ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/வ. உ. சி.யும் குடும்பக் கட்டுப்பாடும்




வ. உ. சியும் குடும்பக் கட்டுப்பாடும்

நானும் என் மனைவியும் 1934ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலுள்ள என் தங்கை வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது அங்குள்ள சில நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் இந்த நல்ல விஷயத்தை எங்களுக்கு மட்டும் சொன்னால் போதாது. ஒரு கூட்டம் கூட்டுகிறோம், பொதுமக்கள் எல்லோருக்கும் கூறவேண்டும். நாட்டின் நலத்துக்கு அத்துணை அடிப்படை விஷயமாய் இருக்கிறதே இது என்று கூறினார்கள்.

அவ்விதமே அவர்கள் அன்று மாலை ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு டாக்டர் தலைமை வகித்தார். இக் காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்று கூறுவதை முற்காலத்தில் பச்சையாகக் கருப்பத்தடை என்று கூறினோம். அதனால் கூட்டம் சிறியதாகவே இருந்தது. ஆயினும் நான் விஷயத்தை விளக்கியபோது வந்திருந்த மக்கள் உற்சாகம் காட்டினார்கள். எனக்கும் அதுதான் முதன் முதலாகக் கருப்பத் தடை பற்றிப் பேசிய பொதுக்கூட்டம். வந்திருந்தவர்களும் முதன்முதல் இந்த விஷயத்தைக் கேட்பது அப்போதுதான்.

மறுநாள் காலையில் நானும் என் மனைவியும் தேச பக்தர் சிதம்பரனார் அவர்களைப் பார்ப்பதற்காகப் போனோம். அவர்கள் என்னைக் கண்டதும் என்ன தம்பி, நேற்றுப் பிரசங்கம் செய்தீர்களாமே, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று கூறினார்கள். அதற்கு நான் :-- ஆமாம் நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். பேசினேன். ஆனால் அந்த விஷயம் தங்களுக்குத் தேவையில்லையே.

வ. உ, சி :-- ஆமாம் தம்பி! எனக்கு வயதாயிற்று, தேவையில்லை தான், ஆனால் என் மகளுக்குத் தேவையாயிற்றே.

நான் :- ஏன் அவளுக்கு எத்தனை குழந்தைகள், அதிகமோ ?

வ. உ. சி :- இதுவரை மூன்றுதான், ஆனால் இனி எத்தனையோ, யார் அறிவார்? ஆனால் நான் அறிய விரும்பியது வேறு விஷயம்.

நான் :- என்ன விஷயம், எனக்கு விளங்கவில்லையே.

வ. உ. சி :- தம்பி! ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்கிறதல்லவா ? அந்தக் காலத்தில் குழந்தை பெறாமல் பங்குனி சித்திரையில் பெறுவது தான் நல்லது, அதற்கு வழி உண்டு என்று நேற்று கூறினீர்களாமே, அந்த வழிதான் எனக்குத் தெரிய வேண்டும்.

நான் : ஏன் அதைக் கேட்கிறீர்கள், நீங்கள் தான் இனிக் குழந்தை பெறப் போவதில்லையே.

வ. உ. சி : இல்லை தம்பி, என் மகள் எப்போதும் பிரசவத்துக்கு இங்கு வருகிறாள், அவள் எப்போதும் வருவது மழை கொட்டும் காலத்திலேயே. அதனால் நான் படும்பாடு அதிகம். டாக்டரைக் கூப்பிட முடியாது, மருத்துவச்சியையும் கூப்பிட முடியாது. அதோடு தாய்க்கும் குழந்தைக்கும் குளிர் தாங்கமுடியாமல் கஷ்டம், இப்படி எத்தனையோ துன்பங்கள்.

நான் : நீங்கள் கூறுவது உண்மைதான். அதனால் தான் நான் நேற்று மழை காலத்திலோ பனிக்காலத்திலோ குழந்தை பெறாமல் நல்ல சுகமான வசந்த காலத்தில் குழந்தை பெறவேண்டும் என்று கூறினேன்.

வ. உ. சி : ஆமாம் தம்பி ! பங்குனி சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி இந்த ஆறு மாதங்களிலும் மழையில்லை, பனியில்லை, குளிரில்லை. இந்தக் காலத்தில் பெறுவதுதான் நல்லது; ஆனால் அதற்கு வழி என்ன, சொல்லுங்கள்.

நான் : அதற்கு வழியிருக்கிறது, மிகவும் சுலபமான வழி, எல்லாப் பயிருக்கும் எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுக்கவேண்டும் என்ற கால அளவு உண்டு.

வ. உ. சி : ஆமாம் அது உண்டு, அதற்கும் குழந்தை பெறுவதற்கும் என்ன சம்பந்தம் ?

நான் : என்ன இப்படிச் சொல்லுகிறார்கள் ? மக்கட் பயிருக்கும் கால அளவு எல்லோர்க்கும் ஒன்றுபோல் தானே.

வ. உ. சி : மக்களையும் பயிர் என்றே சொல்லுகிறீர்களா? அதுவும் பொருத்தம்தான்.

நான் : பாருங்கள், மக்கள் பயிர்க்கு எப்போதும் பத்து மாதம் என்று சொல்லுவார்கள், ஆனால் கணக்காகப் பார்த்தால் 280 நாட்களே.

வ. உ. சி : அப்படியானால் பத்து மாதங்கள் என்பது சந்திர மாதங்களாக இருக்கும். சந்திர மாதம் என் பதற்கு 28 நாட்கள்தான்.

நான் : ஆமாம் நீங்கள் சொல்வதுதான். அதனால் எந்த மாதம் குழந்தை பிறக்கவேண்டும் என்று எண்ணு கிறீர்களோ, அதற்கு 280 நாட்களுக்கு முன் கருத்தரிக்க வேண்டும் என்று ஆகிறதல்லவா ?

வ. உ. சி : ஆமாம், அதனால் பங்குனியில்-வசந்த கால ஆரம்பத்தில் பிறக்க வேண்டுமானால் முந்தின ஆனி மாதம் கருப்பம் உண்டாகவேண்டும், அப்படித் தானே தம்பி!

நான் : ஆமாம், அதனால் பங்குனி முதல் ஆவணி வரை குழந்தை பிறக்கவேண்டுமானால் ஆனி முதல் கார்த்திகைவரை கருத்தரிக்க வேண்டும்.

வ. உ. சி : அதுசரி தம்பி, ஆனால் நான் கேட்பது அதுவல்ல. புரட்டாசி முதல் மாசிவரை மழைக் காலமும் பனிக்காலமும் ; அந்தக் காலத்தில் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு வழி என்ன? அதை அல்லவோ அறிய விரும்புகிறேன்.

நான் : அதில் என்ன கஷ்டம் ? ஆனிமுதல் கார்த்திகை வரை கர்ப்பம் உண்டானால் நல்லது என்று கண்டோம் அல்லவா? அதனால் மார்கழி முதல் வைகாசி வரை கருப்பம் உண்டாகக் கூடாது, அவ்வளவுதானே.

வ. உ. சி : அது சரிதான் தம்பி! அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாவிட்டால் மழை காலத்தில் குழந்தை பிறக்காது, அது தெரிகிறது. ஆனால் அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாதிருப்பதற்கு வழி என்ன ? அந்த மாதங்களில் காதல் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்களா ?

நான் : அப்படிச் சொல்லவில்லை. சொன்னால் அது நடக்கக்கூடிய காரியமில்லை.

வ. உ. சி : பின் என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறீர்கள்?  நான் : அந்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் கண்ட 10 ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை மொத்தம் 10 நாட்கள் காதல் செய்யாமல் இருந்தால் போதும், கருப்பம் உண்டாகாது.

வ. உ. சி : அப்படியானால் அந்தப் பத்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் காதல் செய்யலாம், அப்படிச் சொல்லுங்கள். இதைச் சொன்னால் யாரும் தடை சொல்லமாட்டார்கள். இன்னொன்று தம்பி ! அப்படியானால் எல்லா மாதங்களிலும் இந்த மாதிரி நடந்து கொண்டால் குழந்தை உண்டாவதையே தடுத்து விடலாம் போலிருக்கிறதே.

நான் : ஆமாம். அதில் சந்தேகமில்லை. இரண்டு மூன்று குழந்தைகள் உள்ளவர்கள், இனி வேண்டாம் என்று எண்ணினால் இந்த முறையைக் கையாண்டால் போதும், பிறகு குழந்தைகள் உண்டாகாது. பெற்ற குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கலாம்.

வ. உ. சி : தம்பி நீங்கள் சொல்வது மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய முறையாக இருக்கிறது. இதை நான் என் மருமகப்பிள்ளையிடம் சொல்லுகிறேன், அவர் இதை ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

இவ்வாறு தேசபக்தர் அவர்கள் மழை காலத்தில் குழந்தை பெறாமலிருப்பதற்கான முறையைக் கேட்டுக் கொண்டபின் கம்பராமாயணம் போன்ற இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். ஒருமணி நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு நானும் என் மனைவியும் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எல்லோர்க்கும் பயன்படும் என்று இங்கு எழுதுகின்றேன்.