வேங்கடம் முதல் குமரி வரை 5/014-019

14. அஞ்சைக் களத்து அப்பன்

மய குரவரில் ஒருவரான சுந்தரர் திரு நாவலூரிலே பிறக்கிறார். அவரை இறைவன் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச் சென்று அற்புதப் பழைய ஆவணம் காட்டி ஆட்கொள்கிறார். அவரைத் தம்பிரான் தோழன் என்றே அழைக்கிறார். அன்று முதல் சுந்தரரும் இறைவனோடு தோழமை பூண்டு, எண்ணற்ற அரிய காரியங்களைச் செய்ய இறைவனையே ஏவலாளனாகக் கொள்கிறார்.

இந்தத் தம்பிரான் தோழரின் இன்னொரு தோழர் சேர மன்னனாகிய சேரமான் பெருமாள் என்னும் திருத்தொண்டர். இவரும் சிவத்தொண்டில் ஈடுபட்டவர் சேர நாட்டிற்குத் தன் தோழனாகிய சுந்தரரைப் பலமுறை அழைத்திருக்கிறார். கடைசியாகச் சுந்தரரும் இணங்கி தன் மலைநாட்டுத் தலயாத்திரையைத் துவக்குகிறார். இதனைச் சொல்கிறார், திருத்தொண்டர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார்,

ஆரம் உரகம் அணிந்த பிரான்
அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மதுவார் மலர்ச் சோலை
எழில் ஆரூமில் இருக்கும் நான்
சேரர் பெருமான் தனை நினைந்து
தெய்வப் பெருமான் கழல் வணங்கி
சாரல் மலைநாடு அடைவதற்குத்
தவிரா விருப்பின் உடன் போந்தார் -

இப்படி மலைநாட்டுத் தலயாத்திரையைத் தொடங்கியவர், வழியில் அவிநாசியில் முதலை உண்ட பாலனை அழைத்து, அவனை அவனது பெற்றோர்களிடம் சேர்ப்பித்து விட்டு மேலும் நடக்கிறார், வழியில் உள்ள ஆறுகளையும், காடுகளையும் கடந்தே. இவரது வருகையை, அடியார்கள் சேரமான் பெருமாளிடம் ஓடோடி வந்து அறிவிக்கிறார்கள். சேரமன்னனது உவகை கட்டுக்கு அடங்காததாகிறது. கரை புரண்டோடும் அவரது உவகையை சேக்கிழார் தமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

என் ஐயன் அணைந்தான் .
எனை ஆளும் அண்ணல் அணைத்தான்
ஆரூரில் சைவன் அணைந்தான் .
என் துணையாம் தலைவன் அணைந்தான்
தரணி எலாம் உய்ய அணைந்தான்.
அணைந்தான் -

என்றே குதூகலிக்கிறார். ஆகவே அவர் நகரை எல்லாம் நன்றாக அலங்கரித்து, யானை மீது எதிர்கொண்டு வந்து, சுந்தரை அழைத்துச் செல்கிறார், தனது நகருக்கும் திருமாளிகைக்கும். அப்படிச் சுந்தரரை அழைத்துச் சென்ற இடம்தான் அவனது தலைநகரான வஞ்சி, அதுவே திரு அஞ்சைக்களம். மண வாழ்க்கையை எல்லாம் வெறுத்த சுந்தரர், அங்கிருந்தே தன் கயிலை யாத்திரையைத் துவங்குகிறார். இறைவனும் தன் தோழனாம் சுந்தரருக்கு வெள்ளானை எல்லாம் அனுப்பி கயிலைக்கு அழைத்து வரச் செல்கிறார்.

அதன்படியே சுந்தரர் புறப்படும் போது, கோமகனும் குதிரைமீது அமர்ந்து சுந்தரருடன் கயிலை செல்கிறார் இப்படி இரண்டு பெரிய தொண்டர்கள் கயிலையை நோக்கிப் பிரயாணம் புறப்பட்ட இடமே திரு அஞ்சைக்களம் என்னும் தலம். அத்தலத்தை நோக்கியே நாமும் விரைகின்றோம். இன்று, நமக்கு கயிலை செல்லும் நோக்கமெல்லாம் இல்லாதிருந்தும் கூட.

திரு அஞ்சைக்களம் செல்ல, சென்னையிலிருந்து கொச்சின் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறவேணும். ஷோரனூர் எல்லாம் கடந்த பின் இருஞாலகுடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அங்கிருந்து கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூருக்கு வழி கேட்டுக் கொண்டு போக வேணும்.

போகும் வழியில் ஓர் உப்பங்கழியையும் கடக்கவேனும். முன்னாலே என்றால் இக்கரையில் காத்திருந்து படகில் ஏறித்தான் அக்கரை செல்ல வேணும். இப்போதோ . உப்பங்கழியில் பெரிய பாலம் ஒன்றையே அமைத்திருக்கிறார்கள். ஆதலால் காரிலோ பஸ்ஸிலோ ஏறிக் கொண்டு 'ஜாம் ஜாம்' என்று கொடுங்கோளூருக்கே போய் விடலாம். கொடுங்கோளூர் பகவதி கோயிலுக்கும் சென்று வணங்கி, அருள் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பின் மேற்கு நோக்கி ஒன்றரை மைல் போனால் திரு அஞ்சைக்களம் வந்து சேரலாம். உப்பங்கழி வழியாக படகிலே போனால் இறங்குதுறையில் இறங்கி, வடக்கு நோக்கி நடந்தால். கோயில் வாயில் வந்து சேரலாம். நாமோ, கொடுங்கோளூரிலிருந்து மேற்கு நோக்கியல்லவா வந்திருக்கிறோம். அங்கே ஒரு சந்நிதியில் கல்லால் அமைத்த தீபஸ்தம்பம் ஒன்று தெரியும்.

அந்தப் பக்கமாகத் திரும்பினால், ஒரு சிறு கட்டிடத்தில், சேரமான் பெருமாள் சுந்தர மூர்த்தி வாசக சாலை என்று தமிழிலே எழுதிய 'போர்டு' ஒன்று தொங்கும். கட்டிடம் திறந்து கிடந்தாலும் பதில் சொல்ல ஆள் ஒருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அங்கிருந்து கோயில் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வதும் எளிதன்று - கோயிலுக்குத்தான் கோபுரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாதே. கொஞ்சம் துணிந்து மேலே நடந்தால் சில ஒட்டுக் கூரைகள் தோன்றும். ஒரு பெரிய காம்பவுண்டும் தோன்றும்.

அதுதான் கோயில் என்பர். அங்குள்ள வாயில் கோயிலின் மேல்புறத்து வாயில். அந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், அங்கு ஒரு மரக்கொட்டகை தெரியும். அதனையே ஆனைப்பந்தல் என்கிறார்கள். விழாக்காலங்களில் ஆனையை அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தும் இடம் ஆதலால் ஆனை பந்தல் என்று பெயர் பெற்றதோ, இல்லை அன்று சுந்தரரை கயிலாயத் திற்கு அழைத்துச் செல்ல வந்த வெள்ளை யானை வந்து நின்ற இடம் ஆதலால் ஆனைப் பந்தல் என்று பெயர் பெற்றதோ, தெரியவில்லை. எப்படியோ ஒரு யானை வந்து அங்கு நின்றிருக்கிறது. அதனால் பந்தல் அமைக்க வேண்டும் என்றும் தோன்றியிருக்கிறது, மக்களுக்கு. இந்தக் கொட்டகையை ஒட்டியே ஒரு பெரிய பிராகாரம் இருக்கிறது. அதனைச் சுற்றிக் கொண்டு வடபக்கத்துக்கு வந்தால் அந்தப் பிராகாரத்திலேதான் தல விருட்சமான கொன்றை பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். அதனைச் சுற்றி ஒரு பீடம் இட்டு, சுவரும் எழுப்பியிருக்கிறார்கள்.

அதைக் கடந்தே கிழக்குப் பிராகாரம் வரவேணும். அங்கேதான் பிரதான வாயில். எல்லாம் ஒட்டுக் கூரைதான் என்றாலும் அந்த வாயில் சுவரில்தான் சுந்தரர் வெள்ளை யானையின் பேரில் கயிலை செல்லும் சிற்பம் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கிறது. இப்படிச் செதுக்கி வைக்க வேண்டும் - என்று தெரிந்திருக்கிறதே, அதற்கே ஒரு கும்பிடு போடலாம் தானே? இந்தப் பிராகாரத்திலே பிரதான வாயிலை அடுத்து தீபஸ்தம்பமும் கொடி மரமும் இருக்கின்றன. இந்த தீபஸ்தம்பம் முழுவதுமே இரும்பு அகல் விளக்குகளை அடித்து வைத்திருக்கிறார்கள். திருவிழாக்காலங்களில் எல்லா விளக்கையும் ஏற்றினால் எப்படியிருக்கும் என்று மானசீகமாகக் கற்பனை. பண்ணிப் பார்க்கலாம். தீப மங்கள சோதி நமோ நமோ என்று பாடவும் செய்யலாம். பொங்கழல் உருவனான அய்யனை, தீப ஒளி மூலம் அலங்கரிக்கக் கற்றவர் மலைநாட்டு மக்களே என்றால் மிகையில்லை. இந்தப் பிரகாரம் வழியாய் நடந்து தெற்குப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கு ஒரு சிறு சந்நிதி கிழக்கு நோக்கியிருக்கும். அது என்ன சந்நிதி என்று விசாரித்தால் அதுவே தக்ஷிணாமூர்த்தி சந்நிதி என்பர். தக்ஷிணா மூர்த்தி என்றால் தென்பக்கம் நோக்கியிருக்க வேண்டாமோ? இவர் என்ன கிழக்கு நோக்கியிருக்கின்றா? என்ற வியப்போடேயே கோயில் வாயில் வழியாக உள்ளே நோக்கினால், கல்லாலின் புடையமர்ந்து, வல்லாளர் நால்வருக்கும் உபதேசிக்க தக்ஷிணாமூர்த்தியைக் காணவில்லை. ஒரேயொரு சிவலிங்கம்தான் இருக்கிறது.

இந்தத் தனிக் கோயிலுக்குப் பக்கத்திலே சந்நிதி ஒன்றிருக்கிறது. அதுவே சாஸ்தா சந்நிதி. இவர் கோயிலுக்கு விமானம் இல்லை. வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். இவரே கயிலையில் சேரமான் பாடிய பாடல்களின் பிரதியை உலகுக்குக் கொண்டு வந்தவர் என்கிறார்கள். இந்த வரலாற்றை பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் கூறுகிறார்.

இனி இப்பிராகாரத்தைச் சுற்றிக் கொண்ட மேற்கு வாயில் வழியாக அடுத்த பிராகாரத்துக்குள் நுழையலாம். நாம் இங்கு வந்தது சேரமானையும் சுந்தரரையும் பார்க்கத்தானே? ஆதலால், அவர் இருக்கும் இடம் விரையலாம். இப்பிராகாரத்தில் தென்பகுதியில் மேற்குக் கோடியில் உத்சவமூர்த்திகளாக இருவரும் சிறிய வடிவிலே ஒரு சிறு அறையில் எழுந்தருளியிருக்கின்றனர். இரண்டும் ஒன்றரை அடி உயரமே உள்ள செப்புப் படிமங்கள். அழகு வாய்ந்தவைகளாக இல்லை. இவர்கள் வெளியில் உலா வருவதில்லை. ஆடிச்சுவாதியில் சுந்தரர் கயிலை சென்றதன் ஞாபகார்த்தமாக அன்று திருமஞ்சனம் ஆட்டப் பெறுகிறார்கள். இவர்கள் இருவரையும் வணங்கிவிட்டே மேல் நடக்கலாம்.

மேற்கு பிராகாரத்தைச் சற்றிக்கொண்டு, வடக்குப் பிராகாரத்திற்கு வந்தால், அங்கு நடராஜர் சந்நிதி இருக்கிறது. அவரே திருவஞ்சிக்குளம் சபாபதி. அப்படித் தானே அந்தப் பீடத்தில் பொறித்திருக்கிறது? இவர் விரித்த செஞ்சடை யான் அல்ல.

பாண்டிய நாட்டு நடராஜர்களைப் போல் பின்னு செஞ்சடை உடையவரே. இவரே சேரமான் வழிபட்ட மூர்த்தி என்கின்றனர். இங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. எதுவும் கவர்ச்சி உடையதாக இல்லை . இனி பிரதான கோயில் வாயிலுக்கு வரலாம். திரு அஞ்சைக்களத்து அப்பன் கருவறை பெரிதுதான். கிழக்கு நோக்கிய வாயில் வழியாக அங்குள்ள லிங்கத் திரு உருவைத் தரிசிக்கலாம், மிகவும் சிறிய திருமேனி.

இக்கருவறை மேல் உள்ள விமானம் மரத்தால் ஆக்கப்பட்டு செப்புத்தகடு வேய்ந்ததாக இருக்கிறது, இங்கு அம்மைக்குத் தனி சந்நிதி இல்லை. என்ன இவர் அம்மை இல்லா அப்பனோ என்று கேட்டால், இல்லை. செப்புப் படிமமாக ஒரு சிறு அம்மையையும் அப்பன் பக்கத்திலே வைத்துக் காட்டுவர். அங்குள்ள இருட்டில் விளக்கமாக ஒன்றும் தெரியாது.

இந்த அஞ்சைக் களத்து அப்பர் சுந்தரர் ஒருவராலேயே பாடப் பட்டவர், ஒன்றுக்கு இரண்டாக பரவையாரையும் சங்கிலியையும் மணந்த சுந்தரர், இந்த அஞ்சைக் களத்து அப்பனை தரிசித்த பின்தானே மனை - வாழ்க்கையை வெறுத்து, அதன்பின் கயிலை செல்ல விரைந்திருக்கிறார். அதையே அவர் தனது தேவாரத்திலும் பாடுகிறார்!

வெறுத்தேன், மனை வாழ்க்கையை
விட்டொழிந்தேன், விளங்கும் குழைக்
காதுடை வேதியனே!
இறுத்தாய், இலங்கைக்கு இறை
ஆயவனை தலைப்பத்தோடு
தோள்பல இற்று வீழக்
கறுத்தாய் கடல் நஞ்சமுதுண்டு
கண்டம் கருகப் பிரமன்தலை
ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடங்கரை மேன -
மகோதை அணியார் பொழில்
அஞ்சைக் களத்து அப்பனே!

என்பது சுந்தரர் தேவாரம். இத்தலத்திற்கு வந்துதான் பரசுராமர் தன் தாயாம் ரேணுகையைக் கொன்ற பாவம் நீங்க, அஞ்சைக் களத்து அப்பனை வணங்கியதாகவும் புராணம் கூறுகிறது.

மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்றுதான். இந்தத் தலத்தையும் விடாமல் சென்று கண்டோம், என்ற திருப்தியோடு வீடு திரும்பலாம். கோவையிலிருந்து சிவக்கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள், ஆண்டு தோறும் இத்தலத்திற்கு வருவார்களாம். அவர்கள் கட்டளை இட்ட வண்ணமே இன்று கோவை அன்பர் ஒருவர் ஆண்டுக்கொரு முறை ஆடிசுவாதித் தினத்தன்று இத்தலம் சென்று வழிபாடு செய்து வருகிறார். அவகாசம் உள்ளவர்கள் அடுத்த ஆடிசவாதியில் அஞ்சைக்களம் சென்று அந்த அப்பனைத் தரிசிக்கலாம். பயணம் சிரமமானதுதான். அதற்குத் தக்க பலன் பெற சிறந்த சிற்ப வடிவங்களோ, கோயில் கட்டிட அமைப்போ இல்லாத குறையும் உண்டு.

இன்னும் இத்தலத்தில் சேரமான் பறம்பு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் சேரமான் பெருமாளது அரண்மனை. இருந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு கல்லையும் நட்டு எழுதி வைதிருக்கிறார்கள்.

இன்னும் கோளோற்பத்தி என்ற நூலிலே, இந்தச் சேரமான் பெருமாள், மெக்காவிற்குச் சென்று இஸ்லாமியராகி விட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் வழிவந்தவர்களே இன்றைய மலையாளத்து மாப்பிள்ளைமார் என்று கூறப்பட்டிருக்கிறதாம். நல்ல கதைதான், அறுபத்து மூன்று நாயன்மாரில் சிறந்த ஒருவரையே மதம் மாறியவராகக் கூறுவது! ஆதாரமில்லாத கற்பனைகளுக்குத்தான் கணக்கேது? அதை நம்பவா முடியும்?