பெருங்கதை/2 5 மண்ணுநீர் ஆட்டியது

(2 5 மண்ணுநீர் ஆட்டியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 5 மண்ணுநீராட்டியது

உதயணன் கூற்று தொகு

மயிர்வினைக் கம்ம மரபுளி முடித்தபின்
வயிரக் கொடுங்குழை வார்ந்த காதிற்
பெருமக னாடும் பீடுகெழு சிறப்பிற்
றிருமண்ணு நறுநீர் விரைவதின் வருகென
உருமண்ணு வாவொடு வயந்தகற் குரைப்ப 5

நீர்க்குடம் செல்லுஞ்சிறப்பு தொகு

ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்
மன்பெருஞ் சுற்றமும் வம்ப மாந்தரும்
நிலையிடம் பெறாஅர் நெருங்குபு செற்றித்
தலையிட மருங்கிற் றமனியத் தண்குடம்
ஆயிரத் தோரெட் டணிமலர் வாய 10
முத்துத் தாமமொடு பொற்புரி யணிந்து
வித்தகர் புனைந்த சித்திர நெடுங்குடை
எண்ணறுங் கோலமொடு கண்ணுறக் கவிப்பக்
காரிகை வனப்பிற் கன்னி மகளிர்
சீர்கெழு மெல்விரல் செறியப் பற்றி 15
இடுமணி யானை யிரும்புறத் திருப்பப்
படுகண் முழவொடு பல்லியங் கறங்க
ஏம முரச மிழுமெனச் சிலைப்பக்
காமர் சங்கம் வாய்வதின் முழங்க
வரித்த பூங்கொடி விரத்துவிசும் பிவரப் 20
பத்திரப் படாகை பலவயி னுடங்கச்
சாதிங் குலிகமொடு சமர மொழுகிய
மேதகு முளைக்காற் கோதை துயல்வரக்
குத்துமுளை செறித்த வித்தக விதானத்துத்
தண்ணெழி னடுவ ணுண்ணெழி னுனித்த 25

மங்கலங்கள் பதினாறு தொகு

அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
வலம்புரி வட்டமு மிலங்கொளிச் சங்கும்
வெண்கண் ணாடியுஞ் செஞ்சுடர் விளக்கும்
கவரியுங் கயலுந் தவிசுந் திருவும் 30
முரசும் படாகையு மரசிய லாழியும்
ஒண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென்
றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பிற்
கடிமாண் மங்கலங் கதிர்வளை மகளிர்
முடிமிசை யேந்தி முன்னர் நடப்ப 35
வேலும் வாளுங் கோலுங் கொண்ட
காவ லிளையர் காவல் கொள்ள

மஞ்சனநீர் எடுத்தற்கு உரிய குளம் தொகு

மருப்புநிலைக் கந்தி னிருப்பெழுப் போக்கி
வயவர் காக்கும் வாயிற் செல்வமொடு
கயவர் துன்னாக் கட்டிற் றாகிப் 40
படையமை யிட்டிகைப் பாடமை படுகால்
இடமமைத் தியற்றிய வேந்துநிலைக் கோணத்துக்
கழறுகா லமைத்த கட்கின் வாவியுள்

மஞ்சனநீரெடுத்து வருதல் தொகு

நீழறிகள் தெண்ணீர் நீலஞ் சூழப்
பறவைத் தொழுதிப் பக்க நீக்கி 45
நீறைய முகந்து முறைமையி னேந்தி
ஐஞ்நூற் றிரட்டி யணியிதழ்த் தாமரைச்
செந்நீர்ப் போதொடு செறிய வீக்கிப்
பூஞ்சுமட் டிரீஇப் போற்றுவனர் தந்த
தேங்கமழ் நறுநீர் திறவதிற் பற்றிப் 50
பணைமுர சியம்பும் படைப்பெரு முற்றத்துத்
துணைநலத் தோழர் தூன்னினர் சூழா
மண்ணுநீ ராட்டின் மலைந்தன ராகி
வண்ண மணியும் வயிரமு முத்தும்
இட்டன கொள்ளு முட்டின ராதலின் 55
வான மீனின் வயின்வயி னிமைக்கும்
தானந் தோறுந் தகைபெறக் குழீஇ
வித்தகர் வரித்த சித்திர நகர்வயிற்
பொற்பெரும் படுமணை முத்தொடு விரவிச்
சாலியு முழுந்துங் கால்வழிப் பரப்பிப் 60
பாஅ யமைந்த பின்றைச் சேஎய்ச்
செவ்வியிற் சேர்ந்து சிறப்பொடு வணங்கி
எவ்வழி யோரு மேத்தின ரெதிர்கொள
அவ்வழி யிரீஇய பின்றை மெய்பெறச்

உதயணனுக்கு நெய்யணிதல் தொகு

சங்கினும் பாலினுஞ் சலமில் வாய்மை 65
விழுத்திணைப் பிறந்த வொழுக்குடை மரபினர்
நெய்தலைப் பெய்தற் கெய்திய சிறப்பணி
ஏந்திய சென்னி மாந்தர் கூடி
அறுகைப் புல்லினும் வாகைத் தளிரினும்
நறுநெய் தோய்த்து முறைமுத னீவி 70
நின்னோ ரன்ன நீப்பருங் காதற்
பொன்னணி புலவரொடு செம்மலை யாகிக்
கொற்றங் கொண்டு கோலினி தோச்சென
வெற்ற வெள்வேல் வீரியற் புகழ்ந்து
மடவரன் மாதரை மணம்புரி காதலற் 75
கிடவயி னிருத்தல் கடவ தாதலிற்
றங்கரச் செல்வந் தலைத்தலை தரூஉம்
மங்கல மணைமிசை வெண்டுகில் புதைஇ
இருக்கை திருத்திய பின்றைத் திருத்தகு

மகளிர் வாசவதத்தைக்கு நெய்யணிதல் தொகு

மறுவி றொல்குடி மங்கல மடந்தையர் 80
நறுவெண் சாந்தி னன்னலங் குயிலக்
கொடிபல வெழுதிய கோலத் தோளினர்
முடிமிசை யணிந்த முல்லையங் கோதைக்
கொடுங்குழை திளைக்குங் காதினர் கடுங்கதிர்க்
கலாவம் புதைத்த நிலாவெண் டுகிலினர் 85
நுரைபுரை கலிங்க மொருமுலை புதைப்பத்
திருக்கொடிச் சாலி செம்பொன் வாகையென்
றொருப்படுத் தூழூழ் முறைமையி னேந்தி
நானங் கலந்த நறுநெய் தோய்த்துத்
தானந் தோறுந் தலைமுத லுறீஇக் 90
கொண்டோன் வெட்குங் குறிப்பினை யாகித்
தண்டாப் புலமொடு மகளிரைத் தழீஇத்
திருமனைக் கிழமையி னொரு மீக் கூரிக்
கற்புமேம் படீஇயர் பொற்றொடி பொலிந்தென
நற்பல கிளவி பற்பல பயிற்றி 95
நெய்தலைப் பெய்த பின்றை மெய்வயின்
மென்மையு நேயமு நனமையு நாற்றமும்
ஒருநாட் பூசினு மோரியாண்டு விடாஅத்
திருமா ணுறுப்பிற்குச் சீர்நிறை யமைத்துக்
கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய 100
வாச வெண்ணெய் பூசினர் போற்றி
நூல்வழி நுனித்த நுழைநுண் ணுணர்வினர்
நால்வகைக் கோலத்து நால்வகை மாக்கள்
தாமரை மூய தமனியக் குடநீர்
தாமுறை சொரிந்துதம் முறைமையி னாட்டிச் 105

மகளிர் செயல் தொகு

செய்த கோலஞ் சிதைய மறலிப்
பெய்த னாடிப் பேதையர் பிணங்கி
அத்தி னெறிந்து முத்துப்பரிந் திட்டும்
சித்திர நுண்டுகில் சேர்ந்த வல்குற்
பத்திரப் பல்காசு பரிந்தன ருகுத்தும் 110
கோதை பரிந்துங் குடநீர் தூயும்
மானேர் நோக்கியர்….
போதுவிரி பொய்கையுட் புக்கனர் புரிந்தும்
குளித்த மகளிரொடு திளைத்த லானார்
குடைந்த வெண்ணுரை குடங்கையின் வாரித் 115
தடங்கண் சிவப்ப வெறிதலி னடுங்கி
விம்முவனர் தளர்ந்து மென்மெல வொதுங்கிக்
கூந்தல் சோரப் பூந்துகி லசைஇ
வேந்தன் மகளொடு விளையாட்டு விரும்பி
வண்ண மகளிரு மைந்தரு மயங்கி 120
மண்ணுநீ ராட்டின் மரபுளிக் கழிந்தபின்
திருமணுத் தானம் பெரும ணுள்ளிட்டு
மண்ணுறு மணியு மாலையுந் தூசும்
கண்ணுற மொய்த்த கழிபே ரவாவினின்
றேற்கு மாந்தர்க் காற்ற வீசிப் 125
பூவினுட் பொலிந்த தாமரை போலத்
தாவி லணியிற் றான்மீக் கூரிய
அறிவைக் கோதிய வைவகை வண்ணத்துத்
துறைவிதி நுனித்த தூத்தொழி லாளர்
கண்டுளங் கவிரொளிக் கழூஉநிறம் பெறீஇய 130
வெண்டுகி லிணைமடி விரித்தன ருடீஇச்
செய்த கோலத்துச் சித்திரங் காண

அலங்காரம் செய்யுமிடம் தொகு

வெய்யோன் கதிரொளி வீசுவளி நுழையா
இரும்பணி பெற்ற வரும்பணைப் படுகால்
மேற்புற மமைந்த விளங்குமணி வேயுள் 135
யாப்புறு மண்டபத் தாசனத் திரீஇக்
கோப்புறு விழுக்கல மேத்துவனர் காட்டிக்

உதயணனை அலங்கரித்தல் தொகு

கனமணி முடியுங் கதிர்முத் தாரமும்
இனமணிப் பூணு மேக வட்டமும்
வயிரக் குழையும் வல்வினைப் பொலிந்த 140
நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க் கடகமும்
நாமர வளியுங் காமர் கைவினைச்
சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொ னொத்தவை பிறவும்
ஆரணங் காகிய பேரணி கலங்களும் 145
உழைப்பெருஞ் சிலதியர் பிழைப்பிலர் நீட்ட
அருவரை பிளந்த வஞ்சுவரு நெடுவேல்
ஒருவலத் துயரிய பொருவில் புட்கொடித்
தளையவிழ் நறுந்தார்த் தனக்கிணை யில்லா
இளையவன் படிவ மேற்ப வியல்புறீஇச் 150
சித்திர விருநிதிச் செந்நெறி நுனித்த
வித்தக வினைஞர் தம்முடன் வந்து
வடிவு கண்டிடும் வத்தவர் பெருமகன்
ஒடிவில் வென்றி யுதயண குமரன்
ஒருமெய் சேர்ந்திவை பெருமை பெறுகென 155
அருளி னணியி னல்லதை யிவற்கிவை
உருவென வணியா வுறுப்புமுத லணிதலிற்
புண்ணிய முடையவிப் பொன்னணி கலனென
எண்ணிய நெஞ்சமொடு நுண்வினைப் பொலிந்த
கோல வித்தகர் வாலணி புனைய 160

வாசவதத்தையை அலங்கரித்தல் தொகு

ஆராக் காத லவந்திகை தன்னையும்
நீராட் டிடத்தி னீக்கி நடுவிற்குப்
பார மாகிய பல்காசு புதைஇ
ஈர நுண்டுகி லகற்றி யேருடைக்
கோடிப் பூந்துகில் கொய்து விளம்புரீஇச் 165
சேடா ரல்குற் சேடுபட வுடீஇ
வல்லவர் வகுத்த மல்வினை நகர்வயிற்
பொன்மணை பொலியப் போற்றுவன ரிரீஇ
நன்மணக் கோலத்துக் கைந்நல நுனித்த
அங்கலுழ் பணைத்தோண் மங்கல மகடூஉக் 170
கட்டிய கச்சையள் கைவிரல் கூப்பி
நெட்டிருங் கூந்த னீரற வாரிப்
பன்னுமுறை விரித்துப் பின்னுபு தொகுத்துக்
கோட்டிடை வளைஇய குஞ்சரத் தடக்கையிற்
சூட்டொடு விரைஇச் சுற்றுபு முடித்துப் 175
பத்திப் பலகைப் பரிசரக் கைவினை
வித்தகப் பத்தி வேறுபட விரித்தவை
ஒழுக்குமுறை யறிந்து வழுக்கிலள் வைத்து
முடிக்கல முதலா முறைமுறை தோன்றும்
அடிக்கல மீறா வணிந்தழகு பெறீஇ 180
வாச யறுஞ்சாந்து வகைபெறப் பூசி
மாசி றிருமகள் வண்ணம் பழிப்பதோர்
கோலஞ் செய்து கொண்டகம் புக்குக்
கடிநகர் வரைப்பிற் கல்லென சும்மையொ
டடிசி லயினி யார்பத மயின்று 185
மன்பெரும் போகத்து மகிழ்ந்து விளையாடி
இன்புற் றனரா லிருவரு மியைந்தென்.

2 5 மண்ணுநீராட்டியது முற்றிற்று.