்ற ஒரு சிறு ஊர் கொள்ளிடகரையிலே இன்றைய லால்குடி என்னும் திருத்தவத்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஊர் சிறியதே என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய ஊர். அன்பில் கிராமத்தில் புதை பொருளாகக் கிடைத்த செப்பேடுகள் சோழ மன்னனது சரித்திரத்தையே உருவாக்க மிகவும் உதவியிருக்கிறது.

மேலும் அன்பில் அநிருத்தர், அந்த சுந்தர சோழன் என்னும் முதல் பராநந்தகனது அமைச்சராக இருந்து பெரும்புகழ் எய்திய வராயிற்றே. அந்த அன்பில் என்ற தலத்திலே, ஆலந்துறை என்ற ஒரு கோயில். அங்கு கோயில் கொண்டிருக்கிறார் சத்தியவாகீசன், துணைவி சௌந்திர நாயகியுடன். சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் பூசித்த காரணத்தால் சத்திய வாகீசர் என்று பெயர் பெற்றுமிருக்கிறார்கள்.

பாலறாவாயராம் அந்த சீர்காழிப் பிள்ளை ஞான சம்பந்தர், தலம் தலமாகச் சென்று, ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள மூர்த்திகளைப் பாடிப்பாடி நடந்து கொண்டிருக்கிறார்.

அவர் இந்த அன்பில் ஆலந்துறைக்கும் வந்திருக்கிறார். வந்தவர் கொள்னிடத்தின் தென் கரைவழியாக வந்திருக்கிறார். கொள்ளிடத்திலோ பெருவெள்ளம். ஆற்றைக் கடக்கப் பாலமோ, பரிசிலோ இல்லை,

அந்தத் தென்கரையில் நின்று - பார்த்தவருக்கு வடபக்கம் நீண்டுயர்ந்த கோபுரத்தோடு கூடிய கோயில் தென்பட்டிருக்கிறது. ஆதலால் கொள்ளிடத்தின் தென் கரையில் நின்றே பாடியிருக்கிறார்.

கணை நீடு எரிமார் அரவம் வலரவில்லாய்
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

என்று பாடத்துவங்கியிருக்கிறார். இந்த பாட்டு ஆலந்துறைப் பெருமான் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. காரணம் கோயிலில் வேதம் ஓதும் மாணவர்கள் வேதத்தை உச்சஸ்தாயியிலே ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒலியை மீறிக்கொண்டு சம்பந்தர் பாடல் இறைவன் காதில் விழுவது கஷ்டத்தானே. இதை சம்பந்தருமே உணர்கிறார் திரும்பவும்.

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடி ஒன்று! உடை எந்தைவிலோ
கிடைஆர் ஒலிஒத்து: அரவத்து இசைக்கிலனை
அடையார் பொழில் அன்பில்! ஆலந்துறையாரே.

என்றே பாடுகிறார். பாடல் இறைவன் காதில் விழுந்து விடுகிறது. வந்திருப்பவர் ஆளுடைய பிள்ளையார். அவர் அக்கரையில் நின்று பாடுகிறார். என்பதை உணர்கிறார். பாட்டை அனுபவிக்கவே முனைந்து விடுகிறார். இந்த நிலையில் தன் பக்கல் இருந்த மூத்த பிள்ளை, பிள்ளையாரோ பாட்டைக் கேட்காமல் எங்கோ கவனமாக . முகட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். (அன்றைய பள்ளிப்பிள்ளையைப் போலவே தான் வாகனமாம் மூஞ்சூாறு வளையில் நுழைவதைக் கவனித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ} இதைப் பார்த்த அந்தப் பரம ரஸிகரான பெருமான்.

தன் பிள்ளையின் காதைப் பிடித்துத் திருகி, “கேளடா நம்ம சம்பந்தன் பாடுகிறான் அக்கரையிலிருந்து" என்று சொல்கிறார். அவ்வளவுதான் பிள்ளையாரும் அப்போதே செவிசாய்த்துப் பாடல்களை கேட்க முனைந்து விடுகிறான். தந்தையும் மகனுமே ஞான சம்பந்தரின் மற்ற ஒன்பது பாடல்களையுமே நன்கு அனுபவித்திருக்க வேண்டும்.

இத்தனையும் உண்மையாய் நடந்ததா என்று கேட்காதீர்கள். நடந்ததோ - நடக்கவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இன்று, அந்தத் கோயிலில் நுழைந்தும், கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் ஒரு மூலையில், அந்த செவி சாய்த்த விநாயகர் சின்னஞ்சிறிய கல்லுருவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரையே பார்க்கிறீர்கள். அட்டைப் படத்திலே அவர் உட்கார்ந்திருக்கிற ஜோரைத் தான் பாருங்களேன். ஒரு காலை மடித்து ஒரு காலை ஊன்றித்தலை சாய்த்து, பாடலைக் கூர்ந்து கேட்டு கொண்டல்லவா இருக்கிறார். முகத்திலேதான் எத்தனை பாவம். இந்த செவிசாய்த்த விநாயகரைப் பார்க்கவே ஒரு நடைபோகலாம், அந்த அன்பில் ஆலந்துறைக்கு.

இன்றைக்கு நாட்டில் மக்களுக்கு எத்தனை எத்தனையோ குறைகள். அந்தக் குறைகளை எடுத்துக் கூற பத்திரிகைகள், மேடைப் பிரசங்கங்கள் வேறே. ஆனால் நாட்டிலே இருக்கும் ஆரவாரத்திலே, இப்படிக் குறைகளை எடுத்துக்கூறும் குரல் எல்லாம் நாட்டை ஆளுவோர் காதில் விழவா செய்கிறது? இவர்களுடைய காதையும் திருகி, இதையும் கொஞ்சம் கேளுங்கள் என்று சொல்ல ஓர் ஆலாந்துறையார் வேண்டியிருக்கிறது. ஆளுபவர்கள் பிடித்து வைத்த பிள்ளையார்களாக இராமல், செவிசாய்த்திருக்கும் விநாயகர்களாக மாற வேணும். இந்த ஆண்டின் விநாயக சதுர்த்தியிலே அப்படி இவர்கள் மாற இந்த செவி சாய்க்கும் விநாயகனையே வேண்டிக் கொள்வோம்.