வேங்கடம் முதல் குமரி வரை 5/016-019

16. குருவாயூர் அப்பன்

சித்திரை விஷு என்னும் சித்திரை மாதப் பிறப்பு தமிழ் வருஷப் பிறப்பாகக் கருதப்படுகிறது. என்றாலும் தமிழ் மக்கள் பொங்கலைக் கொண்டாடுகிற அளவுக்கு இந்தத் தமிழ் வருஷப் பிறப்பைக் கொண்டாடுகிறதில்லை. ஆனால் மலையாளிகளுக்கே சிறப்பான விழா இந்த விஷு தான். வருஷப் பிறப்பை அவர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா! அதற்கு முந்திய நாள் இரவே வீட்டையெல்லாம் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வீட்டின் நடுக் கூடத்தில் அரிசி காய்கறிகளை எல்லாம் சேமித்து வைத்து அத்துடன் பட்டுப் புடவைகள், தங்க நகைகளையும் வைத்து, குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே இந்நடுக் கூடத்திற்கு வந்து முதல் முதல் இந்த நல்ல சாமான்களையே பார்ப்பர்.

வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய அம்மா கண்களை கைகளால் பொத்தி அழைத்து வந்து சாமான்கள் வைத்திருக்கும் நடுக் கூடத்திற்கு வந்த பின்னே, கண்களைத் திறப்பர். வழியில் கண்களைத் திறந்து மற்ற சாமான்களைப் பார்த்து விடக் கூடா தல்லவா? இந்தச் சாமான்களோடு அவரவர் வீட்டில் பூஜையில் இருக்கும் படங்களையும் சேகரித்து வைத் திருப்பர்.

இவற்றையெல்லாம் விட, தமிழ் வருஷப் பிறப்பன்று முதல் முதல் குருவாயூரப்பன் முகத்தில் விழிப்பது அந்த வருஷம் முழுவதும் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை காரணமாக, அதற்கு முந்தியே மக்கள் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்காக குருவாயூர் கோவிலில் சென்று அதன் பிராகாரங்களில் படுத்துக்கிடப்பர். காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு கோயில் கதவம் திறந்ததும் கண்ணை மூடியபடியே விழுந்தடித்து ஓடி வந்து குருவாயூரப்பனை தரிசித்து விட்டே மற்றவர்களைப் பார்ப்பார்கள். இப்படிப் பார்க்கிறவர்கள் ஏதோ சாதாரண பொது மக்கள் என்று மாத்திரம் எண்ண வேண்டாம். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வீட்டுப் பெண்கள் கூட விஷு அன்று குருவாயூரப்பன் தரிசனத்திற்குக் காத்துக் கிடப்பர். அவரவர் அணிந்திருக்கும் துண்டுகளையோ, சேலை முந்தானையையோ விரித்துத் தான், அதில் படுத்து நித்திரை செய்வர்.

இந்த விஷு தரிசனம், மிக்க சிறப்பாக ஆண்டுதோறும் நடக்கிறது. நாளும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குருவாயூரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நமக்கெல்லாம் விஷு அன்று குருவாயூரப்பனைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது எளிதான காரியம் இல்லைதான் என்றாலும் அவகாசம் கிடைக்கும் பொழுதெல்லாம் குருவாயூர் செல்லலாம். குருவாயூரப்பனாம் பரந்தாமனைக் கண்டு தரிசிக்கலாம். பெறற்கரிய பேறுகள் எல்லாம் பெறலாம். அத்தகைய வாய்ப்பினை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவே குருவாயூரப்பனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லி, அவனிடத்து ஆற்றுப் படுத்தவே இக்கட்டுரை.

குருவாயூர் இன்றைய கேரள ராஜ்ஜியத்தில் நடுநாயகமான இடத்தில் இருக்கிறது. வடக்கே வட மங்கலமும் தெற்கே திருவாங்கூர் கொச்சியும் இருக்க, இரண்டுக்கும் இடையிட்ட இடத்தில் இருக்கிறது. வடக்கே இருந்து வருவோர் ரயிலில் வந்தாலும் காரில் வந்தாலும் ஷோரனூர் எல்லாம் கடந்து திருச்சூர் வந்து சேர வேணும். அங்கிருந்து மேற்கு நோக்கி, 15, 15 மைல் போய் அதன்பின் தெற்கே திரும்பி, நான்கு மைல் போனால் குருவாயூர் போய்ச் சேரலாம்.

போகிற வழி எல்லாம் ஒரே தென்னம் சோலைகள் தாம், கண்ணுக்கு மிகவும் இனிமையான பசுமை நிறைந்த காட்சியாக இருக்கும். கோயிலுக்கு இடப்புறமாகவே சென்று, அங்கு தேவஸ்தானத்தார் கட்டி வைத்திருக்கும் தேவஸ்தானச் சத்திரத்திற்கு முதலில் போய்ச் சேரலாம். சேவார்த்திகள் பெருகப்பெருக சத்திரத்து வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அங்கு தங்கி, ஸ்நானம் எல்லாம் முடித்து விட்டு, உடுத்திய வேட்டி துண்டுடனே தான் கோயிலுக்கு புறப்பட வேணும்.

கோயில் சிறிய கோயில்தான் என்றாலும், கோயில் வாயிலில் ஒரு யானையும், கோயில் பிராகாரத்தில் மூன்று நான்கு யானைகளையும் பார்க்கலாம். வேழம் உடைத்து மலை நாடு என்றல்லவா பாடினாள் ஔவை. யானைகளையே எழுந்திருத்து முதலான காரியங்களுக்கு உபயோகப் படுத்துவதால் ஒன்றுக்கு நான்காக யானைகள் இருக்கின்றன இங்கே. கோயில் வாயிலில் எல்லாம் கோபுரம் ஒன்றும் இருக்காது. மரத்தால் தட்டுத் தட்டாகக் கட்டி ஓடு போட்ட கூரை வேய்ந்திருக்கும். அந்தக் கூரையையும் முந்திக்கொண்டு பெரிய தகரக் கொட்டகை ஒன்று இருக்கும்.

இந்தக் கொட்டகையைக் கடந்து வாயிலுக்கு வந்து அதனையும் கடந்தே உள்ளே வரவேணும், பகலானாலும் சரி, இரவானாலும் சரி, கோயிலுள் கூடி இருக்கும் மக்கள் எல்லாம் 'நாராயணா, நாராயணா' என்று பகவந் நாம் ஸ்மரணை செய்து கொண்டே நிற்பர். இந்த நாராயண ஸ்மரணையைத் தவிர வேறு ஒலியையே கேட்கமுடியாது. அன்றே பாடினானே திருமங்கை மன்னன்,

குலம் தரும், செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந் தரம் செய்யும், நீள் விகம்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

ஆம், "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்” நாராயணா என்னும் நாமம் என்று எக்களிப்போடு திருமங்கை மன்னனால் எப்படிப் பாடமுடிந்தது என்று அறிய விரும்பினால், குருவாயூரப்பன் சந்நிதிக்குச் சென்றால் போதும். கோயிலுள் சென்றதும் தீபஸ்தம்பம் இருக்கும் கீழ்பக்கத்து நடைபாதைக்கு வந்து சேருவோம். இப்படி கோயிலைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தையே மதிலகம் என்கின்றனர். அதன் தென் கீழ மூலையில்தான் கூத்தம்பலம் இருக்கிறது.

அங்குதான் மலையாள நாட்டிற்கே சிறப்பான கூத்துகள் நடக்கின்றன. விசேஷ காலங்களில் மற்ற காலங்கள் பாகவத பாராயணங்களும் நடக்கும். இதைக் கடந்து மேற்கே திரும்பினால் அங்கு ஒரு சாஸ்தா சந்நிதி. அங்கு வணக்கம் செய்து விட்டு பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்தால், திரும்பவும் கீழ் நடைபாதைக்கு வந்து கோயிலுள் நுழையலாம். இந்தப் பாதை குறுகலாகவே இருக்கும். இதற்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள மண்டபங்களே வாயில் மண்டபங்கள். இவைகளைக் கடந்தே உள்கோயில் செல்ல வேணும்.

இதுதான் உள் பிராகாரம். இந்தப் பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகருக்கு ஒரு சந்நிதியிருக்கிறது. இங்குள்ள ஆரத்துக் கெட்டிபடி என்ற இடத்தில் இருந்துதான் மேல்பத்தூர் பட்டாத்திரி என்பவர் அவருடைய பிரபலமான 'நாராயணீயம்' என்ற பிரார்த்தனை நூலை எழுதினர் என்பர்.

இவற்றை எல்லாம் கடந்தபின் திரும்பவும் கீழ்வாயில் வந்து கருவறையில் உள்ள குருவாயூரப்பனைத் தரிசிக்க வேணும். குருவாயூரப்பன் சுமார் இரண்டடி உயரமே உள்ள சிறிய வடிவினன் தான். புஷ்பாலங்காரம் பண்ணி வைத்திருப்பார்கள்.

இரவு வேளைகளில் சென்றால் விளக்கொளியில் பிரமாத அழகுடன் காட்சி தருவான். ஆனால் அவனை, அவன் மேனியை, அலங்காரமில்லாத மேனியைக் காண விரும்பினால், அதிகாலை மூன்று மணிக்கே கோயில் செல்ல வேணும். நடை திறந்ததும், இரவு இருந்த புஷ்ப அங்கி சேவையிலும் காணலாம். பின்னர் மலர்களைக் களைந்து தைலக் காப்பிடும்போது மேனியின் முழு அழகையுமே காணலாம். சங்காபிஷேகம், மலர் நைவேத்தியம் எல்லாம் நடந்தபின் வாயில் கதவை அடைத்து விடுவார்கள்.

ஆனால் காலை ஏழு மணி சுமாருக்கு, யானை மீது குருவாயூரப்பனின் தங்கச் சிலை ஒன்றை ஏற்றி, மதிலகத்தில் பவனி வருவர். அப்போது பன்னிரண்டு விளக்கு ஏந்திச் செல்வர். இவ்விளக்கு ஏந்திச் செல்லும் உரிமை சில அம்பல வாசிக் குடும்பத்தினர்க்கே உண்டு. இது முடிந்த பின்தான் க்ஷீர அபிஷேகம் என்னும் பாலபிஷேகம் நடைபெறும். இது காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த க்ஷர அபிஷேகம், நவகாபிஷேகம் பந்தாட்டி நைவேத்தியம் பூசைகள் எல்லாம் காலை 9.30 மணி வரை நடக்கும். அடுத்த பூஜை உச்சிக் காலம்தான். மத்தியானம் 12.30 மணிக்குத்தான். அதன் பின் கோயில் நடையைப் பூட்டிவிடுவார்கள். திரும்பவும் மாலை 5.30 மணிக்குத் தான் திறப்பார்கள்.

அப்போதும் ஒரு ஸ்ரீபலி ஊர்வலம் நடக்கும். இரவு 8 மணிக்கு நைவேத்தியம் பூசை எல்லாம் நடக்கும். கடைசியாக திருப்புகை கொழுத்தி இரவு 10.30 மணிக்கே நடை சாத்துவார்கள். கோயிலில் பிரசாதமாக சந்தனமும் மலர்களும் தான் கொடுப்பர். பால் பாயசம், அப்பம் முதலியவைகளும் கிடைக்கும். இவைகளை விலை கொடுத்தே வாங்க வேணும்.

இங்கு நடக்கும் பிரார்த்தனைகளில் சிறப்பானது துலாபாரமும், குழந்தைகளுக்கு அமுதூட்டுதலும், திருமணம் செய்தலுமே. தண்ணீர் முதல் நவரத்தினம் வரை, ஆளின் எடைக்கு எடை தருவதாகப் பிரார்த்தித்துக் கொள்வர். அப்படியே பிரார்த்தனை செய்தவரையும் அவர் கொண்டுவரும் பொருளையும் நிறை போட்டு கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர். பிறந்த குழந்தைக்கு ஒரு வயதானதும், அமுதூட்டவும், குருவாயூரப்பன் கோவிலை நாடிவருபவர் பலர். கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் நைவேத்யம் முதலியவற்றை முதலில் குழந்தைக்குக் கொடுத்து, அதன்பின் அன்னம் கொடுப்பர். திருமணங்களையும் குருவாயூரப்பன் சந்நிதியிலேயே நடத்துவர் சிலர். இதற்கெல்லாம் கோவிலுக்கு கட்டணங்களும் செலுத்த வேணும்.

எல்லாம் சரிதான். குருவாயூரப்பன் அருளைப் பற்றி சிறப்பாகச் சொல்வார்களே, அதைப்பற்றி ஒன்றுமே சொல்லக் காணோமே என்றுதானே கேட்கிறீர்கள். ஆதியிலே, இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை பிரம்மா மகாவிஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் அதை அவர் கச்யபருக்குக் கொடுக்க அவர் அதனை கண்ணனைப் பெற்றெடுத்த தேவகி வாசுதேவருக்குத் கொடுத்தார் - என்பது பாகவத வரலாறு. பின்னர் உத்தவர் இதனைப் பெற்றிருக்கிறார். அதன் பின் கலியுகத்தில் மக்கள் எல்லாம் உய்ய உத்தவர் குருவிடமும் வாயுவிடமும் கொடுத் திருக்கிறார்.

இவர்களே இந்த நாராயணனை மான்மியூர் என்று அன்று வழங்கிய இந்தப் பிரதேசத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இப்படி குருவும் வாயுவும் சேர்ந்து கொண்டுவந்த காரணத்தாலேயே இவன் குருவாயூர் அப்பன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியிருக்கிறான். சந்திரவம்சத்து அரசனான பரீக்ஷித்து பாம்புகளைப் பழிவாங்க, அந்த பரீஷித்துவின் மகனான ஜனமேஜயன் நாகங்களுக்கு அஞ்சி வாழ்கிறான். நாகயக்ஞமே செய்கிறான். கடைசியில் அவனை, குட்டம் என்னும் நோய் பிடித்துக்கொள்கிறது. என்ன பண்ணியும் நீங்காத குட்டம் குரு வாயூரப்பனை வழிபட்டதாலே தீர்ந்தது என்பது வரலாறு.

இந்த குருவாயூரப்பனுக்கு மதில்களோடு கூடிய கோயில் எடுப்பித்தது ஒரு பாண்டிய மன்னனே. அவனும் பாம்பொன்றால் தீண்டப் படுவான் என்று புரோகிதர்கள் சொல்ல, அவன் குருவாயூரப்பனை வணங்கி அந்த சாப விமோசனம் பெற்றிருக்கிறான். இன்னும் குருவாயூரப்பனின் அற்புத லீலைகள் அனந்தம்.

திப்பு சுல்தான் இப்பக்கம் படையெடுத்து வந்தபோது, அவனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தவர். குருவாயூரப்பன் - என்பார்கள். அவன் இக் கோயிலுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிபந்தங்கள் அனந்தம். அக்காலத்தில் ஹரிஜனங்களை கோயிலுள் அனுமதிப்புதில்லை. ஏகாதசி அன்று மட்டும் இந்த விதி விலக்கு உண்டு. ஒரு ஏகாதசி அன்று ஹரிஜனங்கள் பந்தி பந்தியாக கோயிலுள் நுழையும் போது ஒரு வயோதிக பிராம்மணர் வருந்தினாராம். அச்சமயம் கோயிலுள் இருந்த வில்வ மங்கள சாமியார் அந்த அந்தணரைத் தொட ஹரிஜனங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு குருவாயூர் அப்பனாகக் காட்சி கொடுத்தார்களாம்.

இன்னும் பூந்தானம் நம்பூத்ரி என்பவர் ஒரு பிரார்த்தனை நூலை எழுதி, அதை நாராயணீயம் பாடிய மேல்பத்தூர் பட்டாத்திரியிடம் எடுத்துப் போன போது அதை அவர் அலக்ஷியப்படுத்தி விட்டாராம். ஆனால், பட்டாத்திரியின் கனவில் குருவாயூரப்பன் தோன்றி, உன்னுடைய வியக்தியை விட நான் பூந்தானத்தின் பக்தியையே மதிக்கிறேன் என்றாராம். இன்னும் ஒரு வயோதிகர் தனிவழி போனபோது, அவரைக் கள்ளர்கள் மறித்து அவர் உடைமைகளைப் பிடுங்க, அதையெல்லாம் குருவாயூரப்பனே மீட்டுக் கொடுத்தான் என்பர். இன்னும் இதுபோன்று எண்ணரிய அற்புதங்களை நிகழ்த்தியவர் தான் குருவாயூரப்பன். மலையாள மக்கள் இந்த அப்பனை, இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக வழிபடுவதில் வியப்பில்லை. மலையாள மக்களுக்கு மாத்திரம் என்ன, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனுக்குமே அவன் கண்கண்ட தெய்வம்தான் - அவனை வழிபட்டுப் பேறும் புகழும் அடைய எல்லோருமே விரையலாம் தானே!