வைகையும் வால்காவும்/மாண்புடை மாந்தன்

மாண்புடை மாந்தன்


அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு; என்று-மன்மக்கள்
சோவியத்தைத் தூய குடியரசைத் தோள் தந்தார்
ஆவியெனக் காத்தான் லெனின். 49

உள்ளியது எய்தல் எளிதுமன், மற்றும் தான்
உள்ளியது உள்ளப் பெறின், என்னும் உள்ளத்தால்
ஆக்கப் பணியில் விழிப்போடு உணர்வோடும்
ஊக்கம் விளைத்தான் லெனின். 50

ஓர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை; எனத் தேர்ந்ததால்
குற்றம் கடிந்து குடியாட்சிக் கோட்பாட்டில்
வெற்றி விதைத்தான் லெனின். 51

நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்; உலக-ஏடொறும்
காண்க எனக்காட்டி மக்களரசு ஏற்றமைத்தான்
மாண்புடை மாந்தன் வெனின். 52