பெருங்கதை/1 51 நருமதை கடந்தது

(1 51 நருமதை கடந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

1 51 நருமதை கடந்தது

எய்தி யிகந்த வியற்றமை யிரும்பிடி
கொய்பூங் குறிஞ்சிக் கொழுநிலங் கைவிட்
டைந்நான் கெல்லையோ டாறைத் தகன்றபின்

நருமதை வருணனை

தொகு

மதிய முரைஞ்சு மால்வரைச் சென்னிப்
பொதியவிழ் பூமரம் பொதுளிய சோலை 5
அகலத் தெல்லையு மாழ்ச்சிய தந்தமும்
உயர்பி னோக்கமு முணர்த்தற் காகா
விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிளந்து
கல்லுட் பிறந்த கழுவாக் கதிர்மணி
மண்ணுட் பிறந்த மாசறு பசும்பொன் 10
வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம்
வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்
மருப்பினுட் பிறந்த மண்ணா முத்தம்
வரையிற் பிறந்த வயிரமொடு வரன்றி
நுரையுட் பிறந்த நொ….. லாடை 15
முடந்தாட் பலவின் குடம்புரை யமிழ்தமும்
நெடுந்தாண் மாவி னெய்படு கனியும்
கருந்தாள் வாழைப் பெருங்குலைப் பழனும்
பெருந்தேன் றொடையலும் விரைந்துகொண் டளைஇ
நறவஞ் சாரற் குறவர் பரீஇய 20
ஐவன நெல்லுங் கைவளர் கரும்பும்
கருந்தினைக் குரலும் பெருந்தினைப் பிறங்கலும்
பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும்
நாகத் தல்லியு மேலத் திணரும்
கட்சா லேகமு முட்கா ழகிலும் 25
குங்குமத் தாதும் பைங்கறிப் பழனும்
கிழங்கு மஞ்சளுங் கொழுங்காற் றகரமும்
கடுப்படு கனியுங் காழ்த்திப் பிலியும்
சிற்றிலை நெல்லிச் சிறுகாய்த் துணரும்
அரக்கின் கோலொ டன்னவை பிறவும் 30
ஒருப்படுத் தொழியாது விருப்பி னேந்தி
மலைவயிற் பிறந்த மாண்புறு பெருங்கலம்
நிலைவயின் வாழ்நர்க்குத் தலைவயி னுய்க்கும்
பகர்விலை மாந்தரி னுகர்கொரு ளடக்கிப்
பன்மலைப் பிறந தண்ணிற வருவிய 35
அமலை யருங்கல மடக்குபு தழீஇத்
தன்னிற் கூட்டிய தானைச் செலவமொ
டிருகரை மருங்கினும் பெருகுபு தழீஇ

மரங்கள்

தொகு

அணிக்குருக் கத்தியு மதிரலு மனுக்கி
மணிச்சையு மயிலையு மௌவலு மயக்கி 40
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கிக்
குருந்துங் கொன்றையும் வருந்த வணக்கித்
தடவும் பிடவுந் தாழச் சாய்த்து
முளவு முருக்கு முருங்க வொற்றி
மாவும் மருதும் வேரறப் புய்த்துச் 45
சேவுங் குரவுஞ் சினைபிளந் தளைந்து
நறையு நாகமு முறைநடு முருக்கி
வழையும் வாழையுங் கழையுங் கால்கீண்
டாலு மரசுங் காலொடு துளக்கிப்
புன்கு நாவலும் புரள வெற்றிக் 50
கொங்கார் கோடலொடு கொய்யல் குழைஇ
அனிச்சமு மசோகமு மடர வலைத்துப்
பனிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து
வள்ளியு மரலுந் தன்வழி வணக்கிப்

விலங்கு முதலியன

தொகு

புள்ளி மானும் புல்வாய்த் தொகுதியும் 55
ஆமா வினமுந் தாமா றோடி
இடைப்புனற் பட்டவை யுடைப்புனற் கிவரப்
பொறிமயிற் பேடை போத்தொடு புலம்ப
எறிமயி ரேனமொ டெண்கின மிரியக்
குரங்கு முசுவு மரந்தொறும் வாவச் 60
கரும்புந் தும்பியும் விரும்புபு விரைய
அகத்துறை பல்லுநி ரச்ச மெய்தப்
புறத்துறை பல்லுயிர் புகன்றுவிளை யாடப்
படிவப் பள்ளியொடு பாக்கங் கவர்ந்து
குடிகெழு வளநாடு கொள்ளை கொண்டு 65
கவ்வை யோதல் கால்கிளர்ந் துராஅய்ப்
பௌவம் புகூஉம் படர்ச்சித் தாகிக்
கருங்காற் குருகுங் கம்புளுங் கழுமிப்
பெரும்பூட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும்
குளிவையும் புதாவுந் தெளிகயக் கோழியும் 70
அன்றிலு நாரையுந் துன்றுபு கெழீஇ
வாளையும் வராலு நாளிரை யாக
அயிரையும் பிறவு மல்கிரை யமைத்துப்
பறவைப் பார்ப்பினஞ் சிறுமீன் செகுத்து
வார்மண லடைகரைப் பார்வலொடு வதியும் 75
சும்மை யறாஅத் தன்மைத் தாகிக்
கயம்பல கெழீஇ யியங்குதுறை சில்கிப்
பெருமத யானையொடு பிடியினம் பிளிற்றும்
நருமதைப் பெர்யாறு நண்ணிய பொழுதில்

வயந்தகன் வழிகாட்டல்

தொகு

தலைப்பெருந் தண்புன றான்வந் தன்றென 80
நிலைப்பரு நீணீர் நீத்திற் றாகி
மாக்கடல் வரைப்பின் மன்னுயிர்க் கியன்ற
ஆக்கமுங் கேடுஞ் சாற்றிய தொப்ப
வளமலர்ப் பைந்தார் வயந்தக னிழிதந்
திளமணற் படாஅ தியங்குதுறை நோக்கிக் 85
கானிலை கொள்வுழித் தானிலை காட்ட

உதயணன் செயல்

தொகு

அரிமதர் மழைக்க ணனந்த ரெய்திய
திருமா மேனியைத் திண்ணிதிற் றழீஇச்
செல்விசை கதுமெனச் சுருக்கி மெல்லென
வரையே றரிமாப் போல மற்றதன் 90
கரையே றினனாற் கார்நீர் கடந்தென்.

1 51 நருமதை கடந்தது முற்றிற்று.