உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/சாப்பாடு

இரகசியம் - 5
சாப்பாடு

சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடும் குரல் எல்லாயிடங்களில் இருந்தும் வருவது இயற்கை. தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஒருவர்க்குச் சாப்பாடு போடுவது என்பது சகல தர்மங்களுக்கும் சிகரம் வைத்தது போல என்பார்கள். ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று பாடுவார்கள். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்று கூறுவார்கள்.

ஏறத்தாழ எல்லா முக்கிய பழமொழிகளிலும் சாப்பாடு பற்றிய பழமொழி சத்தியமாகவே இடம் பிடித்துக் கொண்டிருக்கும். ஏனென்றால் மனிதனுக்கு வேண்டிய முக்கிய மூன்று அவசரத் தேவைகளில் உணவுதான் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.

“சோற்றால் அடித்த சுவரு. ஆக சோறில்லா விட்டால் போகுமே உயிரு” என்ற வினோதமாகப் பாடுவார்கள். என்றாலும் அது நிதர்சனமான உண்மைதான்.

“ஒரு சாண் வயிறு இல்லாட்டா நம்ம உயிரை வாங்குமா பரோட்டா” - என்று கேலியாகப் பாடி, உடலில் மையமாக இருக்கும் வயிற்றைப் பற்றி வக்கிரமாகக் குறிப்பிடுவதுண்டு.

சாப்பாடு என்கிற வார்த்தையிலே சகல வாழ்க்கை இரகசியங்கள் முழுவதும் அடங்கியிருக்கிறது. இந்த இரகசியத்தை அறிந்து கொள்கிறபோதுதான் ஒரு மனிதன், தெளிவாகவும், பொலிவாகவும், வளமாகவும், நலமாகவும், நோய்கள் அணுகாமலும் நிறைவாக வாழ்கிறான்.

அப்படி என்ன இரகசியம் சாப்பாட்டில் ஒளிந்து கொண்டு இருக்கிறது என்றால், அதுதான் அதிசயமான நன்மை பயக்கும் இரகசியமான உண்மை.

சாப்பாடு என்றால் உணவுதான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சாப்பாடு என்றால் சகல சுவையும் கொண்ட விருப்பமான பண்டமென்று தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சாப்பாடு என்றதும் ஆளாய்ப் பறக்கிறார்கள்.

அதற்காகச் சண்டை போடுகிறார்கள். நடுத் தெருவிலே நின்று கூச்சல் போடுகிறார்கள். சமயத்திலே கொடும் சண்டையாகவும் அது மாறிப் போவது உண்டு.

‘சாப்பாடு’ என்றால் ‘மரண அடி’ என்றே அர்த்தமாகிறது. இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று உங்களுக்குக் கோபம் கோபமாக வரும். ‘சா’ என்றால் சாதல். ‘பாடு’ என்றால் அவஸ்தை. அவஸ்தைப் பட வைத்து ஆளைச் சாகடிக்கும் விந்தையான பண்டம்தான் சாப்பாடு ஆகிறது. சாப்பிட வாருங்கள் என்று ஒருவரை அழைத்தவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்கிறவரை சோறுபோடுதல் என்பதைத்தான் எல்லோரும் தர்மம் என்பார்கள்.

அதிகமாக ஒருவர் சாப்பிடும் பொழுது அவரது மூச்சு முட்டுகிறது. ஆவி துடிக்கிறது. ஆன்மாவின் சக்தி குறைகிறது என்று யாரும் நினைப்பதுமில்லை. கவலைப்படுவதுமில்லை. சாப்பிட்ட பிறகு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குவதைத்தான் நாம் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். “பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்” - என்கிறார் திருமூலர். சோற்றின் அளவைக் குறைத்து, வயிற்றின் சுமையைக் குறைத்து, மிதமாகச் சாப்பிட்டால் அது உயிருக்கு உற்சாகம் தரக்கூடிய காரியமாக அமையும்.

அப்படி மிதமாகச் சாப்பிடுபவனைத்தான் ‘மிதாசனி’ என்பார்கள். அதாவது மித அசனி. ‘அசனி’ என்றால் ‘உண்ணுதல்’ என்று அர்த்தம். அளவோடு சாப்பிட்டால் உடல் அழகுக்கு ஆதாரம். அதையே அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அமிர்தமாக இருந்தாலும் நஞ்சாகி விடுகிறது.

சாப்பாட்டை வரவேற்று வாங்கி வைத்துக் கொள்ளுகிற வயிறுதான் எக்காலத்திலும் சங்கடத்திற்கு ஆளாகிப் போகிறது. அந்த உணவை வாங்கிக் கொள்ளும் உணவுப் பைக்கு வயிறு என்று ஒரு பெயர். தொந்தி என்று ஒரு பெயர். தொப்பை என்று ஒரு பெயர்.

ஏன் வயிறு என்றார்கள்? உணவை வாங்கி ‘வை’ ‘இறு’ என்பதைக் குறிக்கவே ‘வயிறு’ என்றார்கள். வயிற்றுக்குள்ளே உணவு வந்தவுடன் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஜீரணித்துவிட்டு, வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதுதான் இயற்கையின் இனிதான கட்டளை. அப்படி வலிமையுள்ள வயிறுதான் ஒருவனுக்கு வேண்டும்.

இல்லையேல் அந்த உணவுப்பையான வயிற்றுப்பை ‘தொப்பை’யாக மாறிப் போகிறது. தொப்பை என்ற சொல் தொல் +பை என்று பிரிகிறது. ‘தொல்’ என்றால் ‘சரிந்த’, ‘விரிந்த’ என்பது அர்த்தம். வயிற்றுப்பையானது. சரிந்து விரிந்து பழுதாகிப் பழசாகிவிடுவதால் அந்தத் தோல்பையைத் ‘தொல்பை’ என்றனர்.

தொல்பை இலக்கண ரீதியாக உச்சரிக்கப்படும்போது ‘தோற்பை’ என்று ஆனது. அதுவே உச்சரிப்பில் தொற்பை, தொற்பை என்று ஆகித் தொப்பை என்று வந்துவிட்டது.

சாப்பாட்டின் மேலுள்ள ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் வயிற்றினில் ஜீரண சக்தியை மிகுதிப்படுத்த முடியாமல், இந்த இரண்டிற்குமிடையே திண்டாடித் தவிப்பவர்களே ஏராளமான மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் படுகிற பாட்டையும், சுகக் கேட்டையும் அறிந்த அவ்வைப் பிராட்டியார் மிக நொந்து போய்ப் பாடுகிறார்.

‘இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்கிறார். வயிறில்லாமல் உடலில்லை. வளம் தரும் சாப்பாடு இல்லாமல் உடல் இல்லை.

இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டால் தான் அன்றாட வாழ்க்கை ஆனந்தமாய்க் கழியும்.

“பிறகு சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது? அதற்கு ஏதாவது வேறு பெயர் உண்டா?” என்று நீங்கள் கேட்கவிழைவது எனக்குப் புரிகிறது. சாப்பாடு என்று சொல்வதைவிட, உணவு என்று சொல்லிப் பாருங்கள். ஒரு இனிமையான உணர்வு உங்களுக்குள்ளே தோன்றி ஜொலிக்கும். உணவு என்பது ‘உண்+அவ்’ என்ற பிரிகிறது. ‘உண்’ என்றால் பசித்து ‘அவ்’ என்றால் விரும்பி. நீங்கள் உண்ணுகிற உணவு எதாக இருந்தாலும், எப்படியாக இருந்தாலும், அதை நீங்கள் ரசித்து விரும்பிச் சாப்பிடும் பொழுது வயிறு அப்படியே ஏற்றுக் கொள்கிறது. அங்கே அற்புதமான ஜீரணப்பணியும் அமோகமாக நடக்கிறது.

ஒரு கவிஞர் வயிற்றைப் பற்றி இப்படி வேடிக்கை யாகக் கூறுகிறார்.

“பசிக்கும் போது பாகற்காயும் இனிக்கும்

  பசியாத போது பிரியாணியும் கசக்கும்.”

உணவை இரசித்துச் சாப்பிடுகிற உணர்வு வேண்டும் என்பதற்காகத்தான், ‘சாப்பாடு’ என்ற சொல்லை வல்லினத்தில் கூறியிருக்கிறார்கள். ‘உணவு’ என்பதை மெல்லினத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

உணவை இதமாக, பதமாக, மிதமாகச் சாப்பிடுங்கள். அதையே உணவு உண்ணுங்கள் என்றனர். சகல

ஆசையோடும் அள்ளிக் கொட்டிக் கொள்வதைச் 'சாப்பாடு' என்றனர். ஆக, சாப்பாடு என்றதுமே அந்த இரகசியம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இனிமேல் சாப்பாட்டைச் சாதுரியமாக குறைத்துக் கொள்ளுங்கள், அறை வயிற்றளவு சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

அரை வயிறு சாப்பிட்டு எப்படி உயிர்வாழ்வது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அரை வயிற்று அளவு, என்ன எவ்வளவு என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. அந்த அரை வயிற்று அளவுக் கணக்கை இப்போது சொல்லிவிடுகிறேன்.

உங்கள் தட்டிலே உணவு இருக்கிறது. நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே வருகிறீர்கள். இன்னும் ஒருவாய் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும் என்ற திருப்தியானது உங்களுக்குத் தோன்றும்போது, அந்த ஒருவாய் உணவை உண்ணாமல் நிறுத்திவிடுங்கள். அது தட்டிலேயே இருக்கட்டும். நீங்கள் போய்க் கை அலம்பும்போது பசிப்பதுபோல் ஒரு உணர்வு இருக்கும். இன்னும் கொஞ்சம் சாப்பிட்டு இருக்கலாம் என்ற ஏக்கமும் வருத்தும். அப்படி எண்ணுகிற, உண்ணுகிற அளவுதான் அரை வயிற்றுச் சாப்பாடு. இதைத்தான் உணவுமுறை என்பார்கள்.

அரை வயிறு உணவு, கால்வயிறு தண்ணீர், மீதிக் கால்வயிறு காலியாக இருக்கும். நீங்கள் உண்ட உணவானது ஜீரணமாகி, உயிர்க்காற்றோடு ஒன்றாகும் போது, அங்கே கரியமில வாயு வெளியாகிறது. அது வெளியாகி வரும்போது அதற்கு இடங்கொடுக்கத்தான் கால் வயிற்றைக் காலியாக வைத்திருக்கிறோம். அந்தயிடம் இருப்பதால்தான் கரியமில வாயு அங்கேயிருந்து சுற்றிச்சுழன்று கீழே குதத்தின் வழியாகக் காற்றாக வெளியே வந்துவிடுகிறது.

இப்படிச் செய்யாமல் நீங்கள் முக்கால் வயிறு, முழு வயிறு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை மூச்சு முட்டக் குடிக்கும் பொழுது ஏற்படுகிற ஜீரண வேலையில் (Digestion) கரியமில வாயு உண்டாகி அது வெளியேறு வதற்கு வழியில்லாமல் திண்டாடி, அது மார்புப் பகுதி, முதுகுப் பகுதியென்று உடலுக்குள்ளே பரவுவதாலேதான் மூச்சுப் பிடியால் கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, சாப்பாடு என்று நீங்கள் சத்தம் போட்டுக் கூவினாலும், சுகமாக அரை வயிறு சாப்பிட வேண்டும். நலமாக நாட்களைக் கழிக்க வேண்டும்.

ஒருவேளை உண்பவன் யோகி. இருவேளை உண்பவன் போகி (குடும்பஸ்தன்) மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) பல தடவை சாப்பிடுபவன் துரோகி. அதாவது அவனே அவனுக்கு எதிரியாகித் துரோகம் இழைத்துக் கொள்கிறான்.

நீங்கள் யோகியாகி அன்றாடம் ஒரு வேளையே சாப்பிடா விட்டாலும், மூன்று வேளை மூக்கு முட்டச் சாப்பிட்டு ரோகியாக அதாவது அன்றாடம் நோயாளியாக ஆகிவிடாதீர்கள். மூன்று வேளை சாப்பிட்டாலே ரோகி என்றால் பல தடவை சாப்பிடுகிறவர்களைத் துரோகி என்றது சரிதானே. இவன் தனக்கும் துரோகம் செய்து கொண்டு அடுத்தவர்கள் சாப்பாட்டையும் சேர்த்துச் சாப்பிடுவதால் சமுதாயத்துக்கு, துரோகியாகி விடுகிறானல்லவா? எனவே குடும்பஸ்தர்கள் இருவேளை சாப்பிடுவதே ஏற்புடையதாகும்.

உலகத்தில் உங்களைக் கெடுப்பது வேறுயாருமல்ல. நீங்களே உங்களைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளே உண்டாகும் ஆசையும், ஆவேசமும், வெறியும், வேகமும், பற்றும் படாடோபமும் பைசாசம் போல உங்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகவே சாப்பாடு சரியான ஏற்பாட்டிற்குள் வந்துவிட்டால், சகல ரோகமும் தீர்ந்து, சகல யோகமும் செழித்து வரும் என்பதையே இரகசியமாக சாப்பாடு என்ற சொல் சிந்துபாடிக் கொண்டு இருக்கிறது.