47. ஈகை

773. பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.

ப்ரௌண்

774. பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம்—அதை நீக்குதல் தெய்வ குணம்.

மான்

775.“ஈதல்”—இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.

ஸிஸரோ

776.என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.

ஸெனீக்கா

777.ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே.

டூமாஸ்

778.எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது.

கே

779.நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும்.

மாக்கன்ஜி

780.பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும்.

புல்வெர்

781.உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு.

பால் ரிச்சர்ட்

782. பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும்—சந்தோஷமாய் விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.

ஸெனீக்கா

783.பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும்.

காங்க்ரீவ்

784.ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.

ஜார்ஜ் எலியட்

785.கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.

விவிலியம்

786.பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும்.

ஷேக்ஸ்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/ஈகை&oldid=1000092" இலிருந்து மீள்விக்கப்பட்டது