பெருங்கதை/4 15 விரிசிகை வரவு குறித்தது

(4 15 விரிசிகை வரவு குறித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

4 15 விரிசிகை வரவு குறித்தது

விரிசிகையின் இயல்பு

தொகு

ஆனா தொழுகுங் காலை மேனாள்
இலைசேர் புறவி னிலாவா ணத்தயற்
கலைசேர் கானத்துக் கலந்துட னாடிய
காலத் தொருநாட் சீலத் திறந்த
சீரை யுடுக்கை வார்வளர் புன்சடை 5
ஏதமில் காட்சித் தாபதன் மடமகள்
பூவிரிந் தன்ன போதமர் தடங்கணி
வீழ்ந்தொளி திகழும் விழுக்கொடி மூக்கிற்
றிருவிற் புருவத்துத் தேன்பொதி செவ்வாய்
விரிசிகை யென்னும் விளங்கிழைக் குறுமகள் 10
அறிவ தறியாப் பருவ நீங்கிச்
செறிவொடு புணர்ந்த செவ்விய ளாதலிற்
பெருமகன் சூட்டிய பிணைய லல்லது
திருமுகஞ்சுடரப் பூப்பிறி தணியாள்
உரிமை கொண்டன ளொழுகுவ தெல்லாம் 15

விரிசிகையின் தந்தை உதயணனை அடைதல்

தொகு

தரும நெஞ்சத்துத் தவம்புரி தந்தை
தெரிவன னுணர்ந்து விரைவனன் போந்து
துதைதார் மார்பி னுதையணற்குறுகிச்
செவ்விக் கோட்டியுட் சென்றுசேர்ந் திசைப்பித்
தவ்வழிக்கண்ணுற் ற்றிவி னாடிப் 20

முனிவன் கூற்று

தொகு

பயத்தொடு புணர்ந்த பாடி மாற்றம்
இசைப்பதொன் றுடையே னிகழ்தல்செல் லாது
சீர்த்தகை வேந்தே யோர்த்தனை கேண்மதி
நீயே நிலமிசை நெடுமொழி நிறீஇ
வீயாச் சிறப்பின் வியாதன் முதலாக் 25
கோடா துயர்ந்த குருகுலக் குருசில்
வாடா நறுந்தார் வத்தவர் பெருமகன்
தேனார் மார்ப தெரியின் யானே
அந்தமில் சிறப்பின் மந்தர வரசன்
யாப்புடை யமைச்சொடு காப்புக்கடன் கழித்தபின் 30
உயர்ந்த வொழுக்கோ டுத்தர நாடிப்
பயந்த புதல்வரைப் படுநுகம் பூட்டி
வளைவித் தாரும் வாயி னாடி
விளைவித் தோம்புதும் வேண்டிய தாமென
ஒடுக்கி வைக்கு முழவன் போல 35
அடுத்த வூழிதோ றமைவர நில்லா
யாக்கை நல்லுயிர்க் கரண மிதுவென
மோக்க முன்னிய முயற்சியே னாகி
ஊக்கஞ் சான்ற வுலகிய றிரியேன்
உம்மைப் பிறப்பிற் செம்மையிற் செய்த 40
தானப் பெரும்பயந் தப்புண் டிறத்தல்
ஞானத் தாளர் நல்லொழுக் கன்றென
உறுதவம் புரிந்த வொழுக்கினன் மற்றினி
மறுவி லேனமர் மாபத் தினியும்
காசி யரசன் மாசின் மடமகள் 45
நீல கேசி யென்னும் பெரும்பெயர்க்
கோலத் தேவி குலத்திற் பயந்த
வீயாக் கற்பின் விரிசிகை யென்னும்
பாசிழை யல்குற் பாவையைத் தழீஇ
மாதவம் புரிந்தே மான்கண மலிந்ததோர் 50
வீததை கானத்து விரதமோ டொழுகும்
காலத் தொருநாட் காவகத் தாடிப்
பள்ளி புகுந்து பாவங் கழூஉம்
அறநீ ரத்தத் தகன்றியான் போக

உதயணன் விரிசிகைக்கு மாலை சூட்டியது

தொகு

மறுநீங்கு சிறப்பிற் புண்ணியத் திங்கட் 55
கணைபுரை கண்ணியைக் கவான்முத லிரீஇப்
பிணையல் சூட்டினை பெருந்தகை மற்றிது
புணைதனக் காகப் புணர்திற னுரைஇ

விரிசிகையின் முதுக்குறைவு

தொகு

உற்றது முதலா வுணர்வுவந் தடைதரப்
பெற்றவற் கல்லது பெரியோர் திரிப்பினும் 60
கோட்டமில் செய்கைக் கொள்கையின் வழாஅள்
வேட்கையிற் பெருகிநின் மெய்ப்பொருட் டமைந்த
மாட்சி நெஞ்ச மற்றுநினக் கல்லது
மறத்தகை மார்ப திறப்பரி ததனால்

விரிசிகையின் தந்தை தன் மகளை மணஞ்செய்து கொள்ளும்படி உதயணனுக்குக் கூறல்

தொகு

ஞாலம் விளக்கு ஞாயிறு நோக்கித் 65
கோலத் தாமரை கூம்பவிழ்ந் தாங்குத்
தன்பாற் பட்ட வன்பி னவிழ்ந்த
நன்னுதன் மகளி ரென்ன ராயினும்
எவ்வந் தீர வெய்தின ரளித்தல்
வையத் துயர்ந்தோர் வழக்கால் வத்தவ 70
யாமகட் டருதுங் கொள்கெனக் கூறுதல்
ஏம வையத் தியல்பன் றாயினும்
வண்டார் தெரியல் வாண்முகஞ் சுடரப்
பண்டே யணிந்தநின் பத்தினி யாதலிற்
பயந்தனர் கொடுப்ப வியைந்தன ராகுதல் 75
முறையே யென்ப விறைவ வதனால்
யானே முன்னின் றடுப்ப நீயென்
தேனேர் கிளவியைத் திருநா ளமைத்துச்
செந்தீக் கடவுண் முந்தை யிரீஇ
எய்துத னன்றெனச் செய்தவ னுரைப்ப 80

விரிசிகையின் வதுவையை வாசவதத்தைக்கு உணர்த்தல்

தொகு

மாதவ னுரைத்த வதுவை மாற்றம்
காவற் றேவிக்குக் காவல னுணர்த்த

வாசவதத்தை உடன்படல்

தொகு

மணிப்பூண் வனமுலை வாசவ தத்தை
பணித்தற் கூடாள் பண்டே யறிதலின்
உவந்த நெஞ்சமொடு நயந்திது நன்றென 85
அரிதிற் பெற்ற வவந்திகை யுள்ளம்

உதயணன் விரிசிகையை மணஞ்செய்து கொள்ளல்

தொகு

உரிதி னுணர்ந்த வுதயண குமரன்
ஓங்குபுகழ் மாதவ னுரைத்ததற் குடம்பட்டு
வாங்குசிலை பொருதோள் வாழ்த்துந ராரா
அரும்பொருள் வீசிய வங்கை மலரிப் 90
பெரும்பொரு ளாதலிற் பேணுவனன் விரும்பி
நீரிற் கொண்டு நேரிழை மாதரைச்
சீரிற் கூட்டுஞ் சிறப்பு முந்துறீஇ
நாடு நகரமு மறிய நாட்கொண்டு
பாடிமிழ் முரசம் பல்லூ ழறைய 95
மாக விசும்பின் வானோர் தொக்க
போக பூமியிற் பொன்னகர் பொலிய

நகரமாந்தர் விரிசிகை வரவு காண விரும்பல்

தொகு

நாற்பான் மருங்கினு நகரத் தாளர்
அடையாக் கடையர் வரையா வண்மையர்
உடையோ ரில்லோர்க் குறுபொருள் வீசி 100
உருவத் தண்டழைத் தாபதன் மடமகள்
வருவழி காண்டு நாமென விரும்பித்
தெருவிற் கொண்ட பெருவெண் மாடத்துப்
பொற்பிரம்பு நிரைத்த நற்புற நிலைச்சுவர்
மணிகிளர் பலகை வாய்ப்புடை நிரைத்த 105
அணிநிலா முற்ற மயலிடை விடாது
மாத்தோய் மகளிர் மாசில் வரைப்பிற்
பூத்தோய் மாடமும் புலிமுக மாடமும்
கூத்தா டிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும்
நாயின் மாடமு நகரநன் புரிசையும் 110
வாயின் மாடமு மணிமண் டபமும்
ஏனைய பிறவு மெழினகர் விழவணி
காணுந் தன்மையர் காண்வர வேறிப்
பிடியுஞ் சிவிகையும் பிறவும் புகாஅள்
இடுமணல் வீதியு ளியங்குநள் வருகெனப் 115
பெருமக னருளினன் பெறற்கரி தென்று
கழிபெருங் காரிகை….

…மொழிந்தழி வோரும்
சேரி யிறந்து சென்று காணும்
நேரிழை மகளி ரெல்லா நிலையெனப் 120
பேரிள மகளிரைப் பெருங்குறை யாகக்
கரப்பி னுள்ளமொடு காத னல்கி
இரப்புள் ளுறுத்தல் விருப்புறு வோரும்
வண்ட லாடிய மறுகினுட் காண்பவை
கண்டினிது வரூஉங் கால மன்றெனக் 125
காவல் கொண்டன ரன்னையர் நம்மென
நோவன ராகி நோய்கொள் வோரும்
ஏனையோர் பிறரும் புனேவன ரீண்டி
விரைகமழ் கோதை விரிசிகை மாதர்
வருவது வினவிக் காண்பது மால்கொளக் 130
காண்டதொன் றுண்டெனக் கைத்தொழின் மறக்கும்
மாண்பதி யியற்கை மன்னனு முணர்ந்து
தடந்தோள் வீசித் தகைமாண் வீதியுள்
நடந்தே வருக நங்கை கோயிற்
கணியில் யாக்கை மணியுடை நலத்திற் 135
றமிய ளென்பது சாற்றுவனள் போலக்
காவ லின்றிக் கலியங் காடியுண்
மாவும் வேழமும் வழக்குநனி நீக்கி
வல்லென மணிநில முறாமை வாயில்
எல்லை யாக வில்லந் தோறும் 140
மெல்லெ நறுமலர் நல்லவை படுக்கென
உறுதொழி லிளையரை யுதயண னேவா
மறுவின் மாத ரொழியநங் கோயில்
நறுநுதன் மகளிரொடு நன்மூ தாளரும்
நண்பிற் றிரியாது பண்பொடு புணர்ந்த 145
காஞ்சுகி மாந்தருந் தாஞ்சென்று தருகென
நடந்தே வருமா னங்கைநந் நகர்க்கென
நெடுந்தேர் வீதியு மல்லா விடமும்
கொடைநவில் வேந்தன் கொடிக்கோ சம்பி
நிலையிடம் பெறாது நெருங்கிற்றாற் சனமென். 150

4 15 விரிசிகை வரவு குறித்தது முற்றிற்று.