ஈசாப் கதைப் பாடல்கள்/சபையோர் தீர்ப்பு



பிரபு ஒருவர் தம்ஊரில்
பெரிய கொட்டகை கட்டி அதில்
இரவில் காட்சிகள் நடத்திடவே
ஏற்பா டெல்லாம் செய்தனரே.

அற்புத மான வித்தைகளை
அங்கே காட்டிடும் அனைவர்க்கும்
பற்பல பொருளை அப்பிரபு
பரிசாய்க் கொடுத்தனர் நித்தமுமே.

கட்டணம் எதுவும் வாங்காமல்
காட்சிக ளெல்லாம் காட்டியதால்.
கொட்டகை நிறைய மக்களுமே
கூடினர் தினமும் இரவினிலே.


ஒருநாள் மேடையில் கோமாளி
ஒருவன் வந்து நின்றனனே.
“அரிய பெரிய வித்தையெலாம்
அடியேன் செய்வேன்; கண்டிடுவீர்.

பன்றி போலக் கத்திடுவேன்;
பார்த்தே அதிசயம் அடைவீர்கள்”
என்றே கூறிக் குனிந்தனனே;
‘ஈக்பீக் ஈக்’ எனக் கத்தினனே.


“உண்மைப் பன்றி இதுபோல்தான்
ஓசை செய்யும். ஆஹாஹா!
என்னே அருமை! அருமை!”யென
யாவரும் அவனைப் போற்றினரே.

திரும்பத் திரும்பக் கோமாளி
செய்தான் அந்த வித்தையினை.
“அருமை! இதுபோல் செய்திடவே
யாரால் முடியும்?” என்றனரே.

இந்தக் காட்சியைக் கண்டதுமே,
எழுந்து வந்தான் முனியாண்டி.
வந்ததும் சபையில் இருந்தோரை
வணங்கி வார்த்தைகள் கூறினனே.

“பன்றி போலக் கத்தியதைப்
பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தீர்கள்.
இன்னும் நன்றாய்க் கத்திடவே
எனக்குத் தெரியும், நம்புங்கள்.

நன்றாய்ச் செய்து காட்டிடுவேன்.
நாளை இரவே நடத்திடலாம்”
என்றான். உடனே பிரபுவுமே
இணங்கினர். மறுநாள் நடத்திடவே.


மறுநாள் இரவு கொட்டகையில்,
மக்கள் நிறையக் கூடினரே.
நெருக்கம் அதிகம் ஆனதனால்,
நின்றே பார்த்தனர் பலபேர்கள்.

முன்னாள் வந்த கோமாளி
முதலில் வந்தான் மேடையிலே.
கண்டதும் அவனைச் சபையோர்கள்
கைகள் தட்டி வாழ்த்தினரே.

பன்றி போலே அன்றும்அவன்
பார்த்தோர் முன்னால் கத்திடவே,
ஒன்றாய் அனைவரும் அவனுக்கே
உற்சா கத்தினை ஊட்டினரே.

அவனது வித்தை முடிந்ததுமே,
ஆரம் பித்தான் முனியாண்டி.
எவரும் அவனைப் போற்றாமல்
ஏளனம் அதிகம் செய்தனரே.

போர்வை ஒன்றை உடல்மீது
போர்த்திய படியே முனியாண்டி,
பார்வை யாளரின் முன்பாகப்
பன்றி போலக் குனிந்தனனே.


குனிந்து ‘ஈக்பீக், ஈக்’எனவே
குரலை எழுப்பினன், எழுப்பியதும்,
“மனிதன் சத்தம் போடுதல்போல்
மடையன் இவனும் போடுகிறான்.

பன்றி இதுபோல் கத்தாது.
பார்ப்போர் தம்மை ஏய்க்கின்றான்”
என்றார் சிலபேர். மற்றவரும்
ஏளன மாகப் பேசினரே.

“கோமா ளியினைத் தோற்கடிக்கக்
கொஞ்சமும் முடியா” தென்றிடவே,
“ஆமாம், ஆமாம்” என்றுடனே
அனைவரும் கூச்சல் போட்டனரே.


சத்தம் கேட்டும் முனியாண்டி
சற்றும் தயக்கம் இல்லாமல்
வித்தை காட்டினன். ஆனாலும்,
மிகவும் கூச்சல் கேட்டதுவே.

கையைத் தட்டி அனைவருமே
கலகம் செய்தனர். முனியாண்டி,
“ஐயா, சபையில் இருப்பவரே,
அமைதியுடனே கேளுங்கள்”




என்றே கூறிப் போர்வைதனை
எடுத்தான். உடனே கக்கத்தில்
பன்றி ஒன்று இருப்பதனைப்
பார்த்தனர் சபையில் இருந்தவர்கள்!

பன்றியைக் கையில் எடுத்தனனே;
பலரும் பார்க்கப் பிடித்தனனே;
“நன்றாய்க் கேட்பீர், சபையோரே,
நானிப் பொழுது கூறுவதை.

உடைக்குள் இந்தப் பன்றியையே
ஒளித்து வைத்தேன். இதன்காதைப்
பிடித்துத் திருகி விட்டதனால்,
‘பீக்பீக்’ என்று கத்தியதே.

உண்மைப் பன்றி கத்துகிற
ஓசை தன்னை உணராமல்,
கண்ணை மூடித் தீர்ப்பளித்த
கனதன வான்களே, பாருங்கள்.

இப்பொழு தாயினும் கூறுங்கள்.
இதனைக் காட்டிலும் நன்றாக
எப்படி மனிதன் கத்திடுவான்?
எண்ணிப் பார்ப்பீர், சபையோரே.


தீர யோசனை செய்யாமல்
தீர்ப்புக் கூறும் நண்பர்களே,
ஆர அமர யோசித்தே
அளிப்பீர் தீர்ப்பை இனியேனும்.'”

முனியன் இப்படிக் கூறியதும்,
மிகவும் வெட்கம் கொண்டதனால்,
குனிந்தனர், சபையில் இருந்தோர்கள்;
குற்றம் தன்னை உணர்ந்தார்கள்.