வைகையும் வால்காவும்/தெளிந்தான் தெளிந்தவன்

தெளிந்தான் தெளிந்தவன்


அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் நீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை; என்று- நல்லோன்
இடித்திடித்துச் சொல்லிப் பொதுவுடைமை ஏற்றான்
படித்தறிந்த மார்க்கின் லெனின். 53

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவர் தம் ஒல்லைக் கெடும்;ஆம்-உருசிய
நாடொன்றே சான்று, நயமிலா நானிலத்தீர்
நீடொன்று பெற்றான் லெனின். 54

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை; அதனால் -கண்ணோட்டம்
கொண்டு நிலத்தின் சுமைகுறைத்தான் கொள்கையினை
எண்டிக்கும் ஏற்க லெனின். 55

ஒற்றொற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் வேண்டி-வெற்றியுறத்
தோழமை, தன்னுறவு, யாவும் தொலைவிருந்து
சூழ்ந்தே தெளிந்தான் லெனின். 56