வேமனர்/இயற்கையின் மெய்விளக்க அறிஞர்
7. இயற்கையின் மெய்விளக்க அறிஞர்
“இயற்கையின் மெய்விளக்கத்துறை அறிஞர்களுள் ஒருவரும்,
மட்டுமதிப்பற்ற இயற்கையறிவுடன் கூடியவருமாகிய
ஒரு நாட்டுப்புறத்தார்."-ஹோரஸ்
கற்றுத்துறைபோய புலவராக இல்லாதபோதிலும் பிரஸ் தான திரயத்தைப்பற்றி[1] (மூன்று முக்கிய நூல்களைப்பற்றி) அறியாமையுடையவராக இருந்தபோதிலும், வேமனர் தன் சொந்த உரிமைப்படி ஒரு மெய்விளக்க அறிஞராகவே திகழ்ந்தார். இந்த இயலின் தலைப்பில் மேற்கோளாகக்காட்டிய ஹோரஸின் சொற்களில், 'இயற்கையின் மெய்விளக்கத்துறை அறிஞர்களுள் ஒருவர்' என்று அவரை நாம் வழங்கலாம். வாழ்க்கையைப் பற்றிய அவருடைய புதுப்பாங்குடைய உள்நோக்குகளும் மிகுந்த நுகர்வறிவுகளும் சமூக மெய்விளக்கம், நன்னெறி மெய்விளக்கம், சமய மெய்ஆற்றலளித்துள்ளன. இந்த மூன்றனுள் ஏதாவது ஒன்றைக்கூட ஓர் ஒழுங்கமைப்பாகச் செய்யவில்லை என்பது உண்மையே; எந்த ஓர் ஒழுங்கமைப்பில் முயன்றாலும் அவருடைய தனித்திறமை குழம்பிய பாங்கில் புரட்சி செய்தது; மனப்பான்மையும் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்தது. உண்மையில் தன்னுடைய அறிவிப்புகளிலேயே ஒன்றுக்கொன்று முரணாகவுள்ளவற்றையும் கூட அகற்றுவதில், முயற்சி எடுக்கவில்லை. அவற்றில் அவருடைய கவனம் ஈர்க்கப்பெற்றிருப்பின், அவரும் வால்ட் விட்மனேடு சேர்ந்து பின்வருமாறு கூறியிருந்திருப்பார்!
“நானே என்னை மறுத்துரைக்கின்றேனா?
மிகவும் நல்லது நானே மறுத்துரைக்கின்றேன்.
[நான் மிகப்பெரியவன், எண்ணிறந்த தன்மைகள் என்பாலுள்ளன.]
சாதியைத் தவிர, பொருளாதார அடிப்படையிலுள்ள வகுப்புவகையும் பிரிப்புச் சக்தியுடையது என்ற உண்மை வேமனர் அறியாததன்று. உண்மையிலேயே, சாதியைவிட வகுப்புவகையே மனிதர்கட்கிடையே மிகவும் அகன்ற இடைவெளியை உண்டாக்குகின்றது என்று நம்புகின்றார். எவ்வளவு தாழ்ந்த சாதியினராக இருந்தாலும், பணக்காரர் முதன்மையாகத் திகழ்கின்றார், அதற்கு நேர்மாறாக எவ்வளவு உயர்ந்த சாதியினராக இருந்தாலும் ஏழையாயிருப்பவர் ஊக்கம் குன்றிப்போகின்றார் என்கின்றார் வேமனர். முட்டாள்கள் தமது சாதி, கால்வழி, புலமை இவற்றைக் குறித்துத் தற்புகழ்ச்சியாகக் கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் பணக்காரர்களிடம் தன்மதிப்பற்ற அடிமைகளாகவே உள்ளனர் என்கின்றார் அவர். பணக்காரர் ஒருவரிடத்தில் அவர்கள் ஒவ்வொரு நற்குணத்தையும் கலைத்திற நிறைவையும் காண்கின்றனர்; அல்லது காண்கின்றதாகப் பாசாங்கு செய்கின்றனர். அழகில் மதனவேள் என்றும், பலத்தில் வீமன் என்றும் புகழ்மாலை சூட்டுகின்றனர். வேமனர் அத்தகைய கெஞ்சிநிற்கும் கயவர்களை இழிவாகக் கருதினாலும், செல்வத்தை இகழ்ந்து கூறினாரிலர். அவரைப்போன்ற ஏனைய பெரும்பான்மையான ஆசிரியர்களைப் போலன்றி செல்வத்தை விட வறுமையே அதிகமாகத் தூய்மையைக் கெடுக்கும், செல்வாக்கினையுடையது என்று கருதுகின்றார், ஈன்று புறந்தந்த அன்னைக்கும் அவள் செல்வ மக்களுக்கும் இடையிலும்கூடப் பணம் கசப்பினை விளைவிக்கும் மூலமுதலாக அமைகின்றது என்பது உண்மையே. பணம் மட்டிலும் மகிழ்ச்சியைத் தருவதில்லை என்று சிலர் நிலைநிறுத்துவதிலும் உண்மை உண்டு. இந்த இரண்டு உண்மைகளையும் ஒப்புக்கொள்கின்றோம்; பணம் இல்லாமல் எப்படி ஒருவர் காலம் தள்ளுவது?" என்கின்றார். ஒருவர் தாமாகவே வறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அது முற்றிலும் வேறுபட்ட செய்தியாகும்; அப்பொழுது வறுமை அவரை உயர்த்துகின்றது. வேறு வழியேயின்றி ஒருவர் ஏழையாக இருக்க நேர்ந்தால் அவர் உடல்சார்ந்த நிலையிலும் ஒழுக்கம் சார்ந்த நிலையிலும் மோசமாகத் தொடங்குகின்றார். "ஏழையொருவர் நேர்மையாகவோ, துணிவாகவோ இருத்தல் முடியாது. அவர் தனது துணைவி, மக்கள் இவர்களுடைய நன்மதிப்பைப் பேணுவதும் அரிது; தன்னுடைய சுயமதிப்பைப் பேணமுடியாத நிலையோ மேலும் கேடானதாகும்" என்று கருதுகின்றார் வேமனர். மேலும் வேமனர் பார்வையில் தனது குடும்பத்திற்குச் சில இன்ப வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இயலாத ஒருவர் இரங்கத்தக்கவர் அல்ல; அவர் வெறுக்கத்தக்கவராகின்றார். "வறுமை என்பது ஒரு காட்டுத் தீ. அது உங்களை அழிக்கின்றது; உங்கள் அன்புக்குரிய எல்லோரையும் அழிக்கின்றது. உண்மையில், வறுமை என்பது பழிகேடாகும்' என்று எச்சரிக்கின்றார் அவர். வறுமையைக் குறித்து அவரது பேரச்சம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் பேரச்சத்திற்குச் சரிசமமாகின்றது. ஷா சொன்னார்: "கேடுகளில் மிகப்பெரியதும் பழிச்செயல்களில் மிகக்கொடுமையாக இருப்பதும் வறுமையாகும்.’’
ஆனால், ஷாவைப்போலன்றி, வேமனர் வறுமைக்குச் சமூக அடிப்படையில் ஒரு கழுவாயைச் சிந்திக்க முடியவில்லை. முன்னோக்கி அறியத்தக்க ஆற்றல் எவ்வளவு இருந்தபோதிலும் இடைக் காலத்தைச் சார்ந்த ஒருவரிடம் இத்தகைய ஒன்றை எதிர்பார்க்க முடியாது. வறுமையின் மூலகாரணத்தை ஆய்ந்தறிய முடியாத வேமனர் செல்வந்தர்களை நோக்கித் தமது செல்வத்தை வறியவரோடும் தேவையிலிருப்போரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றார். இரந்து கேட்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வதாகும் என்பதை வேமனர் நன்கு உணர்ந்தவர். "இரப்போன் மனிதர்களில் மிகமிக இழிந்தவன்” என்கின்றார் அவர். ஆனால் இரந்து வேண்டுபவனுக்கு ஈகையை மறுப்பவர் இன்னும் அதிகமாக வெறுக்கத்தக்கவராகின்றார் என்று உடனே கூறுகின்றார். பழங்காலந்தொட்டு வரும் பண்பினை எதிரொலிக்கும் பாவனையில் அவர், "நீங்கள் இறக்கும்பொழுது உங்கள் செல்வத்தை உங்களுடன் கொண்டு போகப்போவதில்லை. பிறருடன் பகிர்ந்து கொள்ளும் செல்வமே உண்மையில் உங்களுடையதாகின்றது" என்று கூறுகின்றார்.
பசவரைப்போலவே, வேமனரும் உழைப்பின் மதிப்பில் நம்பிக்கையுடையவர். ஒவ்வொருவரையும் ஏதாவதொரு வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ளுமாறு பணிக்கின்றார். ஆனால் புரோகிதத் தொழிலுக்கு அவர் நன்மதிப்பு தருவதில்லை. அங்ஙனமே வாணிகத்திற்கும் அவர் ஆதரவு காட்டுவதில்லை. தரகர் வாழ்க்கைத் தொழில் அல்லது சுரண்டல் தன்மையுள்ள தொழில் அவருக்கு வெறுப்புத் தருவதாகும். கிறித்தவ மொழியாகிய "முகத்தில் வழியும் வியர்வையின் மூலம் உங்கள் ரொட்டியை உண்ணவேண்டும்" என்பதில் தன் முழுநம்பிக்கையை வெளியிடுவதில் டால்ஸ்டாயுடனும் காந்தியடிகளுடனும் ஒன்றாக நிற்கின்றார். அதே விதி கிட்டத் தட்ட அதே சொற்களில் தன்னுடைய பாடல்களொன்றில் வேமனரால் வெளியிடப்பெற்றுள்ளது. அவருக்கு உழைப்பே வழிபாடாகும். அஃது உடலுழைப்பாக அமையுமானால் அஃது எல்லாவற்றிலும் சிறந்ததாகும். பிறர் ஆடை வெளுப்போனைத் தாழ்வானவனாகக் கருதலாம்; ஆனால் அவன்தான் சமூகத்திற்குப் பணியாற்றுவோர்களுள் மிகச் சிறந்தவனாகின்றான் என்பதை வேமனரின் மனம் எண்ணுகின்றது. அவர் முதல்நிலை உற்பத்தியாளர்களின் மீது, அதிகமாகக் குடியானவர்கள் மீது, மிகப்பற்றுடையவர். ஒருசமயம் அவர் தன்னைப் பெருமிதத்துடன் காப்பு என்று குறிப்பிடும்பொழுது வேமனரும் உண்மையிலேயே சாதிப்பெருமைக்கு அப்பாற்பட்டவரல்லர் என்று சிலர் விரைவாக முடிவுக்கு வருகின்றனர். வேமனரின் பெருமிதம் உண்மையில் அவருடைய சாதியைப் பற்றியதன்று; ஆனால் அது அவரது வாழ்க்கைத்தொழிலான பயிர்த்தொழில் பற்றியதாகும்; தான் நாடோடி ஆவதற்கு முன்னர் அவர் ஒரு காப்பு (குடியானவர்) ஆவார். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவர் தான் பிறந்த ரெட்டி சாதி பற்றிக் குறிப்பிடுங்கால் மிகுபுகழ்ச்சியாக இருக்கவில்லை.
சுருங்கக் கூறினால், இதுவே வேமனரின் சமூகமெய் விளக்கமாகும். அதன் உயிர்நிலைக்கூறுகளில் அஃது இடைக்கால இந்தியாவில் வாழ்ந்த பசவர், ஞானதேவர், நாமதேவர், துக்காராம், இராமாநந்தர், கபீர், தாதர், நானக், லால்தாசர், சைத்தன்யர் போன்ற மறைமெய்ம்மையாளர்களின் மெய்விளக்கத்துடன் கிட்டத்தட்ட ஒன்றிய நிலையாக அமைகின்றது. அவர்களுக்கிடையில் அவர்கள் ஒரு புரட்சியையே உண்டாக்கினார்கள். ஆனால் அதன் விளைவுகள் மேல்மட்டத்திலேயும் நிலையற்றதாகவுமாகவே இருந்தன. காரணம் என்ன? துர்ஜடி பிரசாத் முக்கர்ஜி என்பார் 'நவீன இந்தியப் பண்பாடு' என்ற தனது புதுப்பாங்குடைய ஒளிதுலங்கும் நூலில் சரியாகக் குறிப்பிட்டவாறு, "இந்திய சமூகப் பொருளாதாரத்தில் அடிப்படையான ஒரு மாற்றம் இல்லாததனால் மறை மெய்ம்மை சார்ந்த புரட்சி ஒரு கண்ணாடி-புரட்சியாகவே போய் விட்டது."
இனி வேமனரின் நன்னெறி விளக்கத்தின்மீது தம் கவனத்தைச் செலுத்தினால், அது இரண்டு நிலைகளில் இருப்பதைக்காண்கின்றோம். வேமனர் குறிக்கோள் நெறியாளராக இருந்தபோதிலும், மனித இயல்பின் வரம்பு எல்லைகளை அறியாதவரல்ல. ஒவ்வொருவரும் ஒரு யோகியாக இருக்க முடியாதென்பதை அறிந்தவராகவே இருந்தார்; தன்னை ஒரு யோகியாகச் செய்து கொள்ளாமலேயே யோகியின் வாழ்க்கையை மேற்கொண்டு முட்டாளாக அல்லது கயவகை மாறும் ஒருவனே விட நேர்மையும் நாணயமும் உள்ள குடும்பியே எல்லேயில்லாத அளவுக்கு நல்லவன் என்பதையும் அறிந்தவரே. ஆகவே, அவர் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்படியாக விதிகளடங்கிய தொகுதியொன்றினையும், திட சித்தத்துடனிருந்து ஒழுக்கமானதும் அபாயத்திற்கேதுவானது மான யோகியரின் நெறியைக் கடைப்பிடிக்கத் துணிவுகொண்ட வர்கட்காக மட்டிலும் பொருந்தும்படியாக விதிகளடங்கிய மற்றொரு தொகுதியினையும் அடைவுபடுத்திக் காட்டுகின்றார். அவர் இத்தகைய இருவேறுபட்ட மக்கட் கூட்டத்துடன் பேசியதன் காரகணமாகவே அவருடைய சிந்தனையில் தெளிவான முரண்பாடுகளின் சுவடுகளைக் காணமுடிகின்றது.
யோகியாவதற்குரிய சரக்கு (திண்மை) உடையவரை நோக்கி வேமனர் குடும்ப வாழ்க்கை சிக்க வைக்கும் பொறி என்றும், கண்ணி என்றும், இறக்கும்பொழுது அன்புடைய மனைவியோ அருமைக் குழவிகளோகூட வாரார் என்றும், பாலுறவு வாழ்க்கை அழுக்குடையதென்றும், மதிப்புக்குறைவுடையது என்றும், உலக செல்வங்கள் யாவும் விரைந்தழியக்கூடியவை என்றும், ஆகவே ஒருவர் ஒரேமனத்துடன் ஆன்ம உணர்வை நாடுவதில் எல்லாவற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றும் கூறுவார். ஏனையோரை நோக்கி இவ்வாறு கூறுவார்: "ஒவ்வொருவரும் யோகியாக வேண்டும் என்பதில்லை; அப்படி ஆகவும் முடியாது. ஆனால் நல்லவராகவும் சிறந்த குடிமகளாகவும் நிச்சயம் உன்னால் ஆக முடியும். இளமையாயிருக்கும்பொழுது பணிவுடைய மகனாகவும் ஆர்வமுடைய மாணாக்கராகவும் இருப்பாயாக. நேர்மையான வாழ்க்கைத் தொழிலுக்குப் பயிற்சி பெறுவாயாக. நன்கு வளர்ச்சிபெற்ற பிறகு வறிய குடும்பத்திலுள்ளவளாக இருப்பினும் அழகிய பணிவிணக்கமுடைய கன்னிப் பெண்ணொருத்தியை மணந்துகொள்வாயாக. அன்புடையவளாகவும் புரிந்துகொள்ளும் பண்புடையவளாகவும் உள்ள துணைவியைக் காண்பதென்பது மிகவும் கடினம் என்பதற்கு ஐயம் இல்லை; அங்ஙணம் ஒருத்தியைக் காண்பதில் நற்பேறுடையவளாக இருப்பின் உன்னுடைய மகிழ்ச்சி உறுதிப்படுத்தப்பெறுகின்றது. உன் உலகிற்கு-வீட்டிற்கு-நீ தான் தலைவன் என்பதை அவள் உணரச்செய்வாள். மேலும், நன்மக்கட்பேறும் உனக்கு ஏற்பட்டுவிடின், உம்பருலகப் பேரின்பத்தையும் நுகர்ந்து மகிழ்வாய். குடும்பத்தை வறுமையின்றி அமைப்பதற்காக நாணயமாகவும் ஓய்வாகவும், உழைப்பாயாக. முயற்சியை மேற்கொள்ளாமல் வாழ்க்கையில் எந்த நல்லவற்றையும் அடையமுடியாது. "நீர் பாய்ச்சாமல் மல்லிகை மலருமா?" என்றும் அன்புடையவனாகவும் இரக்கப்பண்புடையவனாகவும் இருப்பாயாக வாயிற்படி ஏறிவரும் வறியவர்களையும் தேவை கேட்டு வருபவர்களையும் விரட்டியடிக்காதிருப்பாயாக. நற்பயனுக்கு உதவாமல் செல்வத்தைத் திரட்டுபவர் புலத்தின் புள்ளோட்டி உருவத்தைப் போன்றவர்; அவர் செல்வச்செழிப்பின் நடுவே வாழ்கின்றார், ஆனால் அச்செல்வம் அவருடையதன்று. பெற்றோருக்கு நன்மதிப்பைத் தருக. எவ்வளவு செல்வத்தையும் நற்பெயரையும் அடைந்தாலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் தந்தை சிறுமையை உணருமாறு செய்தல் கூடாது. பேருண்மையை நாடுவோர் பேச்சிலும் தோற்றத்திலும் விநோதமாகக் காணப்பெறலாம்; அதனால் அவர்களைப் பரிகசிக்கவேண்டாம். செருக்கும் தற்புகழ்ச்சியும் கொள்ளற்க. இறுமாப்புடைய அறிவிலி மிகமிகக் கேடான அறிவிலி ஆவான். மனப்பான்மையில் தாராளமாகவும் பேச்சில் இணக்க வணக்கமாகவும், செயல்களில் பெருந்தன்மையாகவும் இருந்து கொண்டு குடும்பத் தலைவன் என்ற முறையில் தன்நிறைவினைக் காண்பாயாக. "நல்ல குடும்பத் தலைவன் உண்மையில் குடும்ப வாழ்வின் யோகியாவான்."
சுய அநுபவத்தால் பாலுந்தலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்த வேமனர் கூறுகின்றார்: பெண்களின் கவர்ச்சியாற்றலுக்கும் பசப்புப் பேச்சுக்கும் மனிதன் அடிமையாகின்றான் என்பது உண்மையே. கண்கவர் எழிலுடை வனிதையுடன் பழகும் பொழுது யோகியும் என்றும் தன் மனததைத தூய்மையாகவும் குழப்பமின்றியும் வைத்திருக்க முடியாது என்ற போதிலும், இல்வாழ்வான் என்ற முறையில் நீ உன் துணைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும், பிறன் மனைவி மீது நாட்டம் வைப்பது, அவள்பால் காமநோக்குகளைச் செலுத்துவது பெரும்பாவமாகும். இன்பத்தை நல்கும் ஆற்றல் உன்பால் இருக்குமாயின், பரத்தையிடமிருந்து விலகியிருப்பாயாக. புற நோக்கில் எவ்வளவு பகட்டாகக் காணப்படினும் அவர்கள் அழுக்குடைய பெண் நாய்களுக்கு ஒப்பானவர்கள். மனம் மாறும் இயல்பும், பேராசையும், கல்நெஞ்சமும் கொண்ட அவர்கள் உன்னை ஏழ்மையில் கொண்டு செலுத்துவர். அதன்பிறகு சாறு பிழிந்த எலுமிச்சை பழத்தோல் போல் அவர்கள் உங்களைத் தூக்கி எறிந்து விடுவர். நீ ஒரு பரத்தையின் நட்பை வைத்துக் கொள்ள விரும்பினால்-இங்குதான் வேமனரின் உண்மை சொரூபம் மீண்டும் வெளிப்படுகிறது-நல்ல உருவமும், வசீகரமான தோரணையும், இசையிலும் நாட்டியத்திலும் நல்ல தேர்ச்சியும் பெற்ற ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்க. அவளுடைய நட்பை நாடுவதற்கு முன்னர், அவளுடன் வாழும் அவள் அன்னை இல்லையென்பதை உறுதி செய்து கொள்க. (எங்ஙணம் யோகி ஒருவர் இத்தகைய மானக்கேடான அறிவுரை நல்கக்கூடும் என்பதனால் அதிர்ச்சியடையவர்கள் அறிய வேண்டியது இது; இந்து சமூகத்தில் பத்தொன்பாதாவது நூற்றாண்டின் இறுதி வரையிலும் பரத்தையை வைத்திருப்பது மதிப்பு நிலையின் அறிகுறியாகக் கொள்ளப் பெற்றிருந்தது.)
எஞ்சிய வேமனரின் நீதி போதனையைப் பற்றி இங்ஙனம் சுருக்கமாக உரைக்கலாம்: எல்லாச் சந்தர்ப்பங்களிலும், உன் மனச்சான்றுக்கு ஏற்ப உண்மையாகவும் உறுதியாகவும் இரு. சிங்கம் ஒன்று வன்மையற்றும் நோயுற்றும் இருந்தால், ஒருநாய் கூட அதனை அச்சமின்றித் தாக்கும். இதனால் நீ எல்லோரிடமும் உன் முழு வலிமையையும் காட்ட வேண்டுமென்பது கருத்தன்று. வலிவுள்ள மனிதன் அமைதியாகவே இருப்பான்; அவன் அடக்கமாகவும் இருப்பான். எப்பொழுதும் வல்லந்தத்தைத் தவிர்ப்பாயாக கொல்லாமை உன்னுடைய சமயக் கொள்கையாக இருக்கட்டும். சிலர் மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்று மடமையினால் போற்றி உரைக்கின்றனர். அவர்கள் உடன்பிறப்பாளர்கள் கொல்லப் பெறும் போரையும் இரத்த வெள்ளம் பாயும் கொலையையும் விரும்புகின்றனர் என்று கொள்ளலாமா? உன் பகைவர்களில் மிகக் கொடுமையானவர்கள் கூட உன் கைகளில் சிக்கினால், நீ அவர்களைக் கொல்லற்க. மாறாக நீ அவர்கட்கு ஒரு நன்மை செய்து அவர்களை விடுவிப்பாயாக". மனிதர்களைக் கொல்லுவதை விட பிராணிகளைக் கொல்லுவது குறைவான குற்றம் அன்று. பிராணியொன்றின் உயிர் மதிப்புக் குறைவு என்று ஏன் கருதுகின்றாய்? உண்மையில் அது ஒரு மடையனை விடக் கேடானதா? நீ கொல்ல வேண்டிய ஒரே ஒரு பிராணி உன்னுள் உறையும் பிராணியேயாகும். உணர்வுள்ள எல்லாப் பிராணிகளிடமும் அன்பு காட்டி அறிவுடைமையுடன் வாழ்ந்து பெருமையுடன் கிழப் பருவத்தை எய்துக. கிழப்பருவத்தை அடைவதென்பது மனத் தளர்ச்சியடைவதென்பது அன்று; அஃது அறிவுக்கூர்மையை எட்டுவதாகும். எனினும், அறிவாழம் என்பது வயதின் தனி உரிமைக் குத்தகை என்று கருதற்க. சில இளைஞர்களும் நீ செல்லும் வழியில் ஒளி காட்டுவதற்கேற்ற அறிவுடைமையுடன் இருத்தல் கூடும். "இளையோர் ஒருவர் பிடித்துள்ளதால் கைவிளக்கின் ஒளி குறைவாகி விடுமா?" புல்லைத் தின்னும் பிராணி பழங்களின் இன்சுவையை அறிய முடியாது என்பதை நினைவில் இருத்துக: அங்ஙனமே சிறு கலைகளில் தனிப் பயிற்சி பெறுவோர் வாழ்க்கையின் பெருங்கலையைப் பாராட்டியுரைக்க முடியாது. உண்மையில், வாழ்க்கைக் கலை என்பது கலைகளனைத்திலும் மிகமிக உயர்ந்த தாகும்.
வேமனரின் ஒரு குருட்டு இடம் (களங்கம்) பெண்ணைப்பற்றியது; ஆகவே அவர் தன்னுடைய நன்னோக்க வாழ்வின் திட்டத்தில் ஒரு தாழ்வான, கிட்டத்தட்ட பழிக்குரிய, இடத்தை நல்குகின்றார். அவர் கருத்துப்படி பெண்ணே எல்லாவிதக் கேட்டிற்கும் பிறப்பிடமாவாள். அவள்தான் சர்ஸி[2], அவள்தான் டெவிலா[3]; மனிதனுடைய வீழ்ச்சிக்கெல்லாம் அவளே காரணம். அவளிடமிருந்து ஒதுங்கியிருப்பதே மிகச்சிறந்தது: உங்களால் அதனைச் செய்யமுடியாதுபோயின், அவளேக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவேண்டும். அவளை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கவேண்டும்; இயன்ற வழிகளிலெல்லாம் அடக்கி வைக்கவேண்டும். ஒரு பெண்ணின் உண்மையிலும் மெய்யன்பிலும் நம்பிக்கை வைப்பது அறிவின்மையாகும்; "கடலில் கப்பலின் அடிச்சுவடுபோலவும், விண்வெளியில் பறவை செல்லும் வழிபோலவும், பெண்ணின் நடந்துகொள்ளும் முறையும் அமைந்துள்ளது." செல்வச் செழிப்புள்ள பொழுதுஅவள் கணவனைக் கவனிக்கின்றாள்; வறுமைக்காலத்தில் கணவன் அணுகும்பொழுது எழுந்திருக்கவும் செய்யாள்; அவன் உயிரோடிருந்தபோதிலுங்கூட இறத்துபட்டவனாகவே மதிக்கின்றாள். இங்கனமெல்லாம் கூறும் வேமனர், அன்னையை உயர்வாகக் கருதவேண்டும் என்றும், உண்மையில் அவள் தெய்வத் தன்மையின் திருவுரு என்றும் கூறுவதுதான் விந்தையாகவுள்ளது. பெண்ணை-சிறப்பாகத் துணைவியைப்-பழித்துக்கூறுங்கால் மனைவியாக இராமல் அவள் அன்னையாக ஆக முடியாது என்பதைத் தெளிவாகவே மறந்துவிடுகின்றார். எவ்வகையிலும் பெண்களைப்பொறுத்த வரையில், அவர் ஒரு பழைமைப்பற்றாளர், பிற்போக்காளர் என்றே சொல்லவேண்டும். ஆனால் வில்லியம் எச். கேம்பெல் வேமனருக்காக ஒரு சாக்குப்போக்கினைக் காண முயல்கின்றார். இந்தியாவில் எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் பெண்கள் உறுதியான எதிர்ப்பாளர்களாக உள்ளனர்: மரபு வழியாக வரும் கருத்துகளிலும் வழக்கங்களிலும் அவர்களது உடன்பிறந்த பழைமைப் பற்றிலும் கண்மூடி வாளா ஏற்கும் பண்பாலும் தனது செல்வாக்கு வலுவின்மையை எய்தியதையும் தன்னுடைய முயற்சிகள் யாவும் திணறடிக்கப் பெற்றமையும் வேமனர் அடிக்கடி கண்டிருந்திருக்கலாம் என்பது அம் மேதறிஞரின் கூற்றாகும். இது பெரும்பாலும் உண்மை என்பது ஒப்புக்கொள்ளப்பெறத்தான்வேண்டும். ஆனால் இந்தியாவில் பெண்களின் பிற்போக்குத் தன்மைக்கு ஆண்கள் நேரடியாகப் பொறுப்பாளர்களாகவில்லையா? பன்னெடுங்காலமாக அவர்கள் பெண்களுக்குச் சுயேச்சை, கல்வி, அறிவொளி இவற்றைக் கொடுக்க மறுக்கவில்லையா? எந்த ஒரு நாட்டிலாவது பாதி சுயேச்சையாகவும், பாதி அடிமையாகவும், பாதிப்பேர் கற்றறிந்தவர்களாகவும், பாதிப்பேர் கல்வியில்லாதவர்களாகவும், பாதிப் பேர் அறிவுடையவர்களாகவும் பாதிப்பேர் அறியாமையுடையவர்களாகவும் இருப்பதைக் காணமுடியுமா? அத்தகைய ஒரு நாட்டில் இரண்டாம்பாதி உணர்ச்சியற்ற சுமையாகவும் ஒரு சக்கரத்தடை போலும் இருந்தால், அதற்குரித்தான பழியை முதற்பாதியின் தலையில் முற்றிலும் சுமத்தப்பெறல் வேண்டும்.
வேமனர் வேதங்களின் தனிச் செல்வாக்கை ஒப்புக்கொள்ளாவிடினும், அவருடைய சமயமெய்விளக்கத்தில் அவர் ஒரு வேதாந்தியே. "ஆடலணங்குகள்போல் வேதங்கள் உங்களை மயக்குகின்றன; வழி தவறி நடத்திச் செல்கின்றன" என்று கூறுகின்றார் அவர். பொருளுணராமல் வேதங்களே ஓதுபவர்களுக்கு அவர் குறைந்த நன்மதிப்பையே தருகின்றார். அவர்களை அவர் "குரைக்கும் நாய்கள்" என்று குறிப்பிடுகின்றார். அவர்கள் அங்ஙணம் உரக்க ஓதுவதால் அவர்களுடைய குரல்வளைகட்கு நல்ல பயிற்சியாகலாம்; ஆளுல் அதைத் தவிர வேறொரு பயனும் இல்லை. வேதச் சடங்கு முறைகளும் அதைப்போலவே பயனற்றவை. புராணங்கள் "பொய்களின் கதம்பம்" ஆகும். முக்கியமாகப் புராணங்களால் உயிர்ப்பூட்டப்பெற்ற சிலை உரு வழிபாடு, அவ்வழிபாடுபுரிவோரை முடிவான உண்மைகளை அறியாதவாறு செய்து விடுகின்றது; தம்முடைய நம்பிக்கையைச் செதுக்கப்பெற்ற கற்களின்மீது வைப்பவர்கள் 'அறியாத', 'அறிவற்ற', உணர்வற்ற', 'அறிவிழந்த மக்களாவர். 'வண்ணப்பகட்டான திருக்கோயில்களை எழுப்பி அவற்றுள் திருவுருவச்சிலைகளை நிறுவிய அரசர்கள் யாவரும் போர்களில் தோற்கடிக்கப்பெறுகின்றனர். ஆனால் அந்தத்திருவுருவச் சிலைகளை உடைப்பவர்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர். திருவுருவச் சிலைகளே கடவுளாக இருப்பின் அவை ஏன் தம்மை வழிபாடு செய்பவர்களைக் காப்பாற்றவில்லை?” என்கின்றார் வேமனர். தர்மசாத்திரங்கள் என்று வழங்கப்பெறுபவை நீதியைக் கொண்ட நூல்களன்று; அவை யாவும் படுமோசமான அநீதிகளைக் கொண்டவையாகும். நூல்களின்மீதும் அந்நூல்கள் நுவலும் அறிவின்மீதும் நம்பிக்கை வைப்பது பயனற்றது. ஒருவரால் அடைய முடியுமானால் முழுமுதற்பொருளுடன் கொள்ளும் நேர் அதுபவம் மட்டிலுமே முக்கியமாகின்றது. அது மட்டிலுமே வீடு பேற்றிற்குரிய வழியுமாகும்.
புரியாத விவரங்களில் நுழையாமலேயே வேமனரின் சமய விளக்கக் கோட்பாடு அத்துவிதம் (குறிக்கோள் நெறி) என்று சொல்லலாம். வேதங்கள் வேறு பழைய நூற்றொகுதிகள் இவற்றின் மேலாண்மை உரிமைகளை மறுத்தலைத் தவிர, சீவான்மாவையும் பரமான்மாவையும் இன உறுதிசெய்வதன் வற்புறுத்தலிலும் அவர் பிற அத்துவிதவாதிகளிடமிருந்து வேறுபடுவதுபோல் காணப்படுகின்றார், "நான்முகனக் கொன்று அவரைத் திருமாலுடன் இரண்டறக் கல; திருமாலைக்கொன்று அவரைச் சிவனுடன் இரண்டறக் கல; சிவனைக் கொன்று அவரை உன்னுடன் இரண்டறக் கல. அதன் பிறகுதான் நீ ஒரு நிறைவுடைய யோகி ஆகின்றாய் என்று கூறுகின்றார் அவர். இத்தகைய ஒரு செய்தியை மற்ற எந்த இந்துச் சிந்தனையாளர் சொல்லத் துணிவுகொண்டார்?
வேமனரின் மெய்விளக்கம் டாக்டர் ஜி.வி. கிருஷ்ணராவ் அவர்களால் இங்ங்னம் விளக்கப்பெறுகின்றது:
ஒவ்வோர் உயிரியின் இதயத்திலும் உறைந்து கொண்டிருக்கின்ற இறைவன் மனிதரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர் அல்ல. மனிதன் தன்னுடைய தன்-முனைப்பினையும் மன வெழுச்சிகளையும் ஒழித்து முற்றிலும் தன்னை அவனிடம் (இறைவனிடம்) இழக்கும்பொழுதுதான் இறைவனுடன் ஒன்றாகின்றான். இல்லை, அவன் இறைவனேயாகிவிடுகின்றான். இந்தக் கொள்கை நெறியைப் புரிந்துகொள்ளாத மக்கள் அவனை (இறைவன்) திருக்கோயில்களிலும் வேறு புனித திருத்தலங்களிலும் தேடுகின்றனர். . . . . சிலர் உலகத்தையே துறந்து, எதிர்காலத்தில் ஏதாவது ஒருசமயத்தில், ஏதாவது வேறு ஒர் உலகில் அவனைக் (இறைவன்) காணும் நம்பிக்கையுடன் தவம் புரிகின்றனர். இஃது ஒரு மாபெரும் பொய்த்தோற்றமாகும்; மீப்பெரிய பொய்யுமாகும். "இந்த உலகில் இப்பிறப்பில் பேரின்பம் கிடைக்காவிடில், அது மற்றோர் உலகில் எப்படிக் கிடைக்கும்? தொடக்கத்திலேயே இல்லாத உள்ளுறைத் தன்மை இறுதியில் எங்கனம் கிடைக்கப்போகின்றது? ஆகவே, மனிதன் மிகவும் அடைய முடியாதபடி, எட்டாப்பழமாக, வரம்பில்லாத ஒன்று (Absolute) தனிச் சிறப்புக்குரிய இந்த உலகத்திற்கு அப்பால் எங்கோ ஓரிடத்தில் இருக்கின்றது என்று கூறுவது தவறாகும். அஃது உண்மையாக இங்கேயே மனிதனிடத்திலும் அவனைச் சுற்றிலுமே உள்ளது; அதனை அவன் தன்னுள்ளேயே நாடி அநுபவத்தால் அறிய வேண்டும். இங்ங்னம் தேடிச் செல்வோன் தன்னுடைய ஊரைவிட்டு அகலவேண்டியது அவசியமுமில்லை. வழியில் காணப்படும் குள்ளநரிகளை எண்ணிக்கையிடும் விருப்பம் இருந்தாலன்றி, அவன் ஏன் வெளியே செல்லவேண்டும்?’’
வேமனர் மனிதனை எல்லாப் பொருள்கட்கும் மிக நடுவே வைத்தெண்ணுவதால், அவரது மெய்விளக்கம் அடிப்படையில் மனிதப்பற்றுக் கோட்பாடாகவே அமைகின்றது. டாக்டர் ஈஸ்வர டோபா என்பவர் ஞானி வேமனர்: அவருடைய "மெய் விளக்கம்" என்ற தன்னுடைய நூலில் நம்முடைய கூரிய கவனத்தை இந்த உண்மைக்குக் கொண்டு வருகின்றார். வேமனர் "ஆன்ம-பண்பாட்டுநிலை”யை ஆதரிப்பதாகக் கூறுகின்றார் அவர். "வேமனரின் பண்பாட்டுக் குறிக்கோள் மனிதனுக்கும் நெறிகளாகிய மாளிகையின்மீது கட்டப்பெற்றுள்ளது. மனித ஆளுமையை ஒரேயடியாக மடைமாற்றம் செய்வதில் மனிதனே தன்னுடைய வழியில் பாடுபட்டு உழைக்கவேண்டும். அவனுடைய உயிருள்ள ஆளுமையில் விழுமிய ஆற்றல்கள் மறைந்து கிடப்பதால் மனிதனல்லாத கூறுபாடுகள் அவனுடைய விடுதலைக்கு வாரா. வேண்டப்படுவதெலாம் மனிதனுடைய நல்வாழ்வுக்காக மனிதப் பண்புகளைப் பண்படையச்செய்யும் முக்கியத்துவத்தை அநுபவத்தால் அறியவேண்டியதாகும்.மனிதனின் இயல்பூக்கங்களையும் மனவெழுச்சிகளையும் மடை மாற்றம் செய்ய வேண்டுமேயன்றி அவற்றை அடக்கலாகாது என்பது உண்மையிலேயே வேமனருடைய சிந்தனையின் அடிப்படையாக உள்ளது. பாலூக்கம் மனித இயல்பினை இயக்கி வைக்கும் உயிராற்றலின் தலைமை மூலங்களில் ஒன்று என்ற தெளிவான கருத்தினைத் தோற்றுவித்து உளவியலைக் கண்டறிந்தவராகிய பிராய்டை முன்னறிகின்றார், "நீ அழகிய வனிதையொருத்தியைக் காணுங்கால் உன்னிடம் கொழுந்துவிட்டெரியும் காம உணர்ச்சி ஆன்மீக-ஆர்வ உணர்ச்சியாக மாற்றப்பெறுதல் வேண்டும்" என்கின்றார். பரமான்மாவுடன் சமாதி நிலையில் கலக்கும் பேரின்பத்தை நங்கையுடன் புணர்ச்சியாலடையும் சிற்றின்பத்துடன் ஒப்பிடுகின்றார். ஒருவர் மனவெழுச்சி மிகுந்த விஷயகாமியாக இருந்தாலன்றி, அவர் மோட்ச-காமியாக ஆக முடியாது” என்று கூறுவதில் இதே கருத்தினை வேறொருவிதமாகத் தெரிவிக்கின்றார். இந்த முக்கிய செய்தியை மேலும் அரண் செய்யும்முறையில் "கணவன் கொழுந்து விட்டெரியும் மனவெழுச்சியுடன் மனைவியை அணுகுவதுபோல் யோகி இறைவனே அணுகவேண்டும்" என்று மேலும் வற்புறுத்தி உரைக்கின்றார்.
வேமனர் நாகார்ஜுனரைப்போலவோ சங்கரரைப்போலவோ அறிவாற்றலுள்ள சூரராக இல்லாததால் ஒரு பெரிய மெய்விளக்க அறிஞர் என்றோ அல்லது ஒழுங்கமைப்புடையவர் என்றோ சொல்லுவதற்கில்லை. எனினும், அவர் தனக்கேயுரிய மெய்விளக்கத்தைக் கொண்டவர்; அஃது ஒவ்வொருவரையும் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு கூறினையும் முற்றிலும் தழுவியதாக அமைந்து விடுகின்றது. மெய்விளக்க வல்லுநர்கள் வேமனருடைய மெய்விளக்கத்தின் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதனுடைய ஜனநாயக, சமத்துவமுறை சார்ந்த, மனிதப்பற்றுக் கோட்பாடு சார்ந்த சிக்கல்களைத் தெளிவாக்க வேண்டியது மிகவும் விரும்பத் தக்கதாகும்.
- ↑ மூன்று முக்கிய நூல்களாவன: உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத்கீதை. இவை இந்திய மெய்விளக்கத் துறையின் மரபுப்படியமைந்த நூல்களாகும்.
- ↑ சர்ஸி: இவள் ஒரு மந்திரக்காரி; மனிதர்களை மிருகங்களாக மாற்றியவள். ஹோமரின் பெருங்காப்பியமான 'ஒடிஸ்ஸியில்’ விவரங்காண்க.
- ↑ டெலிலா சாம்ஸனின் என்ற மாவீரனை மயக்கிய மாது. விவரம் விவிலியம்-பழைய ஏற்பாட்டில் காண்க.