வேமனர்/இருட்படலத்தின் இரட்டை இரவு

5. இருட்படலத்தின் இரட்டை இரவு

"இருட்படலமும் ஒளி மூடாக்குகளும்
கொண்ட இரட்டை இரவு"

-மில்ட்டன்

வேமனரை ஒரு மனிதராகவும், கவிஞராகவும், தத்துவஞானியாகவும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிச் சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும்; காரணம், அவரது வாழ்க்கை கலை சிந்தனை ஆகியவை அதில் வேர்விட்டுக் கிடக்கின்றன. முரணாகக் காணப்படினும், தனித்திறமையுடையவர் மட்டிலுமே தம் காலத்தில் வேர்களை விட்டும் அதிலிருந்து உயிர் தரும் நீர்மத்தையும் உணவினையும் எடுத்துக்கொண்டு காலத்தையும் கடந்து ஈறில்லாத காலத்திலும் அடியெடுத்து வைக்க முடியும். வேர் இல்லாத மனிதன் மிகச் செழிப்பான திறமைக்கூறுடையவனாக இருந்தபோதிலும், இங்கு இல்லாமலும் அங்கு இல்லாமலும் இருப்பான்; அவன் சாதாரணமாகத் தன்னைக் கடந்து செல்லும் வன்காற்று வீச்சால் அடித்து வீக்கப்பெற்று இறுதியாகச் சூனிய நிலையின் சுற்றுப்புறத்திற்கு வீசிச் செலுத்தப்பெறுவான்.

தம் காலத்தில் உறுதியாக வேரூன்றி நிற்பவராதலின் வேமனர் (தாமஸ் கிரேயைப்பற்றி ராபர்ட் லிண்ட் கூறுவது போல்) தம் அனுபவத்தால் இவ்வாறு அறிந்தார். "கவிதை என்பது வெறுமையான இலக்கியப் பயிற்சியன்று: உண்மையாக இருப்பதன் விம்பக்காட்சியாகும்; காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட மாதிரிகளைப் பற்றிய வினை வியந்து பாராட்டலிலும் அது அமையவில்லை. அது தன்னுடைய மூச்சைப் போலவும் நாட்டைப்போலவும் மிக அண்மையிலிருப்பது"; அவர் தம்முடைய கவிதைப் படைப்பில் தம்முடைய காலத்தை முழுமையாக பிரதிபலித்தார். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் வேமனரின் வாழ்க்கை வரலாறுபற்றிய கதையை அவருடைய கவிதையைத் திறனாய்ந்து கற்றல் மூலம் புதிதாக அமைத்துக் காட்டலாம்; அங்ஙனமே அவர் வாழ்ந்த, எழுதிய, கற்பித்த காலத்தைப் பற்றிய தெளிவான நல்ல நம்பகமான ஓவியம் ஒன்றினை அதிலிருந்து பெறலாம். அந்தக் காலம் சோர்வுற்ற, சிறுமைப்பட்ட, நாகரீகமற்ற, அருவருப்பான காலமாகும். உலகப்பொருள்களிலும் ஆன்ம உணர்விலும் ஏழ்மைப்பட்டதாகவும், சிந்தனையிலும் பேச்சிலும் நாகரிகமற்றும், ஒவ்வொரு கூறிலும் அருவருக்கத்தக்கதாகவும் இருந்த காலமாகும் அது. இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்ததுபோல ஆந்திராவிலும் நிலவிய இடைக்காலத்தின் இறுதியானதும் மிகமிக மோசமானதுமான கட்டமாகும். உண்மையிலேயே அந்தக் காலம் "இருட்படலமும் ஒளிமூடாக்குகளும், கொண்ட ஓர் இரட்டை இரவாகும்."

வேமனரின் கவிதை மூலம் நாம் கணநேரத் தோற்றத்தில் காணும் அவர் காலத்திய சமயநிலையின் பரந்த காட்சி இதுவாகும்: பிறப்பிலேயே வேமனர் எதிர்ப்பார்வமுள்ள சீர்திருத்த நோக்குடைய சிவ வழிபாட்டு முறையான வீரசைவ சமயத்தைத் தழுவியவர்; ஆனால் அவர் காலத்தில் அந்த வழிபாட்டுமுறையில் எதிர்ப்பார்வமும் இல்லை; சீர்திருத்த நோக்கமும் இல்லை. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பசவர் என்பவரால் நிறுவப்பெற்ற அந்த வழிபாட்டுமுறை பல-தெய்வ வணக்கத்தை ஏளனம் செய்கின்றது, வேதத்தில் நுவலப்பெறும் பலிகளை கண்டு வருந்துகின்றது, கள்ளக் குருக்களின் தந்திரத்தைப் பழித்துரைக்கின்றது. சாதி வேறுபாடுகளையும் ஆண் பெண்களிடையேயுள்ள சமமின்மைகளையும் புறக்கணிக்கின்றது, தீண்டாமையைக் கடிந்துரைக்கின்றது, கடுமையான எல்லாத் துறவு நிலைகளையும் எதிர்க்கின்றது. அதனுடைய கோட்பாடுகள் எல்லாம் எதிர்மறையானவை அல்ல; உடன்பாட்டுக்கூறுகளில், அது அனுபவத்தால் பெறும் அறிவினையும், அறிவின் அடிப்படையிலமைந்த திட நம்பிக்கையினையும், கலப்பு மணங்களால் பெறும் சமூக சமத்துவத்தையும், குடும்ப வாழ்க்கையின் திருநிலைத் துய்மையையும், உடலுழைப்பின் மதிப்பினையும், நன்னெறிசார்ந்த நற்குண வளர்ப்பினையும் ஆதரிக்கின்றது. அது மனிதப் பண்புணர்ச்சியில் தோய்ந்து எல்லாவற்றையும் உட்படுத்திய சகோதரத்துவத்திற்காகப் பாடுபடுகின்றது. பசவரின் வீரசைவ சமயம் முதன்முதலாகப் பண்டிதர் சீபதி, பண்டிதர் மல்லிகார்ச்சுனர், பலகுரிக்கி சோமநாதர் முதலியோர்களால் ஆந்திர மாநிலத்திற்குக் கொணரப்பெற்று வேகமாகப் பரவி வருகின்றது. சமூக ஏணியில் ஒரு பக்கத்திலுள்ள பிராமணர் முதல் மறுபக்கத்திலுள்ள தீண்டத்தகாதவர்கள் வரை எல்லோரும் அச்சமயத்தின்பால் ஈர்க்கப்பெறுகின்றனர். அது புதியதொரு புலர்விடியலை முன்னறிவிக்கின்றது; புதிய சிந்தனையின் குவிமையமாக அமைகின்றது; வல்லமை வாய்ந்த ஒரு சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவிக்கின்றது.

நாளடைவில் வீரசைவ சமயம் தன்குறிக்கோள் நெறியைத் தவறவிடுகின்றது. அது வேமனர் காலத்தை அடைகின்றபொழுது மூலமுன்மாதிரியின் நையாண்டிக்கோலங்கொள்ளுகின்றது. சமய உட்பிரிவுகளின் வேறுபாடுகளை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தோல்வியடைந்து, ஏற்கனவே அதிகமாகப் பிளவுகொண்டுள்ள இந்து சமூகத்தில் பிறிதொரு உட்பிரிவினைப்-வீர சைவர்கள் என்ற பிரிவு-புதிதாகச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றது. உண்மையில், அது இரண்டு பிரிவுகளைச் சேர்த்துக்கொண்டது என்றே சொல்லலாம். காரணம், வீரசைவர்களும் சாதிகளின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாயினர். அரத்தியர்கள் என்போர் பிராமணர்கள்; ஜங்கமர்கள் என்போர் பிராமணரல்லாதவர்கள். மேலும் அது புதியதொரு சடங்குமுறைகளையும் புதியதொரு புரோகித வகுப்பினரையும், ஏராளமான புதிய கட்டுக்கதைகளையும் புராணத் தொகுதிகளையும், புதிதாக உற்பத்தியான மூடநம்பிக்கைத்தொகுதிகளையும் உண்டாக்கியுள்ளது. அந்தக் கோட்பாட்டின் உயிரான உள்தத்துவத்திற்குக் காட்டப்பெறுவதைவிடப் புறம்பான பகுதிகட்கே அதிகக் கவனம் செலுத்தப்பெறுகின்றது. ஒருவர் லிங்கத்தை உடலிடங்கொண்டு மேனியெல்லாம் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டாலும், ஒருநாளில் வரையறுத்த இடைவேளைகளில் சிவநாமத்தை மனனம் செய்தாலும், தெளிவாகக் குறிப்பிடப் பெற்ற நாட்களில் பட்டினி கிடந்து விரதத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட திருத்தலங்கட்குச் சிற்சில சமயங்களில் பயணங்களை மேற்கொண்டாலும், நம்பிக்கையுடன் அவர் கடமைகளைப் போதுமான அளவு நிறைவேற்றிவிட்டவராகின்றார். சுருக்கமாகக் கூறினால், சமயம் திட்டமாக அமைந்த கபட நாடகமாகின்றது. இங்ஙனம் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளின் நிலைமையைக்கண்டு வேமனர் பொறுமையற்ற நிலையை அடக்கமுடியாமல் கேட்கின்றார்: "சமயச் சடங்குகளை உண்மையற்ற ஆசார முறையால் மேற்கொள்வதாலும், உண்மையற்றமுறையில் சிவனை வணங்குவதாலும் பயன் என்ன? தூய்மையற்ற பாண்டத்தில் சமைக்கப்பெற்ற உணவினால் யாது பயன்?" விரிந்த நோக்கமுள்ள மனப்பான்மையையும் பிற சமய நம்பிக்கையைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மையையும் வற்புறுத்தி வேண்டும் வேமனர் கூறுகின்றார்: " குண்டா என்று தெலுங்கில் வழங்கினலும் கும்பம்" என்று வடமொழியில் கூறினலும் இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்றன. அங்ஙனமே "கொண்ட என்றும், பருவதம்" என்றும் வழங்கும் சொற்கள் மலையையே காட்டுகின்றன. மேலும் உப்பு என்றாலும் "லவனம்" என்றாலும் அச்சொற்கள் உப்பு என்ற பொருளையே தெரிவிக்கின்றன. வெவ்வேறு பெயர்களைக்கொண்டபோதிலும் இறைவன் என்பவர் ஒருவரேயாவார். தன்னுடன் நெருங்கிப் பழகும் வீரசைவர்களிடம் தாம் வற்புறுத்தி வேண்டுவது வீணே என்பதைக் காணும் வேமனர் இவ்வாறு வெகுண்டு பேசுகின்றார்: "நமது ஆறு சிந்தனை அமைப்புகளில் வீர சைவத்திற்கு நிகரானது ஒன்றுமில்லை; பல்வேறு சமயவஞ்சகர்களுள் லிங்கம் தரிப்போரை எவரும் விஞ்ச முடியாது."

விஷ்ணுவின் வழிபாட்டு முறை அல்லது "வைணவம்" என்று வழங்கப்பெறும் முறையும் அடிப்படையிலேயே மாற்றியமைக்க விரும்பும் சீர்திருத்த இயக்கமாக உயர்ந்த குறிக்கோள்களுடன் தோன்றுகின்றது; அதுவும் வேமனர் காலத்தில் தனது மூல அறிவுச் சுடரை இழக்கின்றது. அது முற்றிலும் சோர்வுற்ற நிலையை அடைந்தது என்பதற்கு ஒரே ஒரு சான்றினைத் தரலாம். அந்த அமைப்பினுள்ளேயே சமய உட்பிரிவுகள் மிகவும் வெறுக்கத்தக்க கனவாகவும், மடத்தனமாகவும் வளர்ந்து, ஒரே விஷ்ணுவின் அடியார்களாக இருந்தபோதிலும், நஞ்சைப்போல் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். நாம் மதிப்பிடும் காலத்திற்குச் சற்று பின்னருள்ள காலத்தில் பிரௌன் குறிப்பிட்டுள்ளபடி அவர்கட்கிடையே எழும் மாறுபாட்டின் முக்கிய செய்தி தத்தம் கோட்பாட்டிற்கு உரிய அடையாளம் எந்த வடிவத்திலிருக்க வேண்டும் என்பதாகும். அதாவது, ஒவ்வொருவரும் காலையில் தீர்த்தமாடியபிறகு தமது நெற்றியில் தீட்டிக்கொள்ளும் அடையாளமாகும். (பிரெளனின் கூற்றுப்படி) "அவர்களிடையே எழுந்த பூசல் கேடளாவிய குழப்பங்களையும் பல உயிர்களின் இழப்பையும் விளைவிக்கும் அளவுக்கு மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது".

போட்டியிடும் சமயங்களான சைவம், வைணவம் என்ற சமய உட்பரிவுகளிடையே நிலவும் பழம்பகைகள் மிகமிகக் கொடியவையாகும். சிலசமயங்களில் அவை முற்றுகையிட்ட போர்களில் கொண்டு செலுத்தி அறிவற்ற படுகொலையில் முடிந்துள்ளன. கடுந்தாக்குதல்கட்கு முன்னர் கொந்தளிக்கும் பகையும் உணர்ச்சி மிகுதியும் நிலவுகின்றன; உண்மையில் அவ்விடைக்காலங்கள் ஆயுதம் தாங்கிய தற்காலிகப்போர் நிறுத்தக் காலங்களாகும். நம்பத்தகாததுபோல காணப்பெறினும், ஒரு சைவரின் உடலை ஒரு வைணவரின் உடல் எப்படியோ தொட்டுக்கொள்ள, நேர்ந்தால் அவர் தீர்த்தமாடித் தூய்மைபடுத்திக்கொள்ளவேண்டும். இங்ங்னமே, ஒரு வைணவரின் தொடுகை ஒரு சைவரின் தூய்மையைக்கெடுத்து விடுகின்றது. இந்தத் தூய்மையான அவக்கேட்டினல் அதிர்ச்சியடைந்த வேமனர் கேட்கின்றார்: “ஒரு சைவரையும் ஒரு வைணவரையும் ஒரேகாலத்தில் காலன் கொண்டுபோனல் சைவரின் உடல் புதைக்கப்படுகின்றது, வைணவரின் உடல் எரிக்கப்படுகிறது என்ற வேறுபாட்டைத்தவிர அவர்களிடையே வேறு என்ன வேறு பாடு உள்ளது? அப்படி இருக்கும்போது இறைவன் பெயரால் ஏன் சச்சரவு செய்துகொள்ளவேண்டும்? அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று கூறுகின்றார்: "நம்முடைய சமயங்கள் பல; ஆனால் எவையும் உறுதியானவையும் அல்ல, நிலையானவையும் அல்ல. நிலையானவையாக இருப்பவை நம்முடைய நல்வினைகளும் தீவினைகளும் மட்டிலுமே. முடிவான பகுப்பாய்வால் எந்த ஒரு சமயமும் உண்மையைத் தன் உரிமையாகக்கொள்ளவில்லை. சமயத்தின் பால் தனி நலத்தை உரிமையாகக் கொண்டுள்ளவர்களிடம் காரணம் காட்டி வாதிடுவதில் ஒருக்கால் யாதொரு பயனும் இராது எனக் கருதுபவர், சமயவாதிகளிடம் விழிப்புடனிருத்தல் வேண்டுமென்று பொதுமக்களை எச்சரிக்கின்றார். "சமயத்தை வைத்து வாணிகம் செய்து ஏமாற்றுபவர்கள் ஆயிரக்கணக்காக உள்ளனர். அவர்கள் மீன்களைக் கொத்தித் தின்னும் கொக்குக் கூட்டத்தைப் போல் வெளிக்கிளம்பியிருப்பதால் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் அவர் கூறுகின்றார்.

சைவமும், வைணவமும் மதிப்பிழந்ததைப்போல் வேதபலிகளும் மீண்டும் நம் கவனத்திற்குமுன் வருகின்றன. பழைய அளவுப்படி இல்லாவிடினும், அவை அடிக்கடிச் செய்யப்பெறுகின்றன. வேமனரும் தாம் ஒளிவுமறைவு இன்றிப் பேசுகின்ற முறையிலேயே பெருகிவரும் இப்போக்கிற்கு எதிராகக் கடிந்து பேசுகின்றார். "மிக உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறும் உங்கள் உரிமை எங்குள்ளது?" என்று வேதப் புரோகிதர்களை நோக்கிக் கேட்கின்றார், "அது பலி என்ற பெயரால் ஆதரவற்ற நிலையிலுள்ள பிராணிகளைக் கொல்லுவதிலும் அவற்றின் இறைச்சியை உங்கள் திருநிலையான நெருப்பில் சுட்டு உண்பதிலும் உள்ளதா?" என்கின்றார். தாக்குதலுக்கு திரும்பியவர், "நீங்கள் உரிமை கொண்டாடுகின்றபடி சிங்கங்கள் போல் பலமாக இருப்பின் ஆதரவற்ற ஆடுகளின் கழுத்துகளை முறுக்கிப் பிழிவதில் சிங்கத்திற்குரிய பலத்தைக்காட்ட முடியுமா?’ என்று கேட்கின்றார். பிறிதோர் இடத்தில், "உயர்தரமான நோக்கத்தில் ஆன்ம தியாகம் பலிகளனைத்திலும் மிகச்சிறந்ததல்லவா?" என்று வினவுகின்றார். வேதபலி இடுபவர் உம்பர் உலகில் அவ்வுலகிற்குரிய ஆடலணங்கான அரம்பையின் காதற்சுகங்களை அனுபவிப்பார் என்று நம்பப்பெறுகின்றது. இந்த நம்பிக்கையைக் குறித்து வேமனர்: "தந்தையும் மகனும் பலிகளை மேற்கொண்டால், இருவரும் உம்பருலகினை அடைந்து, இருவரும் அரம்பையரை அணைவர். இதனால் அவர்கள் தகாப்புணர்ச்சி மேற்கொண்ட குற்றத்திற்கு ஆளாகின்றனரல்லவா? என்று திகைக்கும் வினாவை விடுக்கின்றார். அவர் காலத்திய சமய நம்பிக்கைகளை அடிக்கடியும் விடாதும் பல்வேறு முனைகளில் வேமனர் தாக்குவது அந்த நம்பிக் கைகள் எவ்வளவு இழிவான நிலைக்கு இறங்கியுள்ளன என்பதன் அளவுக்குறியாக அமைகின்றது.

அவர் காலத்திய சமூக-அரசியல் நிலைமைகளும் நன்முறையில் இல்லை. நடுவரசின் மேலாண்மை உரிமை இல்லை; நாடு சிறு சிறு பகுதிகளாகச் சிற்றரசர்களின் ஆட்சியிலிருந்தது. அவர்கள் மிகவும் ஆற்றல் அற்றவர்களாக இருந்தனர். "எந்த முரடனும் பணிவச்சமின்றி ஆட்சிபுரியும் சிற்றரசனை எதிர்த்து நிற்கலாம்" என்பது வேமனரின் கூற்று. ஆட்சியிலுள்ள ஆற்றலற்ற எல்லா மனிதர்களைப்போலவே இந்தச் சிற்றரசர்களும் வெடு வெடுப்புள்ளவர்களாகவும் மனம்போன போக்குடையவர்களாகவும் உள்ளனர். தம்மைச் சுற்றிப் பலவகையான புகழ்பாடும்போலிக் கூட்டங்களைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய முக்கிய உணவாகிய முகப்புகழ்ச்சியை வாரிக் கட்டிக் கொள்ளுகின்றனர்; ஓய்வானதும் மகிழ்வுடையதுமான வாழ்க்கையை நடத்துகின்றனர்; துயருறுவோர் பழிக்குப்பழி வாங்க இயலாது என்பது உறுதியானல் அவர்கள் மக்களைக் கொடுமை செய்து வருத்துகின்றனர். தெளிவாக அத்தகைய ஒரு சிற்றரசைக் குறிப்பிடும் வேமனர் கூறுகின்றார்: "அவருடைய திருக்குமாரர் ஒரு போக்கிரி, அவருடைய நண்பர் ஒரு கோள்சொல்லி, அவர் அறிவற்றவர், அவருடைய அமைச்சரோ ஒழுக்கமற்றவர். உண்மையாகவே, பெரிய குரங்கு வகைக் கூட்டத்துடன் இருக்கும்பொழுது சாதாரணக் குரங்கு ஒருபொழுதும் மகிழ்ச்சியுடன் இருத்தல் முடியாது.” பிறிதொரு பாடலில் அவர் கூறுவது இது: "அதிகாரத்தில் உள்ள மூடன் ஒருவன் தகுதி உள்ள அனைவரையும் வேலையிலிருந்து நீக்கிவிடுகின்றான் உண்மையாகவே செருப்பைக் கடிக்க விரும்பும் நாய் கரும்பின் சுவையை எங்ஙனம் அறியமுடியும்?" இறுதியாக அவர் "உயிருக்கு ஊறு விளைவிக்கும் நாகத்துடன் கொள்ளும் உறவைவிடக் கீழானதால், சிற்றரசரை நம்பவும் வேண்டாம்; அவருக்குப் பணி செய்யவும்வேண்டாம்" என்று நம்மை எச்சரிக்கின்றார்.

இத்தகைய மனவுறுதியில்லாத கொடிய சிற்றரசர்களின் கொடுங்கோலாட்சியில் உயிருக்கோ சொத்துக்கோ பாதுகாப்பு இல்லை. கொள்ளைக்காரர்கள் நாட்டுப்புறங்களைச் சூறையாடுகின்றனர்; அவர்கள் தண்டிக்கப்பெறுவது இல்லை. அவர்களைப்பார்த்து வேமனர் பேசுகின்றர்: "நீங்கள் மக்களை கொன்றும் உறுப்புக் குறைச்செய்தும் வருகின்றீர்கள், சிற்றூர்களைக் கொள்ளையடிக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தங்குதடையற்றுச் செல்லலாம். ஆனால் யமனுடைய சீற்றத்தினின்றும் தப்பமுடியுமா?’’ இறுதி தீர்ப்பினைப்பற்றிய எச்சரிக்கைகள் கடின சித்தமுடைய குற்றவாளிகளைக் கொள்ளையடிக்கும் தொழிலினின்றும் அச்சத்தால் பின் வாங்கச்செய்தல் அரிதாக இருப்பதுபோல், வேமனரின் எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலாகி இருக்கலாம்.பொதுவாகச் சட்டத்தை மீறி நடக்கும் நிலை தன்னுடன் அடிக்கடி நிகழும் வற்கடங்களும் கொள்ளை நோய்களும் உட்பட வழக்கமாக நிகழும் எல்லாவித ஆரிடர்களையும் விளைவிக்கின்றது. வாழ்க்கையிலும் ஊக்கம் குறைகின்றது. அங்கனமே கலைகளும் கைத்தொழில்களும் மறையத் தொடங்குகின்றன. கல்வியும் குறைகின்றது. "மக்கள் பசியால் வாடுகின்றபொழுது கலைகளும் கைத்தொழில்களும் எங்ஙனம் செழிக்க முடியும்? கல்வியில் வளர்ச்சி எங்ஙனம் காணமுடியும்? சுடப்பெறாத மட்சட்டியில் எங்ஙணம் நீர் தங்க முடியும்?" என்று வேமனர் கேட்கின்றார்.

இத்தகைய இருட்படலம் சூழ்ந்த நலிவுற்றகாலத்தில் தோன்றிய வேமனர் ஒற்றையாகவே எதிர்த்து நின்றதும் தெளிவான கடுஞ்சொற்களால் பலரறியப் பழித்துக்கூறியதும் அவர் செல்வாக்கிற்குப் பலவகையில் சேர்ந்துதவக் காண்கின்றோம். சிலசமயங்களில், அவர் தொனியில் மழுங்கலாகவும், சொற்களில் கடுமையாகவும், கருத்துரைப்பதில் கண்டிப்பாகவும் இருந்தாலும் இதனால் அவர் மழுங்கியும் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்தார் என்பதாகாது; இயல்பாக அவர் குடிப்பண்புடையவராகவும் அன்புடையவராகவும் பொறுமையுடையவராகவும் இருந்தார்; உண்மையில் அவருடைய மென்மையான மேம்பட்ட உணர்ச்சியே, அவரை வாய்வீச்சுக்காரன் என்றும் பித்தேறிய கிறுக்கன் என்றும் அவர் மீது வீசப்பெற்ற பட்டப்பெயர்களையும் பொருட்படுத்தாது, தன் காலத்திய இழிநிலையை எதிர்த்து அவர் ஆன்மாவைக் கதறியழியச் செய்தது. அந்தப் பட்டப்பெயர்களேயே தன்னுடைய பட்டப் பெயர்களாக்கிக்கொண்டு தன்னுடைய அரிதான நீள்நோக்கிற்கேற்ப உண்மையாக வாழ்ந்தார். ஒருக்கால் இவர் இடைக்கால இந்தியாவின் தத்துவக் கவிஞர்களுள் இறுதியானவராக இருந்தாரோ என்று சொல்லலாம். நிச்சயமாக அவர்கள் மிகப்பெரியவர்களுள் ஒருவராகவே இருந்தார் என்பதற்கு ஐயம் இல்லை.