பெருங்கதை/1 0 முன்கதை

(1 0 முன்கதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உ.வே. சாமிநாதையர் வடமொழி நூல்களிலிருந்து தொகுத்து எழுதியவை
மொழிநடை - செங்கைப் பொதுவன்
குறிப்பு
இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார். அதன் கருத்து இங்குத் தரப்படுகிறது.

முன்னோர்

தொகு

சம்புத்தீவு என்பது உலகம். சுதர்சனம் என்பது சங்குநிற வெள்ளிமலை. அதன் தெற்கில் உள்ளது பாரத கண்டம். அதில் வத்தவ நாடு. அதன் தலைநகர் கௌணம்பி. அதன் அரசன் சதானிகன். அவன் குருகுலத்தவன். சேதி நாட்டு அரசன் சேடகன். அவன் ஏயர் குலத்தவன். இவன் மகள் மிருகாபதி. சதானிகன் மிருகாபதியை மணந்துகொண்டான். மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தான்.

வேனில் காலத்தில் மேகம் தோன்றி மறைவதைச் சேடகன் பார்த்துக்கொண்டிருந்தான். வாழ்க்கை நிலையாமையை எண்ணினான். துறவு மேற்கொள்ள விரும்பினான். அவனுக்கு ஆண்மக்கள் பத்து பேர். மூத்தவன் தனமித்திரன். அவனை அழைத்து, தன் விருப்பத்தைத் தெரிவித்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான்.

அவன் தானும் துறவு பூண விரும்புவதைக் கூறி, ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள மறுத்திவிட்டான். சேடகன் அடுத்த தன் மகன்களை அழைத்து வேண்டியபோது எட்டுப் பிள்ளைகள் தம் அண்ணனைப் போலவே மறுத்துவிட்டனர். எனவே கடைசி மகன் விக்கிரன் என்பவனை அழைத்துக் கட்டாயப்படுத்தி ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்குச் சென்றான்.

விபுலம் என்னும் மலைச்சாரலில் ஆலங்கானம் என்னும் காட்டில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்ரீதரன் என்னும் முனிவனிடம் சென்று அருள் பெற்று தவம் மேற்கொண்டான். மகன்கள் ஒன்பது பேரும் தந்தை வழியைப் பின்பற்றினர்.

வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த விக்கிரன் செய்தியைத் தன் தங்கைக்கும் மைத்துனன் சதானிகனுக்கும் தெரியப்படுத்தினான். சதானிகன் வியந்தான். மிருகாபதி மயக்கமுற்றாள். சதானிகன் தெளிவித்து, ஆற்றுவித்து அன்புடன் மனைவியைப் போற்றிவந்தான்.

பிறப்பு

தொகு

மிருகாபதி கருவுற்றாள். ஒருநாள் நிலாமுற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவளும் அவளது தோழிமாரும் சிவப்புநிற ஆடை அணிந்திருந்தனர். சிவந்த அணிகலன்களும், சாதிலிங்கம் முதலான சிவந்த மணப்பொருள்களும் அங்குச் சிதறிக் கிடந்தன. அவள் செந்நிறப் பட்டாடை போர்த்தியிருந்தாள்.

அப்போது அவ்வழியே பறந்துவந்த சரபம் என்னும் பறவை தனக்கு இரை கிடைத்துவிட்டதாக எண்ணி அவளைத் தூக்கிச் சென்றது. விபுலமலைச் சாரலில் வைத்து உண்ணத் தொடங்கியது. அப்போது மிருகாபதி விழித்துக்கொண்டாள். அதைக் கண்ட அந்தப் பிணம் தின்னும் பறவை தன் இரை உயிரோடு இருப்பதைப் பார்த்துவிட்டு உண்ணாமல் பறந்து சென்றுவிட்டது.

புதிய இடத்தைக் கண்ட மிருகாபதி திகைத்தாள். அப்போது அவளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. குழந்தையைக் கண்டு மகிழ்ந்தாள். சூழலை நினைத்துப் புலம்பினாள். சேடக முனிவர் அவ்வழியே வந்தார். புலம்பல் ஒலியைக் கோட்டார். சென்று பார்த்தார். ஞானக்கண்ணால் தன் மகள் என உணர்ந்துகொண்டார். தன் பன்னசாலைக்கு அழைத்துச்சென்று பாதுகாத்துவந்தார். மிருகாபதியும் தன் தந்தை பாதுகாப்பில் உள்ளதை அறிந்து மகிந்தாள்.

பிரமசுந்தர முனிவர் அங்குள்ள முனிவர்களுக்குத் தலைவர். பரமசுந்தரி அவரது மனைவி. சேடகன் தன் மகளையும் போரனையும் அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்களும் அவர்களைப் பேரன்புடன் பாதுகாத்துவந்தனர்.

சூரியன் உதிக்கும் காலத்தில் பிறந்தமையால் அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பாட்டன் சேடகன் பெயர் சூட்டினான். குழந்தை அழகிலும் அறிவிலும் கல்விகெள்விகளிலும், கலைத்திறத்திலும், போருத்திறத்திலும் சிறப்புற்று விளங்கியமையால் அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் உதயணனைப் பெரிதும் போற்றிவந்தனர்.

கோடபதி என்னும் யாழ் பெற்றது

தொகு

ஒருநாள் பிரமசுந்தர முனிவர் மந்திரம் ஒன்றை உதயணனுக்குக் கற்பித்தார். அது சினம் கொண்ட யானையை அடக்கி ஆளும் மந்திரம். இசையும் கற்பித்தார். உதயணன் இசையில் சிறந்து விளங்கினான். முனிவர் மகிழ்ந்தார். பிரமசுந்தர முனிவருக்கு இந்திரன் முன்பொரு காலத்தில் தன் யாழை வழங்கியிருந்தான். அந்த யாழை முனிவர் உதயணனுக்கு வழங்கினார்.

யூகி, உயிர்துணைவன் ஆனது

தொகு

ஒருநாள் உதயணன் காட்டில் அந்தக் கோடபதி யாழை மீட்டினான். யானைகளும், பறவை முதலானவும் வந்து குழுமி அவனது யாழிசையில் மயங்கி அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்தன. இதனைக் கண்ட முனிவர் அந்த யாழை உதயணனுக்கே வழங்கிதோடு தன் மகன் 'யூகி' என்பவனையும் அவனுக்கே அடைக்கலாமாக்கித் தந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/1_0_முன்கதை&oldid=28256" இலிருந்து மீள்விக்கப்பட்டது