பெருங்கதை/4 13 முகவெழுத்துக் காதை
- பாடல் மூலம்
4 13 முகவெழுத்துக் காதை
உதயணன்செயல்
தொகுவிரைந்தனர் பெயர வேந்தன் காம
சரம்பட நொந்து தளர்வுட னவணோர்
பள்ளி யம்பலத் துள்ளினி திருந்து
மேவத் தகுமுறைத் தேவியர் வருகென
ஏவற் சிலதியர் தாமவர்க் குரைப்பக் 5
தேவியர் இருவரும் உதயணன்பால் வருதல்
தொகுகாவல் வேந்தன் கரைந்ததற் கயிர்த்து
மேவுகந் துகத்தியைக் கோயிலுண் மறைத்து
மறுவி றேவிய ரிருவரும் வந்து
திருவமர் மார்பனைத் திறந்துளி வணங்கலிற்
தோழியரை உதயணன் வருவித்து வினாதல்
தொகுபெருகிய வனப்பிற் பேணுந் தோழியர் 10
புகுதுக வென்றாலும் புக்கவ ரடிதொழச்
சுற்றமும் பெயருஞ் சொல்லுமி னீரென
முற்றிழை மாதரை முறைமுறை வினவலின்
மற்றவ ரெல்லா மறுமொழி கொடுப்பக்
உதயணன் வாசவதத்தையை வினாதல்
தொகுகொற்றவ னுரைக்கும் பொற்றொடித் திரளினைப் 15
பாரான் பார்த்தொரு பைந்தொடி நின்னொடு
வாரா தொழிதல் கூறெனக் கூறலும்
வாசவதத்தை சினந்துரைத்தல்
தொகுஒழிந்த மாதர்க் குரைப்பதை யுண்டெனிற்
றனித்துநீ கண்டரு ளவைக்கு ளென்னெனப்
உதயணன் கூறுதல்
தொகுபடைமலி நயனங் கடைசிவப் பூரும் 20
திறனவண் மொழியொடு தெளிந்தன னாகிப்
பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும்
உற்றவ ளறியு முழையரிற் றெளிந்தேன்
மதிவே றில்லென வாசவ தத்தையும்
கரும முன்னிக் குருசில் … 25
…….
உதயணன் மான்னீகையை வினாதல்
தொகுபூக்கமழ் குழலி புகுந்தடி வணங்கலின்
நோக்கின னாகி வேற்படை வேந்தன்
பைந்துணர்த் தொடையற் பாஞ்சா லரசற்கு
மந்திர வோலையும் வழக்கறை காவலும்
தந்திர நடாத்தலுந் தகையுடைக் கோலம் 30
அந்தப் புரத்திற்கணிதலு மெல்லாம்
நின்னைச் சொல்லுவர் நன்னுதல் பெயரும்
துன்னருஞ் சுற்றமு முன்னுரை யென்றலும்
மான்னீகை கூறல்
தொகுவாட்டிறல் வேந்தனை வணங்கித் தன்கை
கூட்டின ளாகி மீட்டவண் மொழிவோள் 35
கோசலத் தரசன் மாபெருந் தேவி
மாசில் மற்பின் வசுந்தரி யென்னும்
தேனிமிர் கோதை சேடி யேன்யான்
மான னீகை யென்பதென் னாமம்
எம்மிறை படையை யெறிந்தன னோட்டிச் 40
செம்மையிற் சிலதியற் தம்மொடுஞ் சேரப்
பாஞ்சா லரசன் பற்றிக் கொண்டு
தேன்றேர் கூந்தற் றேவியர் பலருளும்
தன்னமர் தேவிக் கீத்த பின்றை
வண்ண மகளா யிருந்தனெ னன்றி 45
அருளிய தியாது மறியே னியானெனக்
கடல்புரண் டெனப்பயந் தழுதன ணிற்ப
உதயணன் செயல்
தொகுவாகை வேந்தன் மதித்தன னாகிக்
கேளுடை முறையாற் கிளரொளி வனப்பின்
வாசவ தத்தைக்கும் வண்ண மகளாய் 50
நாளும் புனைகென நன்னுதல் பெயர்ந்தவள்
மான்னீகை செயல்
தொகுஅடிமுதற் றொட்டு முடியள வாகப்
புடவியி ன்றியாப் புணர்ப்பொடு பொருந்தி
ஓவிய ருட்கு முருவக் கோலம்
தேவியைப் புனைந்தபின் மேவிய வனப்பொடு 55
உதயணன் செயல்
தொகுகாவலற் காட்டக் கண்டன னாகி
அழித்தலங் கார மறியா ளிவளெனப்
பழித்தியான் புனைநெறி பாரெனப் புனைவோன்
பற்றிய யவன பாடையி லெழுத்தவள்
சுற்றன ளென்றெடுத் துற்றவ ருரைப்பக் 60
கேட்டன னாதலிற் கோற்றொடி நுதன்மிசைப்
பூந்தா தோடு சாந்துறக் கூட்டி
ஒடியா விழுச்சீ ருதயண னோலை
கொடியேர் மருங்குற் குயின்சொழிச் செவ்வாய்
மான னீகை காண்க சேணுயர் 65
மாட மீமிசை மயிலிறை கொண்டென
ஆடன் மகளிரொ டமர்ந்தொருங் கீண்டி
முந்துபந் தெறிந்தோர் முறைமையிற் பிழையாப்
பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச்
சிந்தரி நெடுங்கணன் ணெஞ்சகங் கிழிப்பக் 70
கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்
ஆற்றே னவ்வழ லவிக்குமா மருந்து
கோற்றேன் கிளவிதன் குவிமலை யாகும்
பந்தடி தானுறப் பறையடி யுற்றவென்
சிந்தையு நிலையுஞ் செப்புதற் கரிதெனச் 75
சேம மில்லாச் சிறுநுண் மருங்குற்
காதார மாகி யதனொடு தளரா
அருந்தனந் தாங்கி யழியுமென் னெஞ்சிற்
பெருந்துயர் தீர்க்கு மருந்து தானே
துன்றிய வேற்கட் டொழிதலுமெய் யழகும் 80
பைங்கொள் கொம்பாப் படர்தரு மிந்நோய்
ஆழ்புன்றஃ பட்டோர்க் கரும்புணை போலச்
சூழ்வளைத் தோளி காமநற் கடலிற்
றாழ வுறாமற் கொள்க தளர்ந்துயிர்
சென்றாற் செயன்முறை யொன்றுமி லன்றியும் 85
அடுக்கிய விளமை தலைச்செலி னாந்தரக்
கிடைப்பதி லிரப்போர்க் களிப்பது நன்றென
நினைத்த வாசக நிரப்பின் றெழுத
இடத்தள வின்மையிற் கருத்தறி வோர்க்குப்
பரந்துரைத் தென்னை பாவை யிக்குறை 90
இரந்தனெ னருளென விறைமக னெழுதி
மெல்லியற் கொத்த விவையெனப் புகழ்ந்து
புல்லினன் றேவியைச் செல்கென விடலும்
வாசவதத்தையின் முகவெழுத்தை மானனீகை காணல்
தொகுகோயில் குறுக வாய்வளை யணுகலும்
காவலன் புனைந்தது காணெனக் கண்ட 95
காசறு சிறப்பிற் கோசலன் மடமகள்
வாசக முணராக் கூசின ளாகிப்
பெருமக னெழுதிய பேரலங் காரத்
திருமுக மழகுடைத் தெனமருட் டினளாய்
உட்கு நாணு மொருங்குவந் தடைய 100
நற்பல கூறி யப்பகல் கழிந்தபின்
மான்னீகை எழுதி விடுத்தல்
தொகுவழிநாட் காலைக் கழிபெருந் தேவியைப்
பழுதற வழகொடு புனைநலம் புனையாக்
குங்கும மெழுதிக் கோலம் புனைஇ
அங்கவ ணுதன்மிசை முன்பவ னெழுதிய 105
பாடை கொண்டுதன் பெயர்நிலைக் கீடா
நீல நெடுங்க ணிரைவளைத் தோளி
மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி
நெறிமயிர்க் கருகே யறிவரி தாக
முழுதிய லருள்கொண் டடியனேன் பொருளா 110
எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்
கண்டேன் காவல னருள்வகை யென்மாட்
டுண்டே யாயினு மொழிகவெம் பெருமகன்
மடந்தையர்க் கெவ்வா றியைந்ததை யியையும்
பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும் 115
சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்
இயைவ தன்றா லிவ்வயி னொருவரும்
காணா ரென்று காவலு ளிருந்து
பேணா செய்தல் பெண்பிறந் தோருக்
கியல்பு மன்றே யயலோ ருரைக்கும் 120
புறஞ்சொலு மன்றி யறந்தலை நீங்கும்
திறம்பல வாயினுங் குறைந்தவென் றிறத்து
வைத்ததை யிகழ்ந்து மறப்பது பொருளென
உற்றவண் மறுமொழி மற்றெழு தினளாய்
அடியேற் கியைவ திதுவென விடலும் 125
மான்னீகை எழுதியதைக் கண்ட உதயணன் மீட்டும் எழுதிவிடல்
தொகுவடிவே லுண்கண் வாசவ தத்தை
திண்டிற லரசனைச் சென்றனள் வணங்கலும்
கண்டன னாகிக் கணங்குழை யெழுதிய
இயனோக் கினனாயியையா வாசகம்
தழலுறு புண்மேற் கருவி பாய்ந்தெனக் 130
கலங்கின னாகி யிலங்கிழைக் கீதோர்
நலங்கவின் காட்ட நணுகென வணுகிக்
கண்ட முறைமையிற் பண்டிய லாக்கவல்
கொண்டன னாகி யொண்டொடி யாகம்
இன்றை யெல்லையு ளியையா தாயிற் 135
சென்றதென் னுயிரெனத் தேவிமுகத் தெழுதி
வாட்டிறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலிற்
உதயணன் எழுதியதை மான்னீகை உணர்தல்
தொகுபெருமகள் செல்லத் திருமகள் வாசகக்
கரும மெல்லா மொருமையி னுணர்ந்து
வயாத்தீர் வதற்கோ ருயாத்துணை யின்றி 140
மறுசுழிப் பட்ட நறுமலர் போலக்
கொட்புறு நெஞ்சினைத் திட்பங் கொளீஇ
விளைக பொலிக வேந்த னுறுகுறை
களைகுவ லின்றெனுங் கருத்தொடு புலம்பி
மான்னீகை மறுமொழி யெழுதி விடுத்தல்
தொகுஅற்றை வைகல் கழிந்தபி னவளை 145
மற்றுய ரணிநலம் வழிநாட் புனைஇக்
கூத்தப் பள்ளிக் குச்சரக் குடிகையுட்
பாற்படு வேதிகை சேர்த்தன ளாகி
அரவுக் குறியி னயலவ ரறியா
இரவுக் குறியி னியல்பட வெழுதி 150
மாபெருந் தேவியை விடுத்தபின் மற்றவள்
மான்னீகை யெழுதியதைக் கண்டு உதயணன் உவத்தல்
தொகுதீவிய மொழியொடு சேதிபற் குறுகி
நோன்றாள் வணங்கித் தோன்ற நிற்றலும்
திருநுதன் மீமிசைத் திறத்துளிக் கிடந்த
அருளேர் வாசகந் தெருளுற வறிந்து 155
மற்றவள் பயந்தனள் பொற்புற வெழுதிய
இற்றைப் புதுநல மீனிதென வியம்பி
மாதர் நோக்கின் மான னீகைகட்
காமம் பெருகிக் காதல் கடிகொள
மாமனத் தடக்கித் தேவியொ டினியன 160
கூறியப் பகல்போ யேறிய பின்றை
மான்னீகை மறைந்திருத்தல்
தொகுமான னீகை வாசவ தத்தையைத்
தான்மறைந் தறைகுறி மேவின ளிருப்ப
உதயணன் செயல்
தொகுவென்வேற் றலைவனும் வேட்கை யின்றித்
தேவிய ரிருவர்க்கு மாறுதுயில் கூறக் 165
வாசவதத்தை உதயணன் செயலை அறியும்படி காஞ்சன மாலையை விடுத்தல்
தொகுகயிற்பூண் கோதை யயிர்த்தன ளிருப்பப்
பெயர்த்தன னொதுங்கிப் பெயர்தரக் கண்டே
காஞ்சன மாலையைக் கைவயிற் பயிர்ந்து
பூந்தார் மார்பன் புகுமிட னறிகென
ஆய்ந்த வேந்த னாடற் பேரறை 170
சார்ந்தபி னொருசிறை சேர்ந்தன ளிருப்பத்
உதயணன் மான்னீகையுடன் அளவளாவல்
தொகுதிருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து
விருப்பொடு தழுவி நடுக்கந் தீரக்
கூடிய வேட்கையி னொருவர்க் கொருவர்
ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும் 175
இருந்த பின்றை யிருவரு முறைமுறை
திருந்திய முகத்துப் பொருந்திய காதலொ
டெழுதிய வாசக மெல்லா முரைத்து
வழுவுத லின்றி வைகலு மீங்கே
குறியெனக் கூறிச் சிறுவிரன் மோதிரம் 180
கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க
காஞ்சனமாலை தான் அறிந்ததை வாசவதத்தைக்கு உணர்த்தல்
தொகுவிடுத்தவ ளேகி யடுத்தது முரைத்ததும்
தன்னுட் பொருமலொடு தனித்தனி தெரிய
இன்னதென் றெடுத்து நன்னுதற் குரைப்ப
வாசவதத்தைஉதயணனைக் கண்டு கூறல்
தொகுமுறுவல் கொண்டு செறுவகத் தடக்கிப் 185
பொறையாற் றலளா யிறையுயிர்த் தாற்றிப்
புலர்ந்த காலைப் புரவலற் குறுகி
நலங்கிளர் மலர்கொண் டிறைஞ்சின ளிருத்தியான்
இரவு கண்டேனொருகன வதனின்
புதுமை கேட்கிற் புரைதீர்ந் ததுவெனச் 190
உதயணன் வினாதல்
தொகுசெவ்வாய் வெண்ணகைத் திருந்திழை கண்ட
தெவ்வா றோவென வியம்பினன் கேட்பநின்
வாசவதத்தை கூறல்
தொகுமனத்துழைப் பெயரா வெனைக்கரந் தெழுந்தனை
தனித்துப் போயோர் தடந்தோண் மடந்தையொ
டாடரங் கேறி யணைந்திருந் தவளோ 195
டூடியு முணர்ந்துங் கூடிவிளை யாடியும்
தேறினி ராகித் தெளிவுட னிருவிரும்
மாறுமா றெழுதிய வாசகங் கூறி
மாதரு நீயு மயலுரைத் தெழுந்து
போதரும் போதையின் மோதிர மருளிப் 200
பெயர்ந்தனை நயனமு மலர்ந்தன வாங்கே
புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்கென
உதயணன் கூற்று
தொகுவண்டலர் கோதாய் மனத்தினு மில்லது
கண்டனை யாதலிற் கலங்கினை மற்றுநின்
உள்ளத் துள்ளே யுறைகுவே னாகவும் 205
கள்வ னென்று கருதினை யன்றியும்
நெறியுடை மகளிர் நினைப்பவுங் காண்பவும்
இவையிவை போலுங் கணவர்தந் திறத்தெனக்
வாசவதத்தை கூற்று
தொகுகனவிற் கண்டது பிறரொடு பேசக்
குறைபோ மென்றலிற் கூறினே னன்றியும் 210
யாவை காணினுங் காவலற் கன்றிப்
பேசுவ தெவரொடு பெரியோ யென்று
வாசவதத்தை உதயணனை நீங்கல்
தொகுமானார் நோக்கி மனத்தொடு நகையா
ஆனா நினைவுட னகறா வேந்தன்
உதயணன் செயல்
தொகுதேவியை யையந் தெளித்தன மொருவகை 215
யாரு மில்லென வினிதிருந் துவப்பப்
பானுவுந் தேரொடு படுவரை யிடைபுக
வாசவதத்தையின் செயல்
தொகுமான னீகையைக் காவல்வைத் தனளாய்
மாந்தளிர் மேனீயுங் காஞ்சன மாலையொடு
நேர்ந்தவக் குறியிற் றான்சென் றிருப்ப 220
உதயணன் செயல்
தொகுநிகழ்ந்ததை யறியா னெழுந்து மெல்லென
நடந்தவன் சென்றவ ளிடந்தலைப் படலும்
வேந்தன் செய்வது காண்குவ மென்று
காம்பேர் தோளி கையி னீக்கலும்
மான னீகைதா னூடின ளாகி 225
மேவல ளாயினள் போலுமென் றெண்ணி
முரசு முழங்கு தானை யரசொடு வேண்டினும்
தருகுவ லின்னே பருவர லொழியினி
மானே தேனே மான்னீ காயெனக்
கானேர் பற்றத் தானது கொடாஅ 230
துரைப்பது கேட்ப மறுத்தவ ளொதுங்கி
நிலைப்படு காமந் தலைப்படத் தரியான்
புதுமை கூறியிவண் முகம்பெறு கேனென
மதித்தன னாகி யொருமொழி கேளினி
முகைக்கொடி முல்லை நகைத்திரு முகத்துத் 235
தகைக்கொடி யனையோள் வாசவ தத்தை
இயைந்த நெஞ்சுடை யாமிரு வர்க்கும்
கழிந்த கங்குலி னிகழ்ந்ததை யெல்லாம்
கனவது முந்திய வினைய தாதலின்
அதனிற் கண்டெனக் கொளியா துரைப்ப 240
அதற்கொரு வழியான் மனத்தினு மில்லெனத்
தெளித்த நிலைமையுந் தெளிந்திலை யேயெனப்
பெயரப் பெயர முறைமுறை வணங்கி
இயனிலை மான னீகா யருளென்
றடுத்தடுத் துரைப்பவு மாற்றா னாகவும் 245
இதச்சொற் சொல்லவும் வணக்கஞ் செய்யவும்
வாசவதத்தையின் செயல்
தொகுபெட்ப வருதலிற் பிடித்தல் செல்லாள்
நக்கன ளாகி மிக்கோய் கூறிய
மானுந் தேனு மான னீகையும்
யானன் றென்பெயர் வாசவ தத்தை 250
உதயணன் செயல்
தொகுகாணெனக் கைவிட் டோடின னோடி
அடுத்த காட்சியிற் றனித்தொரு மண்டபத்
தொளித்தன னாகித் திகைத்தன னிருப்பச்
வாசவதத்தையின் செயல்
தொகுசினங்கொ ணெஞ்சொடு பெயர்ந்தவள் வதியப்
புலர்ந்தது கங்குலும் பொருக்கெனப் பொலிந்தென். 255
4 13 முகவெழுத்துக் காதை முற்றிற்று.