பெருங்கதை/4 2 நாடு பாயிற்று

(4 2 நாடு பாயிற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

4 2 நாடு பாயிற்று

உதயணன் செங்கோல் சிறப்பு

தொகு

விளங்கவை நடுவண் வீற்றினி திருந்த
வளங்கெழு தானை வத்தவ பெருமகன்
வெங்கோல் வேந்தன் வேற்றுநா டிதுவெனத்
தன்கோ லோட்டித் மவற்றி னாட்டிய
புன்சொற் படுநுகம் புதியவை நீக்கிச் 5
செங்கோற் செல்வஞ் சிறப்ப வோச்சி
நன்னக ரகத்து நாட்டக வரைப்பினும்
தொன்மையின் வந்த தொல்குடி யெடுப்பிப்
படிறு நீக்கும் படுநுகம் பூண்ட
குடிகட் கெல்லாங் குளிர்ப்பக் கூறித் 10
திருந்திய சிறப்பிற் றேவ தானமும்
அருந்தவர் பள்ளியு மருகத் தானமும்
திருந்துதொழி லந்தண ரிருந்த விடனும்
தோட்டமும் வாவியுங் கூட்டிய நல்வினை
ஆவணக் கடையு மந்தியுந் தெருவும் 15
தேவ குலனும் யாவையு மற்றவை
சிதைந்தவை யெல்லாம் புதைந்தவை புதுக்கென்
றிழந்த மாந்தரு மெய்துக தமவெனத்
தழங்குரன் முரசந் தலைத்தலை யறைகெனச்
செல்வப் பெரும்புனன் மருங்கற வைகலும் 20
நல்கூர் கட்டழ நலிந்துகை யறுப்ப
மானம் வீட லஞ்சித் தானம்
தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக்
கன்னி காமம் போல வுள்ள
இன்மை யுரையா விடுக்க ணாளிரும் 25
ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும்
மூப்படர்ந் துழக்க முடங்கி னீரும்
யாப்பணி நன்னலந் தொலைய வசாஅய்த்
தீப்பிணி யுற்றுத் தீரா தீரும்
இடுமணன் முற்றத் தின்னியங் கறங்கக் 30
குடுமிக் கூந்தலு ணறுநெய் நீவி
நல்லவை நாப்பட பல்சிறப் பயர்ந்து
கொண்டோன் றுறந்து கண்கவிழ்ந் தொழுக
வாழ்த லாற்றாச் சால்பணி மகளிரும்
நிறைப்பெருங் கோலத்து நெறிமையின் வழாஅ 35
உறுப்புக்குறை பட்டீ ருட்படப் பிறரும்
வந்தனிர் குறுகி நுங்குறை யுரைத்துத்
துன்ப நீங்க வின்பம் பயப்ப
வேண்டின கொள்ளப் பெறுதிர் நீரென
மாண்ட வீதியொடு மன்ற மெல்லாம் 40
ஆர்குரன் முரச மோவா ததிரக்
கோடி முற்றி நாடொறும் வருவன
நாடு நகரமு நளிமலை முட்டமும்
உள்கண் டமைந்த கொள்குறி நுகும்பிற்
கணக்கருந் திணைகளு மமைக்குமுறை பிழையாது 45
வாயிற் செல்வங் கோயிலுட் கொணரப்
போரின் வாழ்நரும் புலத்தின் வாழ்நரும்
தாரின் வாழ்நருந் தவாஅப் பண்டத்துப்
பயத்தின் வாழ்நரும் படியிற் றிரியா
ஓத்தின் வாழ்நரு மொழுக்கின் வாழ்நரும் 50
யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும்
உயர்ந்தோர் தலையா விழிந்தோ ரீறா
யாவர்க் காயினுந் தீதொன் றின்றி
மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
கூற்றுயிர் கோடலு மாற்றா தாக 55
உட்குறு செங்கோ லூறின்று நடப்ப
யாறுந் தொட்டவு மூறுவன வொழுகக்
காடும் புறவுங் கவின்றுவளஞ் சிறப்பப்
பொய்யா மாரித் தாகி வைகலும்
தண்டா வின்பந் தலைத்தலை சிறப்ப 60
விண்டோய் வெற்பின் விளைகுர லேனற்
குறவ ரெறிந்த கோலக் குளிர்மணி
முல்லை தலையணிந்த முஞ்ஞை வேலிக்
கொல்லை வாயிற் குப்பையுள் வீழவும்
புன்புல வுழவர் படைமிளிர்ந் திட்ட 65
ஒண்கதிர்த் திருமணி யங்கண் யாணர்
மருத மகளிர் வண்டலுள் வீழவும்
வயலோ ரெடுத்த கௌவைக் கிருங்கழிக்
கயல்கொள் பொலம்புள் கதுமென வெருவவும்
திணைவிராய் மணந்து திருவிழை தகைத்தாக் 70
களவு மரம்புங் கனவினு மின்றி
விளைத லோவா வியன்பெரு நாட்டொடு
பட்டி நியமம் பதிமுறை யிரீஇ
முட்டின்று நிரம்பிய காலை யொட்டாப்
பகைப்புலந் தேயப் பல்களிற் றியானையொடு 75
தகைப்பெருந் தம்பியர் தலைச்சென் றகற்ற
ஆணை கேட்ட வகலிடத் துயிர்கட்
கேம வெண்குடை நின்னிழற் பரப்பி

உதயணன் செயல்

தொகு

வீணை வேந்தன் வியனாடு கெழீஇ
மகத மன்னவன் றானையொடு வந்த 80
பகையடு மறவரைப் பதிவயிற் போக்கி
அருவிலை நன்கல மமைந்தவை பிறவும்
தருசகன் கொள்கெனத் தமரொடு போக்கிப்
பட்ட மெய்திய பதுமா பதியொடு
முட்டில் செல்வத்து முடிதல் செல்லான் 85
மட்டுவினை கோதையொடு மகிழ்ந்துவிளை யாடிச்
செங்கதிர்ச் செல்வ னெழுச்சியும் பாடும்
திங்களு நாளுந் தெளிதல் செல்லான்
அந்தளிர்க் கோதையை முந்துதா னெய்திய
இன்பக் கிழவ னிடவகை யன்றி 90
மன்பெரு மகதன் கோயிலுள் வான்றோய்
கன்னி மாடத்துப் பன்முறை யவனொடு
கழிந்தவும் பிறவுங் கட்டுரை மொழிந்து
பொன்னிழை மாதரொ டின்மகிழ் வெய்திப்
பெருநகர் வரைப்பிற் றிருமனை யிருந்து 95
தீயன நீக்கித் திருவிழை தகைத்தாப்
பாயினன் மாதோ பயந்தநன் னாடென்.

4 2 நாடு பாயிற்று முற்றிற்று.