வைணவ புராணங்கள்/(5) இருசமய விளக்கம்

ஆசிரியர்: அரிதாசர் தொண்டை நாட்டில் குன்றவர்த்தனக் கோட்டத்தில் அரிவாசபுரம், அரிகண்டபுரம் என்ற பெயர்களால் வழங்குகின்ற அரிதை என்ற ஊரில் காராளர் மரபில் பிறந்தவர்.

இந்துதவழ் பைம்பொழில்சூழ் வளமிக்க
அரிதைநகர் இறைவன் என்னும்
மந்தரபுயத்து அண்ணல் அரிதாசன்
அருள்சுரந்து வகுத்துச் செய்த
முந்தைஇரு சமயவிளக்கப் பெருநூல்
ஒருகவியை மொழிந்தோர் கற்றோர்
பைந்துளவப் பரஞ்சுடரின் அருட் பேற்றால்
இகபரமும் படைப்பர் மாதோ.

என்ற நூற்பயன் கூறும் பாடலால் இதனை அறியலாம். இவ்வூர் இப்போது நாகலாபுரம் என்று வழங்குகின்றது. சந்திரகிரி இராச்சியத்து வேதகிரி தேசத்து ஹரிவாரபுரமான நாகலாதேவி அம்மன் புரம் என்பது நாகலாபுரத்துக் கல்வெட்டு. வேதநதியாவது ஆரணி நதி (ஆரணம்-வேதம்). இவ்வூர் ஆரணியாற்றங்கரையில் உள்ளது. ஆரணியை வைத்தே ஆசிரியர் தம் நூலைத் தொடங்குகின்றார். இவ்வூரில் காராளர் மரபில் களப்பாள கோத்திரத்தில் பிறந்தவர். இவரே இதை 'அம்மாநகர் நீடு அரிவாசப் பெரும்பேர் இம்மாநிலத்தில் இம்மாநகர்க்கண்... அரிதாசன் என்றோதும் நாம களப்பாளன் (நகரப் படலம் 46) என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். காராளர் மரபு என்பதை சோழ நாட்டு நாச்சியார் கோயில் என்ற திருநறையூரில் கி.பி. 1514ல் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டானது இவருடைய தமையனாரை 'அரிகண்டபுரத்துக் காராளர் மரபினரான ஆவினி களப்பாளன் திருவேங்கடமுடையார் வடமலையண்ணகள்’ என்று கூறுவதனாலும் நன்கு அறியலாம். அரிதாசருடைய தந்தையார் திருவேங்கடமுடையார் என்று அறிகின்றோம். திருவேங்கடமுடையார் சிறந்த திருமால் பக்தர். இவர் தமது மரபில் பிறந்த பெருமாள் முதலிச்சியார் என்ற அம்மையாரை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தபோது இவருக்கு வடமலையண்ணல், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பர் என்ற புதல்வர் மூவர் பிறந்திருந்தனர். மூன்றாம் புதல்வரான திருமலையப்பரே பின்னால் அரிதாசர் என்ற புகழ்பெற்ற நூலாசிரியர். இவருக்குக் கிருட்டிணன் என்ற தாசியத் திருநாமமும் உண்டு. நாகலாபுரம் செப்பேடு ஒன்று இந்தப் பெயரைக் குறிப்பிட்டு, இவர் அவ்வூர்த் திருக்கோயில் கைங்கரியங்களைச் செய்து வந்ததால் அரிதாசர் என்று வழங்கப்பெற்றார் என்று கூறுகின்றது.

அக்காலத்தில் விசய நகரத்தின் சிறப்புமிக்க மன்னராய் விளங்கியவர் கிருட்டின தேவராயர். அவர் கலிங்க தேசத்தைக் கடகம் (இன்றைய கட்டாக் என்ற அதன் தலைநகரிலிருந்து ஆட்சி புரிந்த கசபதி அரசனான பிரதாப ருத்திரனை அடக்க வேண்டி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று (1520) அவனை வென்று அங்கு செயத்தம்பம் நாட்டினார். நாட்டப்பெற்ற இடம் விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள சிம்மாசலம் என்று பெயர் வழங்குகின்ற சிங்காத்திரி ஆகும். கிருட்டின தேவராயர் சிம்மாசலத்திடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். வெற்றி கொண்டு செயத்தம்பம் நாட்டிய இராயர் தெற்கு நோக்கி வந்தபோது அரிதை என்ற அரிகண்டபுரத்தில் அரிதாசரால் கட்டப்பெற்ற கருமானிக்கவண்னர்-வேதவல்லி நாச்சியார் ஆலயத்தையும் வணங்கி அங்கு ஆராதனைக்கு வேண்டிய நிபந்தங்களையும் கொடுத்தார்.

இராயரோ தெலுங்கு மொழியில் கவிஞர். அவர் பாடிய ஆமுக்தமால்யதா[1]' என்ற நூலிலும் அவரது அவைக்கவிஞர் பெத்தண்ணா பாடிய காவியத்திலும் செயத்தம்பம் நாட்டிய ஊர் பொட்டுனூர் என்று சொல்லப் பெறுகின்றது. இதை இராயர் தில்லை நடராசப் பெருமானை வணங்கி அங்கு வடக்குக் கோபுரம் கட்டி வைத்தபோது பொறிக்கப்பெற்ற கல்வெட்டு உணர்த்துகின்றது. இந்த கோபுரம் இராசாதிராச பரமேசுவரன் ஸ்ரீ வீரப்பிரதாய கிருட்டின தேவ மகாதர்மமாக சிம்மாத்திரி பொட்டுனுாருக்கு எழுந்தருளிச்  செயத்தம்பம் நாட்டித்திரும்பிப் பொன்னம்பலநாதனையும் சேவித்து வடக்குக் கோபுரம் கட்டி வைத்த சேவை என்று சிதம்பரசாசனம் கூறுகின்றது. இதனை அரிதாசரும் தமது நூலுள் ஒரு பாடலில் குறிப்பிடுவார்.

கிரிபோல் விளங்கிக் கிளரும்புயக்
கிருட்டின ராயர்
தரைமீது சிங்காத் திரியிற்சயத்
தம்பம் நாட்ட
வரமா தரவால் அளித்தேவட
கூவ மேவும்
கருமா மணிவண் ணனைநீடு
கருத்துள் வைப்பாம்

என்பது காண்க. கிருட்டிண தேவராயரின் தாயார் திருநாமம் நாகலாதேவி. இவர் பெயரால்தான் பின்னர் இந்த அரிகண்டபுரம் என்ற ஊர் நாகலாபுரம் என மாற்றிப் பெயர் வழங்கலாயிற்று.

அரிதாசருடைய முன்னோர் புலமை மிக்கவர்கள். ஆற்றுவான்பாடி என்ற கிராமத்திலிருந்தவர்கள் என்பதை இராயர் காலத்தில் சகம் 1446 (கி.பி. 1523)இல் அமைந்த சாசனம் (ஆரணித் தாலூகா, தேவிகாபுரம்) குறிப்பிடுகின்றது. செயங்கொண்ட சோழ மண்டலத்துப் பல்குன்றங்கோட்டத்து மேல்குன்ற நாடு முருகமங்கலப் பற்று இராஜகம்பீரன் மலைக்கு அடுத்த செய்யாற்று பிரிவான தேவக்காபுரம் உடையார் திருநாமக்காணியான சோளபூண்டியில் தேவக்காபுரம் பிட்சாமடத்து விசுவேசுவர சிவாச்சாரியாரும் தான மயேசுவர கைக்கோள் முதலிகளும், ஆற்றுவான்பாடி வித்துவான்களில் திருவேங்கலநாதர் மகன் வடமலையார்க்கு இறையிலி காணியாச்சி பண்ணிக் கொடுத்தபடி இத்திருவேங்கல நாதரே வடமலையாரின் தந்தை திருவேங்கடமுடையார் என்பது மு. இராகவையங்கார் குறிப்பு'. இதற்கு முந்திய ஆண்டில் (சகம் 1415) இராயர் நாகலாபுரத்தைச் சர்வமானியமாக அளித்தார் என்று ஒரு


கன்னடக் கல்வெட்டு கூறுகின்றது. சகாத்தம் (1445)இல் சுயாது வருடம், கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, சுக்கில பட்சம் உத்தானத்துவாதசியில் துக்கபத்ராதீரத்து ஹேதுகூட பர்வதத்தால் அலங்கரிக்கப்பட்ட ரீவிட்டலேச விருபாட்சர் சந்நிதியில் ஹரிவாசபுரேசராய் வேதாசலத்தில் எழுந்தருளியிருக்கும் ரீநீல மாணிக்கத் தேவருக்கு சந்திரகிரி இராச்சியத்தில் கங்கை மரபில் பிறந்தவரும், திருமாலின் திருவடிகளில் வண்டு போன்றவரும், நீலமாணிக்கத் தேவருக்குக் கைங்கர்யங்கள் புரிவதையே புருஷார்த்தமாகக் கொண்டவரும், அப்பெருமானுக்குக் கோபுர மண்டப விமான ஆவரணரதாதித் திருப்பணிகள் எல்லாம் செய்தவரும், வடமலை என்ற பெயருள்ள மந்திரி சிரேஷ்டரைத் தம் தமையனாராகக் கொண்டவரும், திருமால் பக்தரும் சிறந்தவருமான ஹரிதாசரால் கேட்டுக்கொள்ளப்பட்டுப் பெருமாளுக்குத் திருவமுதுக்கும் நிரந்தர கீத மகாவாத்யாதிகட்கும் நாகலாபுரம் என்ற பிரதி நாமங்கொண்ட அரிகண்டபுரம் சர்வமானியமாகக் கொடுக்கப்பட்டது.[2]

இக்கல்வெட்டு பல செய்திகளைத் தெரிவிப்பதோடு, வடமலை வேளாளர்குலம், அரிதாசர் தமையனார், இராயருக்கு மந்திரியாக இருந்தார் என்ற செய்திகளையும் தெரிவிக்கிறது. இவரை அரிதாசர், திருமால் வணக்கம் கூறும் பாட்டொன்றிலும் குறிப்பிடுகின்றார்.

பட மா சுணமும் முதிரா.இளம்
பச்சை சூலும்
திடமா மறைகந் தமும்ஆகிநற்
செல்வன் ஆள
வடமா மலைஅண் ணனதுள்ளம்
வைக நாளும்
இடமாம் ஒருவற் கடியோங்களி
யாங்கள் தாமே.

என்பது காண்க. வடமலையார் அமைச்சராய் மிக்க செல்வாக்கோடு விளங்கினமையால், அக்காலத்தில் அரசர்மேல் ஆணையிட்டு மக்கள் சொல்வதுபோல இவர் பேராலும் ஆணையிட்டுச் சொல்லும் வழக்கம் இருந்தது என்பதைத் தத்துவப்பிரகாசர் வரலாற்றில் வரும் குறிப்பால் அறிகின்றோம்.

மருவுபுகழ்க் கிட்ண மகராசர் ஆணை
அரிய வடமலையார் ஆணை - திருவாரூர்ப்
பாகற் கொடியறுப்பார் பாதத் திருவானை,
தாயாக் கொடியிறக்கா தே

என்ற பாடலைத் தத்துவப்பிரகாசர் பாடி திருவாரூர்ச் சிவாலயத்தில் நடந்த கேடுகளைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் குறிப்பிட்டவாறு மூன்று ஆணையுமிட்டு, கொடியிறக்காதவாறு தகைந்தார் என்பதைத் தமிழ் நாவலர் சரிதையால் அறிய முடிகிறது (225); பாகற்கொடியறுப்பார், தியாகராசப் பெருமான். திருக்கழுக்குன்றத்துச் சாசனமொன்றும் வடமலையாரைக் குறிப்பிடுவதோடு இவர்கள் பரம்பரையையும் கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் குன்றுவர்த்தனக் கோட்டத்து வடகூவத்துள்ள அரிகண்டபுரத்து ஹரிவாசபுரமான நாகலாபுரம் என்ற ஊரினராகிய ஆவினி களப்பாளர் திருவேங்கடமுடையார் என்பவரின் புத்திரர்களை வடமலையண்ணகள், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பர் என்ற மூவர் தங்கள் தாயார் பெருமாள் தேவிச்சியார் புண்ணியமாகவும் அரசர் கிருட்டிணதேவராயர் தர்மமாகவும், 'குறுமுகை என்ற ஊரைக் கோயிலுக்கு உதவினர்’ என்று கூறுகிறது. எனவே, இச்சாசனக் குறிப்புகளாலும், பாடல்களாலும் அரிதாசருடைய பரம்பரையும் வரலாறும் நன்கு தெளிவாகின்றன. இவர் சிறந்த வேளாளர் மரபில் வந்தவர் என்பதும், அரசியலில் பெரும் பதவி வகித்த வடமலையாரின் இளவல் என்பதும், கிருட்டிணதேவராயரால் பெரிதும் கெளரவிக்கப் பெற்றார் என்பதும் அறிய முடிகின்றது.

இரு சமய விளக்கம்: அரிதாசர் பாடிய நூல் இரு சமய விளக்கம்’ எனப் பெயர் பெறும். சைவம், வைணவம் என்ற இரு மயங்களையும் விளக்குவது என்று நூல் பெயர் குறிப்பிட்டபோதிலும்,  இது சைவ சமயக் கதைகளை மறுத்து வைணவத்தைச் சொல்லி வந்த நூலேயாகும். சைவ சமயக் கருத்து வேற்றுமைகளும் ஒரளவு சிறு சிறு பூசல்களும் அக்காலத்து இருந்தமை உண்மையே. 13-ஆம் நூற்றாண்டில் சிவஞான சித்தியார் செய்த அருணந்தி சிவாச்சாரியர் மற்றையோர் கருத்துகளை எடுத்துக் கூறி கண்டிக்கும் பகுதியாகிய 'பரபக்கம்’ (பிற்பகுதி) என்ற பகுதியில் உலகாயதன் தொடங்கி நிரீச்சுர சாங்கியன் ஈறாகப் பதின்மூன்று சமயவாதிகளின் கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி, சித்தாந்தபரமாக அவற்றுக்கு மறுதலை தெரிவிக்கின்றார், பதினான்காக பாஞ்சராத்திரி மதத்தை (வைணவத்தை)க் கூறும்போது, அவர் புராணக் கதைகளைக் கூறுகிறாரேயன்றி வைணவ சமயக் கருத்துகளை எடுத்துச் சொல்லி மறுக்கவில்லை. கி.பி.1100க்குப் பின் வைணவ சமயம் மிகுதியான அளவில் வளர்ந்தது. பெருத்த மதமாற்றம் செய்தது; சமயத் துறையில் பெரு நூல்கள் யாவும் வடமொழியிலும் மணிப்பிரவாளத்திலும் செய்தது. செய்தோர் அனைவரும் (சிறு சிறு நூல்கள் செய்த ஒரிருவர் நீங்கலாக) பார்ப்பனரே. அவர்களுள் தமிழ்த்துறைக்கு வந்தவர்கள் இலர். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரிதாசர் குலத்தால் வேளாளர். திருமால் பக்தி நிறைந்தவர். சமயத் தத்துவமாக வடமொழியிலோ மணிப்பிரவாளத்திலோ நூல் செய்வதை விட்டு இவர் சைவர்களிடம் அதிகமாகப் பரவியிருந்த சிவஞான சித்தியார் பரபக்கத்தில் பாஞ்ச ராத்திரி மத மறுதலையாகக் கூறியவற்றை மனத்துட்கொண்டு சில புராணக் கருத்துகளையெல்லாம் மறுத்து, திருமால் பரமாக நூல் செய்ய முனைந்தார். பாஞ்சராத்திரி மதம், மறுதலை என்ற இரு பகுதிகளும் 731 பாடல்கள் கொண்டவை. இதனை மறுத்து, திருமால் சமயத்தைக் கதைகள் மூலம் நிலைநாட்ட எண்ணியவர் இதுபற்றி இரண்டாயிரத்துக்கு அதிகமான பாடல்களைப் பாடிவிட்டார்.


தாம் இளமையில் சிறுவர்களோடே இணங்கித் திரிந்த காலத்தில் வடிவழகியநம்பி’ என்ற குருவானவர் அன்போடு "வா, சிறு உறுதி விளம்புவோம். இது பொருள், மருள் தங்கிவிடாது உணர்தி' என்று அழைத்து உறுதி கூறினார் என்றும், இவர் வைணவ குலதுங்கர் என்றும் கூறுகிறார். மேலும், பெத்த பெருமாள் என்ற மற்றொருவர், இவ்வடிவழகிய நம்பி, பொன் மலரடி பணிந்து நங்குருவாயடைந்து மிக மனமகிழ்ந்தே உயர்ந்தோன். பெத்த பெருமாள் என்னும் செல்வன் தம்மை வரவழைத்து இரு சமய நூல்களையும் சங்கையறத் தெரிவித்த ஆசான் - என்றும் கூறுகிறார். இவ்விருவரையும் குறித்த வரலாறுகள் அறியக்கூடவில்லை.

நூல் அமைப்பு:இதுகாண்டம் என்ற பெரும் பாகுபாட்டையும் படலம் என்ற அத்தியாயப் பிரிவையும், பரிச்சேதம் என்ற உட்பிரிவையும் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பு பொதுவாகத் தமிழ்நூல்களில் இல்லை. இவர் வடமொழிநூல் அமைப்பைத் தழுவிச் செய்தார் போலும். பாயிர காண்டம், பூர்வ காண்டம், உத்தர காண்டம், வேத பரமார்த்த காண்டம் என்பன காண்டப் பாகுபாடுகள். படலங்கள் முறையே 9, 7, 46; பரிச்சேதம் பாயிர காண்டத்தில் இல்லை. மற்றவற்றுள் மொத்தம் 130. நூலுக்குப் புறம்பாகத் தொடக்கத்தில் தனியன்’ என்ற தலைப்போடு 13 பாடல்கள் உள்ளன.இவற்றுள் முதல் மூன்று பாடல்கள் அரிதாசரைத் துதிப்பவை. அடுத்த எட்டுப் பாடல்கள் நூற்பயன்கூறி நூலைப் போற்றுபவை. இறுதி இரு பாடல்களும் பழிச்சினரைப் பரவல் என்ற தலைப்பிட்டு வடிவழகிய நம்பியையும் பெத்தபெருமாள் என்பவரையும் போற்றுபவை.

பாயிர காண்டம் முழுமையுமே நூலுக்குத் தோற்றுவாயாக உள்ளது. முதல் கடவுள் வாழ்த்துப் படலம். எதிராசர், குருகூரன், சேனாதிபதி, வடகூவம், கருமாமணிவண்ணன் என்று துதி சொல்லுகிறது. வழக்கமாகச் சொல்லும் முறை திருமால் முதலாக
 எதிராசர் இறுதியாக, இவர் தலைகீழாகச் செப்புகின்றார். அரிதாசரின் துதிகளுள் ஒன்று:

விரியோத நெடுங்கடல்சூழ் வியனுலகிற்
கமலவிழி மேக மேனிக்
கருதாத பகவனுல கெவ்வுயிரும்
படைத்தளித்துக் காக்குந் தன்மை
பிரிவேது மில்லாது பழமறைகள்
துணிபொருளைப் பேணிப் பேசும்
அரிதாசர் இருசரணம் என்றுசிரத்
துணிந்துதுயர் அகற்றினேனே.

எனபதாம்.

நூற்பயன்: இதுபற்றி ஒரு பாடல்:
வளங்கெழு செல்வ முண்டாம்,
மனக்கருத் தெல்லாம் முற்றும்
களங்கமில் ஞானம் எய்தும்;
காட்சிசேர் முத்தி வாய்க்கும்;
தளங்கமழ் துளவக் கோலத்
தாரரி நாதன் வாக்கால்
விளங்கிரு சமய நூலின்
மெய்ப்பொருள் விளம்பு வார்க்கே.
.

என்பது

பழிச்சினரைப் பரவல்: இதுபற்றி இரண்டு பாடல்கள்:
செதுமதிய ரிடும்புகூர் சிறியவரோ டிணங்கியே
திரிதருமெனை யன்பிலா சிலவுறுதி விளம்புகேன்
இதுபொருண் மருள்தங்கிடா தினிதுணர்தி யென்றுநீடு
இருசமய விளங்குநூல் எனதிதயம் அழுந்தவே
முதுகுருவடி வங்கொளா முறைதவறுதல் அன்றியே
முழுவுறவக ளங்கமாய் மொழிமுதன் மையன்எம்பிரான்

மதுகையிலும் சிங்கவேர் வயிணவாகுல துங்கனாம்
வழிவழங்கிய நம்பிசே வடியிணைகள் வணங்குவாம்.
கந்தர விலங்குபழ மறைகட்கு மாறாய்
சொல்லுமெழு நான்காகமம்
துன்மார்க்க மென்றுதெரி யாமற் புகழ்ந்திடுந்
துட்டர்கள்செய் செருவடங்க
வாதனைக் கருகன்மா லென்றுவெளி யிட்டாண்ட
வடிவழ கியான் நம்பிபொன்
மலரடி பணிந்துநங் குருவா யடைந்துமிக
மனமகிழ்ந்தே யுயர்ந்தோன்

சந்ததஞ் சிறியவர்க ளோடே யினங்கித்
தலத்திற் பிரிந்தஎன்னைத்
தயையினா லேயழைத் திருசமய நூலினைச்
சங்கையற யோதியேநீ
சிந்தையி லினித்தெளித் தேயறிந்தி டெனவுரை
செப்பியறி வித்தஆசான்
செயசமய சிங்கேறு பெத்தபெரு மாளெனும்
செல்வனடி போற்றுவோமே.

என்பவையாகும்.

நூற்பொருள்: 'இரு சமய விளக்கம் ஒரு விசித்திரமான பெருநூல்.இதனுள் அரிதாசர் இரண்டு பெண்களை நதிக்கு அனுப்பி நீராடச் செய்கின்றார். அவர்கள் இருவரும் திருமால் அடியவளும் சிவன் அடியவளும் ஆவர். பெயர்கள் முறையே ஆரனவல்லி, ஆகமவல்லி என்பனவாகும்.

செல்லும் திரளில் திருஆழியும்
சங்கும் மென்தோள்
புல்லும் குறியும்திரு நாமமும்
பொற்பு லாவும்



வல்லன்ன கொங்கை வனமாலையும்
ஆக வாயில்
பல்லென்னு முல்லைகிரை கொண்டொரு
பாவை சென்றாள்.

இவள்தான் ஆரனவல்லி, திருமால் அடியவள்.

வில்லார் நுதலில் திரிபுண்டர
வெள்ளை நீறும்
அல்லார் குழல்மேல் அணிகொன்
றையும் அக்குமாலை
புல்லார் வளர்பொன் முலையும்
பொலிவாக இன்பச்
செல்லார் அமுதன் னவள்ஒர்தனித்
தோகை போனாள்.

இவள்தான் ஆகமவல்லி, சிவன் அடியவள்.

இம்மான் அனையார் இருவோர்களும்
மேலி யான்முன்
அம்மாள் அரனைப் புகழ்கின்றவர்
ஆக நாட்டும்
செம்மா தளைநேர் நகைஆர
ணச்செல்வ மாதும்
மைம்மா முகில்நேர் குழல்ஆகம
வல்லி ஆகும்.
இப்பாடலில் இருவரும் சொல்லப் பெறுகின்றனர்.

போகும்போது ஆரணி (வேதவதி நதி தீர்த்தத்தில் நீராடிக் கரையேறி இருவரும் தங்கள் தங்கள் தெய்வத்தைத் துதிக்கின்றனர். ஆகமவல்லி நம முக்கணனே நமவே என ஐந்து பாடல்கள் பாடுகின்றாள். 

ஆல மரத்தை அடக்கிய வித்தென
அண்ட மெலாம் எளிதில்
சால அடக்கி அளிப்பவ னேதிகழ்
சந்திர சேகரனே
மால்அய னுக்கும் அனந்த மறைக்கும்
நல்வான வருக்குமெலாம்
மூலம் எனத்தகு காரண னேநம
முக்கணனே நமவே.

என்பது அவற்றுள் ஒன்று.

ஆரணவல்லி, அரியே பரிபூரண நமவே என்று தானும் ஐந்து பாடல்கள் பாடுகின்றாள்.

அந்தமும் ஆதியும் ஆகிய பேர்ஒளி
ஆம்உனை மாம றையால்
முந்துணர் வோச்சிலர் அல்லது
மாறுகொள் மோகன நூல்வழிநீ
தந்த பெருஞ்சம யங்களை யேபர
தத்து வம்என் றுணர
புத்தி மயக்கிடும் அச்சுத னே,பரி
பூர ணனே நமவே.

என்பது அவற்றுள் ஒன்று.


அப்போது ஆகமவல்லி, நீ சொல்லியது புதுமையாயிருக்கிறது. எங்கள் தெய்வமே பழம் பொருள் என்று சொல்ல, இருவரும் வாதம் செய்கின்றனர். அங்குள்ள யோகியர், அந்தணர், பாகவதர், பாசுபதத்தார் ஆகிய அனைவரையும் கூட்டி அவர்கள் முன் தங்கள் வாதங்களை வைக்கின்றனர். இதுவரையில் பாயிர காண்டம், பதிகம் என்று பிற நூல்கள் சொல்லும் பகுதியை இவர் விடயத்திறப் படலம்’ என்று கூறுவார்.

ஒரியல்பைக் குறிப்பிடலாம். பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் விளிக்கும்போது அழகான தொடர்களைச் சொல்லியே விளிக்கின்றனர். அரும்பிய கொங்கை நல்லாய், திங்கள் நேர் முகத்துச் சிவாகமவல்லிகேள், ஏலவார் குழலாகமப் பெண்ணே, கங்குநிறப் பொங்குகுழற் கலகவிழிச் சிலைநுதலாகமப் பூங்கோதாய், வாளொன்று கண்ணாரணவல்லி, அன்னநடையாய், பஞ்சழுத்து மெல்லடியாய், தாமஞ்சேர் கருங்குழலாய், இக்குமொழியாய், தாமமணியும் கருங்குழற் கோதாய், என்றுள்ள தொடர்களைக் கண்டு மகிழலாம்.

வேதம் 4, வேதாந்தம் 32, சாத்துவிக தர்மசாத்திரம் 6, இராசத தரும சாத்திரம் 6, தாமத தரும சாத்திரம் 6, உபபுராணம் 18, உபஸ்மிருதி 18, சங்கிதை 108,நூல் பாஞ்சராத்திரம் வைகானசம் என 2. இராகவ காதை பாரத காதை, பரதம், வாகடம், சோதிடம், தரிசனம் 6, மதம் 6, சமயம் 6, சைவாகமம் 28, பிற சாத்திரங்கள் என நூற் பெயர்கள் இங்கு மிக விரிவாய்ச் சொல்லியிருப்பதைக் காணலாம்.

இரண்டாம் காண்டமாகிய பூர்வ காண்டம் என்பது ஏழு படலமுடையது. முதலாவது உலக வழக்கப் படலத்தில் சைவ நாயன்மார் அறுபத்து மூவரானால் வைணவத்தில் ஆழ்வார் பதின்மருடன் எழுநூற்று எழுபதின்மர் உள்ளனர் என்கின்றாள். ஊரின் மேற்கில் திருமால் ஆலயம் இருப்பதை ஆகமவல்லி சுட்டிக்காட்ட அதற்கு மற்றவள் அநேக சிற்பசாத்திரச் சான்றுகளைக் காட்டி அரன் திருமால் கோயிலுக்குப் பரிவார தேவதை என்பதை அரிவாசபுரத்திலும் காணலாம் என்கிறாள்.இரண்டாம் படலம் அண்ணாமலை ஆழிமலை என்று கூறுவர். மூன்றாவது சங்கரனுக்குப் பல முனிவர் சாபம் சூழ்ந்தது என்றும், நான்காவது தக்கன் யாக அழிவும், ஐந்தாவது சர்வசங்காரப் பொருள் அரியே என்றும் கூறுகின்றன. ஆறாவது 'வரபாலனப் படலம்’ என்பது காசியைக் காபாலிக்குத் திருமால் கொடுத்தார் என்பது முதலான கதைகளைச் சொல்வது. ஏழாவது படலம் திருநீறு, உருத்திராக்கம், சிவபூசை முதலியவற்றின் சிறப்பை ஆகமவல்லி கூறுவதாக நிறைவு பெறுகின்றது.

மூன்றாவது உத்தர காண்டத்தின் இரு படலங்கள் மேற்கூறப் பெற்ற அனைத்தையும் மறுக்கின்றன. அடுத்த இரு படலங்களும் விஷ்ணு பூசையே பூசை என்று புகன்று சிவ பூசையைக் கண்டிக்கின்றன.

நான்காவது வேத பரமார்த்த காண்டம் என்பது. இதில் முதலில் பரமார்த்தப் பொருளை விரித்துக் கூறி அப்பொருள் திருமாலே என்று அறுதியிடுகின்றது. இரண்டாவது உபாசனை முழுமையும் திருமாலுக்கே உரியது என்கிறது. மூன்றாவது படைப்பு முழுவதும் திருமாலுக்கே உரியது என்று உரைக்கின்றது. சிவனுக்குப் பல பிறப்புகள் உள்ளன. திருமாலே பிறப்பிலி என்று முடிகிறது. நான்காவது காக்கின்ற திருவருள் திருமாலே என்றும், சர்வ அந்தர்யாமியும், காயத்திரிப் பொருளும் திருமாலே என்றும் சாற்றுகின்றது. ஐந்தாவது அனைத்து வேள்விகளுக்கும் தலைவன் முகுந்தனே என்று முடிக்கிறது. இறுதியான படலம் அனந்த வேதங்களும் நாராயணனே பரம் என்று சாதிப்பதைப் புகலவும், ஆகமவல்லி அம்முடிவுக்கு இசைவு தெரிவிக்கின்றாள் என்பதோடு நூலும் நிறைவு பெறுகின்றது.

உலகத்தில் வாதம் செய்வோரிடம் காணப்பெறும் இயல்புகள் இங்குக் காணப்பெறும். தனக்கு ஏற்றதெல்லாம் சரி, மற்றதெல்லாம் பிழை, அசத்தியம் என்று பிடிவாதம் பிடிப்பது உலக வழக்கு. அந்த வழக்கை இங்கும் காணலாம். வியாசர் காசிச் சேத்திரத்தில் தமது வலக்கையை நீட்டி, நாராயணனே பரம்பொருள் என்று முக்காலும் சத்தியம் என்று சாதித்தார். இதனைப் பிரமாண்ட புராணமும் பாரதமும் மற்றெல்லா நூல்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றன.

வையகத் தெவரும் கண்டுதே றத்தன்
வலக்கையை வானுற நீட்டி
ஐயமற் றிடுசொ லாவது முக்கா
லாவதும் சத்தியம் இதுவே
மெய்யுரைச் சுருதி தன்னிலும் பெரிதாய்
விளங்குசாத் திரங்களும் இல்லை
செய்யகே சவனுக் கதிகமாய் நின்ற
தெய்வமும் இல்லையென் றிசைத்தார்.

என்ற பாடலில் இதனைக் காணலாம். இதனைக் கேட்ட ஆகமவல்லி மெல்ல ஒரு சொல்லை மறுப்பாகச் சொன்னாள். அப்படி சொன்ன வியாசருக்கு நீட்டிய கை மடங்காமல் நின்றதேன்?' இவ்வாறு கேட்டவுடனே ஆரணவல்லிக்குக் கோபம் அதிகமாய் வந்து விடுகின்றது.

வேதமா மடந்தாய், அப்படிப் பகர்ந்த
வியாசருக்கு அவ்வியா சத்தால்
ஏத றும்புயத் தம்பளம் விளைந்ததென்
றுலகினில் உரைப்ப தேன்? என்னச்
சீதளக் குமுதச் செவ்விதழ் மேனித்
திலம்பதித் தெனக்கையும் சிறப்பக்
கோதறு சைவாகம மடந்தை யுடன்
குளிர்மறைக் கோமளம் கூறும்.

என்பதால் இதனைக் காணலாம். இத்தனையும் பொறாமையினால் சொல்லுவது; கைமடங்காமை சொல்லும் கதை அசாத்தியமே.

மங்குல்நேர் குழலாய், சிவசம யத்தோர்
மாச்சரி யத்தினாற் சூத
சங்கை யென்றோர் கற்பனா கதையைச்
சாற்றிய தன்மையே போல,
இங்கிது தனையும் பொறாமையி னாலே
இயம்புகின் றார்களத் தனையே,
அங்கு தெப்படியே யென்னில், உன்மனமொப்
பாமெனும் படிவிளம் பக்கேள்:

மெய்ப்பொருள் மறைகொண் டரிபரத் துவம்நான்
விளம்பியே வருகையி னாலும்,
இப்பொருள் தனையே முன்னமே வியாதர்
இயம்பிய தாகையி னாலும்,
அப்பெயர் வியாதர் மறையெலாம் பிரித்து
ஆராய்ந்தவ ராகையி னாலும்,



செப்பிய புயத்தம் பணமவ ரிடத்திற்
செறிந்ததே யெனல்அசத் தியமே.

என்ற பாடல்களால் இதனைத் தெளியலாம். வாதங்களின் போக்குக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. இதையும் கூறுபவர் அரிதாசரே. தன் கட்சியொன்றே சரி, பிறர் என்ன சொன்னாலும் பிழை, அசத்தியம் என்பதே திருமாலடியாளான ஆரணவல்லியின் வாதம்.

இதுபற்றி அதிகம் விவரிக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை.இந்த 20-21ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்க நாகரிகத்தின் மோதுதலால் சில விபரீதமான வாதங்கள் நிகழக் காண்கின்றோம். கும்பகர்ணன் பெரியவனா ? வீடணன் பெரியவனா? பரதன் பெரியவனா? இலக்குவன் பெரியவனா? என்பன போன்ற வாதங்கள் எழுகின்றன. இவை யாவும் வீண் விதண்டாவாதங்களேயன்றி உண்மையான வாதங்கள் ஆகா. இவையொத்த இவ்விதண்டா வாதத்தைச் செய்கின்றார் அரிதாசர் என்றே நமக்குத் தோன்றுகின்றது. அருளாளர்கள் மன்பதை உய்யும் பொருட்டு அவ்வப்போது தோன்றி வருகின்ற சமயத் தத்துவங்கள் பற்றியோ அவர்களால் படைக்கப்பெற்ற கடவுளர்கள்பற்றியோ வாதங்கள் எழுப்புவது உசிதம் அன்று. இக்காலத்தில் நடைபெற்று வரும் விதண்டாவாதப் பட்டிமன்றத்தை 16-ஆம் நூற்றாண்டில் அரிதாசர் மிகவும் விரிவாக நடத்திக் காட்டுகின்றார் என்று கூறுவதோடு நாம் இதனை விட்டு விடுவோம்.

நூலில் சிறப்பாகச் சொல்லத்தக்கவாறு கவிதை அமைய வில்லை. பாடல்கள் தொட்ட இடம் எல்லாம் உரைநடையையொத்த 'வெள்ளைப் பாட்டாகவே உள்ளன. கவிதைச் சிறப்பினை எங்கும் காண்பதற்கில்லை. இரண்டு எடுத்துக்காட்டுகள்: கண்ணனார் கயிலாய யாத்திரையில் துவாரகைக் காவலரை நோக்கி "திண்ணிய மற்புயமரபீர், திரும்பி நான்வருமளவும், திகிரிசங்கம் கண்ணின தோளினரை அல்லால் நகர்புகுதல் ஒழித்தீர்” என நவின்றமாற்றம், மண்ணுலகில் பஞ்சம வேதப் பொருளாம். அரிவம்சம் அதனில் கூறும். "என்னுடைய பக்தர்களுக்கு இருபுயத்தில் சங்காழி எழுதல் வேண்டும், அன்னிய தேவதைகள் தமது ஆலயத்தில் புகல்வாரை அஞ்சலித்தல், பின்னர் அவர் தமைப் புகழ்தல், தவிர்த்திடலும் வேண்டும்” எனப் பீதகவாடைப் பன்னக மாசயனத்தோன் பார்த்தனுக்குச் சொன்னது பாரதத்தில் கூறும். ஒரு பாட்டு இரண்டு பாட்டல்ல-நூல் முழுதும் பக்கம் பக்கமாக இப்படியே உள்ளது. பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைப் பயிற்சி போன்றது. மின்வெட்டு போன்ற கவிதைகள் மருந்துக்குக்கூட இங்கு காணப்படாது போயினும் ஆற்றொழுக்கு போன்ற நல்ல உரைநடையைக் காண்கின்றோம். ஆயினும் அரிதாசரின் நல்ல சமயத் தொண்டாக இது திகழ்கின்றது.

காலம்: அரிதாசர் காலம் கிருட்டிண தேவராயர் காலமே (1497-1540) என்பது அவர் சரித வரலாற்றால் நன்கு விளங்கும். இவர் தமையனாரான வடமலையண்ணனைக் குறிப்பிடும் சாசனங்கள் 1514, 1523 முதலான ஆண்டுகளில் எழுந்தன. தமையனை இவர் தம் நூலுள்ளும் குறிப்பிடுகின்றார். ஆதலால் இவர் காலம் இக்குறிப்புகளுக்குப் பொருத்தமானது (1500-25 என்று கொள்வது பொருந்தும்.


  1. 30 சூடிக்கொடுத்தவள் வரலாறு. இது தெலுங்கில் கிருட்டிண தேவராயர் செய்தது.இதைப் பன்மொழிப்புலவர் மு.கு. ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து ஐதரபாத் தெலுங்குப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தெலுங்கு மூலமும் தமிழ் எழுத்தில் தரப் பெற்றுள்ளது.
  2. 32 சாசன தமிழ்க் கவி சரிதம்- பக். 146.