இலக்கியங்கண்ட காவலர்/மாக்கோதை

13
மாக்கோதை

மிழ் மன்னர் தாம் வெற்றி பெற்ற போர்க்களப் பெயர்களைத் தம் பெயர்களோடு இணைத்து வழங்கிப் பெருமை கொண்டாடுவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம். இதனைப் போன்றே அம்மன்னர்கள், இறந்த இடங் களையும் அவர் பெயர்களோடு இணைத்து வழங்கு தலும் உண்டு. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம்.

சேர நாட்டில் கோட்டம்பலம் என்றோர் ஊர் உண்டு. அஃது இப்போது அம்பலப்புழை என வழங்குகிறது. இவ்வூர் பழங்காலச் சிறப்பு வாய்ந்தது. இதையடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெயருடைய ஒர் ஊரும் இருக்கின்றது. மாக்கோதை என்னும் சேர மன்னன் ஒருவன் தன் இறுதிக்காலத்தில் அக்கோட்டம் பலத்தில் வாழ்ந்து உயிர் விட்டான். எனவே, அவனைக் ‘கோட்டம் பலத்துத்துஞ்சிய’ மாக்கோதை என மக்கள் அழைக்கலாயினர். சில ஏடுகளில் ‘கோட்டம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடருக்குப் பதில் ‘கூத்தம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடர் காணப்படுகிறது. "சேர நாடு கூத்துகளுக்குப் பேர் பெற்ற நாடாகும். கூத்து நடைபெறும் கூத்தம்பலங்கள் பல அந்நாட்டிலிருந் திருத்தல் கூடும். மன்னன் மாக்கோதை அத்தகைய கூத்தம்பலத்தே யிருந்து ஆங்கு நடைபெற்ற கூத் தொன்றைக் கண்டிருக்குங்கால் உயிர் துறந்தனன். அதனால் அவன் பெயர் கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவதாயிற்று,” என்று சிலர் கூறுவர். கிள்ளி, வளவன் என்பன சோழர்களைக் குறிப்பன போல, வழுதி, மாறன் என்பன பாண்டியர்களைக் குறிப்பன போலக், கோதை என்பது சேரர்களைக் குறிக்க வரும் பெயர்களுள் ஒன்றாகும்.

மன்னன் மாக்கோதை பாடிய புறநானூற்றுப் பாடல், அவன் தன் மனைவிபால் கொண்டிருந்த பேரன்பைப் புலப்படுத்தும். மாக்கோதையின் மனைவியாராகிய அரசமாதேவியார் இறந்தார். அவர் உடலை ஈமத்தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். அவர் உடல் எரிகின்றது. அதைக் கண்டு நிற்கும் மாக்கோதையின் உள்ளம் கடந்த காலத்தை எண்ணித் துயர் உறுவதாயிற்று. “பிரியேன்; பிரியின் உயிர்தரியேன்!” எனக் கூறிய உரைகளை எண்ணிப் பார்த்தான்; அவன் உள்ளம் நாணிற்று. “இன்று அவள் இறந்து விட்டாள். அவளுடல் என் கண் முன்னரே இதோ பற்றி எரிகின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனினும் என் உயிர் போய் விடவில்லை. வாழ்கிறது என் உயிர். இந்நிலை என்னைப் பெரிதும் வருத்துகின்றது. அவள் இறந்ததால் நான் பெற்ற நோய் அத்துணைப் பெரிதன்று. பிரிவுத் துயர் உண்மையில் மிகப் பெரிதாயின் அஃது என் உயிரையுமன்றோ கொண்டு போயிருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லையே! என்னே இவ்வுலகியல்! என்னே இவ்வியற்கையின் திருவிளை யாடல்!” என்றெல்லாம் கூறி வருந்தினான். இக்கருத்துக் களமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. உள்ளத் துயரத்தை உயர்ந்த முறையில் வெளியிடும் சிறந்ததொரு புறப்பாடலாக அது திகழ்கின்றது.