பெருங்கதை/3 22 பதுமாபதி வதுவை

(3 22 பதுமாபதி வதுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 22 பதுமாபதி வதுவை

அமைச்சன் தருசகனுக்குக் கூறல்

தொகு

அகநனி புகன்றாண் டமைச்சன் போகித்
தகைமிகு தானைத் தருசகற் குறுகி
மாற்றோர்ச் சாய்த்தவன் மறுத்த வண்ணமும்
ஆற்றல் சான்றவவ னன்புகந் தாகத்
தொல்லுரைக் கயிற்றிற் றொடரப் பிணிக்கொளீஇ 5
வல்லிதி னவனை வணக்கிய வண்ணமும்
பல்பொரு ளாளன் பணிந்தன னுரைப்ப

தருசகன் மகிழ்தல்

தொகு

உவந்த மனத்தி னிகழ்ந்ததை மதியாக்
கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய

உதயணன் எண்ணுதல்

தொகு

வடுத்தொழி லகன்ற வத்தவர் பெருமகன் 10
மாய வுருவொடு மாடத் தொடுங்கிய
ஆய கேண்மைய னந்தண னென்பது
சேயிழை மாதர் தேறல ளாகி
ஒன்றுபுரி யுள்ளமொ டொன்றா ளாதலின்
நன்றுபுரி நாட்டத்து நானவ னாதல் 15
அறியத் தேற்றுவோ ரயல்வே றில்லென
நெறியிற் கொத்த நீர்மை நாடி

உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் அனுப்பல்

தொகு

வயத்தகு நோன்றாள் வயந்தகற் றழீஇ
இசைச்ச னென்னு மென்னுயிர்த் தோழன்
அருமறை நாவினந்தண னவன்றனக் 20
கிருமுது குரவரு மிறந்தன ராதலின்
வேதத் தியற்கையி னேதந் தீரக்
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர்
அந்தணன் கன்னியை மந்திர விதியின்
அவன்பாற் படுத்த பின்ன ரென்னையும் 25
இதன்பாற் படுக்க வெண்ணுக தானென
என்கூற் றாக வியையக் கூறி
முன்கூற் றமைத்து முடித்தனின் கடனென

வயந்தகன் தருசகன்பாற் சென்று கூறல்

தொகு

வயந்தக குமரனு நயந்தது நன்றென
இன்னொலிக் கழற்கான் மன்னனைக் குறுகிப் 30
பொருத்தம் படவவ னுரைத்ததை யுணர்த்தலின்

தருசகன் யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் புரிவிப்பதாகச் சொல்லி விடுத்தல்

தொகு

விருப்பொடு கேட்டு விறல்கெழு வேந்தன்
நங்கை தோழி நலத்தொடு புணர்ந்த
அங்கலுழ் பணைத்தோ ளாப்பியா யினியெனும்
செழுக்கயன் மழைக்கட் சேயிழை யரிவை 35
ஒழுக்கினுங் குலத்தினும் விழுப்ப மிக்கவை
சென்றுரை செம்மற் கென்றவ னொருப்பட்
வயந்தக குமரன் வந்து கூறத்

உதயணன் முதலியோர் உடம்படல்

தொகு

தோழ ரெல்லாந் தோழிச்சி யாகத்
தாழ்வ ளாமெனத் தாழாது வலிப்ப 40
நன்னெறி யறியுநர் நாடெரிந் துரைப்பத்

தருசகன் தன்தாயின் உடன்பாட்டை அறிதல்

தொகு

தன்னெறி வழாஅத் தருசக குமரன்
தற்பயந் தெடுத்த கற்பமை காரிகைக்
கோப்பெருந் தேவிக் கியாப்புடைத் தாகத்
தங்கை திறவயின் வலித்தது மற்றவள் 45
இன்பத் தோழியை யிசைச்சற் கிசைத்ததும்
தெருளக் கூறி யருள்வகை யறிந்து
வம்மி னென்று தம்மியல் வழாஅப்
பெருமூ தாளரை விடுத்தலிற் கேட்டே
திருமா தேவியுந் தேன்புரை தீஞ்சொற் 50
கணங்குழை மகளைக் காம னனைய
வணங்குசிலைத் தடக்கை வத்தவர் பெருமகற்
கெண்ணின னெனவே யுண்மலி யுவகையன்
அதிநா கரிகத் தந்தணிக் கணியும்
முற்றணி கலங்கள் கொற்றவி கொடுப்பப் 55

பதுமாபதியின் செயல்

தொகு

பதுமா நங்கையு மதன்றிற மறிந்து
மாணகற் பிரிந்தவென் மம்மர் வெந்நோய்க்
காண மாகிய வாயிழை தனக்கு
தீங்குதிற னுண்டெனிற் றாங்குதிற னறியேன்
விலக்குத லியல்பு மன்றாற் கலக்கும் 60
வல்வினை தானே நல்வினை யெனக்கென
ஒள்ளிழை மாத ருள்வயி னினைஇ
மடுத்தணி கலனு மாலையும் பிறவும்
கொடுத்தன ளாகிக் கோமான் பணித்த
வடுத்தீர் வதுவையின் மறந்தனை யொழியாது 65
வல்லே வாவென மெல்லியற் புல்லிக்
கவற்சி கரந்த புகற்சிய ளாகிக்
சிறுமுதுக் குறைவி யறிவொடு புணர்ந்த
தாய ரியற்கை சேயிழைக் காற்றித்
தானுடை யுழைக்கல மெல்லாந் தரீஇச் 70
சேயொளிச் சிவிகையொடு சேயிழைக் கீயத்

தருசகன் செயல்

தொகு

தங்கை தலைமை தன்னையு முவந்து
கொங்கலர் கோதையைக்கொடுக்குநா ளாதலின்
இலக்கணச் செந்தீத் தலைக்கையி னிரீஇ
இழுக்கா வியல்பி னிசைச்ச குமரன் 75
விழுப்பெரு விதியின் வேட்டவட் புணர்கென
முழுப்பெருங் கடிநகர் முழுதுட னுணரக்
கோப்பெரு வேந்தன் யாப்புறுத் தமைத்தபின்

உதயணன் செயல்

தொகு

வதுவைச் செல்வத் தொளிநகைத் தோழனை
நீங்கல் செல்லான் பூங்கழ லுதயணன் 80
முதற்கோ சம்பியு மொய்புனல் யமுனையும்
சிதர்ப்பூங் காவுஞ் சேயிழை மாதர்
கண்டினி துறைவது காரண மாக
வண்டிமிர் காவின் மகதத் தகவயின்
வந்தனம் யாமென் றந்தணி கேட்ப 85
இன்னிசைக் கிளவி யிறைமக னிசைத்தலிற்

யாப்பியாயினி உதயணனே மாணகனென்று உணர்தல்

தொகு

சின்னகை முறுவற் சேயிழை கேளா
வாணகை மாதரொடு மனைவயி னொடுங்கிய
மாணகன் வாய்மொழி யிதுவான் மற்றெனத்
தேனார் காந்தட் டிருமுகை யன்ன 90
கூட்டுவிர லகற்றிக் கொழுங்கயன் மழைக்கண்
கோட்டுவனண் மேலைக் குமரனை நோக்கி
ஐய மின்றி யறிந்தன ளாகி
வையங் காவலன் வத்தவர் பெருமகன்
பார்ப்பன வுருவொடு பதுமா நங்கையை 95
யாப்புடை நெஞ்ச மழித்தன னறிந்தேன்
ஒப்புழி யல்ல தோடா தென்பது
மிக்கதென் மனனென மெல்லிய நினைஇ
நகைத்துணைத் தோழிக்கு நன்னலத் தோன்றல்
தகைப்பெரு வேந்த னாகலின் மிகச்சிறந் 100
தானா நன்மொழி தானவட் கொண்டு
கோட்டிச் செவ்வியுள் வேட்டனன் விரும்பா
உரைத்த லூற்றமொடு திருத்தக விருப்ப

யாப்பியாயினி பதுமாபதியைக் காணல்

தொகு

இயைந்த வதுவை யெழுநா ணீங்கலும்
பசும்பொற் கிண்கிணிப் பதுமா நங்கையும் 105
நயந்த தோழி நன்னலங் காணும்
விருப்பின ளாகி விரைந்திவண் வருகெனத்
திருக்கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின்
ஆரா வன்பினொ டகன்ற வெழுநாள்
ஏழாண் டமைந்தன தன்மைய ளாயினும் 110
நலங்கவர்ந் தகன்ற நண்பனைக் கண்டனென்
புலம்பினி யொழிக புனைவளைத் தோளி
வளங்கெழு தானை வத்தவ னாமென
விளங்கக் கூறும் விருப்பு நாணும்
தேறிய தோழி யேறினள் சென்றுதன் 115
துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு

பதுமாபதி கூறல்

தொகு

நாணிநின் றோளைநின் பூணிள வனமுலை
புல்லுன துண்மையிற் புல்லேன் யானென
மெல்லியன் மாதர் நகுமொழி பயிற்ற

யாப்பியாயினி கைறுதல்

தொகு

நினக்கு மொக்குமஃ தெனக்கே யன்றென 120
மனத்தி னன்னோண் மறுமொழி கொடுப்பச்
சின்னகை முகத்த ணன்னுதல் வாவென
நுகர்ச்சியி னுகந்த வனமுலை நோவப்
புகற்சியொடு புல்லிப் புனையிழை கேண்மதி
வண்டார் மார்பின் வடிநூல் வயவனைக் 125
கண்டே னன்னதன்மைய னாகிக்
கள்ள வுருவொடு கரந்தகத் தொடுங்கிநின்
உள்ளங் கொண்ட வுறுவரை மார்பன்
வசையி நோன்றாள் வத்தவர் பெருமகன்
உதையண குமரன் போலு முணர்கெனச் 130
சிதைபொரு ளில்லாச் சின்னெறிக் கேண்மை
மணங்கமழ் மாதர் துணிந்தன ளுரைப்ப

பதுமாபதி கூறல்

தொகு

நின்னை வேட்ட லந்தண னவற்குத்
துன்னிய தோழனது முன்னே கேட்டனன்
பெருமக னுள்ளத் துரிமை பூண்டவென் 135
அதிரா நன்னிறை கதுவாய்ப் படீஇத்
தணத்த றகுமோ நினைக்கெனக் கலங்கித்
திருவிழை தெரியா டிட்பங் கூறப்

யாப்பியாயினியின் செயல்

தொகு

பின்னருங் காண்பா மன்ன னாகுதல்
பொன்னே போற்றெனத் தன்மனைப் பெயர்ந்து 140
நன்னுத னிலைமை யின்னதென் றுரைக்கவம்

உதயணன் செயல்

தொகு

மாற்றங் கேட்டவட் டளற்றல் வேண்டி
வத்தவர் பெருமகன் வண்ணங் கூட்டிச்
சித்திரக் கிழிமிசை வித்தக மாக
உண்கட் கிழமையுட் பண்பிற் றீராது 145
மறைப்பியல் வழாஅக் குறிப்புமுத றொடங்கி
ஆங்கப் பொழுதே பூங்குழை யுணர
வாக்கமை பாவை வகைபெற வெழுதி
வாணுதன் மாதரொடு மனைவயி னிருப்புழி
உருவக் கோயிலு ளிரவுக் குறிவயின் 150
வெருவக் குழறிய விழிகட் காகைக்
கடுங்குர லறியாள் கதுமென நடுங்கினள்
ஒடுங்கீ ரோதி யென்பதை யுணர்த்தென

யாப்பியாயினி செயல்

தொகு

மன்னவ னுரைத்த மாற்றமு மன்னவன்
தன்னொப் பாகிய தகைநலப் பாவையும் 155
கொண்டனள் போகிக் கோமகட் குறுகி
வண்டலர் படலை வத்தவன் வடிவிற்
பாவை காட்டிப் பைங்கொடி யிதுநம்
ஆய்பூங் காவி னந்தண வுருவொடு
கரந்துநலங் கவர்ந்த காவலன் வடிவெனத் 160

பதுமாபதி செயல்

தொகு

திருந்திழை மாதர் திண்ணிதி நோக்கி
இன்னுயிர்க் கிழவ னெழுதிய பாவை
என்னும் வேற்றுமை யில்லை யாயினும்
ஓராங் கிதனை யாராய்ந் தல்லது
தீண்டலுந் தேறலுந் திருத்தகைத் தன்றெனப் 165
பூண்டயங் கிளமுலைப் புனைவளைத் தோளி
உள்ளே நினைஇக் கொள்ளா ளாக
நள்ளென் யாமத்து நன்னுதல் வெரீஇய
புள்ளி ன்றஃகுறி யுரைத்தலும் பொருக்கெனப்

பதுமாபதியின் மகிழ்ச்சி

தொகு

பெருவிறற் கொழுந னின்னுயிர் மீட்டுப் 170
பெற்ற வொழுக்கிற் பெரியோள் போலச்
செங்கடை மழைக்கட் சேயிழைத் தோழியை
அங்கை யெறிந்து தங்கா விருப்பமொடு
காமக் காதலன் கைவினைப் பொலிந்த
ஓவியப் பாவையை யாகத் தொடுக்கி 175
நீண்ட திண்டோ டீண்டுவன ணக்கு
நெஞ்சங் கொண்ட நெடுமொழி யாள
வஞ்ச வுருவொடு வலைப்படுத் தனையெனப்
புலவி நோக்கமொடு நலமொழி நயந்து
கோமான் குறித்துந் தோழி கூற்றும் 180
தானொருப் பட்ட தன்மைய ளாகிச்
செல்லா நின்ற சின்னா ளெல்லை

மணத்துக்குரியன செயப்படுதல்

தொகு

நன்னாட் டலைப்பெய னன்றென வெண்ணிக்
கோட்டமி லுணர்விற் கொற்றவன் குன்றாச்
சேனைப் பெருங்கணி செப்பிய நன்னாட் 185
டானைத் தலைத்தாட் டானறி வுறுத்தலின்
வையக விழவிற் றானுஞ் செய்கையின்
அழுங்க னன்னக ராவணந் தோறும்
செழும்பல் யாணர்ச் சிறப்பின் வழாஅது
வண்ணப் பல்பொடி வயின்வயி னெடுத்தலின் 190
விண்வேய்ந் தன்ன வியப்பிற் றாகிப்
பெருமதி லணிந்த திருநகர் வரைப்பின்
ஆய்ந்த கேள்வி மாந்தரு மகளிரும்
ஆரா வுவகைய ராகிய காலைச்
சேரார்க் கடந்த சேதிழர் மகனையும் 195
மதுநா றைம்பாற் பதுமா பதியையும்
மரபிற் கொத்த மண்ணுவினை கழிப்பிய
திருவிற் கொத்துத் தீதுபிற தீண்டா
நெய்தலைப்பெய்து மையணி யுயர்நுதல்
இருங்களிற் றியானை யெருத்திற் றந்த 200
பெருந்த ணறுநீர் விரும்புவன ராட்டிப்
பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றித்
திகழ்செய் கோலத் திருமணை யிரீஇச்

பதுமாபதியைக் கோலஞ்செய்தல்

தொகு

செங்கயற் கண்ணியை நங்கை தவ்வையர்
கோல மீத்தக வாலணி கொளீஇத் 205
திருந்தடி வணங்கி வருந்த லோம்பிப்
பீடத் திரீஇய பாடறிந் தேற்றி
நறுநீர்த் துவர்க்கை வயின்வயி னுரீஇக்
கறைமாண் காழகிற் கொழும்புகை கொளீஇ
நெறித்து நெறிப்பட வாருநர் முடித்து 210
மங்கல நறுஞ்சூட்டு மரபி னணிந்து
வல்லோன் வகுத்த நல்வினைக் கூட்டத்
தியவனப் பேழையு ளடைந்தோர் ஏந்திய
தமனியப் பல்கலந் தளிரியன் மாதர்
ஆற்றுந் தகையன வாற்றுளி வாங்கி 215
வெண்சாந்து வரித்த வஞ்சி லாகத்
திணைமுலை யிடைப்பட டிலங்குபு பிறழும்
துணைமலர்ப் பொற்கொடி துலங்கு நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
மேற்பாற் பிறையென விளங்க வமைந்த 220
தொருகா ழார மொளிபெற வணிந்து
திருக்கேழ்க் களிகை செவ்வனஞ் சேர்த்திப்
பைம்பொற் றிலகமொடு பட்ட மணிந்த
ஒண்கதிர் மதிமுக மொளியொடு சுடரச்
செம்பொ னோலை சேடுபடச் சுருக்கி 225
ஐவகை வண்ணத் தந்நுண் மேகலை
பையர வல்குற் பரப்பிடை யிமைப்பக்
கொய்துகொண் டுடீஇய கோடி நுண்டுகில்
மைவளர் கண்ணி மருங்குல் வருத்தக்
கடுங்கதிர் முத்துங் கைபுனை மலரும் 230
தடந்தோட் கொப்ப வுடங்கணிந் தொழுகிய
சின்மயிர் முன்கைப் பொன்வளை முதலாக்
கண்ணார் கடகமொடு கைபுனைந் தியற்றிய
சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு
பாடக நூபுரம் பரட்டுமிசை யரற்ற 235
ஆடமைத் தோளியை யணிந்துமுறை பிறழாது
வதுவைக் கேற்ற மங்கலப் பேரணி
அதிநா கரிகியை யணிந்தன ரமைய

உதயணனைக் கோலஞ் செயதல்

தொகு

ஓங்கிய பெரும்புக முதயண குமரனைத்
தாங்கருந் தோழர் தாம்புனைந் தணியக் 240
கடிநாட் கோலத்துக் காம னிவனென
நெடுநகர் மாந்தர் நெஞ்சந் தெளியக்
காட்சிக் கமைந்த மாட்சி யெய்த

உதயணன் மணமண்டபம் புகுதல்

தொகு

வெற்ற வேந்தன் கொற்றப் பெருங்கணி
கூறிய முழுத்தங் குன்றுத லின்றி 245
ஆர்வச் செய்தொழி லகன்பெருங் கோயிலுள்
ஆயிரம் பொற்றூ ண்ணிமணிப் போதிகைக்
காய்கதிர் முத்தங் கவினிய வணிமின்
அத்தூ ண்டுவ ணொத்த வுருவின
சந்தனப் பெருந்தூ ணொன்பது நாட்டிய 250
மைந்த ரழகிற் கேற்ற….
….
அழன்மணி நெடுமுடி யரசரு ளரசன்
நிலமமர் செங்கோ னித்தில மேர்தரத்
தலைமலை படலைத் தருசகன் புகுந்து
தீவேள் சாலை திறத்துளி மூட்டிப் 255
புகுதுக வத்தவ னென்றலிற் பூந்தார்
அரசிளங் குமரரொ டண்ணல் புகுதரக்

பதுமாபதி வருகை

தொகு

கதிர்மதி முகத்தியைக் காவல் கண்ணி
ஆயிரத் தெண்மர் பாங்கிய ரன்னோர்
பாசிழைத் தோழியர் பாடகஞ் சுடரத் 260
தண்பெரும் பந்தருட் கண்பிணி கொள்ள
உயர்வினு மொழுக்கினு மொத்தவழி வந்த
மங்கல மன்னற்கு மந்திர விழுநெறி
ஆசான் முன்னின் றமையக் கூட்டித்
தீமாண் புற்ற திருத்தகு பொழுதிற் 265
புதுமலர்க் கோதைப் பூந்தொடிப் பணைத்தோட்
பதுமா நங்கையைப் பண்புணப் பேணி
மணநல மகளிர் மரபிற் கொத்தவை
துணைநல மகளிரொடு துன்னிய காதல்
மூதறி மகளிர் முடித்த பின்றை 270

உதயணன் பதுமாபதியை மணம்புரிந்து கொள்ளல்

தொகு

ஏதமில் காட்சி யேயர் பெருமகன்
நன்னுதன் மாதரை நாட்கடிச் செந்தீ
முன்முத லிரீஇ முறைமையிற் றிரியா
விழுத்தகு வேள்வி யொழுக்கிய லோம்பிச்
செம்பொற் பட்டம் பைந்தொடிப் பாவை 275
மதிமுகஞ் சுடர மன்னவன் சூட்டித்
திருமணிப் பந்தருட் டிருக்கடங் கழிப்பி
ஒருமைக் கொத்த வொன்றுபுரி யொழுக்கின்
வல்லோர் வகுத்த வண்ணக் கைவினைப்
பல்பூம் பட்டிற் பரூஉத்திரட் டிருமணிக் 280
காலொடு பொலிந்த கோலக் கட்டிற்
கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள்
படியிற் றிரியாது படுத்தனர் வணங்கப்
பட்டச் சின்னுதற் பதுமா பதியொடு
கட்டிலே றினனாற் கருதியது முடித்தென். 285

3 22 பதுமாபதி வதுவை முற்றிற்று.