பெருங்கதை/3 6 பதுமாபதியைக் கண்டது

(3 6 பதுமாபதியைக் கண்டது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 6 பதுமாபதியைக் கண்டது

உதயணன் நிலை

தொகு

வாயில் புக்கபின் வைய நிறீஇ
ஆய்வளைத் தோளி யகம்புக் கருளென
வைய வலவன் வந்தனன் குறுகிப்
பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
மஞ்சுவிரித் தன்ன வைய வாயிற் 5
கஞ்சிகை கதுமெனக் கடுவளி யெடுப்ப
வெண்முகிற் பிறழு மின்னென நுடங்கித்
தண்ணொளி சுடருந் தையலை யவ்வழிக்
குறுஞ்சினைப் புன்னை நறுந்தா தாடிக்
கருங்குயிற் சேவ் றன்னிறங் கரந்தெனக் 10
குன்றிச் செங்க ணின்றுணைப் பேடை
உணர்தல் செல்லா தகறொறும் விரும்பிப்
புணர்த லுணர்வொடு பொங்குசிறை யுளரி
அளிக்குர லழைஇத் தெளித்துமன நெகிழ்க்குமக்
குயிற்புணர் மகிழ்ச்சி யயிற்கூட் டமைத்த 15
செஞ்சுடர் வேலி னெஞ்சிடம் போழத்
தன்ஞாழ் நவிற்றிய தாமரை யங்கைப்
பொன்ஞாண் டுயல்வரும் பொங்கிள வனமுலை
மனைப்பெருங் கிழத்தியை நினைத்தன னாகிச்
செம்மை நெடுங்கண் வெம்மை யறாஅத் 20
தெண்பனி யுறைத்தரத் திருத்துஞ் சகலத்துப்
பொன்பூத் தன்ன வம்பூம் பசப்பொடு
நாண்மலர்ப் புன்னைத் தாண்முதல் பொருந்திக்
கொடிக்குருக் கத்திக் கோலச் செந்தளிர்
பிடித்த விரலின னாகிக் கெடுத்த 25
அவந்திகை மாத ரணிநல நசைஇக்
கவன்றன னிருந்த காலை யகன்று
போமின் போமி னென்றுபுடை யோட்டும்
காவ லாளரைக் கண்டிவட் புகுதரும்
உரிமை யுண்டென வரிமா னன்ன 30
வெஞ்சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு
நீக்கச் சென்றனெ னெருத லின்றிவண்
நீக்கப் பட்டனெ னாதலி னிலையா
ஆக்கமுங் கேடும் யாக்கை சார்வா
ஆழிக் காலிற் கீழ்மேல் வருதல் 35
வாய்மை யாமென மனத்தி னினைஇ

உதயணன் பதுமாபதியைக் காணல்

தொகு

நீங்கிய வெழுந்தோன் பூங்குழை மாதரை
வண்ணக் கஞ்சிகை வளிமுகந் தெடுத்துழிக்
கண்ணுறக் கண்டே தன்னமர் காதல்
மானேர் நோக்கின் வாசவ தத்தை 40
தானே யிவளெனத் தான்றெரிந் துணரான்
மந்திர வீதியி னந்த ணாளன்
தந்தனன் மீட்டெனுஞ் சிந்தைய னாகி
உறுப்பினு நிறத்தினும் வேற்றுமை யின்மையின்
மறுத்து நோக்கு மறத்தகை மன்னன் 45

உதயணன் கண்கள்

தொகு

செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய
வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
தீயோ ரன்ன திறல வாகி
முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை
இளையோர் நெஞ்சிற் றளைமுதல் பரிந்தவர்க் 50
கமிழ்தம் பொதிந்த வருளின வாகித்
தலைப்பெருந் தாமரைச் செம்மல ரன்ன
நலத்தொடு புணர்ந்த விலக்கண நெடுங்கண்

உதயணனும் பதுமாபதியும் தம்முள் மயங்கல்

தொகு

வயப்பட லுற்று வயங்கிழை மாதர்
தானுங் கதுமென நேர்முக நோக்க 55
நெஞ்சிறை கொளீஇய நிறையமை நெடுந்தாழ்
வெந்தொழிற் காம வேட்கை திறப்பத்
திண்பொறி கலங்கித் திறல்வே றாகி
வேலை யெல்லை மீதூர்ந் திரண்டு
கோலப் பெருங்கடல் கூடி யாங்கும் 60
இசைந்த வனப்பி னேயர் மகற்கும்
பசைந்த காதற் பதுமா பதிக்கும்
யாப்புறு பால்வகை நீப்புற வின்றிப்
பிறப்புவழிக் கேண்மையிற் சிறப்புவழி வந்த
காம்பஃ பெருங்கடல் கண்ணுறக் கலங்கி 65
நிறைமதி யெல்லைத் துறையிகந் தூர்தர

பதுமாபதி நினைத்தல்

தொகு

நன்னகர் கொண்ட தன்னமர் விழவினுட்
கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
தன்னலங் கதுமெனக் காட்டி யென்னகத்
திருநிறை யளத்தல் கருதிய தொன்றுகொல் 70
அந்தண வடிவொடு வந்திவட் டோன்றி
மேவன நுகர்தற்கு மாயையி னிழிதரும்
தேவ குமரன் கொல்லிவன் றெரியேன்
யாவ னாயினு மாக மற்றென்
காவ நெஞ்சங் கட்டழித் தனனென 75
வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி

பதுமாபதி கண்ணின் செயல்

தொகு

உலைப்பருந் தானை யுதயண குமரற்
கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப் பணைத்தோள்
உரிய வாயின வுணர்மி னென்றுதன்
அரிமதர் நெடுங்க ணயனின் றோர்க்கும் 80
அறியக் கூறுத லமர்ந்தன போல
நெறியிற் றிரியா நிமிர்ந்து சென்றாட

பதுமாபதி கோயிலை வலஞ்செய்தல்

தொகு

வளங்கெழு மாவி னிளந்தளி ரன்ன
நயத்தகு மேனியு நல்லோர் நாடிய
பயப்புள் ளுறுத்த படியிற் றாகக் 85
கைவரை நில்லாப் பையு ளொடுக்கி
உட்கு நாணு மொருங்குவந் தடைதர
நட்புடைத் தோழி நண்ணுவன ளிறைஞ்ச
மேதகு வையத்தின் மெல்லென விழிந்து
தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுட் 90
சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொ
டாடுத லானா வவாவொடு நீங்கி
வனப்பெனப் படூஉந் தெய்வந் தனக்கோர்
உருவுகொண் டதுனோற் றிருவிழை சுடரத்
தன்னமர் தோழி தன்புறத் தசைஇ 95
அன்ன நாண வண்ணலைக் கவற்றாப்
பொன்னரிக் கிண்கிணி புடைபெயர்ந் தரற்ற
அரிச்சா லேகத் தறைபல பயின்ற
திருக்கிளர் மாடஞ் சேர்ந்துவலங் கொண்டு

பதுமானதி தானம் அளித்தல்

தொகு

கழிபெருஞ் சிறப்பிற் கன்னி மகளிர் 100
அழியுந் தான மவ்விடத் தருளி
நான்முகன் மகளிர் நூன்முதற் கிளந்த
ஒழுக்கிற் றிரியா ளுறுபொருள் வேண்டும்
வழுக்கா வந்தணர் வருக யாவரும்
விலக்கவு நீக்கவும் பெறீஇ ரென்றுதன் 105
தலைத்தாண் முதியர்க்குத் தானே கூறி
நோன்புமுத றொடங்கித் தேங்கமழ் கோதை
தலைநாட் டானந் தக்கவை யளித்தலிற்

ஒரு மங்கை பாடுதல்

தொகு

பலநா ணோற்ற பயனுண் டெனினே
வளமையும் வனப்பும் வண்மையுந் திறலும் 110
இளமையும் விச்சையு மென்றிவை பிறவும்
இன்பக் கிழமையு மன்பே ருலகினுள்
யாவர்க் காயினு மடையு மடையினும்
வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த
வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவரிது 115
விழுக்குடிப் பிறந்திவ் வீறொடு விளங்கிய
வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
உதயண குமரனொ டொப்போன் மற்றிவள்
புதைபூண் வனமுலைப் போகம் பெறுகென
மரபறி மகடூஉப் பரவினள் பாட 120
அன்ன னாக வென்னயந் தோனெனப்
பொன்னிழை மாதர் தன்மனத் திழைப்பத்
தலைநாட் டான மிலக்கணத் தியைந்தபின்

பதுமாபதி அரண்மனையை அடைதல்

தொகு

மாயிரு ஞாலத்து மன்னவன் மகளே
ஞாயிறு படாமற் கோயில் புகுதல் 125
இன்றை நன்னாட் கியல்புமற் றறிகெனத்
தொன்றிநன் மகளிர் தொழுதனர் கூறச்
செய்வதை யறியலள் வெய்துயிர்ப் பளைஇத்
தெய்வத் தானம் புல்லென வையத்
திலங்கிழை மாத ரேற்ற வேறிப் 130
பொலந்தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதிற் கதுமென நோக்கிய
அந்த ணாளற் கணிநல னொழியப்
பெருநகர் புகழத் திருநகர் புக்கபின்

பதுமாபதியின் கட்டளை

தொகு

இகலடு தானை யிறைமீக் கூறிய 135
தவலரும் வென்றித் தருசகன் றங்கை
கொங்கலர் கோதை நங்கைநம் பெருமகள்
புகழ்தற் காகாப் பொருவில் கோலத்துப்
பவழச் செவ்வாய்ப் பதுமா பதிதன்
கன்னி நோனபின் கடைமுடி விதனொடு 140
முன்னி முற்று மின்ன தீமென
நச்சுவனர் வரூஉ நான்மறை யாளரை
அச்சங் கொள்ள வகற்றன்மி னென்றுதன்
ஆணைவைத் தகன்றனள் யாண ரமைத்தஃ
தறிமி னீரெனப் பொறியமை புதவிற் 145
கடைமுதல் வாயிற் கடுங்காப் பிளையரை
அடைமுது மாக்க ளமைத்தகன் றமையிற்

உதயணன் நிலை

தொகு

கண்டோர் பெயர்த்துக் காண்ட லுறூஉம்
தண்டா வனப்பின் றகைமைய ளாகிய
கன்னி யாகங் கலக்கப் பெறீஇயரெனப் 150
பன்மலர்க் காவினுட் பகலு மிரவும்
உறையு ளெய்திய நிறையுடை நீர்மை
இளையோ னமைந்த காலை மற்றுத்தன்
தளையவிழ் கோதைத் தைய லிவளெனும்
மைய லுள்ளமொடு பைத லெய்தி 155

உதயணன் கூனியை வினவுதல்

தொகு

மன்னவன் மடமகள் பின்னொழிந் திறக்கும்
ஏந்திள வனமுலை யெழில்வளைப் பணைத்தோள்
மாந்தளிர் மேனி மடமா னோக்கின்
ஆய்ந்த கோலத் தயிரா பதியெனும்
கூன் மகடனைக் கோமகன் குறுகி 160
யாவளிந் நங்கை யாதிவண் மெய்ப்பெயர்
காவலர் கொள்ளுங் காவினுள் வந்த
காரண மென்னை கருமமுண் டெனினும்
கூறினை செல்லிற் குற்ற மில்லென
மாறடு குருசில் வேறிடை வினவ 165

கூனியின் விடை

தொகு

அந்த ணாள னரும்பொரு ணசையின்
வந்தன னென்னும் வலிப்பின ளாகி
இன்பங் கலந்த விந்நகர்க் கிறைவன்
தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
சிதைவில் கற்பிற் சிவமதி யென்னும் 170
பேருடை மாதர்க் கோரிடம் பிறந்த
உதையை யோடை யென்னு மொண்டொடி
காசி யரசன் காதலி மற்றவள்
ஆசின்று பயந்த வணியிழைக் குறுமகள்
மதுநாறு தெரியன் மகளிருட் பொலிந்த 175
பதுமா பதியெனப் பகர்ந்த பேரினள்
துன்னருஞ் சிறப்பிற் கன்னி தானும்
வயந்தக் கிழவற்கு நயந்துநகர் கொண்ட
விழவணி நாளகத் தழகணி காட்டி
எழுநாள் கழிந்த வழிநாட் காலை 180
வேதியர்க் கெல்லாம் வேண்டுவ கொடுக்கும்
போதல் வேண்டா பொருட்குறை வுண்டெனின்
ஏத மில்லை யிவணி ராமினென்

கூனி உதயணனை வினாதல்

தொகு

றிந்நாட் டாரலி ரேனையர் போல்வீர்
எந்நாட் டெவ்வூ ரெக்கோத் திரத்தீர் 185
யாமு நும்மை யறியப் போமோ
வாய்மை யாக மறையா துரைமினென்
றேயர் குருசிலைத் தூய்மொழி வினவ

உதயணன் விடை

தொகு

நன்றான் மற்றது கேளாய் நன்னுதல்
கண்டார் புகழுங் கலக்கமில் சிறப்பிற் 190
காந்தார மென்னு மாய்ந்த நாட்டகத்
தீண்டிய பல்புக ழிரத்தின புரத்துள்
மாண்ட வேள்வி மந்திர முத்தீச்
சாண்டிய னென்னுஞ் சால்புடை யொழுக்கின்
ஆய்ந்த நெஞ்சத் தந்தணன் மகனென் 195
மாணக னென்பேன் மற்றிந் நாடு
காண லுறலொடு காதலிற் போந்தனென்
என்றது சொல்ல நன்றென விரும்பி
ஆய்புக ழண்ணலை யறிந்தன ளாகிச்
சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென். 200

3 6 பதுமாபதியைக் கண்டது முற்றிற்று.