அறிவுக் கனிகள்/கர்வம்

43. கர்வம்


746. கண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். “நான்” என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன்.

ஜார்ஜ் எலியட்

747.குறைகளில் எல்லாம் பெரிய குறை யாது? குறையிருந்தும் குறையிருப்பதாக உணராததே.

கார்லைல்

748.கர்வமானது பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் துண்டுமானால் தீயதன்று.

ஜார்ஜ் எலியட்

749.கர்வங்கொண்டவர்கள் சம்பந்தமான கஷ்டமெல்லாம் அவர்கள் தாங்கள் வீண் பெருமை பாராட்டுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே.

செஸ்ட்டர்ட்

750.பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்கக் கூடிய மருந்து அன்பு ஒன்றே.

கதே

751. கர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.

லாங்பெல்லோ

752. கர்வம்—அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம்.

போப்

753.சாத்தான் இளித்தான்—அவனுடைய மனதிற்குகந்த பாபம் தாழ்மைபோல் நடிக்கும் கர்வமே.

கோல்ரிட்ஜ்

754.உலகத்தில் எத்தனையோ விதமான கர்வங்கள் உள. ஆனால் அவற்றில் பெரியது ஞானி என்று ஒருவன் தன்னைத்தானே பிதற்றும் கர்வமே.

ஹூட்

755.நம்மைப்பற்றி நாம் கொள்ளும் அபிப்பிராயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொது ஜனங்கள் நம்மைப் பற்றிக் கொள்ளும் அபிப்பிராயம் அவ்வளவு பெரிய கொடுங்கோன்மை அன்று.

தோரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/கர்வம்&oldid=1000082" இலிருந்து மீள்விக்கப்பட்டது