வேமனர்/கவிஞர் பேசினார்


6. கவிஞர் பேசினார்

உடனடியாகத் தோன்றிய எண்ணத்தையே
கவிஞர் பேசினார்

'-எமர்சன்

தெலுங்கு இலக்கியத்தின் தலைவர்கள் இப்போது வேமனரை ஒரு கவிஞராக, ஆனால் ஒரு சில்லறைக் கவிஞராக ஒப்புக் கொள்ளுகின்றனர். அவர்கள் கருத்துப்படி அவர் மிகவும் குறிப்பிடத்தக்க சதகக் கவிஞர்களுள் மிகச் சிறந்தவராவார். வேமனரின் பாடல்கள் சதக-மாதிரிக் கவிதைகளை ஒத்துள்ளன என்பது உண்மையே; அவை பொதுவான பல்லவியைக் கொண்டுள்ளன; சில அரிய சந்தர்ப்பங்களில் அது மாறுங்கால், அந்த மாற்றமும் சிறிய அளவில்தான் உள்ளது. ஆனால் அவருடைய கவிதையின் வடிவத்தை விட்டுவிட்டு அதன் உயிரோட்டம் மட்டிலும் கருதப்பெறுமேயாயின் சுண்ணக்காம்பினின்றும் பாலாடைக் கட்டி வேறுபடுகின்றதைப்போலச் சதகக் கவிஞர்களினின்றும், இவர் வேறுபட்டவராகின்றார். நூற்றுக்கணக்கான சதகக் கவிஞர்கள் இருக்கவே செய்கின்றனர்; பெரும்பாலும் அவர்கள் யாவரும் புகழ்பாடும் கவிஞர்களேயாவர்; அவர்கள் யாவரும் தம் தனிப்பற்றுக்குரிய தெய்வத்தையோ அல்லது செல்வச்சிறப்புடைய தம் புரவலர்களையோ பாடுவர். அவர்கள் அடிக்கடி செய்வதுபோல ஒழுக்கத்துறையில் தம் கருத்தினைச் செலுத்துங்கால், அவர்தம் நீதி மொழிகள் பள்ளிச்சிறுவர்கள் பார்த்தெழுதும் குறிப்பேட்டு முதுமொழியின் சப்பிட்ட தரத்திற்கு மேல் உயர்வதில்லை. அவர்தம் மனங்கள் ஆழமற்றும் வறண்டும் கிடக்கின்றன; அவர்தம் நடையோ கால் நடைதான்; அவர்தம் கவிதையோ கல்விச்செருக்குடையது. வேமனரோ இதற்கு முற்றிலும் மாறாக, உள்ளுணர்வுகளில் சுயமாகவும், இயற்கையை உற்றுநோக்கலில் அறிவுக்கூர்மையாகவும், மனவெழுச்சித் துலக்கத்தில் விரைவாகவும் உண்மையாகவும், சிந்தனையில் நுண்ணறிவு கொண்டும், எடுத்தியம்புவதில் துணிவாகவும் இருக்கின்றர். 'தெலுங்கு இலக்கியம்' என்ற தமது நூலில் சதகக் கவிஞர் என்றும் 'சதக எழுத்தாளர்களுள் மன்னர்’ என்றும் பி. செஞ்சையாவும் ராஜா எம். புஜங்கராவும் கூறுவது மிகக் குறைவான மதிப்பீடாகும். டாக்டர் சி. ஆர். ரெட்டி இந்த நூலின் நூன்முகத்தில் "நம் வான மண்டலத்தின் முதன்மையான விண் மீன்" என்று கூறுவது மிகச் சரியான மதிப்பீடாகும். புராணத்தையோ, பிரபந்தத்தையோ அவர் எழுதியிராதிருக்கலாம்; எனினும் அவரை உயர்தரக் கவிஞர் என்றே வழங்கலாம். அவர் கவிதை உயர்தர நிறைவை எய்தியுள்ளது. அவர்தரும் செய்தியோ எல்லாவற்றையும் உட்படுத்திய உயர்தரச் செய்தியாக உள்ளது 'ஆங்கில இலக்கிய வரலாறு' என்ற நூலின் கூட்டாசிரியராகிய கலாமியன் என்பவரிடமிருந்து கடன் வாங்கிய தொடரால் குறிப்பிட்டால் வேமனர் உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத்தன்மையை எய்தியுள்ளார் எனலாம். ராபர்ட் பர்ன்ஸ் என்பாரைப்பற்றிக் குறிப்பிடும் கஸாமியன் இவ்வாறு கூறுகின்றார்: "பர்ன்ஸ் என்பார் இயற்றிய இலக்கியத்தின் தன்மை, சொல்லின் கலைச்சுவை புலப்படக் கூறினால், உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மையை எய்தியுள்ளது; இந்த உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மை முற்றிலும் தன்னிறைவு எய்தியிருப்பதால் எந்தக்கோட்பாட்டுக் கிளையையும் விதியையும் சாராது தன்னுண்மையுடன் திகழ்கின்றது". பர்ன்ஸைப் போலவே வேமனரும் உழவர் இனத்தைச் சார்ந்திருப்பதாலும் அவரைப்போலவே சிறப்புத்திறமையுடைய வராதலாலும் அவரும் தனக்கே உரிய, தன்னுடைய உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மை யைப் படைத்துள்ளார்; அதுவும் "முற்றிலும் தன்னிறைவு" எய்தியுள்ளது.

வேமனர் தன்னுடைய கவிதையை எழுதினாரல்லர்; அதனை வாய்மொழியாகவே கூறினார். வோர்ட்ஸ் வொர்த் போலன்றி இவரிடம் கவிதை என்பது "அமைதியான நிலையில் திரும்பவும் நினைவூட்டும் மனவெழுச்சிகள்" அன்று; அது மனவெழுச்சிகள் வெண்சூட்டு நிலையிலுள்ளபோது தோன்றியதாகும். அவர்கொண்ட அதிக ஈடுபாட்டினால் அவர்தம் மனஎழுச்சிகள் அமைதிகொள்ளவில்லை. அவரிடம் எண்ணம் உருவானவுடன், அவர் மேற்கொள்ளும் பங்கு கவிஞரின் பங்கு அல்ல; மறைமெய்யைக் கொண்டவரின் பங்கை ஏற்கின்றார்;வருவதுரைக்கும் தீர்க்கதரிசியாகின்றார்.ஆகவே, அவர் எந்தக் கவிதைக் கொள்கையிலும் தம் கவனத்தைச் செலுத்துவதில்லை; பரதர், தண்டியார், அபிநவகுப்தர், ஹேமசந்திரர், போஜர் போன்ற அணி, இலக்கணத்தில் தனித்திறமை வாய்ந்தவர்களின் பெயர்களைக்கூடக் கேள்வியுற்றிருக்கமாட்டார். எனினும், அவர் மிகச்சிறந்த கவிதையையே "பேசினார்"; காரணம். பிறப்பிலேயே அவர் கவிஞராதலால் தன்னுடைய இதயத்தில் உண்மையாகவும் ஆழமாகவும் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளைக் கவிதைச் சொற்களாகத் தராமல் இருக்கமுடியாது. இதன் காரணமாக, அவருடைய கவிதை சிலசமயம் மிகப்பெரிய வெள்ளமாகவும் சிலசமயம் வெடித்துக் கிளம்பும் எரிமலையாகவும், சிலசமயம் கடல் களைத் தாக்கும் சூறாவளிக் காற்றாகவும் உள்ளது; இந்த அளவு கோலின் அடுத்தகோடியில் அது விரைவான மாற்றங்களை ஏற்றுக் கோடைக்குப்பிறகு தோன்றும் முதல் மாரியாகவும், குளிர்ந்து வீசும் தென்றலாகவும், அதிகாலையில் கேட்கப்பெறும் பறவைகளின் பாட்டாகவும் அமைந்துவிடுகின்றது.

1950-ல் சென்னை வானெலியில் ஒலிபரப்பான பேச்சில் டாக்டர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் கூறுவதுபோல், வேமனர் "இயற்கையைப் பற்றிப் பாடும் கவிஞராகவும் இயல்பான கவிஞராகவும் திகழ்கின்றார்’’. இங்கு அவரது திறனாய்வு மதிப்பீட்டின் ஒரு சில வாக்கியங்களே அப்படியே மேற்கோளாகக்காட்டுவோம்:

படித்தவர்தான் என்ற போதிலும் அவர் ஒரு புலவர் அல்ல. ஆனால், ஆழ்ந்த சிந்தனையையுடையவர்: வாழ்க்கையையும், அதன் உலகியல் பற்றியனவும் ஆன்மிக இயல்பற்றியனவுமான பிரச்சினைகளை ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலையும் ஊடுருவிப்பார்க்கும் உள்ளுணர்வையும் பெற்றவர். இத்தகைய திறன்களைக் கருவிலே அமையப்பெற்ற இவருடைய கவிதை சிந்தனையிலும் நடையிலும் சுயமானது; முற்றிலும் தானாக இயல்பாக எழுவது; கறைப்படுத்தப் பெறாதனவும் தூய்மையானதுவுமான ஊற்றாக இருப்பது. மூன்று வரிகளில் முழுக் கவிதையைத் தருகின்றார். சுருக்கமே சொல்திறனின் ஆன்மாவானால், இந்த உலகில் இதைவிடப் பெரிய சொல்திறன் இருந்ததில்லை. அவருடைய உவமைகளும் உருவகங்களும் காடுகளிலும் வயல்களிலும்,நாட்டுப்புறக் காட்சிகளிலும் இயற்கையான சூழ்நிலைகளிலுமிருந்தே எழுந்தவை. அவர் இயற்கைக் கவிஞர்; இயல்பான கவிஞரும் கூட


வேமனரின் சிந்தனையை வெறுப்பவர்களும்கூட அவருடைய கவிதையின் சொல்வளம் இணையற்றதென்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அவர்கவிதை இழிவின்றி எளிமையாகவும், தெவிட்டுதலின்றி இனிமையாகவும் உள்ளது. அஃது எல்லாவிதக் கலையுயிர்ப்பண்பையும் பல்வகைப் பெருக்கத்தையும் கொண்ட பெருவழக்கானபேச்சின் தன்மையையுடையது; முதல் இயலில் குறிப்பிட்டது போல் அத்தகைய பேச்சில் அவர் தலைசிறந்த முதல்வராவார். சில இடங்கள் அவர் கவிதை தெளிவுக்குறைவுள்ளது என்பது உண்மையே; ஆனால் அவர் உயர்வான மறைமெய்ம்மை சார்ந்த அநுபவங்களைக்கூறும் போதுதான் இங்ஙனம் நேரிடுகின்றது. இயல்பாகவே மறை மெய்ம்மை சார்ந்த அநுபவங்கள் யாவும் தனிமுறை உரிமையுடையவை; அவற்றை ஒருவர் உணரலாம் அல்லது உணராது போகலாம். அவற்றை உணர்பவர்கட்கு அவை உண்மையானவையாதலின் அவற்றின் விளக்கவுரை தேவை இல்லை; அவற்றை உணராதவர்கட்கு அவை உண்மையற்றவை, புரியாதவை; குறியீடுகளின் துணையின்றி எல்லா மறை மெய்ம்மையாளர்களும், அவர்கள் இந்துக்களாயினும், கிறித்தவர்களாயினும், சூஃபிகளாயினும், ஒரு மறைமெய்ம்மை சார்ந்த அநுபவத்தின் சரியான இயல்பினைப் பிறருக்கு எடுத்துரைப்பது தமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண்பார்கள். பிற மறைமெய்ம்மையாளர்களைப் போலவே, வேமனரும் தமக்கேயுரிய குறியீடுகளைக் கையாளுகின்றார், "உறக்கத்துக்கு அப்பால் உறக்கம்", "அறிவுக்கு மேல் அறிவு", "பரந்த வெளியினுள் பரந்தவெளி", "நோக்கினுள் நோக்கு", "திரைக்குப் பின்னால் ஒளி", "உடலினுள் ஆன்மா", "ஆன்மாவினுள் உடல்"- அவர் கையாளும் பல குறியீடுகளில் இவை சிலவாகும். பொதுவாகக் கருதுமிடத்து வேமனரின் மறை மெய்ம்மை சார்ந்த பாடல்கள் தெளிவற்றிருப்பினும், மீமெய்ம்மையியல் சார்ந்த (Sur realistic) கவிதையை விடவும், கருத்தியற் கலையை விடவும் அவை அதிகத் தெளிவற்றவை அல்ல. சில விஷயங்களைக் குறிப்பினால் தெரிவிக்கலாமேயன்றி விளக்கம் செய்தல் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளாமலேயே வேமனரின் சீடர்களில் சிலர் விளக்கமுடியாதனவற்றை விளக்குவதில் முயன்று தம்மை ஏளனத்திற்குள்ளாக்கிக் கொள்ளுகின்றனர்.

தன்னுடைய கவிதைக்கு வேமனரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற யாப்பு 'ஆட்டவெலதி' என்பதாகும். அஃது அவரால் புனையப் பெறவில்லை; அஃது மக்களிடையே வழங்கிவந்த மிகப்பழைய யாப்பாகும். அதன் சொல்லுக்குச் சொல் சரியான பொருள் "நாட்டியமாடும் ஆரணங்கு" என்பதாகும். நன்னயரிலிருந்து கீழ் நோக்கி வந்தால், நூற்றுக்கணக்கான கவிஞர்கள் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்; ஆனால் வேமனரைத் தவிர ஒருவராலும் அதனை வேமனரைப்போல் "நாட்டியமாடச்" செய்ய இயலவில்லை. காளிதாசருக்கு 'மந்தா கிராந்தா' என்ற யாப்பு அமைவதுபோலவும், பவபூதிக்கு 'சிகரிணி' அமைவது போலவும் திக்கனாவுக்குக் 'கந்தம்' அமைவதுபோலவும், 'சீசம்' சிநாதருக்கு அமைவது போலவும் வேமனருக்கு 'ஆட்டவெலதி' அமைகின்றது. ஆங்கில இலக்கியத்தினின்றும் ஒரு போகான இரண்டு எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம். செகப்பிரியர் எதுகையில்லாத செய்யுட்களையும் (செந்தொடைப் பா), போப் வீரகாவியம் சார்ந்த ஈரடிப்பாவையும் கையாண்டதைப் போலவே வேமனரும் அதே செப்பிடு வித்தையை 'ஆட்டவெலதியிடம்' கையாண்டார். வீரகாவியம் சார்ந்த ஈரடிப் பாவைப்பற்றிப் பேசும் லிட்டன் ஸ்ட்ரேச்சி என்பார். "அது போப்பின் கையில் அதன் இயல்பில் முடிவான நிறைவினை-அதன் இறுதியான சிறப்பினை-அதன் தலைசிறந்த நிறைவேற்றத்தை அடைந்தது" என்று கூறுவார். அங்ஙணமே வேமனரின் கையில் 'ஆட்டவெலதி' அச்சிறப்பினை அடைந்தது. வேமனருக்கு முன்னர் எந்த ஒரு தெலுங்குக் கவிஞராலும் அதன் இயல்பான எளிமையையும் அணியின்மையையும் அதன் சந்தத்தையும் இடையொழுக்கினையும் முழுமையாக உணரவோ அல்லது முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவோ இயலவில்லை.

வேமனரின் பாடல்களைச் சேகரித்து வெளியிட்ட பதிப்புகளில் ஆட்டவெலதியைத் தவிர வேறு யாப்புகளிலும் புனையப் பெற்ற பாடல்களைக் காண்கிறோம். ஆனால் அவை அவருடைய முதன்மையான பகுதியுடன் எந்த அளவிலாவது அருகில் வரமுடியவில்லை. அவை அவருடைய மாதிரியாக அமைந்த எளிமையிலும் நேர்மையிலும், குத்திக்காட்டும் பண்பிலும் குறைபடுகின்றன. இத்தகைய எல்லாப் பாடல்களுமே போலியானவை என்று கருதப் பெறல் வேண்டும் என்று இரால்லபள்ளியர் குறிப்பாகக் கூறுகின்றார்; அவர் கூறுவது சரியேயாகும்.

வேமனர் தன்னுடைய ஆட்டவெலதிப் பாடலைக் கை நேர்த்தியுடன் கையாளும் முறை டாக்டர் ஜி. பி. கிருஷ்ணராவ் என்பாரால் திறமையுடன் இங்ஙனம் சுருக்கமாகக் கூறப்பெறு கின்றது:

பொதுவாகக் கூறுமிடத்து, அவர் (வேமனர்) தன் ஆட்டவெலதியின் முதல் இரண்டு வரிகளைத்தான் உணர்த்தவேண்டும் எனக் கருதும் கருத்தினைக் கூறுவதற்காக ஒதுக்கி வைக்கின்றார்; அதனைப் படிப்போர் மனதில் ஆழப்பதித்தற்கு ஒளிதுலங்கும் ஒப்புமையை மூன்றாவது வரியில் தருகின்றார். நான்காவது வரி ஒர் அணிகலன்போல்-மகுடம்போல்-அமைகின்றது. இங்ஙணம் பாகுபாடு செய்து ஆராயுங்கால் பாடலின் முழு அழகும் மூன்றாவது வரியில் தாம் பெற்றுள்ள ஒரே ஒரு ஒப்புமையில் எடுத்துக்காட்டில் அமைகின்றது என்பது தெளிவாகும். அவர் நன்கு எறியும் எறிபடை சிலசமயம் குறி தப்பினும் தப்பலாம்: ஆனால் அவரது ஒப்புமை தப்பவே தப்பாது. பேரளவில் அவருடைய கவிதைத் திறனும் பெருமையும் அதில்தான் சார்ந்துள்ளன. அவருடைய கையில் அது புதுமையையும் செழிப்பையும் பெற்றுள்ளது; அடிக்கடி அது பொருள்செறி தொடர்வடிவத்தை எய்திப் படிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது. காளிதாசரை ஓர் உவமைக்கவிஞர் என்றால், வேமனரை ஓர் ஒப்புமைக் கவிஞர் என்று சொல்லலாம்.

வேமனர் தமது ஒவ்வொரு பாடலிலும் ஒப்புமையைக் கையாளவில்லை என்றபோதிலும் பெரும்பாலானவற்றில் அதனைக் கையாண்டுள்ளார் என்று நிலவும் பொதுக்கருத்தினை டாக்டர் கிருஷ்ணராவ் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. ஆனால் ஒரு புள்ளிவிவரப் பகுப்பாய்வால் பதினைந்து விழுக்காடு கவிதைகள் மட்டிலும்தான் ஒப்புமையைத் தாங்கிக்கொண்டுள்ளன என்று தெரியவருகின்றது. ஆனால் இவற்றிலும் சொல்லமைப்பில் சிறு மாற்றத்துடன் அல்லது மாற்றமேயின்றிக் கூறியது கூறலே அமைந்துள்ளது. மேலும், வேமனருக்கே உரிய வெறுப்பினை விளைவிக்கும் நாயும் கழுதையும் ஒரு சில ஒப்புமைகளில் சிறப்பாகத் தோன்றுகின்றன. ஆனால் வேமனர் எப்பொழுதுமே இந்த ஒப்புமைகளைக் கையாளுகின்றார் என்ற எண்ணத்தைத் தரும் அளவுக்கு மிகப்பொருத்தமாகவும் ஒளிதுலங்கும் முறையிலும் சில சமயங்களில் மகிழ்ச்சியுடன் வியப்பூட்டும் வகையிலும் அவர் அவற்றைக் கையாளுகின்றார். அவருடைய பாடற்கோலத்தின் அமைப்பு பற்றி இன்னும் ஒரு குறிப்பினை ஈண்டுக் காட்டலாம். விவாதமுறையில் வேமனர் மிகத் திறமையுள்ளவர் என்பது உண்மையே. ஆனால் சிலர் கூறுவதுபோல் கிட்டத்தட்ட தனது எல்லாப் பாடல்களிலுமே முதலடியில் கருத்தைக் கூறுதலும் இரண்டாவது அடியில் முரணை அமைத்தலும் மூன்றாவது அடியில் இணைப்பைக் காட்டலும் அமைந்துள்ளன என்று கருத்தினைத் தெரிவிப்பது சரியன்று. உண்மையில் அவருடைய பாடல்களில் நூற்றுக்கு மேற்படாதவைகளில்தான் குறிப்பிட்ட இந்தக்கோலம் காணப்பெறுகின்றது.

மொழி பெயர்ப்பில் கவிதைகள் அழகும் வேகமும் இழந்தாலும், வேமனரின் மூன்றாவது வரிகளில் சிலவற்றை-வினா வடிவில் அமைந்துள்ளவற்றை-இவ்விடத்தில் எடுத்துக்கூறலாம். விளக்கினை ஏற்றாத வரையில் இருட்டினை எங்ஙனம் ஒட்டமுடியும்? ஒரு நாயின் வாலில் தொங்கிக்கொண்டு கோதாவரி ஆற்றினைக் கடக்க முடியுமா? குரங்கால் யானையை விடுவித்தல் கூடுமா? பாலினால் கழுவிக் கரியை வெண்மையாக்க முடியுமா? ஏரி வற்றிவிடின் கொக்குகள் அதனைத் துறந்துவிடாவா? சிறுவர் தாங்கினல் தீவட்டி சிறிதாவது குறைந்த ஒளியுடன் பிரகாசிக்குமா? ஓநாயின் சாவுக்கு ஆடு ஏன் பரிந்து புலம்பவேண்டும்? நாய்வாலை நிமிர்த்த முடியுமா? பொம்மைகட்கு நீதி புகட்டமுடியுமா? நறுமணப்பொருள்களின் சுமையைத் தாங்கி வருவதனால் கழுதை சற்று உயர்ந்ததாகுமா? மேலிருந்து கீழ் நோக்கி சுவர் கட்டமுடியுமா? எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் ஒரு பந்தைத் தூக்கி எறிந்தால், அது அங்கே தங்கி விடுமா? தங்க மோதிரம் வெண்கல மோதிரத்தைப்போல் உரத்த ஒலியினை உண்டாக்குமா? ஒரு பெரிய மலையும் உருக்காட்டும் ஆடியினுள் சிறியதாகத் தோன்றவில்லையா? கோதாவரி நதியில் மூழ்கி நாய் சிங்கமாக முடியுமா? சேற்றில் புரண்டு களிக்கும் பன்றி பன்னீரின் பெருமையை உணர முடியுமா? எருமைக்கடா எவ்வளவு பெரிதாக இருப்பினும் அஃது ஒரு யானைக்குச் சமமாக முடியுமா? ஆணின் வேலையைச் செய்வதால் பெண் ஆணாக முடியுமா? உணவைப் பரிமாறும் கரண்டி அதன் சுவையை எங்ஙனம் அறிய முடியும்? ஆலமரம் பெரிதாக இருந்தபோதிலும் அதன் விதை மிகச் சிறியதாக இருக்கவில்லையா? தலைகள் வழுவழுப்பாகச் சிரைக்கப் பெற்றிருந்தாலும் சிந்தனைகள் தூய்மையானவையாக முடியுமா? வேமனவின் பாடல்களில் மூன்றாவது வரியில் அமையும் இவையும் இவை போன்ற பலவும் தெலுங்கில் பெருவழக்காகத் திகழும் பழ மொழிகளாகும்.

வேம்னரின் பிற கொடைகள் ஒருபுறம்இருக்க, அவரிடம் நகைச்சுவை உணர்வு உரமாக அமைந்திருந்தது. "என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டிலும் அமைந்திராவிடில் நீண்ட நாட்களுக்கு முன்னரே தற்கொலை புரிந்து கொண்டிருந்திருப்பேன்" என்று காந்தியடிகள் ஒருமுறை கூறினர். இந்தச் சொற்கள் வேமனரிடமிருந்தும் வந்திருத்தல்கூடும். வேமனரும் அத்தகைய உயர் நோக்கமுடையவர்; தான் ஆதரித்த உயர்நோக்கங்களில் தன்னை மிகவும் உள்ளடக்கிக் கொண்டிருந்தவர்; ஆகவே அவரிடம் வேடிக்கையாகப் பேசவும் சிரிக்கவுமான அறிவுத்திறன் அமைந்திராவிடில் அவரும் தற்கொலை புரிந்துகொண்டிருப்பார். இந்தத் திறனும் அவருடைய கவிதைக்குத் தன் சொந்த வேகத்தை அளிக்கத்தான் செய்தது. கஞ்சப் பிரபுக்கள் அவருடைய நகைச்சுவைக்குத் தனிப்பட்ட இலக்காகின்றனர். அவர்களைப் பற்றி அவர் கூறுகின்றார், கஞ்சப் பிரபு ஒருவரை ஒழித்துக்கட்ட விரும்பினால் அவருக்கு நஞ்சூட்ட வேண்டியதில்லை; அல்லது வேறு தீவிரமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பெரிய நன்கொடை வழங்குமாறு கேளுங்கள். இந்த அதிர்ச்சியே உடனே அவரைக்கொன்று விடும். வறட்டுப் பசுவினிடம் பால் கறக்க விரும்பினால், உங்கட்குக் கிடைப்பதெல்லாம் விலாவெலும்புகளில் உதைதான்; ஒரு கஞ்சப் பிரபுவினிடமும் இதைவிட அதிகமாக ஒன்றும் நிகழப்போவதில்லை. "கஞ்சப்பிரபுவின் குடும்பத்தில் நிகழும் சாவு மிக உரக்கமும் நெடு நேரமும் அழச்செய்கின்றது; காரணம், இழவு வினைக்குரியசெலவுகள் பற்றிய எண்ணத்தினால் அவருடைய இதயம் கீரப்படும்." உண்மையான ஆன்மீக அறிவுரைஞர் தனிமையான இடங்களில் தான் காணப்பெறுவர் என்ற கருத்தினால் தங்களை ஏமாற்றிக் கொள்பவர்களைக் கேலிசெய்யும் கவிஞர் கூறுகின்றார்: "வானுலகத்திற்கு வழிகாட்டும் ஆசாரியர் ஒருவரைக் காணலாம் என்று நம்பிக்கையால் சொக்கியவண்ணம் ஓர் இருளடைந்த குகையினுள் புகுவீர்களாயின், நீங்கள் விரும்பும் நேரத்தைவிட மிக விரை வாகவே முரட்டுத்தன்மை வாய்ந்த விலங்கு ஒன்று விரைந்து செயலாற்றிவிடும்." சார்லஸ் டிக்கென்ஸைப்பற்றி கூறப்படுவதுபோல் வேமனரின் நகைச்சுவை "ஓரளவு சமயப் பரப்பாளரின் நகைச்சுவையே"யாகும்; சிரிப்பினை எழுப்புவதில் மட்டிலும் அது முயலாமல் ஒரு தெளிவான நோக்கத்திற்கு உடந்தையாகவும் நின்று உதவுகின்றது.

வேமனர் மேலும் தனது ஆயுதச்சாலையில் சமமான அளவில் கேடு விளைவிக்கக்கூடிய எள்ளல், வஞ்சப்புகழ்ச்சி என்ற இரண்டு ஆயுதங்களைக் கொண்டிருந்தார். டாக்டர் ரெட்டி கூறுவதுபோல், வேமனர் மூடநம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளுங்கால் வாதம் புரிவதால் பயன் இல்லை; காரணம், மூடநம்பிக்கை பகுத்தறிவினால் திருந்தக்கூடியதன்று என்ற வால்டயர் கூறிய பெருமிதமான முதுமொழியில்" முழுநம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே வால்டயரைப் போலவே "வேமனரும் வாதம்புரிவதில்லை. ஆனால் மிகத் தீவிரமாகத் தாக்கிச் சாக செய்யக்கூடிய காயத்தை உண்டாக்கி இழிவான மேன்மைக்கு உரிமை கொண்டாடும் போலிக் கொள்கைகளை ஏளனத்திற்கு இடமாக்குகின்றார். வேமனரின் எள்ளலுக்கும் வஞ்சப்புகழ்ச்சிக்கும் நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் தரலாம். உள்ளார்ந்த உயிர் நிலையைப் புறக்கணித்து சமயத்திற்குப் புறம்பான பகுதிகளைப் பின்பற்றுபவர்களை நோக்கி வேமனர் கூறுவது: அடிக்கடி நீராடலால் வீடுபேற்றினை அடைய முடியுமா? அப்படியானால் மீன்கள் யாவும் காப்பாற்றப்பெறுதல் வேண்டும். உடம்பெல்லாம் திருநீற்றைப் பூசிக்கொண்டு வீடு பேற்றினை அடையமுடியுமா? அப்படியானால் கழுதையும் சாம்பலில் புரள்கின்றது. சைவ உணவுக்கொள்கையினின்று சமயத்தை உண்டாக்கிக் கொண்டு உடல்பற்றிய நிறைவினை அடையக்கூடுமா? அப்படியானால், வெள்ளாடுகள் உங்களைவிட அதிக முன்னேற்றம் அடைகின்றன. ஒரு சூத்திரருடைய மகனும் கட்டாயம் சூத்திரராக இருக்க வேண்டுமானால் வசிட்டரை எங்ஙனம் அந்தணர்களில் சிறந்தவராகக் கருதமுடியும்? தேவலோகத்து ஆடலணங்காயினும் ஊர்வசி என்ற சூத்திரப் பெண்ணின் மகனல்லவா அவர்? மேலும் தீண்டத்தகாதார் வகுப்பைச் சார்ந்த பெண்ணின் கணவரும் தீண்டாதாராகவே நடத்தப்பட வேண்டுமானால், வசிட்டரைப்பற்றி நீங்கள் எங்ஙணம் பெருமிதங்கொள்ள முடியும்? அவருடைய துணைவி அருந்ததி தீண்டாதார் வகுப்பைச் சார்ந்த பெண்ணாயிற்றே? நீங்கள் வேதபலியை நிறைவேற்றுவதாக இருந்தாலும், அல்லது திருத்தலப் பயணமாக ஒரு திவ்விய தேசத்துக்குச் சென்றாலும் மயிர்வினைஞர் சிரைப்பதற்காகவும், புரோகிதர் உங்கள் ஆன்மாவைக் காப்பதற்காகவும் நீரைத் தெளிக்கின்றார்கள். புரோகிதரால் தெளிக்கப்பெற்ற நீர் அதிகப்பயன்தரத்தக்கதென்று ஒருவரும் சொல்ல முடியாது; ஆனால் மயிர்வினைஞரால் தெளிக்கப்பெற்ற நீர் அதிகப்பயன் விளைவித்தது என்பதற்கு நன்முறையில் சிரைக்கப்பெற்ற உங்கள் தலையே தெளிவான சான்றாக அமைகின்றது. அடுத்து, புராணத் தொகுதிகளின்பால் தன் கவனத்தைச் செலுத்திய வேமனர் கூறுகின்றார்: திருமால் திருப்பாற்கடலின்மீது படுத்து இளைப்பாறுகின்றார் என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள். அப்படியிருக்கும்போது அவர் கண்ணனாக இருந்தபோது ஆயர் மனைகளில் பாலை ஏன் களவாடினார்? களவாடிய பால் அதிகமாகச் சுவைக்கின்றது என்பதற்காகவா அவர் அங்கனம் செய்தது? அஃது ஒரு சூழ்ச்சிச்செயல் என்று ஐயுராமல், இராமர் தன் இளம் துணைவியைத் தனியேவிட்டுப் பொன் மானைத் தொடர்ந்து சென்றார். அப்படியானல், சிந்தனையற்றவர் எங்கனம் கடவுளாக இருக்கமுடியும்? நீங்கள் நம்புவதுபோல் நெருப்புக்கணையொன்றினைச் செலுத்தி இராமர் கடல்நீரை வற்றச் செய்யவில்லையா? அப்போது அவர் ஏன் கடலைக் கடக்கவில்லை? வழி தெளிவாக இருக்கும்போது பாலத்தை ஏன் கட்டினர்? நான்முகன் ஒருவருக்குச் செல்வத்தையும் பிரிதொருவருக்கு ஈகைப் பண்பையும் தருகின்றார். வேண்டுமென்றே தவறாகச் செய்யும் பண்பு ஒரு கடவுளிடம் இருப்பது என்னே!

டாக்டர் ரெட்டி அவர்கள் கூறுவதுபோல், "வேமனரின் நடை இங்ஙணம் கசப்பும் காரசாரமுமான ஏளனத்திலிருந்து மென்மையான ஏளனம் வரையிலும், பணிவிணக்கமுடைய வஞ்சப் புகழ்ச்சி வரையிலும், இனிய நகைச்சுவை வரையிலும் பரவிச் செல்லுகின்றது. அவர் எடுத்துக்கூறும் பொருள்களும் அங்கனமே விரிந்து செல்லுகின்றன. மனிதத் தொடர்பும் மனித நலமும் இல்லாத எதுவும் அவருக்குப் பயனற்றதாகவே அமைந்தது. கதேயைக் குறித்து மாத்யூ ஆர்னேல்டு சொன்னார்:

அவரொருநன் மனிதர்;எல்லாச் செயல்களிலும் என்றும்
அனைவருக்கும் தனிப்பரிவு காட்டுகின்ற பண்பர்;
அவரைப்போல் மாண்புடைய பிறமனிதர் தம்மை
அகிலத்தில் எவ்விடத்தும் யான்கண்ட தில்லை.
 
இடரின்கண் வீழ்ந்துகிடக் கும்மனித இனத்தை
எடுத்துக்கொண் டங்கங்கே இளைத்தகுறை பாட்டைப்
படரளிக்கும் பெரும்புண்ணைத் தெளிவாகக் கண்டார்
பரிவுடனே தன்விரலை அங்கங்கே சுட்டி.

"மக்களே நீவிர் வருந்தி நாளும்
மிக்க துன்பம் மேவி வாடுதல்
இங்குதான் இங்குதான் இங்குதான் என்பார்.”

அங்ஙனமே, வேமனரும் சொன்னார். அவர் மனித நோய்களைக் கண்டறிந்ததுடன் அவற்றிற்கு மருந்துகளையும் குறிப்பாகத் தெரிவித்தார். மனிதனுக்குத் தொண்டு புரிவதில் அவர் எப்பொழுதும் முன்நோக்கியே சென்று கொண்டிருந்தார். ஊர்ஊராகவும், சிற்றூர் சிற்றூராகவும், வீடுவீடாகவும் சென்றார். எல்லா இடங்களிலும் மனிதனிடமே பேசினார்; அப்பேச்சினைக் கவிதையாகவே பேசினார். பதிவு செய்யும் நோக்கத்துடன் பேசவில்லையாதலின், அவர் கவிதைகளைப் பதிவு செய்வதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. அவர்மீது கொண்டுள்ள அன்பு காரணமாகவும் மதிப்புணர்ச்சி காரணமாகவும் அவர் சீடர்களில் சிலர் அக்கவிதைகளைக் குறித்து வைத்தனர். கற்றவர்கள் இல்லையாதலின் அவர்கள் பனையோலைகளில் எழுதி வைத்ததெல்லாம் சிலசமயங்களில் பிழைகள் மலிந்தவையாகவே அமைந்தன. மூலப்படிகளிலிருந்து மேல்படிகள் எடுத்தபொழுது மேலும் அதிக பிழைகள் நுழையலாயின. படியெடுக்கும் சிலர் ஒரு சொல் அல்லது வரி தெளிவில்லாதிருந்தால் அவர்களே வேறொரு சொல் அல்லது வரியைச் செருகி நிலைமையை மேலும் சீர்கேடாக்கினர். இதற்கெல்லாம் மேலாக வேமனரைப் பாராட்டுபவர்களும் குறைவுபடுத்துபவர்களுமாகச் சேர்ந்து தங்களுடைய பாடல்களையே போலியாகச் செருகிவிட்டனர்.

பிரௌன் காலத்திலிருந்து மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் புதிதாகக் கண்டறியப்பெற்ற கையெழுத்துப்படிகளினின்றும் சிலரிடம் வாய்மொழிப் புழக்கமாக இருந்தவற்றிலிருந்தும் சேகரம் செய்யப்பெற்றன. அவற்றுள் எத்தனைப் பாடல்கள் உண்மையாகவே அவருடையவை என்பது பற்றி இன்னும் தீவிரமான ஐயத்திற்கிடமாக உள்ளது. பிரௌன் திரட்டியவற்றிலும் கூட ஒரு கணிசமான தொகை ஐயமற்ற இடைச்செருகலான பாடல்களேயாகும். என்றபோதிலும் வேமனரின் பாடல்களடங்கிய திறனாய்ந்த திட்டமான பதிப்பொன்றைக் கொண்டுவர இதுகாறும் யாதொரு முயற்சியும் மேற்கொள்ளப்பெறவில்லை. அவருடைய வெளியீட்டாளர்கள் செய்ததெல்லாம் பிரௌன் பதிப்பிலிருந்த மூலப்பகுதியை நேர்மையின்றி மாறுதல் செய்ததேயாகும்.

நிகழ்ச்சிகளின் வருந்தத்தக்க நிலையைச் சரிப்படுத்துவதில் ஏதாவது செய்வதற்கு இது தக்க காலமாகும். உண்மையானவை போல் தோன்றும் கந்தம் என்ற யாப்பில் அமைந்த சில பாடல்கள் நீங்கலாக 'ஆட்டவெலதி' என்ற யாப்பிலமையாத எல்லாப் பாடல்களும் நீக்கப்பெற்றும், ஒரே கருத்து திரும்பத்திரும்ப வரும் பாடல்களுள் சிறந்தவற்றை மட்டிலும் விடாமல் வைத்திருந்தும், வேமனரின் அடிப்படையான திட நம்பிக்கைகட்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கும் எல்லாப் பாடல்களும் இடைச்செருகலானவை என்று வீசியெறிப் பெற்றும் திருத்தத்தை மேற்கொண்டால், எஞ்சியவை யாவும் எல்லா வகையிலும் இரண்டாயிரத்திற்கு மேற்படா. இவற்றை ஒன்முக இணைப்பதில் வேமனரை மேம்படச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தப்புவழியான முயற்சியை மேற்கொள்ளலாகாது. அவர் மக்களிடம் மக்கள் மொழியிலேயே பேசினர். அதனால் அதன் பேச்சுவகை வனப்புக் கூறு முழுவதும் காப்பாற்றப்பெறுதல் வேண்டும். இலக்கண, யாப்பு விதிகளேவிடச் சுருக்கத்திலும் பயனுள்ள வேகத்திலுமே அவர் அக்கறைகொண்டார்; அந்த விதிகள் புறக்கணிக்கப்பெறல் வேண்டும் என்று அவர் கருதினால் சிறிதும் தயக்கமின்றி அவ்வாறே செய்தார். இங்கனம் அவருடைய விதிமீறல்கள் யாவும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யப்பெற்றவையாதலின், அவர் பாடல்களைத் திருத்துவதில் ஒன்றும் மேற்கொள்ளப்பெறலாகாது. அவரது வானாளில் ஒரு நிலையில் யாரோ ஒரு பிடிவாதக்காரரால் இலக்கண விதிகள் பற்றி அவர் குறைகூறப் பெற்றிருக்கலாம்; இல்லாவிடில், அவர் எதிர்த்துக்கூறியிருக்கமாட்டார். அந்த இழிந்த பாதகன் ஓர் உயர்தரக் கவிஞர்போல் கவிதைகள் இயற்ற முடியாது; எனினும் குறைகாணத் துணிகின்றான். பானைகளின் குவியல் ஒரு நாயால் உருட்டித் தள்ளப்பெறலாம்; ஆனால் அதனால் குவியல் அமைக்க முடியுமா? ஆகவே, இப்பொழுது தேவைப்படுவது வேமனரை இலக்கண விதிகள் யாப்பு விதிகள் ஆகியவற்றாலான ஒடுக்கமான உறையினுள் அடக்குவதல்ல; பதிப்பிப்பதில் நவீன அறிவியல் முறைகளின்படி அவருடைய பாடல்களின் ஒரு திட்டமான பதிப்பொன்றினைத் தயாரிப்பதே உடன் தேவைப்படுவது.

வேமனரின் கையெழுத்துப் படிகள் இழிநிலை வரம்பினைத் தொடும் அளவுக்குச் சில பாடல்களைக் கொண்டுள்ளன. அவசியம் நேரிடுங்கால் அவர் கூர்மையாகவும், காரசாரமாகவும், கடிப்புடையதாகவும் இருக்க நேரிடுகின்றது. ஆனால் ஒழுக்கக்கேட்டிற்குச் சலுகை கொடுக்கின்றார் என்ற குற்றத்திற்கு ஆளாக இருந்திருக்க முடியாது. அதில் கும்மாளத்துடன் கூத்தாடுவோரை அவர் தெளிவாகவே கடிகின்றார். அவர்களை நாகரிகமற்றவர்கள் என்கின்றார்: சேற்றில் புரளும் பன்றிகள் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அவருடைய திட்டமான மதிப்பு ஒழுக்கக்கேடு இன்றி இருக்குமாறு அமைதல் வேண்டும்.

வேமனருக்கு நேர்மையாக இருக்க வேண்டுமாயின், இரசவாதத்தைப் பற்றிப் பிதற்றும் பாடல்களும் நீக்கப்பெறுதல் வேண்டும். ஞானம் எய்திச் சீர்படாத நாட்களில், எளிதாகவும், விரைவாகவும் செல்வ நிலை எய்துவதற்கு அவர் புருடவேதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப் பொய்த் தோற்றக் கொள்கையைக் கைவிடாதிருந்தால், எந்த வடிவத்திலிருந்தாலும் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் கண்டிக்கும் ஒரு பேராசானாக அவர் திகழ்ந்திருக்கமுடியாது. ஆகவே, நாம் இரசவாதத்தைப்பற்றிய வாய்பாடுகளைக் கொண்டுள்ளவைபோல் தோன்றும் பாடல்கள் யாவும் செருகு கவிகள் என்றே ஊகிக்க வேண்டும். உண்மையாகவே அவை வேமனரது கவிதைகளாகவே இருப்பினும், தன் சீடர்களுள் அறிவற்றும் பேராசையும்கொண்டு இரசவாதத்தின் இரகசியங்களைக் கூறுமாறு தொந்தரவு செய்யும் ஒரு சிலரை ஏமாற்றுவதற்காகவே அவர் அவற்றை இயற்றி இருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், முட்டாள்தனமான அந்தப் பாடல்களையும் கூட கைவிட்டேயாகவேண்டும்.

இவையெல்லாம் செய்யப்பெற்ற பின்னரும்கூட, வேமனரின் கவிதைகளில் அதிக அளவு தங்கத்துடன் சிறிதளவு மாசும் மண்டியும் சேர்ந்திருத்தலையும் காணலாம், கவிஞர்களிலேயே மிகச்சிறந்தவர்களும்கூட இதனைத் தவிர்க்க முடியாது. அதிலும் சிறப்பாகத் தன்னுடைய உடனடியான சிந்தனையை முயற்சியின்றிப் பாடும் கவிஞராக இருப்பின், அவருடைய நூல் பண்படாத் தன்மையுடன் திகழத்தான் செய்யும். மேலும் நாம் ஏற்கனவே கூறியதுபோல, வேமனர் இலக்கியத்தைவிட வாழ்க்கையைப் பற்றியே கவலை கொண்டவராக இருந்தார். ஒரு கலைஞரைப் போலன்றி ஒரு வீரனைப் போலவே அவர் சொற்களைக் கையாளுகின்றார், வாதத்தில் விருப்பற்றிருக்கும் நிலையில், அவர் அறம் உரைக்கும் பண்பாளராகின்றார்; இந்நிலையும் அவருடைய கவிதைகளைப் பண்படாத தன்மையில் கொண்டு செலுத்தும். கவிஞர்களைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் அவர் குறிப்பிடுங்கால், ஒருவர் ஒப்பற்ற மதிப்புடன் திகழக்கூடிய ஒரே ஒரு கவிதையை எழுதினாலும் அவர் ஒரு சிறந்த கவிஞராகவே கொள்ளப்பெறுதல் வேண்டும் என்கின்றார். "ஒரு கூடை நிறைய இருக்கும் கண்ணாடிக் கற்களால் யாது பயன்? ஒரே ஒரு நீலமணி எல்லையில்லாத மதிப்புடன் இருக்கவில்லையா?” என்று கேட்கின்றார் அவர். ஆனால், வேமனர் இவ்வுலகிற்கு, ஒரு நீலமணியை மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான விலை மதிப்பிட முடியாத நீலமணிகளை வழங்கிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வேமனர்/கவிஞர்_பேசினார்&oldid=1256675" இலிருந்து மீள்விக்கப்பட்டது