பெருங்கதை/2 16 ஊடல் உணர்த்தியது

(2 16 ஊடல் உணர்த்தியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 16 ஊடலுணர்த்தியது

உதயணன் விரிசிகையை விடுத்தல்

தொகு

புனைமலர்ப் பிணையல் புரவலன் சூட்டி
இனமடற் பெண்ணை யீர்ந்தோடு திருத்திச்
செல்க நங்கை மெல்ல நடந்தென
அடுத்த காதலொ டண்ணல் விடுப்ப

வாசவதத்தை காணுதலும் ஊடுதலும்

தொகு

வேண்டிடத் தாடும் விருப்புறு நீக்கம் 5
யாண்டுகழிந் தன்ன வார்வ மூர்தரத்
தழையுங் கண்ணியும் விழைவன வேந்திப்
பொற்பூங் கிண்கிணி புறவடிப் பிறழ
நற்பூங் கொம்பர் நடைபெற் றாங்குக்
கவவுறு காதலிற் கண்ணுற வரீஉம் 10
உவவுறு மதிமுகத் தொளிவளை முன்கைக்
கண்ணார் கனங்குழை கதுமெனக் கண்டே
மண்ணார் மார்வன மாதரைச் சூட்டிய
காமர் பிணையற் கதுப்பணி கனற்றத்
தாமரை யன்னதன் றகைமுக மழுங்கா 15
ஓடரி சிதரிய வொள்ளரி மழைக்கண்
ஊடெரி யுமிழு மொளியே போலச்
சிவப்புள் ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ
நயப்புள் ளுறுத்த வேட்கை நாணி
உருத்தரி வெம்பனி யூழூழ் சிதரி 20
விருப்புமறைத் தடக்கி வேக நோக்கமொடு
பனிப்பிறை யழித்த படிமைத் தாகிய
அணித்தகு சிறுநுத லழன்றுவிய ரிழிய
உருவ வானத் தொளிபெறக் குலாஅய
திருவி லன்ன சென்றேந்து புருவம் 25
முரிவொடு புரிந்த முறைமையிற் றுளங்க
இன்பம் பொதிந்த வேந்தணி வனமுலை
குங்குமக் கொடியொடு குலாஅய்க் கிடந்த
பூந்தா தொழுக்கஞ் சாந்தொடு திமிர்ந்து
தளிர்ப்பூங் கண்ணியுந் தழையும் வீசியிட் 30
னொளிப்பூந் தாம முள்பரிந்து சிதறி
முழுநீர்ப் பொய்கையுட் பொழுதொடு விரிந்த
செழுமலர்த் தாமரைச் செவ்விப் பைந்தாது
வைக லாதா வந்தக் கடைத்தும்
எவ்வந் தீராது நெய்தற் கவாவும் 35
வண்டே யனையர் மைந்த ரென்பது
பண்டே யுரைத்த பழமொழி மெய்யாக்
கண்டே னொழிகினிக் காமக் கலப்பெனப்
பிறப்பிடைக் கொண்டுஞ் சிறப்பொடு பெருகி
நெஞ்சிற் பின்னி நீங்கல் செல்லா 40
அன்பிற் கொண்ட வார்வ வேகமொடு
நச்சுயிர்ப் பளைஇ நண்ணல் செல்லாள்
கச்சத் தானை காவலன் மடமகள்
பெருமகன் மார்பிற் பிரியா துறையுமோர்
திருமக ளுளளெனச் செவியிற் கேட்பினும் 45
கதுமெனப் பொறாஅ ளாதலிற் கண்கூ
டதுவவட் கண்டகத் தறாஅ வழற்சியிற்
றற்புடை சார்ந்த தவமுது மகளையும்
கைப்புடை நின்ற காஞ்சனை தன்னையும்
அற்பிடை யறாஅ வெந்தை யணிநகர் 50
உய்த்தனிர் கொடுமினென் றூழடி யொதுங்கிச்
சிதர்மல ரணிந்து செந்தளி ரொழுகிய
புதுமலர்ச் சோலையுட் புலந்தவ ளகல

காஞ்சனை முதலியோர் செயல்

தொகு

அகலு மாதரை யன்பிற் கெழீஇக்
கலையுணர் கணவனொடு காஞ்சனை பிற்படக் 55
கண்ணிற் காட்டிக் காம வெகுளி
நண்ணின் மற்றிது நயந்துவழி யோடி
மாசறக் கழீஇ மனத்திடை யாநோய்
ஆரா வாய்முத் தார்த்தி னல்லது
தீரா துயிர்க்கெனத் தெளிவு முந்துறீஇ 60
ஊராண் குறிப்பினொ டொருவயி னொதுங்கும்
தன்னமர் மகளொடு தாய்முன் னியங்க

உதயணன் செயல்

தொகு

நறவிளை தேற லுறுபிணி போலப்
பிறிதிற் றீராப் பெற்றி நோக்கிக்
குறிப்புவயின் வாரா ளாயினுங் கூடிப் 65
பொறிப்பூ ணாகத்துப் புல்லுவன னொடுங்கி
அருமைக் காலத் தகலா நின்ற
திருமகட் பரவு மொருமகன் போல
உரிமைத் தேவி யுள்ளக நெகிழும்
வழிமொழிக் கட்டளை வழிவழி யளைஇ 70
முடியணி திருத்தியு முலைமுதல் வருடியும்
அடிமிசைக் கிண்கிணி யடைதுக ளகற்றியும்
கதுப்பணி புனைந்துங் கதிர்வளை யேற்றியும்
மதுக்களி கொண்ட மதரரி நெடுங்கட்
கடைத்துளி துடைத்துங் கடிப்புப்பெயர்த் தணிந்தும் 75
புதுத்தளிர் கொடுத்தும் பூம்புற நீவியும்
ஞெயிரிடை யிட்டிது சிறக்குவ தாயின்
உயிரிடை யிட்ட வுறுகண் டருமெனத்
தன்னுயிர்க் கணவ னுண்ணெகிழ்ந் துரைக்க
அம்மொழி கேளா தசைந்த மாதரை 80
அருவி யரற்றிசை யணிமுழ வாகக்
கருவிரன் மந்தி பாடக் கடுவன்
குரவை யயருங் குன்றச் சாரற்
றுகிலிணைப் பொலிந்த பகலணைப் பள்ளியுள்
முகிழ்ந்தேந் திளமுலை முத்தொடு முழீஇத் 85
திகழ்ந்தேந் தகலத்துச் செஞ்சாந்து சிதையப்

வாசவதத்தை உரைத்தல்

தொகு

பூண்வடுப் பொறிப்பப் புல்லுவயின் வாராள்
நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள்
காம வேக முள்ளங் கனற்றத்
ராமரைத் தடக்கையிற் றாமம் பிணைஇ 90
ஆத்த வன்பி னரும்பெறற் காதலிக்
கீத்தது மமையாய் பூத்த கொம்பின்
ஆவாவுறு நெஞ்சமொடு கவான்முத லிரீஇத்
தெரிமலர்க் கோதை திகழச் சூட்டி
அரிமலர்க் கண்ணிநின் னகத்தன ளாக 95
அருளினீ விழைந்த மருளி னோக்கின்
மாதரை யாமுங் காதலெம் பெரும
பொம்மென் முலையொடு பொற்பூ ணெருங்க
விம்ம முறுமவள் வேண்டா முயக்கெனப்
பண்ணெகிழ் பாடலிற் பழத்திடைத் தேன்போல் 100
உண்ணெகிழ்ந்து கலவா வூடற் செவ்வியுள்

ஒரு முசுக்கலையின் செயல்

தொகு

தாழ்வரை யடுக்கத்துத் தளிர்சேர் தேமரத்
தூழுறு தீங்கனி யுண்ணா விருத்தலின்
இவறினை நீயெனத் தவறு முந்துறீஇ
இனப்பெருந் தலைமக னாணையி னாட்டித் 105
தனக்கரண் காணாது தடவரைத் தத்திப்
பெருமகன் கோயிற் றிருமுற் பாய்ந்தெனக்
கரணீ யருளென் றடைவது போன்றோர்
கருமுக முசுக்கலை கதுமெனத் தோன்ற

வாசவதத்தை நடுங்கி ஊடல் தீர்தல்

தொகு

இன்னதென் றுணரா நன்னுத னடுங்கி 110
அழல்கதிர் பரப்பி யுழல்சேர் வட்டமொடு
நிழலவிர் கதிர்மதி நிரந்துநின் றாங்குத்
திலகத் திருமுகஞ் செவ்வன் றிருத்தி
ஒழுகுகொடி மருங்கு லொன்றா யொட்டி
மெழுகுசெய் பாவையின் மெல்லிய லசைந்து 115
மன்னவன் மார்பின் மின்னென வொடுங்கி
அச்ச முயக்க நச்சுவனள் விரும்பி
அமிழ்துபடு போகத் தற்புவலைப் படுத்த

உதயணன் செயல்

தொகு

மாதரை மணந்த தார்கெழு வேந்தன்
வழித்தொழிற் கரும மனத்தி லெண்ணான் 120
விழுத்தகு மாதரொடு விளையாட்டு விரும்பிக்
கழிக்குவனன் மாதோ கானத் தினிதென்.

2 16 ஊடலுணர்த்தியது முற்றிற்று.