பெருங்கதை/5 3 இயக்கன் போனது

(5 3 இயக்கன் போனது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

5 3 இயக்கன் போனது

இயக்கன் கூற்று

தொகு

இயக்க னவ்வழி யிழிந்தனன் றோன்றி
மயக்கந் தீர்த்த மாசறு நண்பின்
அலகை யாகிய வரச குமரனை
உலகுப சாரத் துறைமுறை கழித்துக்
கிளையன் மன்னர் கேளிர் சூழத் 5
தளையகப் பட்ட காலையுந் தளையவிழ்
வண்ணக் கோதை வாசவ தத்தையொடு
பண்ணமை பிடிமிசைப் படைநரு மொழியத்
தனியே போந்தோர் கனிகவர் கானத்துக்
கூட்டிடைப் பட்ட கோட்புலி போல 10
வேட்டிடைப் பட்ட வெவ்வப் பொழுதினும்
அருந்திற லமைச்ச ன்றிவி னாடித்
திருந்திழை யல்குற் றேவியைப் பிரிப்ப
வருந்திய நெஞ்சமொடு மகத நன்னாட்
டரசிகந் தடர்த்த வாறா வெகுளித் 15
தருசகன் றங்கையைத் தலைப்பட் டெய்திய
துயரக் காலத்துத் தொன்னக ரெய்திய
பகைகொண் மன்னனைப் பணித்த பொழுதினும்
துயரந் தீர்க்குந் தோழனென் றென்னைப்
பெயராக் கழலோய்பேணா யாகி 20
ஒன்றிய செல்வமொ டுறுக ணில்லா
இன்று நினைத்த தென்னெனப் படுமென
வெஞ்சின வீரனை நெஞ்சுறக் கழறப்

உதயணன் கூற்று

தொகு

பட்டவை யெல்லா .. மெங்களின்
மாறடு வேலோய் மற்றவை தீர்தலின் 25
எம்மிற் றீரா விடர்வரி னல்லதை
நின்னை நினைத்த னீர்மைத் தன்றென
உள்ளிய தில்லென வுள்ளங் குளிர்ப்பத்
தகுவன நாடி முகமன் கூறி
அஞ்சொன் மழலை யவந்திகை யென்னுநின் 30
நெஞ்சமர் தோழி நிலைமை கேண்மதி
மிசைச்செல வசாஅ விழும வெந்நோய்
தலைச்செலத் தானுந் தன்மனத் தடக்கி
ஏறாக் கரும மிதுவென வெண்ணிக்
கூறாண் மறைப்ப வூறவ ணாடி 35
உற்றியான் வினவ விற்றென விசைத்தனள்
மற்றியாந் தீர்க்கு மதுகை யறியேம்
நயந்த நண்பி னன்னர் நோக்கி
உடையழி காலை யுதவிய கைபோல்
நடலை தீரத்த னண்பன தியல்பென 40
உரத்தகை யாள வுள்ளினே னென்னத்
திருத்தகு மார்வன் றிறவதிற் கிளப்பத்

நஞ்சுகன் கூற்று

தொகு

தாரணி மார்ப காரணங் கேண்மதி
மெச்சார்க் கடந்த மீளி மொய்ம்பின்
விச்சா தரருறை யுலகம் விழையும் 45
திருமக னீநின் பெருமனைக் கிழத்தி
வயிற்றகத் துறைந்த நயப்புறு புதல்வன்
அன்ன னாகுத றிண்ணிதி னாடி
மெய்ப்பொரு டெரியு மிடைதார் மன்னவ
பொய்ப்பொரு ணீங்கிய விப்பொருள் கேண்மதி 50
உள்ளிய வசாஅவஃ தொளியின்று கிளப்பின்

பிடியின் பண்டை வரலாறு

தொகு

மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவித்
திருமலர் கெழீஇய தெண்ணீர்ப் படுவின்
நருமதைப் பெயர்யாற் றொருகரை மருங்கின்
எண்ணரும் பருப்பத மென்னு மலைமிசை 55
ஒண்ணிதிக் கிழவ னுரிமையொ டிருந்துழிக்
கண்ணணங் குறூஉங் காரிகை நீர்மைப்
பத்திரை மேனகை திலோத்தமை யொருத்தி
பத்திரா பதியோ டுருப்பசி யரம்பைமுதற்
பாடகஞ் சுமந்த சேடுபடு சேவடி 60
நாடக மகளிர் நாலிரு பதின்மருட்
பல்வளைப் பணைத்தோட் பத்திரா பதியெனும்
மெல்லிய றன்னை வேந்தன் விடுக்கவப்
பணியொடு சென்று பனிமலர் பொதுளிய
ஆலங் கானத் தாற்றயன் மருங்கின் 65
இணருந் தளிரு மிருஞ்சினைப் போதும்
பிணர்படு தடக்கையிற் பிறவு மேந்தி
ஒண்ணுத லிரும்பிடி யொன்றே போலக்
கண்ணயற் கடாஅத்துக் களிவண் டோப்ப
மாறுதனக் கின்றி மறமீக் காரி 70
ஆறுதனக் கரணா வணிநல நுகர்ந்து
மருப்பிடைத் தாழ்ந்த பருப்புடைத் தடக்கை
செருக்குடை மடப்பிடி சிறுபுறத் தசைஇ
நறுமலர் நாகத் தூழ்முதிர் வல்லிப்
பொறிமலர் கும்பம் புதைய வுதிர 75
அஞ்சாப் பைங்கணோர் வெஞ்சின வேழம்
எழுவகை மகளி ரின்ப மெய்தி
அகமகிழ்ந் தாடு மண்ணல் போல
நின்ற வின்ப நேயங் காணா

பத்திராபதி யானைப்பிறப்பை விரும்பல்

தொகு

விழுநிதிக் கிழவன் விழையுங் காதலின் 80
நாடக மகளிர் நலத்தொடு புணர்ந்த
பாடகச் சீறடிப் பத்தி ராபதி
தான மகளிரொடு தண்புனல் யாற்றயற்
கானத் தாடிக் கடவா நின்றோள்
ஊழலர்ச் சோலையூ டுவந்துவிளை யாடும் 85
வேழப் பிறவும் விழைதக் கதுவென
உள்ளம் பிறழ்ந்ததை யுள்ளகத் தடக்கி

பத்திராபதி குபேரன்முன் செல்லுதல்

தொகு

வள்ளிதழ் நறுந்தார் வச்சிர வண்ணன்
அடிநிழல் குறுகிய காலை மற்றென்
மனத்ததை யியைகென நினைத்தனள் செல்லா 90
…..

குபேரன் அவளைச் சபித்தல்

தொகு

பிடியெழி னயந்து பெழர்ந்தன ளிவளென
ஒன்றிய வுறுநோ யோதியி னோக்கிச்
செயிர்த்த வுள்ளமொடு தெய்வ வின்பம்
பொறுத்தல் செல்லாது வெறுத்தனை பொன்மென
வேழ நினைஇ வேட்கை மீதூர்ந் 95
தூழ்வினை வகையி னுடம்பிட் டளகி
நன்றியில் விலங்கின் பிறவி நயந்துநீ
கானஞ் செய்த்து காரண மாக
மலைக்கணத் தன்ன மாசில் யானையுள்
இலக்கண மமைந்ததோ ரிளம்பிடியாகிப் 100
பிறந்த பின்றைச் சிறந்துநீ நயந்த
வேக யானையொடு விழைந்துவிளை யாடிப்
போக நுகர்கெனப் போற்றா னாகிச்
சாவ மற்றவ னிடுதலுஞ் சார்ந்து

பத்திராபதி வினாதல்

தொகு

தேவ வாய்மொழி திரியா தாகலின் 105
நீடுபெற லரிதா நெடுங்கை விலங்கின்
வேடுபெறல் யாதென விளங்கிழை வினவ

சாபவிடை

தொகு

அண்ண ன்றறா ளவந்தியர் கோமான்
பண்ணமை வாரியுட் பண்ணுப் பிடியாப்
பற்றப் படுதி பட்ட பின்னாள் 110
அலகை யாகிய வைம்பெருங் குலத்துட்
கொலைகெழு செவ்வேற் குருகுலக் குருசில்
உலகம் புகழு முதயண குமரனைப்
பிறைமருப் பியானைச் பிரச்சோ தனன்றமர்
சிறைகொளப் பட்டுச் செல்லா நின்றுழி 115
மண்ணமை நெடுந்தோண் மறமாச் சேனற்குப்
பண்ணமை பிடியாய் நீயு மவற்றுள்
யானை வித்தகர் தானத்தின் வடிப்ப
நடையொடு நவின்ற காலை யவ்வழிப்
படையுடை வேந்தன் பனிநீர் விழவினுட் 120
குடைகெழு வேந்தன் குருகுலக் குருசில்
ஒண்ணறுந் தெரிய லுதயண னேறப்
பண்ணிச் செல்க பத்திரா பதியென
வீர வேந்தன் விளங்கிழைக் குறுமகள்
வார்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையை 125
ஆர்வ வுள்ளத் தவனுட னேற்றி
ஊரப் படுநீ யோரிரு ளெல்லையுள்
உலப்பரு நீளதர் தலைச்செல வோடிக்
கால கூட மென்னும் வெந்நோய்
சாலவும் பெருக மேன்மே னெருங்கி 130
விலக்குவரை நீல்லாது வெம்பசி நலிய
வீழ்ந்த காலை மேயவ னத்தலை
ஆய்ந்த வுள்ளமொடு சேர்ந்தன னாகி
அஞ்சா தைம்பத நினைமதி நீயென
எஞ்சா தவணீ யியல்பினிற் றிரியாது 135
சிந்தையொடு முடிந்தது காரண மாக
ஊனமை விலங்கி னுடம்பவ ணொழிய

பத்திராபதி பழைய உருப்பெற்றுக் குபேரனை அடைந்து வணங்கல்

தொகு

ஈனமில் யாக்கையோ டிவ்வழி வந்துநின்
முன்னைப் பேரொடு பெண்ணுரு வெய்தி
இத்துணை வாழ்தியென் றுரைக்கப் பட்ட 140
அன்ன தன்மையோ டிறந்த வாயிழை

பத்திராபதி குபேரனை வரம் வேண்டிக் கொள்ளல்

தொகு

மன்னருண் மன்ன நின்னரு ணிகர்க்கும்
மாற்றுப கார மனத்தி னெண்ணி
நிச்ச நிரப்பி னிலமிசை யுறைநர்க்
கெச்சம் பெறுத லின்ப மாதலின் 145
மற்றது முடிக்கு முயற்சியோ டுற்றதன்
வளநிதிக் கிழவனை வாழ்த்துவனள் வணங்கி
அளவி லின்பத் தாடலிற் பணிந்து
பெருவரம் பாகிய பொருவில் செல்வவோர்
சிறுவரம் வேண்டுவென் றிரியா தீமென 150
நிவந்த வன்பி னுவந்தது கூறெனக்
கவிழ்ந்த சென்னியன் கைவிரல் கூப்பி
வன்க னுள்ளத்து மன்னர்க் கொவ்வா
அங்கவ னுள்ளமோ டருண்முந் துறீஇ
என்குறை முடித்தே னினியென் னாது 155
துன்புறு கிளவியிற் றென்னல மழுங்கத்
திருமலர் நெடுங்கண் டெண்பனி யுறைத்தந்
திருமணி யாகத் தகல நனைப்ப
எவ்வ வுள்ளமோ டிரத்த லாற்றான்
தைவந் தளித்துத் தக்கது செய்தோய் 160
படர்கூ ரியாக்கையுட் பற்று விட்டகன்
றிடர்நீர்ந் தினியை யாகவென் குறையெனக்

உதயணனுக்காக மகப்பேறு வேண்டல்

தொகு

கடவது கழித்த காவலன் றனக்கோர்
மறுவில் சிறப்பினோர் மகனை வேண்டுவேன்
பெறுதற் கொத்த பிழைப்பில னாயினும் 165
அறாஅ வருநிதிக் கிழவ னதனை
மறாஅ தருளென மடமொழி யுரைப்பப்
பெரிதவ னுணர்ந்து பெற்றனை நீயெனச்

குபேரன் சௌதர்மேந்திரனை ஏத்தல்

தொகு

சொரிதரு விசும்பிற் சோதமற் குறுகிப்
பாத்தில் பெருமைப் பரதன் முதலாச் 170
சேய்த்தின் வந்தநின் குலமுஞ் செப்பமும்
வைத்தக் காட்சியும் வல்லிதிற் கூறிச்
சிதைவில் செந்நெறி சேர்ந்துபின் றிரியா
உதையண குமரற் குவகையிற் றோன்றுமோர்
சிறுவன் வேண்டுமது சிறந்ததென் றேத்தப் 175

சௌதர்மேந்திரன் சோதவனுக்குக் கட்டளையிடுதல்

தொகு

பின்னை மற்றவன் மன்னிய வேட்கையொடு
விச்சை யெய்தி வெள்ளியம் பெருமலை
அச்சமி லாழிகொண் டரசுவீற் றிருத்தற்கு
நச்சி நோற்றவோர் கச்சமில் கடுந்தவச்
சோதவ னென்னு மிருடி யுலகத்துத் 180
தேவ யாக்கையொடு போக மெய்திய
நிதான வகையி னினைத்தினி திருந்தனன்
நாவலந் தண்பொழி னலத்தொடு தோன்றிப்
பாவ நீக்கிய பரதன் பிறந்த
ஆய்பெருந் தொல்குடித் தோன்றி யிப்பால் 185
மாசில் விஞ்சையர் மலையகத் தழீஇ
ஆழி யுருட்டி யென்வயின் வரூஉம்
ஊழி யிதுவென வுணரக் கூறி
ஆய வெள்ளத் தவனை யழைத்தே
குறையா வுருந்தவக் கிழவனை நோக்கி 190
மன்னிய வத்தவன் றேவி வயிற்றுள்
துன்னினை படுநா ளின்ன தாதலின்

…னூலவ னுரைப்ப

சௌதர்மேந்திரன் சோதவனை விடுத்தல்

தொகு

மேலயம் பாற்கடல் வெள்ளேறு கிடந்த
வாலிதழ் நறுமலர் வைகறை யாமத்துக் 195
கனவின் மற்றவன் கையிற் கொடுத்து
வினையி னெதிர்பொருள் விளங்கக் காட்டென
இந்திரன் விடுத்த காலை வந்தவன்

சோதவன் பத்திரையை உதயணன்பால் அனுப்பல்

தொகு

பைந்தளிர்க் கோதைப் பத்திரைக் களிப்ப
ஒள்ளரி மழைக்கட் டேவியை யுள்ளிநீ 200
பள்ளி கொண்டுழிப் பரிவுகை யகல
வெள்ளிய நறும்பூத் தந்தனள் விளங்கிழை
ஆர்வ வுள்ள முடையோர் கேண்மை
தீர்வதன் றம்ம தேர்ந்துணர் வோர்க்கே
ஆயினு மக்குறை முடித்த லாற்றுவென் 205

பத்திராபதியின் நன்றியறிவு

தொகு

தானவட் டந்தன டளிரிய லாதலின்
இதுவு நன்னயஞ் சிறிதென வதனைத்
தான்வெளிப் படாஅ ளின்னு நுனக்கோர்
வான்வெளிப் படூஉம் வாரி விழுப்பொருள்
தருதல் வேட்கை யொருதலை யுடையள் 210

இயக்கன் பத்திராபதியைத் தியானிக்கும்படி கூறல்

தொகு

ஆனாக் கடுந்திற லண்ண லதனால்
மேனாட் கிழமை விண்ணவர் மகளை
மனத்தி னுள்ளி மந்திரங் கூறி
நினைத்த பொழுதி னின்முனர்த் தோன்றும்
தோன்றிய பின்னர்த் தோன்றலைத் தந்த 215
மகனது வரவு முறைமையி னுணர்த்துநீ
அகனமர்ந் துரைத்த வயாஅ வரும்பொருள்
இற்றென வுரைத்தலு முற்றிழை தீர்க்கும்
மற்றிதுமுடியா தாயின் மறித்தும்

இயக்கன் ஒரு மந்திரத்தை உபதேசித்தல்

தொகு

வருவல் யானென வொருபதங் கொடுத்துக் 220
குறிகொண் மாற்றங் கொள்ளக் கூறிச்
சென்றியான் வருவல் செம்மல் போற்றெனக்
குன்றா நன்மொழி யொன்றல பயிற்றிக்
கடிகமழ் மார்ப கவல லென்று

இயக்கன் செல்லுதல்

தொகு

தொடியுடைத் தடக்கையிற் றோழனைப் புல்லிப் 225
பசும்பொற் பல்கலம் பல்லூ ழிமைப்ப
விசும்பின் மின்னென மறைந்தனன் விரைந்தென்.

5 3 இயக்கன் போனது முற்றிற்று.