வேங்கடம் முதல் குமரி வரை 5/008-019
இன்றைய இலக்கிய உலகம் சிறுகதை உலகம். சிறுகதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாக இருப்பதையே பார்க்கிறோம். ஏதோ பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த லைலா மஜ்னூ, அனார்க்கலி முதலிய கதைகள்தாம் தமிழ்நாட்டின் காதல் கதைகள் என்றில்லை. அதற்கும் எவ்வளவோ காலத்திற்கு முந்தியே தமிழகத்தில் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள், அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு காதல் கதைதானே. அவைகளையும் தூக்கி அடிக்கும் வகையில் புராண இதிகாசங்களில் வரும் சீதா கல்யாணம், ருக்மணி பரிணயம், வத்சலா கல்யாணம், வள்ளித் திருமணம் எல்லாம் அமரத்வம் வாய்ந்த காதல் கதைகள் அல்லவா?
வடமொழிக் கவிஞனான வான்மீகி, சீதையை ராமன் பெற்றது, வில்லொடித்து வெற்றிப் பரிசாக என்று கூறினால், அக்காவியத்தைத் தமிழாக்கிய கம்பன், சீதா கல்யாணத்தையும் ஒரு காதல் கதையாக அல்லவோ மாற்றியிருக்கிறான்! இந்தக் கதை கூட வடநாட்டிலிருந்து தென்னாடு வந்ததே. ஆனால் தமிழ்க் கடவுளான முருகன், கதை ஓர் அற்புதமான காதல் கதை அல்லவா? எத்தனை தரம் கதையாகக் கேட்டாலும், படமாகப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாத அமர கதையாக அல்லவா இருக்கிறது!
இந்தக்கதையிலே கூட ஒரு சிறப்பு. சூரபதுமனை சம்ஹரித்து, தேவர் துயர் துடைத்ததற்கு வெற்றிப் பரிசாக, தேவ இந்திரன் மகள் தேவயானையை மணந்தவன், பின்னர் காதலித்து மணக்கிறான் வள்ளியை, வடநாடு தென்னாடு இரண்டையும் இணைக்கும் முறையில் மட்டுமல்ல. தேவர்கள் - மக்கள் இவர்களையும் இணைக்கும் முறையில் அல்லவா இந்த வள்ளியை மணந்திருக்கிறான்! இந்தக் கதையை கச்சியப்பர் தாமியற்றிய கந்த புராணத்தின் கடைசிப் பகுதியாக அமைத்திருக்கிறார். அவர் சொல்லும் கதை இதுதான்.
திருச்செந்தூர் என்னும் திருச்சீரலை வாயிலே சூர சம்ஹாரம் முடித்து, திருப்பரங்குன்றத்திலே தெய்வயானையை மணந்து, அமைதியாகக் குடும்பம் நடத்த திருத்தணிகைக்கு வந்து சேர்கிறான் முருகன். திருத்தணிகைக்கு சில காத தூரத்திலே காடும் மலையுமான பிரதேசம் ஒன்றிருக்கிறது. அங்கு வேட்டுவக்குடி மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் தலைவனாய் நம்பிராஜன் இருக்கிறான். இவனுக்கு ஆண்மக்கள் எழுவர் இருக்கின்றனர். என்றாலும் பெண் குழந்தை இல்லையே என்று ஏங்குகிறான். அதற்காகத் தன் வழிபடு கடவுளான முருகனையே வேண்டுகிறான். முருகனது அருளால் ஒரு மானின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை வள்ளிக் கிழங்கு எடுத்த குழியில் வைத்து விட்டு மான் ஓடி மறைந்து விடுகிறது.
அப்பக்கமாக வந்த நம்பிராஜன் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறான். வள்ளிக் கிழங்குக் குழியில் கண்டெடுத்த குழந்தையை வள்ளி என்றே அழைக்கிறான். அவளும் வளர்ந்து பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கையாகிறாள்.
வேடர் குல முறைப்படி அவளைத் தினைப் புனத்துக்கு நம்பிராஜன் அனுப்புகிறான். அவளும் தன் தோழியருடன் தினப்புனம் காவல் காத்து வருகிறாள். கிளிகளும், மயில்களும், பூவையும் புறாக்களும் தினை கொய்ய வந்தால் அவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறாள். இந்த வள்ளியை நாரதர் பார்க்கிறார். இந்த அழகியை அடைய வேண்டியவன் அந்த முருகனான தலைவனே அல்லவா - என்று நினைக்கிறார்.
உடனே அவர் தன்னையே பாங்கனாக அமைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்குள்ள தலைவனாம் முருகனிடம் வள்ளியைப் பற்றிக் கூறுகிறார். முருகனும் வள்ளி தினைப்புனம் காக்கும் மலைப் பிரதேசத்திற்கே வருகிறான். காலிலே கழலும், இடையிலே கச்சும், தோளிலே வில்லும் ஏந்தி கரிய மேனியும் நெடிய வடிவும் தாங்கி வேட்டுவர் கோலத்திலேயே வருகிறான். தினைப்புனங்காத்து நிற்கும் வள்ளியை காண்கின்றான்.
ஒத்த குலமும் ஒத்த நலனும் உடைய தலைமகனும் தலைமகளும், அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஊழ்வினை வசத்தில் ஒருவரை ஒருவர் கண்டு தமிழர் மரபிற்கேற்ப இருவரும் காதல் கொள்கின்றனர். அங்கே ஒரு சிறு காதல் நாடகமே நடக்கிறது. 'நான் துரத்தி வந்த மான் இங்கு வந்ததுண்டோ ?' என்று கேட்டுக் கொண்டே வள்ளியின் பக்கலில் வருகிறான் வேட்டுவ முருகன். அவளும் துரத்தி வந்த மானுக்கு அடையாளங்கள் கேட்டு நிற்கிறாள்.
நமக்குத் தெரியும் ஏனல் காவல் இவளும் அல்லள், மான் வழிவருபவன் இவனும் அல்லன் என்று. இந்த நிலையில், தன் மகளைக் காணப் பரிவாரங்களுடன் வருகிறான் நம்பிராஜன். எதிர்பாரா வகையில் இந்த இடையீடு ஏற்பட்டதன் காரணமாக, வேட்டுவனாக வந்த முருகன் வேங்கை மரமாக மாறி அங்கு நிற்கிறான். புதிதாகத் தோன்றிய வேங்கையே உனக்கு இனியதுணையாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் திரும்பு கிறான் நம்பிராஜன். வேங்கையாக இருந்த முருகனும் திரும்ப வேடுவனாகி, வள்ளியை அடுத்து, காதல் மொழிகள் பேசுகிறான். வள்ளியின் உள்ளத்திலுமே காதல் அரும்புகிறது. திரும்பவும் நம்பிராஜன் பரிவாரம் அங்கு வருவதைக் கண்டு வள்ளி வேட்டுவனை ஓடிவிடுமாறு பணிக்கிறாள்.
முருகனும் ஓடிவிடுவது போல் பாவனை செய்து விட்டு ஒரு விருத்தனது வடிவிலே நம்பியின் முன் ஆஜராகிறான்.
தான் குமரித்துறையில் நீராடிச் செல்வதாகச் சொல்கிறான். நம்பியும் இந்த வார்த்தையை நம்பி, விருத்தனான முருகனை தன் மகள் வள்ளியின் பாதுகாப்பிலேயே தினைப்புனத்தில் இருத்திவிட்டுச் செல்கிறான். அவளும் இவனுக்கு தேனும் தினை மாவும் பிசைந்து கொடுத்து உபசரிக்கிறாள். இவனோ தன் வயதிற்கு அடுக்காத காதல் மொழிகள் பேசுகிறான்.
அவளோ இந்த விருத்தனை வெறுக்கிறாள். கடைசியில் தன் விருப்பம் எளிதில் நிறைவேறாது என்பதறிந்து தன் தமையனான அத்தி முகத்தானை நினைக்கிறான். அவனும் யானை உருவில் வந்து வள்ளியை பயமுறுத்துகிறான். அந்தப் பயத்தை நீக்கும் வகையில், விருத்தனான முருகன் வள்ளியை அணைத்துக் கொள்கிறான். தன் சுய உருவையும் காட்டுகிறான்.
இதற்குள் தினைப்புனம் காவல் வேலை முடிந்து, வள்ளி அரண்மனை திரும்பி விடுகிறாள். முருகனும் அரண்மனை சென்று வள்ளியை அவன் தந்தை அறியாமல் சிறை எடுத்து வருகிறான். வேடுவர் தலைவனான நம்பி, முருகனும் வள்ளியும் சென்ற வழியில் தொடர்ந்து வருகின்றான். போர் நிகழ்கிறது. போரில் வேடுவர் மடிகின்றனர் பின்னர். முருகனே வேட்டுவர்களையெல்லாம் எழுப்பி, தன்னையும் யாரென்று தெரிவித்து வள்ளியை மணம் புரிந்து கொள்கிறான். தன் காதல் மனைவியான வள்ளியையும் அழைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்கு தன் இரண்டு மனைவியருடன் இல்லறம் நடத்துகிறான்.
இதுதான் கதை, தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப இக்கதை அமைந்திருப்பது சுவையாக இருக்கிறது, தமிழ் நாட்டுத் தலங்களில், முருகனைப் பல கோணங்களில் கண்டு களித்த நான் வள்ளிமலை என்னும் தலத்திற்கு தினைப்புனம் காக்கும் வள்ளியையும், வேட்டுவனாகி வந்த வேலனையும் காணும் ஆவலுடனேயே சென்றேன்.
அதற்காக நூற்றுக்கு மேற்பட்ட படிகள் எல்லாம் ஏறி மலையை அடைந்தேன். அங்குள்ள பாறைகள், குகைகள், கோயில் எல்லாம் சுற்றி அலைந்தேன். வள்ளிமலை என்ற பெயருக்கு ஏற்ப, வள்ளி கவண் ஏந்திய கையளாய். ஒரு பாறையில் சிற்ப வடிவில் இருப்பதைக் கண்டேன்.
சரி, இங்கு வள்ளியிருந்தால் அவளைத் தேடிவந்த வேடுவனும் இருக்கத்தானே வேண்டும் என்று அவனைத் தேடினேன் அங்கு அவன் அகப்படவில்லை. கோயிலுள் சிலையாகவும் செப்புப் படிமமாகவும் இருப்பவன், வள்ளி தேவயானையுடன் இருக்கும் முருகனாகவே இருக்கிறான். அதனால் ஏமாற்றமே அடைந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு அன்பர், வள்ளியை வேலன் மணந்த தலம், கன்னியாகுமரிப் பக்கம் அல்லவா இருக்கிறது என்றார். அங்கும் சென்றேன்.
குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள குமார கோயிலில் வள்ளியும் முருகனும் தனித்துக் கம்பீரமாகச் சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆம், திருமண கோலத்தில்தான் இருக்கிறார்கள். தெய்வயானைக்கு அங்கு இடமில்லைதான். என்றாலும் அங்கும் வேட்டுவ வடிவில் குமரனைக் காண முடியவில்லை. இப்படியெல்லாம் அலமந்து நிற்கும் போதிலே, சென்ற வருஷம் நாமக்கல்லுக்குச் சென்றிருந்தேன்.
அங்குள்ள அன்பர்கள் கொல்லிமலையிலே வேலுக் குரிச்சி என்ற ஊரிலே உள்ள கோயிலிலே உள்ள முருகன் வேட்டுவக் கோலத்தினன் என்றார்கள், நாமக்கல்லிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் உள்ள அந்த வேலுக்குரிச்சிக்கே சென்றேன். அங்கே கொல்லிமலைச் சாரலிலே உள்ள ஒரு குன்றிலே ஒரு சிறு கோயில். ஏற வேண்டியதெல்லாம் ஐம்பது படிகளே. அக்கோயிலைச் சுற்றி ஒரு சிறுமதில். அம்மதிலின் கீழ்புறம் ஒரு வாயில். அதன் வழி நுழைந்து, கோயிலின் தென்புறமுள்ள பாதாள வாயில் வழியே உள்ளே சென்றால் மேற்கே பார்த்த கருவறையில் வேலேந்தி நிற்கிறான் வேலன். அவன் சுமார் மூன்று அடி உயரமே உள்ளவன். என்றாலும் நிற்பதிலே ஒரு மிடுக்கு. தலையிலே வேட்டுவக் கொண்டை, காலிலே வேடுவர் அணியும் பாதரட்சை, வலக்கையிலே ஒரு வேல், தொடையில் வைத்திருக்கும் இடக்கையிலே ஒரு கோழி சரி, சரியான வேட்டுவ வடிவிலே உள்ள முருகன் இவன் தான் என்று தீர்மானித்தேன்.
வேலுக்குப் பதில் வில் மட்டுமே ஏந்தியவனாய் நின்றுவிட்டால், வேட்டுவ வடிவம் பூரணமாகி விடும் என்டாது என் எண்ணம். இந்த வடிவழகனை நான் வணங்கிக் கொண்டிருந்தபோது, இப்படி வேட்டுவ வடிவில் உள்ள முருகனை நான் நீண்ட நாளாகத் தேடி அலைத்திருக்கிறேன். வேறு எங்கும் கண்டதில்லை என்றேன், பக்கத்தில் இருந்த அன்பர் திருச்செங்கோடு என்னும் தலத்தில், மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள முருகனைப் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஓ! பார்த்திருக்கிறேன். அவனும் இடக்கையில் கோழி ஒன்றை இடுக்கியிருக்கிறான் என்பதும் தெரியும். என்றாலும் இந்த செங்கோட்டு வேலவனை மற்றபடி வேட்டுவன் என்று சொல்லும் வகையில் உருவ அமைப்பு இல்லையே என்றேன்.
வேலுக்குரிச்சி வேலவன் நல்ல வேட்டுவ வடிவினன். தமிழ் நாட்டில் வேறு இடங்களில் காணக் கிடைக்காத வடிவினன். வள்ளியை மணம் புணர வந்த நிலையில் முதற்படி இந்நிலை. நமக்கெல்லாம் அவன் வேட்டுவனாகக் காட்சி கொடுத்தாலும் எல்லாம் அறிந்த அந்த வள்ளியின் கண்களுக்கு அவனே தான் மணக்க விரும்பிய வேலவன் என்று தெரியாமல் இருக்குமா என்று எண்ணினேன். என் எண்ணத்தை உணர்ந்தாரோ என்னவோ அர்ச்சகர் கவசம் சாத்தட்டுமா என்றார். 'சரி' என்றேன். உடனே திரையை இழுத்து மறைத்து விட்டு விபூதி அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் அணிவித்துப் பின்னர் திரையை விலக்கினார்.
அன்று வள்ளியின் கண்களுக்கு வேடன் எந்த உருவில் தோன்றியிருப்பான் என்பதையுமே கண்டேன். இளைஞனாக, அழகனாக இருப்பவன்தானே முருகன், இளமையும், அழகும் நிறைந்தவனாக இருப்பதோடு, நல்ல ராஜ கம்பீர நாடாளும் நாயகனுமாக அல்லவா அவன் மாறி விட்டான். இந்த நாயகனைக் கண்டு நங்கை வள்ளி காதல் கொண்டு நின்றதில் வியப்பில்லைதான்!
இந்த வேட்டுவ முருகனது ஒரிஜினல் வடிவினையும், கவசம் அணிந்த கவின் பெறு வனப்பினையும் காண நீங்கள் எல்லாம் செல்ல விரும்புவீர்கள். சொந்தக்கார் உள்ளவர்கள் மட்டுமே சௌகர்யமாகச் செல்லலாம். இல்லை என்றால் இரண்டு மைலாவது நடக்கக் காலில் திறன் இருக்க வேண்டும். மலை ஏறும் சிரமமும் கொஞ்சம் உண்டு. ஆனால் அத்தனை சிரமமும் இல்லாமலேயே அந்தக் கோலங்கள் இரண்டையும் நீங்கள் காணுகிறீர்கள், பக்கத்தில் உள்ள படங்களிலே இந்த வேட்டுவனை
வள்ளிக் கிசைந்த
மணவாளன் வேட்டுவனாய்
அள்ளிக் கொளும் பேர்
அழகுடனே - துள்ளுகின்ற
கோழியினைக் கையிடுக்கி
கொல்லிமலைச் சாரலிலே
வாழுகின்றான். சென்றே வணங்கு!
என்றே நான் கூறினால், 'சரி' என்றுதானே தலை அசைப்பீர்கள் நீங்கள்?