அண்ணாவின் பொன்மொழிகள்/சமூகப் புரட்சி!
சமூகப் புரட்சி!
தன்மானத் தோழர்களே! வீறுகொண்டு எழுங்கள்! வீழ்த்துங்கள் வீணரை! உயர்த்துங்கள் உழைப்பாளியை! மடமையை மடியச் செய்யுங்கள்! மானமாய் வாழுங்கள்! அறிவே துணை அன்பே குணம் எனக் கொள்ளுங்கள்!
🞸🞸🞸
ஒரு நாட்டின் நிலை, அதன் நினைப்பை உருவாக்குகிறது. உன்னத நிலையிலுள்ள நாட்டின் நினைப்பு உயர்ந்திருக்கும்; தாழ்ந்த நிலையிலுள்ள நினைப்புத் தாழ்ந்திருக்கும்.
🞸🞸🞸
ஒரு நாட்டின் நாட்டின் நினைப்பைப் பார்த்துத்தான் அந்நாட்டின் நிலை மதிப்பிடப்படும்.
🞸🞸🞸
தாழ்ந்த தமிழகத்தை உயர்த்தவேண்டும் என்றும், இன்று மக்கள் மனதில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை--தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறான கருத்துக்களை அகற்றி, ஆங்கே பண்டைய உயர்ந்த கருத்துக்களைக் குடியேற்ற வேண்டும் என்றும் நினைப்புகள் தோன்றியிருக்கின்றன. இந்த நினைப்புகள் பாமர மக்கள் மனத்திலும் தோன்ற, நாட்டில் எங்கும் அறிவுப் பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.
🞸🞸🞸
பாமரரிடம் படிப்பு இல்லை; படித்தவர்களிடம் பண்பு இல்லை. இன்று சொல்லித் தரப்படுகின்ற பாடமுறையே மாற்றி அமைக்கப்பட வேண்டும்
🞸🞸🞸
சுக்கு நூறாகிவிட்ட கலம், கடலடி சென்று ஆண்டு பல ஆன பிறகும், விஞ்ஞானக் கருவிகளின் மூலம் கடலடி சென்று, கலத்தின் பகுதிகளையும், அதிலிருந்த பொருள்களையும் எடுத்து வரும் பெருமுயற்சியில், மேலை நாட்டவர் வெற்றிகரமாக ஈடுபடுகிறார்கள் என்றால், ஒரு காலத்தில் உன்னதமான நிலைமையில் வாழ்ந்து, உலகிலே உயரிடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக்காலத்திலே எத்தரின் பிடியிலே சிக்கியதால் சீரழிந்த நாட்டையும், சமுதாயத்தையும் புதுப்பிப்பது ஏன் சாத்தியமாகாது? இந்தத் தளராத நம்பிக்கை தான் மறுமலர்ச்சி இயக்கத்திலே பணிபுரிபவர்களுக்கு உள்ள பெரியதோர் துணை.
🞸🞸🞸
வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையில் உள்ள விளக்கு, பட்டுக்கொண்டே வரும் நிலையில் உள்ள மரம், உலர்ந்து கொண்டு வரும் கொடி, வற்றிக் கொண்டிருக்கும் குளம்--இவைபோல சமுதாயத்தில் நிலையும் நினைப்பும் நடவடிக்கையும் ஆகிவிடும் போது, இந்த அவல நிலையை போக்கியாக வேண்டுமென்ற ஆர்வமும், போக்க முடியும் என்ற நம்பிக்கையும், போக்கக் கூடிய அறிவாற்றலுங் கொண்ட ஒரு சிலர் முன் வருகிறார்கள். அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற அவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்யும்! மதிப்பளிப்பதில்லை; மாச்சரியத்தை வாரி வீசும்; துணை புரிவதில்லை; தொல்லை தரும்! எனினும், அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து, சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல் புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிந்து, பட்ட மரம் துளிர்விடும் வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடும் வரையில் பாடுபட்டு, வெற்றி கண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்.
🞸🞸🞸
பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால் தான் மக்களுக்குப் பழமையினிடத்திலுள்ள பாசம் குறையும்; மனத்திலுள்ள மாசு நீங்கும்; காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும். அப்பொழுது மக்கள் உணவுப் பஞ்சத்தால் மடியும் பொழுது சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது. மழையைப் பற்றி ஆராய்ச்சி நடக்கும். சொற்பக் காலத்தில் விளையக் கூடிய பயிர்களைப்பற்றி ஆராய்ச்சி நடக்கும்.
🞸🞸🞸
நாடு நிலை உயர்ந்திருந்தும், நினைப்பு உயராததற்குக் காரணம், மூட நம்பிக்கை--நினைப்புநிலை உயர்ந்த அளவுக்கு உயர்வதற்கு ஒரே மார்க்கம். பகுத்தறிவைப் பரப்பவேண்டும். பாடத்திட்டத்திலே நான் முன்பு கூறியது போல, பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான ஒரு திட்டம் வகுக்கப்படாத வரையில், பகுத்தறிவும் பரவாது; நமது நினைப்பும் உயராது.
🞸🞸🞸
பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்க முடியுமே தவிர, வேறு எந்த மருந்தாலும் போக்க முடியாது.
🞸🞸🞸
பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது.
🞸🞸🞸
பணம். கோயில்களிலே நகையாய் வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்கு வாதம் தீர்ந்தால்தான் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம்.
🞸🞸🞸
இந்த நாட்டை ஏழை நாடென்று எவராவது கூறமுடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவன் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது.
🞸🞸🞸
நாட்டிலே பொருள் இவ்விதம் ஒரு மூலையில் குவிந்து முடக்குவாதமாய் முடங்கிக்கிடக்க, மக்கள் பசியென்றும், பிணியென்றும் பதறி அழுகின்றார்கள்; பகவானைப் பிரார்த்திக்கின்றார்கள் பசிப்பிணி நீக்கிட படையல் போட்டு. என்ன பரிதாப நிலை?
🞸🞸🞸
தர்ம சத்திரமென்றும், மடமென்றும் கட்டி ஒரு சிலரை உழையாது உண்ணும் சோம்பேறிகளாக்க வசதியளிக்கிறோம். இது தகுமா? நீதியா? இதுதான் அறமா?
🞸🞸🞸
கோயில்களிலே உள்ள ஆயிரங்கால் மண்டபங்களெல்லாம் கல்விச் சாலைகளாய், ஆராய்ச்சி நிலையங்களாய் மாறினால், நூற்றுக்கால் மண்டபங்களெல்லாம் நூல் நிலையங்களாய், வாசகசாலைகளாய் மாறினால், மக்கள் மடமையினின்றும் விடுபட்டு மதியைப் பெறுவது எத்தனை எளிது என்று சிந்தியுங்கள் தோழர்களே!
🞸🞸🞸
எவ்வளவோ இயற்கை வளம் பெற்ற இந்த நாட்டில் எல்லாச் செல்வங்களையும் படைத்த ஆண்டவர்கள் அநேகர் வாழும் இந்த நாட்டில்--பிறந்து வளர்ந்து உணவின்றிப் பசியுடன், வாழவும் வகையற்று, ஒரு சாண் வயிற்றை நிரப்பமுடியாது நிர்க்கதியாய், பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கடல் கடந்து மலாய் நாட்டுக்கும். சிங்கப்பூருக்கும் தோட்டக் கூலிகளாய்ச் செல்கின்றனரே! ஏன் செல்வமில்லையா இந்த நாட்டில் அவர்களைச் சீர்படுத்த?
🞸🞸🞸
இடிந்த மனத்தைப் புதுப்பிக்கவேண்டிய நேரத்திலே, இடிந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு, பூசாரி புளகாங்கிதமடைகிறான். மக்கள் மனம் குமுறிக் கிடக்க, கடவுளுக்குக் கும்பாபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பசிக்கு உணவில்லை; இருக்க இடமில்லை; வாழ வசதி இல்லை மக்களுக்கு. ஆனால் ஆண்டவனுக்குக் கோயில் திருப்பணி, குடமுழுக்குகள் முதலியவைகளுக்குக் குறைவில்லை.
🞸🞸🞸
படித்த கூட்டம் பதவியிலும், பரமன் அருளிலும் மூழ்கிக்கிடக்கிறது. பாமரரோ பரிதவிக்கின்றனர் பசியால்.
🞸🞸🞸
இந்த அகில உலகைப் படைத்தவனுக்குக் கோயில் கட்டுவதிலும், கும்பாபிஷேகம் செய்வதிலும், தங்க ரிஷபம், வெள்ளித்தேர் போன்ற விதவிதமான வாகனங்கள் செய்வதிலும், அவற்றின் வாலறுந்தால், காதறுந்தால், காலொடிந்தால் அவற்றை ஈடு செய்வதிலுந்தான் இன்று மக்கள் அறிவையும் பணத்தையும் பயன்படுத்துகின்றனர். படிக்கும் மக்கள் ஹாஸ்டல் வசதியற்றிருக்கும்போது, படிக்கப்பள்ளிகளிலே இடமில்லாது ஏங்கித் தவிக்கும் போது, பரந்த இந்தத் திருநாட்டின் நிலைமையைப் பாருங்கள்.
🞸🞸🞸
வாழ்வு என்பது அனைவருக்கும் உள்ள உரிமை இதைப் பறிக்கும் முறையில் உள்ள அமைப்புக்கள் அழிக்கப்படவேண்டியன.
🞸🞸🞸
சமுதாயத்திலே புதிய துறைகள், அதன் அமைப்பிலே புதியதோர் மாற்றம் தேவை. அந்தப் புதிய உருவத்தை உருவாக்கும் உயரிய பணிதான் மறுமலர்ச்சி.
காலவேகம்! காலவேகம், மனித வாழ்வைப் பலப்பல விதங்களிலே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது.
விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு. தீங்கு!
🞸🞸🞸
விதி என்னும் சதி
விதிக்கு நாம் அடிமைப்பட்டது அந்நியனுக்கு அடிமைப்பட்டதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே; விதி நமது பரம்பரை நோய் - பூர்வீகச் சொத்து; ஆஸ்ரமத்திலே பிறந்தது; அரண்மனையிலும், குடிசையிலும், சரிசமமாகப் படர்ந்த பழம் பெரும் நோய். ஜொலித்திடும் சாம்ராஜ்யங்களும், மணங் கமழும் கலை நயங்களும், காவியமும் வீரமும் செல்வமும் மேலோங்கியிருந்த நாட்களிலேயே இந்த நோய் நம்மைப் பிடித்து ஆட்டிப் படைத்தது. ஆனால் புண்ணின் கெட்ட வாடை வெளியே தெரியாதிருக்க, பன்னீர்கொண்டு அதனைக் கழுவிப் புனுகு பூசி, மறைத்திடுதல், போல நாம் சாம்ராஜ்யச் சிறப்பு, கலையழகு என்னும் பல்வேறு பூச்சு வேலைகளினால் புண்ணின் கெட்ட வாடையைக் குறைத்துப் பார்த்தோம்; மறைத்துப் பார்த்தோம், போக்கிட முயற்சிக்கவில்லை.
🞸🞸🞸
மதுரம் தரும் பழமாயிற்றே, நமது தோட்டத்திலே கிடைத்ததாயிற்றே. இதிலே நெளிவது புழுவாக இருக்கமுடியாது; பழத்திலே சுவை இருக்கும்; புழு எப்படி இருக்கும் என்று யாராவது வாதாடுவார்களா? பழம் அழுகுவது போல, மலர் கசங்கி மணத்தை இழந்து பிறகு கெட்ட வாடை கொள்வது போல, தழை சருகு ஆவது போல, கட்டடங்கள் கலனாகிக் குப்பை மேடு ஆவது போல, பலப்பல தத்துவங்களும், ஏற்பாடுகளும் காலச்சிறையிலே கிடந்து, கிடந்து கெடுவதும், பல கேடுகளை உற்பத்தி செய்வதும், இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்ச்சி; இதனை உணர மறுப்பது உலகை அறியாதார் போக்கு.
🞸🞸🞸
விதி, ஒரு நோய்; நெடுநாளாக மனித சமுதாயத்தில் இருந்து வருவது. அதன் பிடியும். வேகமும் குறைக்கப்படுவதற்கு மற்ற நாட்டினர் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் அளவையும், திறத்தையும் விடச் சற்று அதிகமான அளவிலும், திறத்திலும் நாம் விதியெனும் நோவைக் குறைக்க அல்ல---வளர்த்திட வேலை செய்து கொண்டிருந்தோம். அதனாலே தான் விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை, இங்கு மிக மிகக் கவலை தரும் அளவுக்கு இருக்கிறது.
🞸🞸🞸
குழந்தையின் கேள்வி
அன்பையும்--அன்னத்தையும் ஒன்றாகக் கலந்து வானத்திலுள்ள நிலவையும் காட்டிக் குழந்தைகளுக்குத் தாய் சோறிடும் போது, குழந்தையும் நிலவைப் பார்க்கிறது. ஏதேதோ எண்ணத்தான் செய்கிறது; ஏதேதோ கேள்விகளைக் கேட்கிறது.
'யாரம்மா இவ்வளவு அழகான விளக்கை அவ்வளவு உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த ஒரு விளக்கைச் சுற்றி ஏனம்மா அவ்வளவு சிறுசிறு விளக்குகள் உள்ளன?' என்று கேட்கிறது.
அம்மா அந்தச் சந்திரனைப் பிடித்துத்தா; நான் பந்தாட வேண்டும் என்று கேட்கிறது இன்னொரு குழந்தை. நிலவையும் பார்த்து விட்டுத் தன் அன்னையின் திருமுகத்தையும் பார்த்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறது இன்னோர் குழந்தை
🞸🞸🞸
குழந்தை உள்ளத்திற் குமுறி எழும் எண்ணங்கள் வேடிக்கையானவை--ஆனால் முடிவுகள் அல்ல; ஆசை அலைகள் அவை. மனித சமுதாயத்தில் குழந்தைப் பருவத்திலேயும் இதே போலத்தான் ஒவ்வொரு நிழ்ச்சிக்கும், இயற்கைக் காட்சிக்கும் ஏதோ ஒரு வகையான காரணம் தேடி அலைந்து, பலப்பல விசித்திரமான காரணங்களை, விளக்கங்களை மனித சமுதாயம் எண்ணிற்று--பேசிற்று--நம்பலாயிற்று.
🞸🞸🞸
மனித சமுதாயத்தில் பாலப் பருவத்தில் கிடைத்த பல உண்மைகள், இன்று உண்மைகள் என்று உலகினரால் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை.
🞸🞸🞸
பர்மாவை ஐப்பானியர் பிடித்தபோது, அவர்கள் வெளியிட்ட நோட்டுகள் எப்படி இன்று பர்மாவில் செல்லுபடியாகாதோ, அது போலச் செல்லுபடியாகாத நோட்டுகளைச் சேகரித்து வைத்துச் சிறுபிள்ளைகள் விளையாடினால், கேடு அதிகம் இல்லை; அந்த நோட்டுகள் செல்லுபடியாக வேண்டும் என்று வாதாடினால். நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொல்லை. அதுபோல் மனித சமுதாயத்தின் சிறுபிள்ளைப் பருவ எண்ணங்களை -- ஏற்பாடுகளை --தத்துவங்களை--விளக்கங்களை இன்னும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய கேடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
🞸🞸🞸
விதியின் விளையாட்டு
எதிர்பார்ப்பதற்கு நேர்மாறான நிகழ்ச்சிகளைக் காணும்போது, சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் துவக்கப்பட்ட காரியம், நல்ல முயற்சிக்குப் பிறகும் முறிகிறபோது, போட்ட கணக்குப் பொய்யாகும். போது, விதைத்து முளைக்காதபோது, நண்பர்களிட மிருந்து பகை கிளம்பும்போது, ஓவியம் தீட்டுகையில், வண்ணக்கலயம் உடையும்போது, வீணையை மீட்டும் போது நரம்பு அறுந்து, அறுந்த நரம்பு வேகமாகக் கண்ணில் பாயும்போது, இவை போன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள் - மனதைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நேரிடும் போது, மனம் ஒடியுமோ என்று மருளும்போது, ஏதேனும் ஒரு வகை ஆறுதல் தேவைப்படுகிறது. அப்போது விதியெனும் தத்துவம் வெற்றிச் சிரிப்புடன் மக்கள் உள்ளத்திலே புகுந்து கொள்கிறது. குடிபுகுந்த பிறகு விதிதான் எஜமான். அந்த எண்ணத்துக்கு. இடமளித்தவன், பிறகு தெய்விக முலாம் பூசிவிட்டனர் விதியென்ற தத்துவத்திற்கு. ஆகவேதான் அதனை உதறித் தள்ள நெஞ்சு உரம் பலருக்கு வருவதில்லை.
🞸🞸🞸
மேலுலகத்தில் ஏதோ ஓர் பெரும் ஏடு இருப்பது போலவும், அதிலே பூலோகவாசி ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் முன் கூட்டியே எழுதி வைக்கப்பட்டிருப்பது போலவும், அதன்படிதான் சகல காரியமும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பல வழிகளில் இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தினர். எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம் என்பதை அறிந்தார்களோ இல்லையோ, மனிதன் மனதை முடமாக்குகிறோம், கருத்தைக் குருடாக்குகிறோம் என்று தெரிந்து செய்திருந்தால், அவர்கள் மாபெரும் துரோகிகள்; தெரியாமல் செய்திருந்தால் ஏமாளிகள், கபடராயினும், கசடராயினும் அவர்கள் கட்டிவிட்ட கதைகள், இந்த நாட்டு மக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கெடுத்து விட்டது--தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்தது--முயற்சிகளை முறியடித்தது--முற்போக்கைக் கெடுத்தது.
🞸🞸🞸
முயற்சி பலனளிக்காதபோது, திட்டம் தகர்ந்து விடும் போது, நோக்கம் ஈடேறாதபோது, ஏன் முயற்சி பலிக்கவில்லை; திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை; நமது கணக்கு ஏன் பொய்த்துப் போயிற்று; காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, ஆராய்ச்சி செய்ய, திருத்தம் தர, இந்த 'விதி'யெனும் தத்துவம், மனிதனை விடுவதில்லை.
🞸🞸🞸
இந்த விதியை வெல்ல, அல்லது முன் கூட்டியே தெரிந்து கொள்ள, மாற்ற, திருத்த, ஏதாவது செய்யலாமா என்ற ஆசை கிளம்பலாயிற்று. அதனைப் பூசாரிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள் என்போர் பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் வாழ்வு நடத்த, பிறகு அவர்கள் அந்த வாழ்விலே கிடைக்கும் சுகத்தை இழக்க மனமின்றி விதியை மக்கள் நம்புவதற்காக, மேலும் மேலும் கற்பனைக் கதைகளைக் கட்டி விடலாயினர்--கடவுளின்மீது ஆணையிட்டு எதையும் பேசினர்--ஏழை ஏமாளியானான்.
🞸🞸🞸
விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை நிச்சயமாக. நாம் எதிர்பார்த்ததைவிட, விரைவில் ஒழியத்தான் போகிறது - அசைவும் ஆட்டமும் கொடுத்து விட்டது.
🞸🞸🞸
இப்போது மட்டும், இந்நாட்டு எழுத்தாளரும், பேச்சாளரும், இசைவாணரும், படப்பிடிப்பாளரும் அறிவுத் துறைக்குத் துரோகம் இழைக்காமல், மீண்டும் மீண்டும் விதிக்கு அடிமையாகும் வேதனைக்கு எரு இடாமல் அதற்கு ஆதாரமாக உள்ள கற்பனைக் கதைகளைக் கருத்துக்களைப் பரப்பாமல் விதி பற்றிய எண்ணத்தை, விடவேண்டிய அவசியத்தை, விதிக்கு அடிமைப்படாமல் இருந்தால் எவ்வளவு நலன் நாட்டுக்குக் கிடைக்கும் என்பதை--எத்தன் எப்படி வஞ்சிக்கிறான் என்பதை விளக்கத் தமது அறிவையும், திறமையையும் ஒரு பத்து வருஷ காலத்துக்குப் பயன்படுத்த முன் வந்தால்...நிச்சயமாக, உறுதியாகக் கூறலாம் விதிக்கு அடிமைத்தனம் ஒழிந்தே தீரும் என்று.
🞸🞸🞸
விதி என்றும், சப்மரைன், டார்பிடோ, விமானம் விஷப்புகை, வெடிகுண்டு இவைகளைப் போன்ற படைக் கலங்களைக் கொண்டு இல்லை. அப்படிப்பட்ட படைக்கலங்களைக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நமக்கு இந்த நாளில் சாதாரண ஏடுகள்--அதிலும் காலமெனும் செல்லரித்த ஏடுகள், அவைகளிலே காணப்படும் கருத்துக்குக் குழப்பம் தரும் கற்பனைகள், அந்தக் கற்பனைகளை நம்பிப் பிழைக்கும் கபடர்கள் ஆகிய இவ்வளவு படைக்கருவிகளை மட்டுமே கொண்டுள்ள விதிக்கு அடிமைத்தனம் பழமையை முறியடிப்பது முடியாத காரியமல்ல.
🞸🞸🞸
மனிதன் முன்னேற
மனிதன் மனவளமும், மனத்திடமும், நல்லறிவும் பெறவேண்டும். ஆராயுந்திறனை அடைந்திடவேண்டும். பகுத்தறிவும் பண்பும் படைத்தவனாக வாழவேண்டும். இந்தச் சூழ்நிலையை அமைத்தாக வேண்டும். மனிதத் தன்மையோடு வாழ பகுத்தறிவைப் பரப்பும் நிலை, மனிதனை 'மனிதன்' என்ற எண்ணத்தோடு வாழ வைக்கும் சூழ்நிலை தேவை, உடனடியாகக் தேவை.
🞸🞸🞸
பழைய காலத்தைப்போல நாம் நடக்க முடியாது. நடக்கத்தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக் கொள்ளவேண்டும்.
🞸🞸🞸
கடவுள் என்றும், மதம் என்றும், சாஸ்திர சடங்குகள் என்றும் மக்கள் தங்கள் காலத்தையும், கருத்தையும் நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும் ஊக்கத் தையும், பணத்தையும் பகுத்தறிவையும் சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாக வேண்டும்.
🞸🞸🞸
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால் ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி வருகின்றது.
🞸🞸🞸
சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டே மனித வாழ்வு நடக்கிறது!
🞸🞸🞸
சூழ்நிலை மனிதனை மனிதனாக்குகிறது; மனிதத்தன்மையற்ற மிருகமாகவுமாக்குகிறது! சூழ்நிலை, மனிதனை மகா புருஷனாகவும் உயர்த்துகிறது; மாபாவி யாகவும் தாழ்த்துகிறது!
🞸🞸🞸
மனிதன் பொய் பேசுவதும்--புரட்டுகள் செய்திடுவதும், அஞ்சுவதும், அக்கிரமங்கள் செய்வதும், ஆள்வதும், ஆளப்படுவதும், வாழ்வதும் வீழ்வதும் உயர்வதும்--தாழ்வதும் சூழ்நிலையைப் பொறுத்துத் தான் இருக்கிறது!
🞸🞸🞸
ஏனப்பா ஏக்கம், என்ன வருத்தம் உனக்கு என்று கேட்டவுடன் ஏக்கத்திற்கு விளக்கந்தராது வருத்தத்தின் காரணத்தை விளக்கிடாது. "எல்லாம் என் தலைவிதி' என்று தலையிலே அடித்துக் கொள்கிறானே மனிதன்; அந்த நிலைமை மாறி, மனிதன் தனது வருத்தத்திற்கும், வாட்டத்திற்கும் தனது உழைப்பும், ஊக்கமும். அதற்கான சூழ்நிலையுமே காரணம் என்ற சூழ்நிலையை, தன்னைச் சுற்றிலுமுள்ள நிலையை நன்கு உணர்ந்து, அலசிப் பார்த்து, ஆராய்ந்து தெளிந்து, சூழ்நிலைக்கேற்ப நடக்கவும், தனக்கும், பிறருக்கும், சமுதாயத்திற்கும் நன்மை தரும் சூழ்நிலையை உண்டாக்கும் சூழ்நிலையின் தன்மையறிந்தவனாக மாறவேண்டாமா?
🞸🞸🞸
விதி, விதி, என்று தனது மதியை மதிக்காது, மந்த மதி படைத்தவனாகவே தமிழன் வாழத்தான் வேண்டுமா? ஆண்டவன் விட்டவழி என்று கிடந்து தன்னம்பிக்கையற்ற தமிழனாகவே - தாழ்ந்த தமிழனாகவே தமிழன் வாழக்கூடாது. இனியும்!
🞸🞸🞸
தனி மனிதன் 'தரம்' உயர்ந்தால் போதும்; தனி மனிதன் 'பண்பு' வளர்க்கப்பட வேண்டும். தனி மனிதன் தரம், பண்பு வளர, உயர உயர, சமுதாயத்தின் தரமும் பண்பும் தானே வளரும்; உயரும் என்றெல்லாம் பேசப்படுவது தவறு, சரியல்ல! நடை முறைக்கு ஒத்து வராத தத்துவம், அது!
🞸🞸🞸
எத்தனை யெத்தனையோ மகான்களும், மகாத்மாக்களும், அடியார்களும் ஆழ்வார்களும், ஆண்டவன் தூதர்களும், ஆண்டவன் அவதாரங்களும், தோன்றிய பின்னரும்கூட மனிதரது நிலை உயரக்காணோமே? ஏன்? . எந்தக் காரணத்தால்? தனி மனிதனது தரமும் பண்பும் அவனவன் சூழ்நிலைக்கேற்ப அமைகிறது என்பதுதானே உண்மைக் காரணம்.
🞸🞸🞸
விதி என்ற நம்பிக்கை, மனிதனை வாழவிடவில்லை. வாழ்க்கையின் முன்னேற்ற எண்ணம் அவனிடம் தோன்றவில்லை! இது அவனது சூழ்நிலை. அர்த்தமற்ற, அறியாமை நிலை!
🞸🞸🞸
திருடன், பொய்யன், புரட்டன்--என்றும் மன்னிக்கப்படுவதில்லை, இன்றைய சமுதாயத்தில். திருடனுக்குத் தண்டனை தரும் அளவோடு தீர்ந்தது, சட்டம்.
🞸🞸🞸
ஏன் திருடினான், திருடன் திருந்திட வழி என்ன? என்று எண்ணிப் பார்த்து, திருடர்கள் ஏற்படும், ஏற்படக் காரணமான நிலைமைகளை, நினைப்புகளை, கொடுமைகளை, சக்தியற்ற சூழ்நிலையை மாற்ற, மாற்றி நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டாமோ?
🞸🞸🞸
சூழ்நிலையால் பொய் பேசும் மனிதன் தனது சூழ்நிலையை மாற்றிக் கொண்டு, நல்லவனாக மாற மார்க்கம் அமைக்க எண்ணி, துணிந்து நல்ல வழியிலே காரிய மாற்றும் சந்தர்ப்ப மளித்தால், மாற முடியாத நல்லவனாக, பொய் பேசாதவனாக முடியும்.
🞸🞸🞸
தனி மனிதனது தரமும் பண்பும் மட்டுமே போதாது சமுதாயமும், மனித இனமும் சீர்பட - திருந்த - நல்வாழ்வு வாழ, மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் நல்லநிலை, நல்ல சூழ்நிலை தேவை, மிகமிகத் தேவை என்றுதான் கூறுகிறேன்.
🞸🞸🞸
மனிதனது தரமும் பண்பும், குறிப்பாக, மனித வாழ்வு மனிதத் தன்மையோடு கூடிய நல்ல வாழ்வாக அமைவது மனிதனது சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கிறது என்பது நன்கு தெரிகிறது; மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது.
🞸🞸🞸
சூழ்நிலை மனிதனை இயக்குகிறது; மனிதன் சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறான்; வாழவேண்டியிருக்கிறது!
🞸🞸🞸
உலகம் தட்டையல்ல! நீண்ட சதுர வடிவமானதல்ல! தட்டைப் போலத்தான் கண்ணுக்குத் தோன்றுகிறது. ஆனால், கருத்தூன்றிக் கவனித்தால் உலகம் ஒரு உருண்டை வடிவமானது என்று முதன் முதலில் கூறிய கலீலியோ கல்லடிப்பட்டார். கசடன்--கடவுள் தன்மைக்கே விரோதி என்று தூற்றுதல் மொழிகளுக்கெல்லாம் ஆளானார்.
🞸🞸🞸
கேலிக்கும், கண்டனத்திற்கும், கல்லடிக்கும், சொல்லடிக்கும் கலங்கிடாது, எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும் அஞ்சாது, எண்ணத் தெளிவோடு தனது சிந்தனையின் முடிவை, உலகம் தட்டையல்ல--உருண்டை என்ற உண்மையை உலகினர்க்கு உணர்த்திடத் தயங்கிடவில்லை அந்தக் கலீலியோ அந்தக் காலத்திலே!
🞸🞸🞸
எந்தத்துறையிலும், எந்த விதக் கருத்து மாறுதல்களுக்கும் ஆரம்பத்திலேயே ஆதரவு கிடைத்திடாது என்ற எண்ணத்தைக் கொண்டு எதிர்ப்பு, ஏளனம், தடை, தண்டனை இவற்றைக் கண்டு இதற்கெல்லாம் மனித இனம் கட்டுப்பட்டு நின்றுவிட்டால்--நின்று விட்டிருந்தால் மனித வாழ்வில் எத்தகைய மாறுதல்களும், முன்னேற்றமும் ஏற்படமுடியாது. ஏற்பட்டிருக்க முடியாது.
🞸🞸🞸
நல்ல மாந்தோப்பு அமைய--நல்ல களம்--விளை நிலம் எப்படி முக்கியமாகிறதோ--மூலமுமாகிறதோ அப்படியே தான் மனிதன் தரமும், பண்பும் படைத்தவனாக நல்ல வாழ்வு--நாகரிக வாழ்வு வாழவேண்டுமானால், மனிதன் வாழ்ந்திடும் களம்--நிலம், சமுதாயம் சமுதாயத்தின் நிலை, சூழ்நிலை முக்கியமாகிறது--மூலமும் ஆகிறது!
🞸🞸🞸
சமுதாயம், மனித சமுதாயம் தனது முக்கிய தேவைகளை உணவு, உடை, வீடு என்ற மூன்று, முக்கிய, முதற் தேவைகளை முழு அளவில்--தேவையான அளவில், தேவையான நேரத்தில் பெற்று, திருப்தியான வாழ்வு வாழ்ந்திட, வாய்ப்பும், வசதியும் பெற்றாக வேண்டும்.
🞸🞸🞸
மனித வாழ்வு--இன்றைய மனித வாழ்வு எத்தனையோ மனப்போராட்டங்களிடையேயும் சுருங்கக் கூறுமிடத்து, வசதியையும், வாய்ப்பையும்--சமயத்தையும் சந்தர்ப்பத்தையும்--அறிவையும், ஆற்றலையும்--அறியாமையையும், அஞ்ஞானத்தையும்--பெருமளவு விஞ்ஞானத்தையும் துணைகொண்டு நடந்திடும் நிலையில் இருக்கிறது.
🞸🞸🞸
மனிதர் உணவை மனிதர் பறிப்பது மட்டுமல்ல, மனிதனை மனிதனே மனிதனாக மதிக்காத மனப்பான்மை, மனிதனை மனிதன் பிறப்பால் உயர்த்தியும், தாழ்த்தியும், நிறுத்துப் பார்த்திடும் நேர்மையற்ற நிலை--மதம், சாதி, ஆண்டவன் தூதன், ஆண்டான் அடிமை. பிறப்பால் உயர்ந்தோன், பிறப்பால் தாழ்ந்தோன், ஏழை, பணக்காரன் இன்னும் எத்தனை எத்தனையோ முரண்பட்ட கொள்கையினிடையே சிக்கிச் சீரழியவில்லையா, இன்றைய சமுதாய வாழ்க்கை!
🞸🞸🞸
எத்தனையோ சிக்கல்களுக்கிடையே--முரண்பட்ட மூடநம்பிக்கைகளுக்கிடையே அறிவாளி அறிவற்றவனையும்--இருப்பவன் இல்லாதவனையும்--பலமுள்ளவன் பலமற்றவனையும்--சுரண்டிச் சுகபோகியாக வாழ்ந்திட வாய்ப்பும் வசதியும் அமைந்ததாகத்தானே இன்றைய சமுதாயம் இருக்கிறது!
🞸🞸🞸
விடுவிக்க முடியாத வாழ்வுச் சிக்கல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளும், மூட நம்பிக்கைகளும், சுய சிந்தனையற்ற, சலிப்பான சத்தற்ற வாழ்க்கை முறையுமேதான் இன்றைய வாழ்வை--மனித வாழ்வை மிருக நிலைக்கே மீண்டும் மீண்டும் கொண்டு செல்கின்றன!
🞸🞸🞸
வாழ்வுச் சிக்கல்களை சீர்படுத்தி செப்பனிட்டு முரண்பட்ட கொள்கைகளிலே தெளிவடைந்து, மூட, நம்பிக்கைகளை முறியடித்துச் சுய சிந்தனையாளனாக மனிதன் மாறிட வேண்டாமா!
🞸🞸🞸
ஏன் வாழ்விலே சிக்கல்கள் ஏற்படுகின்றன? எத்தகைய முரண்பட்ட கொள்கைகள் நீக்கப்பட வேண்டும்? மூட நம்பிக்கையால் ஏற்படும் முட்டுக் கட்டைகள் என்னென்ன? எவையெவை? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துச் சிந்தித்து சிந்தனைத் தெளிவு பெற்று தெளிந்த வாழ்வு--திருப்தியான வாழ்வு மனிதனை மனிதனாக வாழ வைத்திடும் வாழ்வு. நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ வேண்டாமா. மக்கள்!
🞸🞸🞸
நாகரிக வாழ்வு--நல்ல வாழ்வு வாழ்ந்திட மக்களைத் தயார் செய்திடுவதே இன்றைய பணி--முதற்பணி--முக்கியபணி--மக்கட்பணி!
🞸🞸🞸
மக்களிடையே மத மூட நம்பிக்கைகளைப் போக்கி சாதி, சமய பேதங்களையகற்றி, சமத்துவத்தையும், சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தி, அஞ்ஞானத்தை நீக்கி விஞ்ஞான உணர்வை ஊட்டித் தன்னம்பிக்கையையும். தளராத உழைப்பையும், ஊக்கத்தையும், உண்டாக்கித் தீரவேண்டும்!
🞸🞸🞸
மக்கள் வாழவேண்டும். உலகம் உருப்படவேண்டும். வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா! இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்கள் யாரையாவது காட்டமுடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.
🞸🞸🞸
புராணங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும், எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுள்களாகத் தெரியவில்லையே! பிரமன் திலோத்தமையைக் கெடுத்தான்; சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினியைக் காமுற்றான், இந்திரன் அகலிகையையும், சந்திரன் குருபத்தினி தாரகையையும், மகாவிஷ்ணு சந்திரன் மனைவியையும் கெடுத்தனர். இப்படித்தான் புராணங்கள் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளரையா நாம் நமது வாழ்வின் வழிகாட்டிகளாகக் கொள்வது?
🞸🞸🞸
நாங்கள் எடுத்துக்காட்டி விளக்குவதும், ஆபாசங்கள் என்று கூறிக் கண்டிக்கும் ஆண்டவனின் திருவிளையாடல்களும் எங்கள் கற்பனைகள் அல்லவே அல்ல? அவைகள் அத்தனையும் பக்தர்கள், பக்தியோடு படித்துப் பாராயணம் செய்துவரும் புராணங்களில் காணப்படுபவைதான் என்பதை ஆத்திக நண்பர்கள் உணர்ந்து திருந்தவேண்டுகிறேன்.
🞸🞸🞸
ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றும் சாஸ்திர முறைகள் என்றும் பழைய வழக்கங்கள் என்பதற்காக மட்டும். எந்தவிதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம், சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப் பார்த்து முடிவுகட்ட வேண்டும்.
🞸🞸🞸
கொட்டாவி விடும்போது மூன்றுதரம் சிட்டிகை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை யென்று திரும்பிவிடுவதும், பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்குப் பலன் பார்த்துப் பதைப்பதும் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பழக்கத்தினாலும், அறியாமையினாலுந்தான்.
🞸🞸🞸
மனிதன், தான் வாழவேண்டும்; தன்னைப் போலவே பிறரும் வாழவேண்டும். மனிதர் எல்லோரும் மனிதராகவே வாழ்ந்திடவேண்டும் என்ற மனப்பண்பைக் கொண்டவனாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான், மனித இனம் ஒன்றுபட்டு, நாகரிக வாழ்வு வாழ முடியும்.
🞸🞸🞸
அர்த்தமற்ற திருப்தியும், வெறுப்பான வாழ்வும், சாவை எதிர்நோக்கிய சஞ்சல புத்தியும், கொண்ட சத்தற்ற வாழ்வுதான், இன்றைய மக்களின் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கை நிலை; வாழ்க்கைத்தரம்!
🞸🞸🞸
வாழ்க்கை வாழ்வதற்கே, ,வாழவேண்டும். வளமாக வாழவேண்டும், வாழத்தான் வேண்டும், வாழ்ந்தே தீருவோம்; வாழ்க்கையைப் பற்றிய கருத்து இப்படித் தானே இருக்கவேண்டும், மக்களுக்கு!
🞸🞸🞸
தமிழர், தாழ்ந்ததற்குக் காரணம், தமிழகத்தில் தமிழரது எண்ணங்களில் ஏற்பட்ட, பக்தி, புராணம், மோட்சம், நரகம், மேலுலக வாழ்வு, கர்மம், வினை, விதி என்பன போன்ற கருத்துக்கள் புகுந்து ஆதிக்கம் செலுத்தினதுதான் என்பது நன்கு விளங்கும்!
🞸🞸🞸
மனிதன், மனிதனாக வாழவேண்டும், மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தேவை! மனிதனது முதற்தேவை, உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும்.
🞸🞸🞸
முதற் தேவையான, முக்கிய தேவையுமான மூன்று தேவைகளைப் பெற்றால்தான்--தேவையான அளவு பெற்றால்தான் மனிதன் மனிதனாக வாழமுடியும்.
🞸🞸🞸
காட்டுமிராண்டியாக, காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து, இலைகளையும் தழைகளையும் உடுத்தி கிடைத்த கிழங்கையும் கீரைகளையும், வேட்டையாடிய மிருகங்களின் பச்சை இறைச்சியையும் புசித்து வாழ்ந்த நிலையிலிருந்து, மனிதன், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் அமைந்த அழகு நகரங்களைக் கட்டி, பட்டு, பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை அணிந்து, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு முதலிய அறுசுவை ஆகாரங்களைப் புசித்திடும், இன்றைய நாகரிக நிலைமைக்கு வளர்ந்திருக்கிறான்.
🞸🞸🞸
இந்த வளர்ச்சிக்கு, மனிதனிடமுள்ள உயிரினங்களிடமில்லாத மற்ற பகுத்தறிவு முதற்காரணம்; மூலக்காரணமுமாகும்.
🞸🞸🞸
மாறுதலுக்கு, மனித வாழ்வின் மகத்தான மாறுதலுக்கு, மனிதனிடம் உள்ள அறிவே, பகுத்தறிவே அடிப்படை, ஆதாரம், வழிகாட்டி!
🞸🞸🞸
சிந்திக்கத் தொடங்கிய மனிதன்--முதல் சிந்தனையாளன், இயற்கை வளத்தை, தனது வாழ்வு வசதி யாக அமையும் வகைக்குப் பயன்படுத்தத் தொடங்கியதின் விளைவு, நாகரிக வாழ்வின் ஆரம்பக் கட்டம்; முதல் அத்தியாயம்.
🞸🞸🞸
சிந்திக்கத் தொடங்கிய முதல் சிந்தனையாளன், சுயநலமுள்ளவனாக, தன்னைப் பற்றிய மட்டுமே கொண்டவனாக இருந்து எண்ணத்தை விட்டிருந்தால், இன்றைய உலகம், நாகரிக உலகம் ஏற்பட்டிருக்க முடியாது!
🞸🞸🞸
இந்த நாட்டிலே ஜாதிதான் மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம்--மனதிலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை. எனவேதான், பேதமற்ற சமுதாயத்தை--தத்துவத்தை—சமதர்மத்தை நாம் காணவேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகிறது.
🞸🞸🞸
மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை உணர்ந்து, ஐரோப்பாக்கண்டத்திலே பேரறிவாளர்களான வால்டேர், ரூசோ போன்றார் அறிவுத்துறைப் புரட்சிக்காகப் பணியாற்றினர். அதே விதமான பணி தேவை.
🞸🞸🞸
மனிதனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது. அதனாலேயே மனிதன் மனம் அலைமோதி நிற்கிறது.
🞸🞸🞸
சாதாரணமாக நாம் பேசுவதில்லையா? சங்கீதம் என்ன சார், பிரமாதம்? சாரீரம் கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டும்; சுருதியுடன் சேர்ந்து பாடவேண்டும்; தாளம் தவறக்கூடாது இவ்வளவு தானே' என்று பாட ஆரம்பிக்கும்போது தானே தெரிகிறது. சாரீரம் வித்வானுடன் ஒத்துழைக்க மறுப்பதும், சுருதியுடன் அவர் மல்லுக்கு நிற்பதும், தாளம் அவருக்குச் செய்யும் துரோகமும், அது போலத்தான் சமத்துவம் சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம், சாதிப்பது கடினம்.
🞸🞸🞸
ஜாதி, மத, குல, பொருளாதார பேதங்கள் மக்களை முன்னேற ஒட்டாதபடி, மூச்சுத்திணறும்படி முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன.
🞸🞸🞸
மக்களுக்குள் எந்தக் காரணம் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது.
🞸🞸🞸
உலகிலே மிக மிகச் சிறு தொகையினர்--பேரறிஞர்கள்--சீர்திருத்தக் கருத்தினர்--உலகத்தைத் திருத்தும் உத்தமர்கள், சித்தத்தை சிறையிட மறுத்தனர்; சிந்திக்கத் தொடங்கினர்; புத்தம் புதிய உண்மைகளை கண்டறிந்து கூறினர். உலகின் உருவம், இயல்பு, எண்ணம், ஏற்பாடு எல்லாம் மாற ஆரம்பித்தன. தட்டை உலகு, உருண்டை ஆயிற்று. மேல் ஏழு கீழ் ஏழு லோகம் என்பது வெறும் கட்டுக் கதை என்பது விளங்கலாயிற்று. சூரிய - சந்திரதேவன், இந்திர தேவன்... வாயு, வருணன். அக்கினி என்ற தேவர்களெல்லாம் குடியிருந்து கொண்டு, குதூகலமாக ஆடிப் பாடிக் கொண்டு, ஆரணங்குகளாம் அரம்பை, ஊர்வசி ஆகியோர் புடை சூழ வீற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம், சுவைமிக்க கற்பனை என்பது தெரியலாயிற்று. கண்ணுக்குத் தெரியாதிருந்த அமெரிக்கா போன்ற நாடுகளைக் கண்டு பிடிக்கவும், கருத்துக்கு எட்டாதிருந்த கருவிகளை அமைக்கவும் முடிந்தது. பஞ்சாங்கத்துக்குப் பக்கத்திலே அட்லாஸ் வந்து சேர்ந்தது வெற்றிச் சிறப்புடன்
🞸🞸🞸
வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம். தேவைதானா, இந்தக் கருத்து இன்றும்?
🞸🞸🞸
வாழ்வை நம்பாதே! எதைத்தான் நம்புவது? வாழ்ந்தால் தானே, எதையும் நம்ப முடியும். வாழா விட்டால், வாழவழி தேடாது சும்மா இருந்தால் சுகம் வருமா? சோம்பேறி என்ற பட்டமல்லவா, கிடைத்து விடும், சுலபத்தில்!
ஆண்டவனிடம் தீண்டாமை ஏன்?
ஒருவனைப் பிறப்பால் உயர்ந்தவனாகவும், உல்லாசியாகவும், குருவாகவும் படைத்து, மற்றவனைத் தாழ்ந்த வனாகவும், உழைப்பாளனாகவும். அடிமையாகவும் அமைக்கிறார் அந்த ஆண்டவன். எல்லோரையும் தன் குழந்தைகள் எனக் கருதும் ஆண்டவன் செயலாக அமையுமா இது?
🞸🞸🞸
எப்படி ஒரே ஆண்டவன், ஒருவனை வேதமோதுபவனாகவும், மற்றவனை அவன் திருவடி தொழுபவனாகவும் படைப்பார்--அவருக்கு அறிவில்லையா? அன்பில்லையா? அறம் அறியாரா அவர்? அத்தகைய ஆண்டவன் உண்மையில் இருந்தால் அதைவிட நயவஞ்சகப் பொருள் இந்த அகில உலகிலும் இல்லை; இருக்க முடியாது.
🞸🞸🞸
பாடுபட்டும் மக்கள் பஞ்சையாய் வாழும்போது, பரமனுக்குப் பல லட்சத்தில் பதக்கங்கள், வாகனங்கள். என்ன அறியாமை மக்களிடம்?
🞸🞸🞸
ஆண்டவன் அனைவர்க்கும் தந்தை; ஆண்டவன் முன் எவரும் ஒன்றே, எல்லோரும் சமம், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. ஆண்டவன் உருவமற்ற அரூபி; அருளுடையவன்; அனாதரட்சகன்; மனமே கோயில், மக்கள் தொண்டே பக்தி என்ற பரந்த கொள்கை, விரிந்த போக்கு, தெரிந்த பாதை, புரிந்த தத்துவம் வேண்டும்.
🞸🞸🞸
ஆண்டவனை உருவமுள்ளவனாக்கி, ஆனைமுகம், ஆறுமுகம், பன்றியுருவம் படைத்து மனிதத் தன் மைக்கே புறம்பான மடத்தனங்களை ஏற்றி மனங் குழைவது நன்றா? நவிலுங்கள் நாட்டோரே!
🞸🞸🞸
குந்தக் குடிசையின்றி, உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி, மக்கள் நிர்க்கதியாய் நிலவும்போது, ஆண்டவன் பேரால் கோட்டைகள் போன்ற கோயில்களையும். வாகனங்களையும் மண்டபங்களையும் கட்டுகின்றீரே? இது அந்த அன்புடைய ஆண்டவனுக்கு அருள் படைத்த தந்தைக்கு, உவந்த செயலா? இது அறமெனப் படுமா அன்றி அசட்டுச் செயல் எனப்படுமா என்று ஓர் அரைக்கணம் ஆராயுங்கள் தோழர்களே உம் அறிவைக் கொண்டு!
🞸🞸🞸
வீணையை மீட்டத் தொடங்கியதும், இசை கேட்க வருபவனின் காதுகளை அடைப்பது போல, எழில்மிகு சித்திரத்தைத் தயாரித்துக் காண வாரீர் என்று அனைவரையும் அழைத்துக் காணவரும் சிலரின் கண்களைக் கட்டியிருப்பது போல, பழச்சாற்றின் இனிப்பைக் கூறிக்கொண்டு, பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல, ஆலயங்களுக்கு மகிமையும், பலனளிக்கும் சக்தியும் இருப்பதைக் கூறிவிட்டு, அங்கு வரக்கூடாது நுழையக் கூடாது என்று சிலரை அல்ல--ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களைத் தடுத்து வருகிறோம். இன்று நேற்றல்ல. தலைமுறைத் தலைமுறையாக.
🞸🞸🞸
பொருளைக் காட்டி மறைப்பர் குழந்தைகளிடமிருந்து பெற்றோர். நாமோ புனித ஸ்தலங்களின் பெருமையைக் கூறிப் பூட்டி விடுகிறோம். அங்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வரக்கூடாது என்று. ஏன்?
🞸🞸🞸
கெட்ட பொருளைத் தொடக்கூடாது--குப்பை கூளம், நாற்றப் பொருள், ஆகியவைகளிடம் நிச்சயமாகத் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அக்கினித் திராவகம், வெடிகுண்டு, விஷம், சீறும்நாகம், கொட்டும் தேள் இன்னும் பலப் பல உண்டு ஆபத்துத் தரக்கூடியவை. அவைகளைத் தீண்டாதிருக்கவேண்டும்--நியாயம் அது. ஆனால் பலகோடி மக்களை, தாய்நாட்டாரை மூதாதையர் கால முதற்கொண்டு நம்முடன் வாழ்ந்து வருபவர்களை தீண்ட மாட்டோம் என்று கூறுவது, தீண்டாமையை அனுஷ்டிப்பது, எவ்வளவு வேதனை? எவ்வளவு அர்த்தமற்றது?
🞸🞸🞸
கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான்--விபசாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள் குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை இலாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளவர்கள், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டோ? இல்லை.
ஆனால் ஆதித்திராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக் கூடாது என்று தடுக்கிறோம்--நியாயமா?
பெண்ணுரிமை ஓங்க
சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் அக்கரை காட்டத்தான் செய்கிறார்கள்.
🞸🞸🞸
ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்து கொண்ட பின்னர்தானே திருமணம் நடைபெறவேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்; செய்கிறோம்.
🞸🞸🞸
பல பெண்களை ஓர் ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைந்தன! எத்தனை பெண்கள் கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத பயங்கர நிலையில் தத்தளித்தனர். எத்தனை குடும்பங்களில் கண்ணீர் வெள்ளம் புரண்டோடியது
🞸🞸🞸
பல மனைவியரை நான் மணப்பேன். என்னைத் தடுப்பவர் யார்? என்று ஆண்மகன் பேசிவந்த காலம் போய் விட்டது.
🞸🞸🞸
மணவாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலையில் அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்க வேண்டும்.
🞸🞸🞸
கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, அல்லது மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தங்களுக்குள் பிடித்தமில்லாத போது, விவாகரத்துச் செய்து கொள்ளும் உரிமை பெற்றாக வேண்டும்.
🞸🞸🞸
விவாக ரத்துரிமை இருந்தால், பொறுத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக நடந்து விட்டாலும் பின்னர் அதனைத் திருத்திக்கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்த மற்றவர்கள், காலமெல்லாம் கூடி வாழ்வதென்பது நடவாத காரியந்தானே. எனவே, பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி விடுதலை பெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே?
🞸🞸🞸
விவாகரத்து உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப் பட்டுவிட்டால், கண்டபடி திரியும் கணவனை மனைவி, தட்டிக் கேட்டு, திருந்தாவிடின், விவாக விடுதலை பெற்றுக் கொள்ள முடியும். குடிகாரக் கணவனின் கொடுமைக்கு நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி, அவனிடமிருந்து விடுதலை பெற வழி பிறக்கும்.
🞸🞸🞸
ஒத்த கருத்தின்மை ஏற்படும்போது விலகி வாழ உரிமை பெறுவது, இருவருக்கும் நல்லதுதானே. இதனால் சமூகத்திற்கும் நன்மை உண்டு.
🞸🞸🞸
அந்தக் காலம் எது என்பதற்கு யாராலும் திட்டமான முடிவு கூறமுடியாது; நிர்ணயத்தையும் காட்ட முடியாது. அந்தக்காலம் என்பது முடிவற்றது. அளவிட்டுக் கூறமுடியாதது. அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற கஜக்கோல் அது!
🞸🞸🞸
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்ற வேண்டுமே தவிர, அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும், பொறுத்த மில்லாமலும் பின்பற்றக் கூடாது.
🞸🞸🞸
உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளன. இந்த நாடு மட்டுமேதான் எல்லாத் துறைகளிலும் பழம் பெருமை பேசிக் கொண்டும் அந்தக் காலம் என்று கூறிக் கொண்டும் முன்னேறாமல் பின் தங்கிக் கிடக்கிறது.
🞸🞸🞸
நாம் அறிவுத் துறையில் முன்னேற்ற மடைந்தால்தான் நம்மிடமுள்ள பழமைக் கருத்துக்கள் அகலும்; பாசி பிடித்துள்ள கண்மூடிப் பழக்கங்களும் தொலையும்; மதமூட நம்பிக்கைகள் முறியடிக்கப்படும் என்பதை நாம் உணரவேண்டும். சுய மரியாதைத் திருமணங்கள். செய்து கொள்வதும், சீர்திருத்தத் திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில் நாம் முன்னேறுவதற்கான அடிப்படைகளில் முக்கியமானதாகும்.
🞸🞸🞸
சீர்திருத்தம், திருமணத்திலிருந்து துவங்குவது வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும். எனவே இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை.
🞸🞸🞸
கேவலமான பழக்கங்களையும். அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்த மற்ற சடங்குகளையும் விட்டொழித்தால் தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும்.
🞸🞸🞸
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கி விட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய் விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்; மனதார வாழ்த்துகின்றேன்.