வைகையும் வால்காவும்/கூட்டமைப்பு

கூட்டமைப்பு


வினைவலியும் தன்வலியும், மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல், பட்-டிணைந்தே
பொதுவுடைமைப் பூங்கா உருசிய மண்ணில்
புதுமையுறச் செய்தான் லெனின். 45

காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருது பவர்; அதனால்-சாலவே
நாடு கடத்திய நாளிலும் மார்க்கெண்ணப்
பீடு கொணர்ந்தான் லெனின். 46

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்; எனும்-செஞ்சொல்
அழியாமை வேண்டி அழித்தான் கொடுங்கோல்
தொழிலாளர்க்கு ஆவி லெனின். 47

பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக்கல்; என்று-ஒருபெரிய
மக்கள் அரசைப் பொதுவுடைமைக் கூட்டமைப்பைச்
சிக்கறத் தேர்ந்தான் லெனின். 48