இலக்கியங்கண்ட காவலர்/பூதப் பாண்டியன்

12
பூதப் பாண்டியன்

ண்டு தனியரசு செலுத்தி, அண்மையில் திருச்சி மாவட்டத்தோடு இணைந்து போன புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலிய மங்கலம் என்ற ஊரும், அதைச் சூழ உள்ள நாடும் கடைச் சங்க காலத்தில் முறையே ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் பெயர் பெற்றிருந்தன. சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடையே அவ்விரு நாடுகட்கும் எல்லையாக ஓடுவது வெள்ளாறு. அவ்வெள்ளாற்றின் தென்கரை நாடுகள் தென்கோனாடு என அழைக்கப் பெறும். இத் தென்கோனாட்டின் மேற்பால் பகுதியே ஒல்லையூர் நாடு. எனவே ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடுகளில் ஒன்றாகும்.

ஒரு காலத்தில், அவ்வொல்லையூர் நாட்டைப் பாண்டியர்களின் குலப் பகைவராய சோழர் கைப் பற்றிக் கொண்டனர். பாண்டிய நாட்டின் வடவெல்லையில் பகைவர் வந்துவிட்டதால், பாண்டிய நாட்டின் பாதுகாப்பிற்குக் கேடுண்டாகிவிட்டது. அது பொறுக்க மாட்டாது பாண்டி நாட்டார் பெரிதும் கவலைகொண்டிருந்தனர். அக்காலத்தில், அப்பாண்டியர் குடியில் வந்து பிறந்தான் பூதப் பாண்டியன். ஒல்லையூர் நாட்டிழப்பால், தன் நாட்டிற்கு உண்டாம் கேட்டையும் தன் குடிக்கு உண்டாம் பழியையும் உணர்ந்தான்; அந்நாட்டை வென்று கைக்கொண்டு, நாட்டின் புகழையும், குடியின் பெருமையையும் குன்றாமல் காக்கத் துணிந்தான். உடனே பெரும் படையோடு சென்று, அந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டிருந்த சோழனை வென்று துரத்தினான். ஒல்லையூர் நாடு மீண்டும் பாண்டியர்க்கு உரியதாயிற்று. பாண்டியர்க்குப் பன்னெடு நாட்களாக இருந்த பழியைப் போக்கிப் புகழ்விளைத்த பூதப் பாண்டியன் செயலைப் பாண்டி நாட்டார் புகழ்ந்து பாராட்டினர்; அவனுக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். அம்மட்டோ! இழந்த ஒல்லையூர் நாட்டை வென்று தந்த அவ்வெற்றிச் செயலை அவன் பெயரோடு இணைத்து, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என அவனை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

பூதப் பாண்டியன் பெருவீரன் மட்டும் அல்லன்; - தன் போலும் வீரரைப் பாராட்டும் பெருங்குணமும் உடையவனாவான். பாம்பறியும் பாம்பின் கால் என்ப, வீரன் ஒருவன் பெருமையை அவன்போலும் பிறிதொரு வீரனே பாராட்டல் பொருந்தும். அவன் காலத்தில் அவன் ஆட்சிக்குரிய பொதிய மலையில் திதிய்ன் என்பானொரு வீரன் ஆட்சி புரிந்திருந்தான். விற்போர் வல்லவன்; தேர்ப்படை உடையவன்; தன் ஆட்சியின் கீழ் இருந்து வெற்றிக்கெல்லாம் பெருந்துணையாய் வாழ்ந்த அவனைத் தன்னைப் பணிந்து வாழும் ஒரு சிற்றரசன் எனப் பழித்து விடாது, தான் பாடிய பாட்டொன்றில், அவனையும், அவன் வில்லாற்றலை யும், தேர்ப்படையின் பெருமையினையும் பாராட்டிப் புகழ்ந்துள்ளான்! என்னே அவன் பெருந்தகைமை!

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்”

என்றார் வள்ளுவர். பேராண்மையும், பெருஞ்செயலும் உடையவனாய் வாழ்ந்த ஒல்லையூர் தந்தான், புலவரும் பாராட்டும் புலமையும், ஆன்றோரும் வியக்கும் அருங்குணமும் வாய்க்கப் பெற்ற ஒருவரை மனைவி யாகப் பெற்ற மாண்பும் உடையவனாவான். பேராலவாயர் முதலாம் பெரும் புலவர்களும் பாராட்டும் பேறு பெற்றாராய, கற்பு இஃது என்பதை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டினாராய பெருங்கோப் பெண்டே, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் உயிர்த்துணைவியாராவர். மாட்சி நிறைந்த மனைவி யாரைப் பெற்ற பேறுடையான் பூதப்பாண்டியன்.

இவ்வாறு எல்லா வகையாலும் இணையிலாப் புகழ் உடையோனான பூதப் பாண்டியன், அறமல்லன. புரிதலே ஆண்மையாளர்க்கு அழகாம் என்பாரை இருத்தி ஆட்சி புரிதல் அரசர்க்கு அடாது என அரசனுக்கும், நண்பரோடு அன்புகொண்டு வாழ்வதே நல்லோர் நாட்டமாம் என நண்பர்களுக்கும், உயர் குடிப்பிறப்பே உரவோர்க்கு அழகு எனக் குடிப் பிறந்தார்க்கும் உரைத்த அறவுரைகள் அறிந்து பாராட்டற்குரியனவாம்.

சேரனும், சோழனும், பாண்டியர் குடியோடு பகை உடையவர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், ஒரு காலத்தே தாம் பற்றி ஆண்டிருந்த ஒல்லையூர் நாட்டை மீளவும் கைப்பற்றிக் கொண்டதால், சோழர் அவன் மீது பகை கொண்டனர். பூதப் பாண்டியன் படைக்கு ஆற்றாது தோற்ற சோழர், சேரர் துணையை வேண்டினர். இருவர் படையும் ஒன்று கூடின. தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல பெரும்படை உடைய சேரரும், சோழரும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து எழுந்துவிட்டனர். அஃதறிந்த ஒல்லையூர் தந்தானும், அவர்மீது சென்றான். செல்லுமுன் அவன் உரைத்த வஞ்சினம் அவன் பெருமையினை உணர்த்துவதோடு ஒல்லையூர் தந்தான் நல்லறம் உரைக்கும் நல்ல ஆசானுமாவான் என்ற உண்மையினையும் உணர்த்துவதாகும்.

“என்னோடு போரிட வருவோர் யாவரேயா யினும் அவரைப் போர்க்களத்தே அலற அலறத் தாக்கி அழித்துத் தம் தேர்ப்படைகளோடு தாமும் தோற்று ஓடி ஒளியச் செய்வேன்; இஃது உறுதி. அவ்வாறு செய்யேனாயின், என் அரியணையில் என்னோடு அமர்ந்திருக்கும் அழகே உருவென வந்த என் மனைவியை விட்டுப் பிரிந்து, மனையாளைத் துறந்த மாண்பிலார் போல் பழியுடையனாவேன், நடுநிலை தவறாது, காய்தல், உவத்தல் அகற்றி, குறை கூறியும் முறை வேண்டியும் வருவார் கூறுவன கேட்டு, அறம் வழங்கும் என் அறங்கூர் மன்றத்தே, அவ்வியல்பற்றான் ஒருவனை வைத்து, அமைதியைக் குலைத்த கொடுங் கோலன் எனக் குடிவாழ்வார் தூற்றும் பழியுடைய னாவேன்! மாவன், ஆந்தை, அந்துவன்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் போன்ற என் நண்பர்களைஇதுகாறும் என் கண்கள் போல் கருதிக் காத்துவந்த என் நண்பர்களை- இழந்து, நட்பாடல் தேற்றா நயமிலி என நாட்டவர் கூறும் பழியுடையனாவேன். உலகெலாம் போற்ற ஊராளும் உயர்ந்த புகழ் வாய்ந்த பாண்டியர் குடியில் பிறக்கும் பெருமை இழந்து, வாழ்வும் வளமும் வனப்பும் அற்று, வறுமையும், வாட்டமும் விளங்கும் வன்னிலத்தே வறிதே ஆண்டு கிடக்கும் ஆண்மையற்றார் குடியிற் பிறந்து, பிறந்த குடியாலும் பழியுடையனாவேன்!” இவ்வாறு ஒல்லையூர் தந்தான் அன்று வஞ்சினம் உரைத்தான். அக்கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுப் படிப்போர்க்குப் பெருவீரத்தை ஊட்டுகின்றது.