ஈசாப் கதைப் பாடல்கள்/சேவலின் கர்வம்

கொண்டை வளர்ந்தசேவல்—இரண்டு
கோபமாய் ஒன்றை யொன்று
சண்டைக் கிழுத்தனவே—தங்கள்
சக்தியைக் காட்டிடவே.

இரண்டிலே சேவலொன்று—வெற்றி
எய்திட, மற்ற ஒன்று
மிரண்டது. மூலையிலே சென்று
வெட்கியே நின்றதுவே.

வெற்றி அடைந்தசேவல்—கூரை
மீதினில் ஏறி நின்று,
சுற்றிலும் கேட்டிடவே—கூவித்
தொண்டையைக் காட்டியதே!

கர்வம் மிகுந்தசேவல்—குரலைக்
கழுகொன்று கேட்டிடவே,
‘விர்’ரெனக் கூரைதன்னை-நோக்கி
வேகமாய்ப் பாய்ந்ததுவே?

சேவலைக் கால்களினால்—தூக்கிச்
சென்றது விண்ண திலே.
சாவது நிச்சயந்தான்—சேவல்
தன்னுடை கர்வத்தினால்!