வேமனர்/உண்மையில் அரிய மேதை



8. உண்மையில் அரிய மேதை

“கற்றிடக் கற்றிடக்
கனிவினை நல்கிடும்
கவிதைகள் புனைதனித்
தகவுளார் அரியர்-ஆங்கு
உற்றிடும் சுவைதெரிந்
தற்புதக் கவிதையை
உளத்திலாய் திறமுளார்
செகத்தினில் அரியரே.

-போப்

வ்வொரு நோக்கிலும் வேமனர் ஒரு மேதை. உண்மையிலேயே அவர் ஓர் அரிய மேதை புகழ் பெறாத ஒரு சிற்றூரில், பிறந்து வளர்ந்த அவர் இந்த உலக முழுவதையும் தன் அறிவு எல்லைக்குள் எடுத்துக்கொண்டுவிட்டார். ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்குப் பிறகு, அவர் தன்னை உறுதியாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஓர் ஞானியாகவே ஆகிவிட்டார். ஒழுங்கான கல்வியின்றிப் புதிய அழகுகளுடனும் ஆற்றலுடனும் கையாளும் அளவிற்குத் தன்னுடைய மொழியில் தேர்ச்சியடைந்துவிட்டார். எந்தவித இலக்கிய அவாவுமின்றி, தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டிலுமின்றி, எல்லாக் காலத்திற்குமே ஒரு சிறந்த கவிஞராக வளர்ந்து விட்டார். தன்னுடைய நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள மெய்விளக்க நூல்களின் அறிமுகமின்றியே, பலவற்றை உட்கொண்டுள்ளதும், துணிவானதும், புதுமையானதும், சமயப் பற்றுக் கோட்பாட்டுக்குரியதுமான சிக்கலையெல்லாம் தன்னகத்தே கொண்ட மெய்விளக்கத் தத்துவத்தைப் போதித்தார். தனியாகவே நின்று வெவ்வேறான கொள்கை முன்னணிகளுடன் போர் தொடுத்த வண்ணமிருந்தார். உண்மையை நிலைநாட்டுவதற்காகவே அவர் பல சில உருக்களை உடைத்தெறிந்தார். மனிதனைத் தளைகளினின்றும் விடுவிப்பதற்காகவே நம்பிக்கையினைத் தகர்த்தெறிந்தார். இரண்டு கால்களின்மீதுள்ள ஒரு புயலாகத் திகழ்ந்து தனக்கு முன்னருள்ள ஒவ்வொன்றையும் துடைத்தழித்தார். ஆயினும் அவர் பலருடைய அன்புக்குரியவரானர் காரணம், அவர் தன்னுடைய கடுந்தன்மையைச் சொல் நயத்தால் பக்குவமாக்கிக் கொண்டார். தன்னுடைய ஆழ்ந்த அறிவை நகைச்சுவையால் எளிமையாக்கினார். தான்கூறும் செய்தியை வஞ்சப்புகழ்ச்சியாலும் வசையுரையாலும் உயிர்ப்பூட்டினார். சமயத்தை அவர் எளியதாக்கினார். கவிதையின் நயத்தையும் மதிப்பையும் ஒழுக்க முறையில் பயன்படச்செய்தார்.

ஒரே ஒரு வேமனரே இருக்க முடியும். ஏனெனில் அவருடைய தனிச்சிறப்பு-மேதைத்தன்மை-புதுமை வாய்ந்தவராகவும் இணையற்றவராகவும் ஆக்கியது. ஆயினும், உலகிலுள்ள சில பெரியவர்களிடம் இருப்பதைப் போன்று சில பொதுத் தன்மைகளையும் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக தாழ்வான நீதிகள் மட்டிலும் இல்லாமல் உயர்முறை மன்றத்தலைவரான பேக்கனின் சொற்கருக்கத் திட்பமும், ஒளி வீச்சும், சிடுசிடுப்புத்தன்மை மட்டிலும் இல்லாது போப்பின் சொற்றிறமும் சொல்லொழுக்கமும், அசடு வழியும் மனித இனவெறுப்பு மட்டிலும் இல்லாமல்; ஸ்விப்டின் வசையுரை ஆற்றலும், அரசியல் குழப்பத்தை விளைவிக்கும் மனச்சார்பு மட்டிலும் இல்லாமல்; ஃபிரெஞ்சுநாட்டுச் சிந்தனையாளரான ரூஸோவின் உணர்ச்சிமிக்க மனவெழுச்சியும், சூழ்ச்சி மட்டிலும் இல்லாமல்; வால்டயரின் வஞ்சப்புகழ்ச்சியும் துணிச்சலும், ஷாவின் இயல்பான தெளிவுடன் அவருடைய சொற்கலை வித்தகமும் சட்டெனத் தோன்றும் எண்ணமும் பிற்காலத்தில் வாழ்ந்த டால்ஸ்டாயின் அனைத்தையும் உட்படுத்திய கொள்கையுடன் அந்தக் குலத்தலைவரின் நேர்மைத் துடிப்பும் வேமனரிடம் குடிகொண்டிருந்தன. வேமனரைப் பழித்துக் கூறுவோர் அவர் தமது எண்ணத்திற்கு ஒரே ஒருவரை நினைக்கச் செய்கின்றார் எனவும், அவர் வரலாற்றில் இல்லாதவரும் புனை கதையில் வருபவருமான டான் குக்ளாட் என்பவரேயாவர் என்றும் கூறலாம். இந்தக் கருத்தினைக் கொண்டிருப்பதற்காக அவர்களுடன் ஒருவரும் சச்சரவு கொள்ள வேண்டியதில்லை. சுருக்க ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின்படி டான்குக்ஸோட் என்ற சொல்லுக்கு "உணர்ச்சிக் கனிவுறும் கனஉருக்காண்பவர்", "மிக உயர்ந்த, ஆனால் பயனுக்குதவாத மிகச் சிறந்த குறிக்கோள்களை நாடுபவர்", "தன் மதிப்புடனும் பற்றுதியுடனும் ஒப்பிடுமிடத்து முற்றிலும் உலோகாயதக் கவர்ச்சிகளைக் கருதாத ஒரு மனிதர்" என்ற பொருள்கள் காணப்பெறுகின்றன. இந்த விளக்க உரைகளின் பகுதிகள் வேமனருக்குப் பொருந்தவே செய்கின்றன. இல்லாவிடில் அவர் விசித்திரமான தனித்தன்மை வாய்ந்த சிறந்தவராகத் திகழ்ந்திருக்க முடியாது. சில சமயங்களில் அவர் தன்னுடைய வாதப் பொருத்தத்தையும் கொள்கை மாருமையையும், குறிக்கோள் நெறியையும் புறக்கோடியை எட்டும் எல்லேவரையிலும் கொண்டு செலுத்துவார். உட்பிரிவுகட்கேற்றவாறு நீண்ட சட்டைகளை அணிந்து கொண்டு சமய ஆசாரியர்கள் என்று தம்மைக் கூறிக் கொண்டுத் திகழும் பல வஞ்சகர்கள் தம்மைச் சுற்றி எங்கும் நிலவி வருவதைக்கண்டு தம்முடைய வாழ்வின் இறுதி நிலைகளில் தம்முடைய ஆடைகளனைத்தையும் விலக்கிவிட்டதாகத் தெரிகின்றது. உண்மையிலேயே, நாம் இவ்வுலகிற்கு வரும்போதும் ஆடையின்றியே வந்தோம், இவ்வுலகை விட்டு நீங்கும்போதும் அங்கனமே ஆடையின்றித்தான் செல்லுகின்றோம். அப்படி இருக்க நம்முடைய வருகைக்கும் செல்லுகைக்கும் இடையில் நாம் ஆடைகளை உடுத்திக்கொள்ளுவதற்காக ஏன் தொந்தரை செய்துகொள்ளவேண்டும் என்று வினவுகின்றார் அவர். அவருடைய அரை கிறுக்குத் தன்மைக்கு இன்னோர் எடுத்துக்காட்டு அவர் பெண்களிடம் கொண்ட இருபுடை ஈர்ப்பாகும். வேமனரின் இத்தகைய குறைபாடுகளும் இறுக்கங்களும்-அவற்றிற்கு அப்பெயர் தரப்பெற்றல்-அவை அவருடைய ஆளுமைக்கு ஒரு பகட்டான தோற்றத்தையும் கவர்ச்சியாற்றலையும் விளக்கத் தெளிவையும் நல்குகின்றன.

தம்முடைய நாட்டிலுள்ள கவிஞர்களுள் தமிழ்நாட்டுத் திருவள்ளுவருடனும், இந்தி நிலப்பகுதியைச் சார்ந்த கபீருடனும், கர்நாடகத்தைச் சார்ந்த சர்வக்ஞருடனும் தம் சிந்தனையால் உறவுகொள்ளுகின்றார். டாக்டர் ஜி. யூ. போப், திருவள்ளுவரை ‘உலக மக்களின் கவிஞர்' என்று போற்றிப் புகழ்கின்றார். வேமனரும் அத்தகைய ஒரு கவிஞரே யாவர். கால எல்லைகளை வைத்துக் கருதினால் இவர்கள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கும், அதற்கு மேலும் இடைப்பட்டவர்கள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்: உண்மையில் பார்த்தால் அவர்கள் வெவ்வேறு சமயச் சார்புடையவர்கள்; வேறுபட்ட மொழிகளில் நூல் எழுதியவர்கள்; ஆனால் அவர்கள் கூறும் செய்தி ஒன்றேயாகும்; அதாவது மணிதர்கள் யாவரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பது. 'பிறப்பில் மனிதர்கள் யாவரும் சமமே' என்கின்றார் திருவள்ளுவர். பின்னர் அவர்கள் தம்முள் மாறுபடுவராயின் அங்ஙனம் மாறுபடுவது அவர்களுடைய சமயத்தையோ சாதியையோ பற்றியதன்று; அவர்கள் 'தம் குணவியல்புகளில் மாறுபடுவதே இதற்குக் காரணமாகும். 'உயர் குலத்தில் பிறந்தவராயினும், உயர் பண்புகள் அற்றவராயின் அவர்கள் இழிவானவர்களே யாவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவராயினும் உயர்ந்த குறிக்கோள் நெறியைப் பின்பற்றுபவராயின் அவர்கள் உயர்ந்தவர்களேயாவர்.' என்று அப்பெருமான் தொடர்ந்து கூறுவர். வேமனரும், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இத்தகைய உண்மைகளை இன்னும் வலியுறுத்திக் கூறுகின்றார். 'எல்லோரும் ஒர் குலம்’ என்ற அவருடைய தொகுத்த பொதுக் கருத்து மிகப் பெருமிதமுடையது, பேரழகுடையது, அனைத்தையும் அடக்கிய தன்மையுடையது. ஆகவே அவர்,

“எல்லோரும் நல்லுணவைப் பகிர்ந்துண்ணப் படைக்க;
எல்லோர்க்கும் ஒரேவண்ணத் தட்டினிலே படைக்க;
எல்லோரும் வேற்றுமையற் ருென்ருயுண் ணட்டும்;
இனிதுயர்த்திக் கரமதலால் அவர்க்காசி பகர்க.”

என்று ஆர்வத்துடன் வேண்டுகின்றார்.

கபீரைப்போலவே, வேமனரும் 'ஒருவனே தேவன்' என்ற கொள்கையை வலியுறுத்திக் கூறுவதில் மிக்க அழுத்தத்தைக் காட்டுகின்றார், "அல்லாவும் அவரே; இராமனும் அவரே" என்கின்றார் கபீர். "ஒவ்வொரு பொருளிலும் அல்லா நிறைந்து திகழ்கின்றார்; அவரே கடவுளாவார்" என்கின்றார் வேமனர். அவருக்குச் சிவனும் அல்லாவும் ஒருவரே யாவர். 'ஒருவனே தேவன்' என்ற கொள்கை சமயங்களின் ஒருமைப்பாட்டையும் உயிர்களின் ஒருமைப்பாட்டையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றது; கபீரைப் போலவே, வேமனரும் இந்த உண்மைக்ளைச் சிறப்பாகவே வற்புறுத்துகின்றார். "உடல்கள் வேறுபட்டனவே; ஆனால் அவற்றிற்கு எழுச்சியூட்டும் உயிர் ஒன்றேயாகும். உணவுப்பொருள்கள் வேறுபட்டவை; ஆனல் பசி ஒன்றேயாகும். பசுக்கள் யாவும் வெவ்வேறு நிறத்தையுடையவையாயினும் அவற்றின் பால் வெண்மை நிறத்தையுடையது. அணிவகைகள் யாவும் வெவ்வெறு வடிவத்தைக் கொண்டவையாயினும் அவை செய்யப்பட்ட தங்கம் ஒன்றே. மொழிகள் வேறு பட்டவை; ஆனல் சிந்தனை ஒன்றே. இனங்களும் சமயங்களும் வேறுபட்டவை; ஆனல் பிறப்பு ஒன்றே. மலர்கள் வேறுபட்டவை; ஆனால் வழிபாடு ஒன்றே. மெய்விளக்கத்துறைகள் வேறுபட்டவை; ஆனல் தெய்வம் ஒன்றேயாகும்" என்று மொழிகின்றார் வேமனர். வேமனரின் ஒருமைப்பாட்டுக் கொள்கை மிக விரிந்தது; அஃது உயிருள்ள பொருள்களனைத்தையும்-ஏன் உயிரற்ற பொருள்களையும் கூட-அணைத்துக்கொள்ளுகின்றது.

மேலும் வேமனர் உருவ வழிபாட்டைக் கண்டிப்பதில் கபீருடன் ஒன்றுபடுகின்றார். "கற்களை வழிபட்டு ஒருவர் கடவுளைக் காணமுடியும் என்றால், நான் மலையையே வழிபடுவேன்" என்று கூறுகின்றார் கபீர். "கற்களுக்கு ஏன் பன்னிற ஆடைகளை உடுத்துகின்றீர்கள்? அவைகட்கு ஏன் கோயில்களில் இருப்பிடம் தருகின்றார்கள்? அவைகட்கு ஏன் உண்ணும் உணவையும் பருகும் நீரையும் அளிக்கின்றீர்கள்? நீங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் வழங்குபவராகிய கடவுள் இவைகளை உங்களிடமிருந்து உரிமையுடன் பெற விரும்புகின்றா?" என்று வினவுகின்றார் வேமனர். சிறப்பாகச் சைவர்களை நோக்கி வேமனர் பேசுகின்றார்: "நீங்கள் கல்லாலாகிய காளையை வழிபடுகின்றீர்கள்; ஆனால் உயிருள்ள காளையைப் பட்டினி போடுகின்றீர்கள்; அல்லது அதனைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றீர்கள். வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெறும் தவறாண முறை இதற்கு மேலும் செல்லமுடியுமா? நீங்கள் வழிபடவேண்டியது உயிரற்ற கல்லை அல்ல; ஆனல் எல்லா உயிர்களிலும் தெளிவாகக் காணப்பெறும் உயிராற்றலையாகும்". சமயத்தின் புறப்பகுதிகளைப் பின்பற்றுதலை ஏளனம் செய்வதில் வேமனர் கபீருக்கு இணையாகின்றார். "நீரில் மூழ்குவதால் வீடு பேறு கிடைக்கக்கூடுமாயின், தவளைகள் நீரில் வாழ்கின்றனவே" என்கின்றார் கபீர். வேமனரும், நாம் முன்னர்க் குறிப்பிட்டது போல், இத்தகைய ஒரு கருத்தினைக்கூறுகின்றார். ஒருவருக்கொருவர் அயலராக இருந்தபோதிலும் வாழ்க்கையையும் வாழ்க்கையையொட்டிய பிரச்சினைகளையும் அணுகும்முறை இருவரையும் ஒரே உண்மைகளைப் போதிக்கச் செய்கின்றது.

உணர்ச்சி இயல்பிலும், சிந்தனையிலும், கூறும் முறையிலும் வேமனர் திருவள்ளுவரிடமோ கபீரிடமோ இருப்பதைவிடச் சர்வக்ஞரிடம் மிக நெருக்கமாகக் காணப்படுகின்றார், இங்ஙனம் இவர்களை நெருக்கமாகப் பிணைப்பது ஒருவேளை இவர்தம் பொதுவான பின்னணி வண்ணமாக இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. இளைஞர்களாக இருந்த காலத்தில் இருவரும் காமுகர்களாக ஊர் சுற்றித் திரிந்தவர்கள்; இருவரும் தொடக்கத்தில் பரத்தையர்களிடம் அதிக மோகங்கொண்டு திரிந்தவர்கள்; பின்னர் அவர்களிடம் வெறுப்படைந்தவர்கள். மேலும், இருவருமே திடீரென்று காமக்களியாட்ட வாழ்க்கையினின்றும் சமய வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள்; ஆனால் கொடுமையான சமூக அமைப்பிற்குப் பலியாட்களாக அமைந்த தேவதாசிகள் இருவருடைய எண்ணங்களிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததால் இவர்கள் அந்த ஏழை இழிஞர்களைப் பழித்துரைக்கும் சந்தர்ப்பத்தைத் தவற விடுவதில்லை. அந்த இருவருடைய குருட்டிடமும் பெண்ணைப் பற்றியே இருந்தது என்றும் சொல்லலாம். வேமனருக்கு முற்பட்டவர் சர்வக்ஞர் என்ற கருத்து வாதத்திற்குரியதாகும். ஆனால் இருவரைப்பற்றியும் ஆழ்ந்து ஆய்ந்த இரால்லபள்ளியார் சர்வக்ஞரின் செல்வாக்கு வேமனர் மீது இருந்தது என்று கூறுவதைவிடப் பின்னவரின் செல்வாக்கே முன்னவரின்மீது இருந்தது என்று கருதுவதற்கே அதிகக் காரணங்கள் இருப்பதாகக் கருதுகின்றார், எவ்வகையிலேனும் இருவரிடமும் பல ஒருமித்த பண்புகள் இருந்தபோதிலும், வேமனரும் சர்வக்ஞரும் ஒருவருக்கொருவர் நகல்களாகவோ எதிரொலிப்பவர்களாகவோ இலர்; சர்வக்ஞர் வேமனரைவிட உண்மைவாதியாகவும் உலக வழியில் ஞானம் மிக்கவராகவும் திகழ்ந்தார்; அவர்களிருவரும் சில அடிப்படைக் கருத்துகளையும் குறிக்கோள்களையும் வலியுறுத்துவதில் மாறுபட்டனர்.

நவீன வங்காளத்தில் கூர்த்த மதியினர்களுள் ஒருவரான பேராசிரியர் பினய் குமார் சர்க்கார் என்பார் தம்முடைய 'இந்து சமூக இயலின் உடன்பாட்டுப்பின்னணி' என்ற நூலில் சொல்லுவது:

தமிழ்க் குறளில் நுவலப்படும் பக்தி, சமத்துவம் புரட்சியில் சென்றுமுடியும் அளவிற்கு வேமனரின் பாடல்களில் கொண்டு செலுத்தப்பெறுகின்றது. சாதி வேறுபாடுகள் உண்டுபண்ணும் ஏலா நிலைகளை எதிர்த்து அவர் குவிக்கும் வசைமாரிகளைவிடப் பொருளாதார நிலைகளினல் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து அவர் கூறும் ஏளன உரைகள் அடிப்படையையே மாற்றியமைப்பதிலும் மெய்வாய்மை கெடாதிருப்பதிலும் சிறிதும் குறைந்தவை அல்ல...இந்து நேர் காட்சி வாதத்தில் அவர் பெற்றுள்ள இடம் சற்று உன்னத நிலையில் இல்லாது போயினும், அது கபீர், சைத்தன்யர், பிறர் பெற்றுள்ள அதே நிலையில் உள்ளது என்று கூறலாம்.

ஆயினும் திருவள்ளுவரையோ கபீரையோ அல்லது சைத்தன்யரையோ இவ்வுலகம் அறிந்திருக்கும் அளவுக்கு வேமனரை அறியவில்லை; அவர் குறைந்தே அறியப்பெற்றுள்ளார். தெலுங்கு இலக்கியத் தலைமைப் புலவர்கள் தம்மால் இயன்ற அளவு வேமனரை மறக்கும் அளவுக்குக் கண்டனம் செய்த திருப்பணியே எல்லோரும் இரங்கத்தக்க முதற் காரணமாகும். இறுதியில் அவர்கள் தோல்வியுற்றாலும், அஃது அத்தலைவர்கள் தளர்ச்சியடைந்ததாலன்று; ஆயினும் மேனட்டுப் புலவர்களாகிய டுடாய்ஸ், பிரெளன், மாக் டனுல்டு, கோவர், கேம்பெல், கிரியர்சன் ஆகியோர் அவர்களுடைய சதியைக் குறுக்கிட்டுக் கெடுத்ததே காரணமாகும். திருவள்ளுவருக்கு இராஜாஜி கிடைத்ததுபோலவும், கபீருக்கு இரவீந்திரநாத தாகூர் கிடைத்ததுபோலவும் வேமனருக்கு ஓர் ஒப்பற்ற மொழி பெயர்ப்பாளர் அமையாதது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். உலகினரின் நல்லெண்ணத்திற்குத் தக்கவாறு, பிரௌன் வேமனருக்கு முற்றிலும் உதவ முடியவில்லை. அவரோ ஒரு வெளி நாட்டுக்காரர், கிறித்தவர்; அவருடைய அயல்நாட்டுப் பின்னணி வண்ணத்தைக்கொண்டு வேமனருடைய கவிதையின் உயிரோட்டத்தை முற்றிலும் தொட முடியவில்லை அவருடைய மொழியின் மிகச் சிறு நுணுக்கங்களை அறிந்துகொள்ளவும் முடியவில்லை. எடுத்துக்காட்டாக இங்கு வேமனரின் பாடல்களில் ஒன்றின் மொழி பெயர்ப்பைக் காண்போம். "சான்றோர் ஒருவருடைய முதுகில் ஒரு கொப்புளம் கிளம்பினால், அது நாடறிந்த செய்தியாகின்றது. ஆனால் எளியவர் ஒருவர் வீட்டில் திருமணம் ஒன்று நிகழ்ந்தாலும் ஒருவரும் அந்நிகழ்ச்சியைத் தம் காதில் போட்டுக்கொள்வதில்லை". தாம் கையாளும் ஆங்கிலச் சொற்றொடர்களின் சில குறைகளைத் தவிர, வேமனர் "சான்றோர் ஒருவரிடமிருந்து" "ஏழை யொருவரை வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்ற ஒரு தவறாண எண்ணத்தை விளைவித்து வேமனருக்கு ஓர் அநீதியை இழைத்துள்ளார். அத்தகைய முட்டாள்தனமான செயல்புரியும் அளவுக்கு வேமனர் ஒரு தரக்குறைவான கவிஞர் அல்ல. "சான்றோர் என்று சொல்லுக்குச் சொல் பொருள்படும் புண்யமுகலவாடு" என்ற சொற்றொடரை அவர் கையாண்டுள்ளார் என்பது உண்மையே. சென்ற பிறப்பில் நற்குணம் நிறைந்தவர்கள் மட்டிலுமே இப்பொழுது செல்வர்களாகப் பிறக்கின்றனர் என்ற இந்து சமய நம்பிக்கையைத் தெளிவாக அறிந்தவரைப் பொருத்தமட்டிலும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கையாளப்பட்டுள்ள அந்தச் சொற்றொடர் செல்வந்தர்" என்றே பொருள்படுகின்றது. முன்னரே கூறப்பெற்றுள்ளதைத் திரும்பக் கூறின், வேமனருக்காக அதிகத் தொண்டாற்றிய பிரெளனக் குறை கூறுவது வணக்க இணக்கமற்ற செயலாகும். அதே சமயத்தில் வேமனரை ஆங்கில மொழிமூலம் உலகினருக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவருக்கு ஓர் இராஜாஜி அல்லது இரவீந்திரநாத் தாகூர் கிடைக்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். "மறைஞானி ஒருவரின் சிந்தனை யோட்டங்கள்" என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்துள்ள வேமனரின் பொறுக்கி எடுத்த சில பாடல்களின் மிர்முகம்மதுகான் என்பாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரோன் என்பாரின் மொழிபெயர்ப்பைவிடச் சிறந்ததாகவே அமைந்துள்ளது எனலாம்; ஆனால் கான் அவர்களே "வேமனரின் கவிதைச்சொல்வளத்தின் அரிய நுட்பங்களை யெல்லாம் முற்றிலும் பாராட்டும் அளவுக்குப் போதுமான தன் தெலுங்கு மொழிஅறிவுத்திறன் அமையவில்லை" என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்.

வேமனரின் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு ஓர் இராஜாஜி அல்லது ஓர் இரவீந்திரநாதர் தேவைப்படுவதுபோலவே அவருடைய திரு உருவத்தை வண்ண ஓவியத்தால் தீட்டுவதற்கு ஓர் இராஃபேல் அல்லது ஓர் இரெம்பிரண்ட் தேவைப்படுகின்றனர். அத்தகைய உன்னத நிலையிலுள்ள தலைவர் ஒருவர்தான் வேமரின் கண்களின் ஒளியினையும், அவர்தம் இதழ்களில் திகழும் ஏளனமான புன்முறுவலையும், அவர்தம் நடையின் துள்ளலையும் கண்டு கொள்ளமுடியும். அன்றியும், மிகத் திறனுடைய கலைஞரும் ஒரு திருவுருவத்தை வரைவதுடன் நில்லாது அவருடைய ஆளுமையின் பல்வேறு முகப்புகளையும் அடக்கிக் காட்டக்கூடிய பலதொடர் திருவுருவங்களை வரைதல் வேண்டும். வேமனர் ஒருகணநேரத்தில் சாத்தமாகவும், அடுத்தகண நேரத்தில் கடுமையாகவும், மூன்றாவது கணநேரத்தில் குறும்புத்தனமுடையவராகவும் இருப்பார். மாறும் ஒவ்வொரு மனநிலையிலும், அவருடைய முகப்பொலிவுகள் மாறுவதுடன் அமைவதில்லை; அவருடைய முழு நாடி நரம்புகளிலும் இம்மாற்றத்தைக் காணலாம். ஒவ்வொரு சொல்லேயும் எடை பார்த்து, ஒவ்வொரு சொற்றொடரையும் மெருகிட்டு, ஓர் உயர்ந்த தொனியை உண்டாக்கும் சாதாரணக் கவிஞரை ஒத்தவர் அல்லர் வேமனர். அங்ஙணமே அவர் பெரும்பான்மையான தத்துவ அறிஞரினும் வருவதுரைக்கும் ஞானியரினும் முற்றிலும் வேறுபட்டவர். உயர்ந்த பீடத்தையோ அல்லது தந்தத்திலான கோபுரத்தையோ அவர் பயன்படுத்துவதில்லை. தன்னுடைய செய்தியை மக்களுக்கு உரைப்பதற்காகச் சந்தை கூடும் இடத்தில் நின்று பேசுவார்; கவடின்றி வெளிப்படையாகவே பேசுவார்; தேவைப் பட்டால் ஒளிவுமறைவின்றிப் பட்டவர்த்தனமாகவே பகர்வார். அவர்மீது கற்கள் வீசப்பெறினும், நாய்கள் ஏவப்பெறினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. அவர் நாய்களைப் பற்றி அவமதிப்பாகப் பேசும் மேற்கோள்கள் எண்ணற்றவையாக இருப்பதால், உண்மையில் நாய்கள் அவர்மீது ஏவப்பெற்றவையே என்பதாகக் கருதலாம். அவர் சாக்ரீட்டசைப் பற்றியோ அல்லது கிறித்துவைப்பற்றியோ கேள்விப்படாதிருக்கலாம்; ஆனால் வருவதுரைக்கும் ஞானியொருவர் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய மக்களாலேயே மதிக்கப்பெறுவது அரிது என்பதை உறுதியாகவே அறிந்திருந்தார். தம்முடைய பாடல்கள் ஒன்றில், தம் வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள மூலிகை மதிப்பு பெறாததைப் போலவே வருவதுரைக்கும் ஞானியும் அவர் காலத்து மக்களாலேயே மதிக்கப்பெறுவதில்லை என்று கூறுகின்றார்.

பல்வேறு வழிகளில் கவிஞராகவும், தத்துவ அறிஞராகவும், வருவதுரைக்கும் ஞானியாகவும் திகழ்ந்த வேமனர் எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகட்கும் தேவையான செய்தியைக் கொண்டவராகத் திகழ்கின்றார், ஒழுக்க நெருக்கடியும், வேர்விடா நிலையும், நேரியபோக்கின் இழப்பையும் கொண்ட இன்றைய உலகினுக்கு அவருடைய பொருத்த நிலை மிக அதிகமாகவே அமைகின்றது. மனிதர்கள் மட்டிலும் மனிதர்களாக வாழ்ந்தால் இந்த மண்ணுலகமே விண்ணுலகமாகத் திகழும் என்று அவர் உரைக்க வில்லையா? மேலும், கட்டுக்கதைகளில் வரும் விண்ணுலகின் மீது மிக்க ஆர்வங்கொண்டு நம்முடைய உலகினை இழிவாகக் கருதுவது முட்டாள்தனமானது என்று அவர் கழறியுரைக்கவில்லையா? நாம் நிற்கும் ஒவ்வொர் இடமும் திருநிலையான இடங்களனைத்திலும் மிகத் திருநிலையுடையது என்று அவர் வற்புறுத்திக் கூறவில்லையா? அவருடைய சமயம் மனித சமயமாகும்; அன்பை அடிப்படையாகக் கொண்ட அவருடைய வாழ்க்கைப் பணி மனிதர்களை நன்கு புரிந்துகொள்வதும் மனிதர்களிடையே நட்பை உண்டாக்குவதுமான பணியாகும்; இனமரபு அல்லது சமயம், சமயக்கிளை அல்லது வழிபாட்டு மரபு, வகுப்பு அல்லது சாதி இவற்றின் அடிப்படையில் வேறுபாடற்ற உலக சகோதரத்துவத்தை நிறுவுவதே அவருடைய குறிக்கோளாகும். இங்ஙணம் வேமனர் கடவுள்பற்றிய கருத்தற்றவரும் கடவுள் இல்லை என்று சாதிப்பவரும் உட்பட ஒவ்வொருவருக்கும் ஒரு தூதுச்செய்தியைக் கொண்டுள்ளார். "தன்னோடு சேர்ந்த மக்களின் துக்கங்களைத் தன்னுடையனவாகக் கருதுபவனே மனிதன் எனப்படுவதற்குத் தகுதியானவன்" என்ற அவருடைய விழுமிய கழற்றுரையில் அவருடைய தனிக்கோட்பாட்டின் சாரம் அடங்கியுள்ளது.