உமார் கயாம்/16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!

16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!

தொடர்ந்து யாஸ்மி வராமல் போகவும் பித்துப் பிடித்தவன் போலானான் உமார். நீருற்றுக்குப் பக்கத்திலே போய் நெடுநேரம் காத்திருப்பான். அவள் தண்ணிர் எடுக்க வருவதேயில்லை. தொழுகை நேரத்திலே மசூதிப்பக்கம் போய், வாசலின் உட்புறத்து ஓரத்திலே நின்று கொண்டு, பெண்கள் போகும் திசையிலே ஆராய்ந்து கொண்டிருப்பான். ஒன்றும் பயன்படவில்லை. பிற்பகல் நேரத்திலே, ஒருவேளை அவள் தன்னைத்தேடி விண்மீன் வீட்டுக்கு வந்திருக்கக்கூடும் என்று அவசர அவசரமாகக் கோபுரத்தை நோக்கி ஓடி விடுவான். அறைகளில் யாருமே இருக்க மாட்டார்கள். அவள் ஏன் வரவில்லை? நோயாகப் படுத்து விட்டாளோ? நோயாக இருந்தால் தகவல் சொல்லி விடலாமே! தகவல் சொல்லக்கூடிய அளவுக்கு மேல் நோய் வாட்டுகிறதோ என்னவோ? சேதியறிந்துவரச் சொல்வதற்கும் ஆள் இல்லை. வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளும்படி டுன்டுஷ் சொன்னபோது மறுத்துவிட்டது எவ்வளவு கெடுதல் ஆகிவிட்டது என்று தோன்றியது. யாராவது பெண்கள் இருந்தாலும் புத்தகக் கடைக்காரர் வீட்டுக்குப் போய் விசாரித்துக் கொண்டுவரச சொல்லலாம். அப்படியாரும் கிடையாது!

இவ்வாறு குழம்பியபடி, மசூதியை நோக்கிக் கடைத்தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, அம்மைத் தழும்புடன் கூடிய பழக்கமான ஒரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது.

சிறிது யோசித்துப் பார்த்ததும், புத்தகக்கடை வீதியில் தன்னைத் தொடர்ந்து உளவறிந்த பிச்சைக்காரன் அவன் என்பது நினைவுக்கு வந்ததது. அவனோ, உமாரைக் கண்டவுடன், ஒளிந்து கொள்வதற்காக விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டான் கவனிக்காதவன் போல.

உமார் விரைந்து சென்று, அவனுடைய தோளையழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“நீருற்றுக்குப் பக்கத்திலே என்னுடன் வந்து பேசிக் கொண்டிருப்பாளே; அவளை நீ பார்த்தாயா?” என்று ஆவலோடு கேட்டான், உமார்.

உமாரை உற்று விழித்துக் கொண்டே, “அவளை நான் பார்க்கவில்லையே! அவள் இங்கே இல்லையே போய்விட்டாளே!” என்று விட்டுவிட்டுச் சொன்னான்.

“போய் விட்டாளா? எங்கே?” என்று உமாரின் கேள்வியிலேயிருந்த ஆவலையும் அவசரத்தையும் அந்தப் பிச்சைக்காரன் கவனித்தான், யாருடைய முகத்தையும் பார்த்தவுடன் அவர்களுடைய மனவியல்பை எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய அந்தப் பிச்சைக்காரன், உமாரிடமிருந்து நன்றாகப் பணம் கறக்கலாம் என்று தெரிந்து கொண்டான்.

“நான் கேள்விப்பட்ட விஷயமிருக்கிறதே. அதைச் சொல்லத்தடையில்லை, ஆனால், மூன்று நாளாகப் பட்டினி கிடக்கிறேன், பசி பொறுக்க முடியவில்லை” என்று இழுத்த மாதிரியாகப் பேசினான். இயந்திரம் போல உமாரின் கைகள் தன் மடியைத் துழாவின, தன் மடியில் ஒரு செப்பு நாணயங்கூட இல்லையென்பதை உணர்ந்து கொண்டான். பிச்சைக்காரனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி கூறிச் சைகை காண்பித்துவிட்டு தான் சிறுவயது முதல் அறிந்து வைத்திருந்த ஒரு வட்டிக் கடைக்காரனிடம் சென்றான். கிரேக்க நாணயங்களும், பாக்தாது நாணயங்களும், வட்டமும் சதுரமுமான பல தேசத்து நாணயங்களும் அவனிடம் இருந்தன.

“ஒருமாதத் தவணையில் எனக்கு ஒரு பொன் வேண்டும்” என்றான் உமார்.

“ஒரு மாதத்துக்கு ஒரு வெள்ளிவட்டி கொடுக்க வேண்டும். தெரியுமா?. இது வட்டிக்கடைக்காரனின் வாடிக்கைப் பேச்சு.

“பேச்சை நிறுத்து, பணத்தைச் சீக்கிரம் கொடு” என்று ஒரு பொன்னைச் சட்டென்று வாங்கிப் பிச்சைக்காரன் கையில் கொடுத்து, உனக்கு என்ன தெரியும்? சொல்! சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்! தெரிகிறதா?” என்று பிச்சைக்காரனை வெளியில் இழுத்துக் கொண்டுவந்தே கேட்டான்.

“நான் பொய் சொன்னால் என் தலையில் இடிவிழட்டும்! மூன்று நான்கு நாட்களுக்கு முன்னாலே அந்தப்பெண், அந்தப்புரத்தில் இருக்காமல் வெளியே போய்ச் சுற்றுவதைக் கண்டித்து வீட்டில் உள்ளவர்கள் அவளை அடித்திருக்கிறார்கள். இப்படித்தான் தண்ணிர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள். அவளுடைய சிற்றப்பன்தான் அந்த வீட்டில் அதிகாரத்தில் பெரியவன். அவனுக்குக் கோபம் அதிகம்! அவள் அடிபட்ட மறுநாள் அப்துல்சைத் என்ற துணி வியாபாரியிடமிருந்து பெண்கேட்டு ஆள்வந்தது. பிறகு, சிற்றப்பன் அப்துல் சைதுக்கும், சாட்சிகளுக்கும், சாதிக்கும் ஆள் அனுப்பி வரவழைத்தான். எல்லோரும் வீட்டுக்குள் நுழைவதை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களும் சுற்றத்தார்களும் கூடினார்கள். திருமண விருந்துச் சாப்பாடும் இனிய சர்பத்தும் எல்லோருக்கும் வழங்கினார்கள். எனக்கும் கூடக்கொஞ்சம் கிடைத்தது”

உமாருக்கோ, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சரி, அவள் என்ன ஆனாள்?” என்று கேட்டான்.

“வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அந்தப்பெண் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாளாம். எங்கேயோ வெளியிலிருந்து அவளை இரண்டுபேர் பிடித்துக் கொண்டு வந்தார்களாம். எங்கேயும் ஓடிப்போக முயற்சித்திருப்பாள். பிடிபட்டுவிட்டாள். எப்படியோ, அப்துல்சைத் என்ற துணி வியாபாரி அவள் அழகைக் கேள்விப்பட்டு, நல்லவிலை கொடுத்திருக்கிறான். அவனுக்கென்ன, எத்தனையோ கூடாரங்களுக்கும், குதிரைகளுக்கும் அதிபதி!” என்று பேசிக் கொண்டிருந்த பிச்சைக்காரன் நிறுத்திவிட்டுத் தன் கண்களை ஓடவிட்டான். ஏனெனில் உமார் ஓடினான்.

குருடனைப் போலக் கூட்டத்திலே இடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்தான் உமார். பித்து பிடித்தவன் போல் ஓடிய அவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் தன்கையில் இருந்த தங்க நாணயத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான் பிச்சைக்காரன். பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் உரசிப்பார்த்து, நல்ல மாற்று என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

மூன்று நாளைக்கு முன்னால், யாஸ்மி உமாரைப்போய்ச் சந்திப்பதைப்பற்றி அவளுடைய சிற்றப்பனிடம் கோள் சொல்லியதற்காகக் கிடைத்த வெள்ளி நாணயங்களுடன் பொன்னையும் சேர்த்து வைத்துக் கொண்டான், அந்த அம்மைத் தழும்பு மூஞ்சிப் பிச்சைக்காரன். உமார், அப்துல்சைத் இவர்கள் இருவரிடம் கறப்பதைக் காட்டிலும் அந்தச் சிற்றப்பனிடம், அதிகப் பணம் கறப்பது எளிது என்று பிச்சைக்காரன் முதலில் எண்ணியிருந்தான். ஆனால், உமார் தங்க நாணயமாகவே கொடுத்ததும் அவன் புத்தியில் கொஞ்சம் சபலமுண்டாகியது. நேரே வட்டிக்கடைக்காரனிடம் சென்று, “தெருவிலே சுற்றித்திரியும் அந்த அனாதைப் பயலுக்கு நம்பிப்பணம் கொடுத்தாயே! என்ன பிடித்து வைத்துக் கொண்டு கொடுத்தாய், முட்டாள்” என்றான்.

“ டேய் திருட்டுப்பயலே, உள்ளேவராதே ! பிச்சைக்காரப்பயல் நீ அவனை அனாதையென்கிறாயோ! அவன் யார் தெரியுமா? நிசாம் அல்முல்க் அவர்களின் அபிமானத்தைப் பெற்றவன்!” என்றான்.

இதைக்கேட்ட பிச்சைக்காரனுக்கு, யாரோ தன் சதையை வெட்டியெடுப்பது போல் வேதனையாக இருந்தது. இந்த விஷயம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த இரகசியத்தை அந்தப் பெண் வீட்டிலே சொல்லாமலேயே, சொல்லப் போவதாகப் பணம் கறந்திருக்கலாமே! முதலில் தெரியாமல் போய்விட்டதே!” என்று கவலையில் மூழ்கினான்.

உமாருக்கு ஆத்திரம் ஆத்திரமாகவந்தது. எல்லா விஷயங்களையும் அரைகுறையாகவே பார்த்தான் அரைகுறையாகவே தெரிந்து கொண்டான். எப்படியோ, தெருவீதிக்கு வந்து, நீருற்றின் அருகிலேயுள்ள யாஸ்மியின் வீட்டுக்குச்சென்று, அவளுடைய சிற்றப்பனைப் பார்க்க வேண்டுமென்று கூறினான். ஒரு மாதிரியான ஆள் உள்ளேயிருந்து வந்தான். எதற்காக வந்தான் என்று தெரிந்து கொண்டதும் எரிந்து விழுந்தான். இரைந்து கத்தினான். “திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேட்கிறாயே! உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா? முட்டாளே! பெயர் சொல்லி எங்கள்வீட்டுப் பெண்ணை நீ எப்படி அழைக்கலாம்? அவர்கள் என்ன ஆடுமாடுகளா?” என்று பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே பெரும் சத்தமிட்டான். யாஸ்மியின் தகப்பனும், புத்தகக் குவியலின் மத்தியிலிருந்து எழுந்து வெளியே வந்தான். கண் தெரியாமல் முகம் வெளுத்து, முதுமையடைந்து காணப்பட்ட அவன் எதுவும் பேசவில்லை.

“அந்த வெட்கங்கெட்ட திருட்டுப்பயலை எச்சரித்து அனுப்பு! திருட்டுப்பயல்! இங்கேயே ஓடிவந்து விட்டானே! அவனைத் தூண்களில் கட்டியடி! கால் மணிக்கட்டை பெயர்த்தெடு” என்று உள்ளேயிருந்து ஒரு பெண்குரல் ஆணையிட்டது. ஆனால், பித்துப் பிடித்தவனைப் போல் இருந்த உமார் மீது கைவைக்கக்கூடிய தெம்பு, தைரியம் அந்த வீட்டிலேயிருந்த ஆண்களில் யாருக்கும் உண்டாகவில்லை. பெண்கள் மட்டும் வாயினால் கண்டபடி ஏசினார்கள். கடைசியாக உமார், தானாகவே அந்த ஏச்சுக்களைத் தாங்க முடியாமலோ என்னவோ, அந்த விட்டு வாசலைவிட்டு வெளியேறினான்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு நெடு நேரத்திற்குப் பிறகு, இரத்தினக்கடை ஒன்றிலே நீலக்கற்களை ஆராய்ந்து விலைபேசிக் கொண்டிருந்த டுண்டுஷ் உருவத்தைக் கண்டான் உமார். தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு டுண்டுஷ் இருந்த இடத்திற்கு வந்தான். தன்னுடைய கதையையும் தன் மனமுடைந்த நிலையையும் உடைந்த சொற்களால் அவனிடம் தெரிவித்தான். நீலக்கல்லை ஆராய்பவன் போலத் தோன்றினாலும், டுண்டுஷ் விஷயத்தை ஊன்றிக் கவனித்தான். அந்தப்பெண் சாதாரணப் பாடகியாகவோ, அடிமையாகவோ இருந்திருந்தால், தன் அதிகாரம், சூழ்ச்சி யெல்லாவற்றையும் பயன்படுத்தி அவளைத் தூக்கிக் கொண்டுவந்து உமாரிடம் ஒப்படைத்து விடுவான்.

ஆனால் அவளோ இஸ்லாமியன் ஒருவன் வீட்டின் அந்தப்புரத்தில் வசிப்பவள்! அவள் தன் கணவனுடைய சொத்து! திரைக்குப் பின்னாலே இருக்கும் முக்காட்டுப் பெண்கள் விஷயத்திலே தலையிடுவதென்பது நிசாம் அவர்களுக்கே பிடிக்காத விஷயம்! பெண்களைத் திரைக்குப் பின்னால் வைத்துப் பாதுகாப்பது இஸ்லாமிய மதச்சட்டம். அந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதென்பது யாரும் கனவில் கூடக்காண முடியாத விஷயம்! அதுவும் தவிர, யாஸ்மி உமாரைத் தன் அன்புத் தளையிலே சிக்க வைத்திருக்கிறாள். தன் ஆதரவில் வாழும் உமார் ஒரு பெண்ணுக்கு ஆட்பட்டு நடப்பதையும் டுண்டுஷ் விரும்பவில்லை! பல பெண்களோடு, அவன் தொடர்பு கொண்டிருந்தாலும்கூட அதனால் கெடுதல் இல்லை. மேற்கொண்டு அவர்களை ஒற்றர்களாகவும் வசப்படுத்திக் கொண்டு பலன் பெறலாம். ஆனால், யாஸ்மி போன்ற ஓர் இளம்பெண், முற்றிலும் காதல் வசப்பட்ட ஒரு பெண் எப்போதும் தன் நோக்கங்களுக்கு ஆபத்தானவளாக இருப்பாள். ஆகவே அவளுடைய தொடர்பு உமாருக்கு இருப்பது என்பது தன்னைப் பொறுத்தமட்டில் கூடாத ஒரு காரியமே! இத்தனை விஷயங்களையும் எண்ணித் தெளிந்து கொண்ட டுண்டுஷ், அவள் விஷயத்தில் தான் தலையிடக் கூடாதென்ற முடிவுடன் ஆதரவான, இரக்கத்துடன் கூடிய தொனியில், ஆறுதல் கூறத் தொடங்கினான்.

“ஆ! அப்படியா நேர்ந்துவிட்டது. எனக்கு மட்டும், கொஞ்ச நாட்கள் முன்பாகவே இந்த விஷயம் தெரிந்திருந்தால், உனக்கே திருமணம் செய்து முடித்து விட்டிருப்பேன். சாட்சிகள் எதிரில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் திருமணத்தால், உன்னுடைய காதலி இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்டவள் போல் ஆகிவிட்டாள். இனி யாரால் என்ன செய்யமுடியும் ஏதாவது செய்யமுடியுமா? என்று யோசித்துப் பார்க்கலாம்!” என்றான் டுண்டுஷ்.

“ஆனால், அவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களால் முடியாத காரியமல்ல, அடுத்த மாதத்தில் நான் அவளைப் பெண் கேட்பதாக இருந்தேன்.”

“உம் விதி அப்படி! அதை யாரால் மாற்ற முடியும்!”

“எங்கேயிருக்கிறாள் என்று மட்டும் கண்டு சொல்லுங்கள். நான் அவளைப்பார்க்க வேண்டும்.”

“அது சரி, உடனே இன்று இரவே அங்காடிக் கட்டிடங்களுக்கு என்ஆட்களை அனுப்புகிறேன். நாளைப் பொழுதுக்குள் அவர்கள் அவள் இருப்பிடத்தைக் கண்டுவந்து சொல்லி விடுவார்கள். அதுவரையில் நீ என்கூடவே இரு” என்றான் டுண்டுஷ்.

அடுத்த நாட்காலையில் டுண்டுஷ் அனுப்பிய ஆட்கள் திரும்பி வந்தார்கள். துணி வியாபாரி அப்துல்சைத் என்பவன் நிசாப்பூரில் தற்பொழுது இல்லை என்றும், தன்னுடைய புது மனைவியையும் வேலைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு நகரைவிட்டு வெளியேறி விட்டானென்றும் ஆனால், எந்த ஊருக்கு எந்தத்திசையில் போனானென்பது தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார்கள். தினந்தினம் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நகரில் இருந்து வெளியூர் செல்லும் பாதைகளும் எத்தனையோ இருக்கின்றன. அதனால், அந்த ஒரு வியாபாரி வெளியேறிய விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள். இருப்பினும் ஒவ்வொரு பாதையையும் கவனித்துத் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினார்கள் அவர்கள் கூறிய விதத்திலிருந்து, அந்த வியாபாரி திரும்பவும் எப்பொழுதாவது வியாபார நிமித்தம் நிசாப்பூர் வரநேரிடக் கூடுமென்றும் அப்பொழுது கண்டுபிடித்து விடலாமென்றும் தோன்றியது!

இந்த விவரங்களால் உமார் மனஅமைதி பெற்று விடுவானென்று டுன்டுஷ் எண்ணியிருந்தான். ஆனால், அவன் எண்ணியது தவறாகிவிட்டது. உமார் தன்னுடைய பழைய பழுப்பு நிறமேலாடையுடன் அங்காடிப் பக்கமாகப் போனான். அங்கேயுள்ள பல கட்டடங்களிலும் உள்ள வியாபாரிகளுடனும், ஒட்டகக்காரர்களுடனும் பேசிக் கொண்டிருந்தான். பிறகு ஆளே நகரத்தை விட்டு மறைந்துவிட்டான். டுன்டுவினுடைய வல்லமையும் திறமையும்மிக்க ஒற்றர்களால் உமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்நாள் அப்துல்சையித் என்ற வியாபாரியைத் தேடியதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு உமாரைத் தேடினார்கள். பயன்தான் ஏற்படவில்லை.

உமார் ஒட்டகக்காரர்களுடன் கிளம்பிப்போய் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். நல்ல தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றும் அதிகாலை வேளையிலே எழுந்திருப்பதும், ஒட்டகக்காரர்கள் தங்கும் கூடாரங்களிலும், வியாபாரிகள் தங்கும் சத்திரங்களிலும் நுழைந்து நுழைந்து வெளிவருவதும், கண்ணெதிரில் தோன்றிய மனிதர்களையெல்லாம். மீஷிட் நகரைச்சேர்ந்த அப்துல்சைத் என்ற துணிவியாபாரியைச் சந்தித்ததுண்டா என்று விசாரிப்பதும் இப்படியாக ஒரே வெறியாக ஊர் ஊராகப் பாலைவனம் பாலைவனமாக எங்கும் தேடிக் கொண்டிருந்தான். சந்தையிரைச்சலின் ஊடேயும், புழுதிபடிந்த பாதைகளிலும், தன்னுடைய கேள்விகளைத் துணையாகக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

காய்ச்சலால் உடல் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும், உள்ளத்தின் காய்ச்சல் அதிகமாக உந்தித்தள்ள மீஷித் நகரத்தின் தங்கும் விடுதிகளையும், யாத்திரிகர்கள்கூடும் புண்ணியத் தலங்களையும் தேடிச் சென்றான். செப்ஸிவார் நகரில் உள்ள கற்றூண் அடியிலும், பூஸ்தான் நகரத்து ஒட்டக நிலையத்திலும் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான். ஒருமுறை அப்துல்சைத் என்ற ஒரு வணிகனைப் பின்தொடர்ந்து வடமலைத் தொடர்வரையிலும் சென்று, கடைசியாக அவன் போகாத சந்தையிலே பழைய துணிவிற்கின்ற ஒரு கந்தல் வியாபாரி என்பதைத் தெரிந்து கொண்டான்.

இடைவிடாத அவனுடைய உடல்வேதனை அவனை ஓரிடத்தில் கூடத்துங்க முடியாமல் செய்தது. சுமைகளுடன் நீண்டதுரம் போகும் ஒட்டகங்களுடன் கூடவிரைந்து ஓடும்போது, அவனுக்கு உடல் வேதனை குறைவாகத் தோன்றியது. “யாஸ்மி என்ன வேதனைப்படுவாளோ? ஓர் அடிமையைப்போல விற்கப்பட்டு, ஓர் அடிமையைப் போலவே அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் அவளுடைய உள்ளம் எவ்வளவு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும்? அன்றைக்கு அடித்த அடியில் அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள். இப்பொழுது எந்த இடத்திலே, எந்தப் பாதையிலே சென்று கொண்டிருக்கிறாளோ? உன்னுடன்கூட இருப்பதைக் காட்டிலும் வேறு வாழ்வு எனக்குக் கிடையாது என்றாளே!” என்று நினைக்க நினைக்க அவன் உள்ளம் வேதனையால் வெடித்துவிடும் போல் இருந்தது. நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின.

இளவேனிற் காலத்தின் சிலுசிலுப்பைக் கோடைகாலத்துச் சூரியன் உறிஞ்சிவிட்டது. குழகுழவென்று இருந்த சேறுஞ்சகதியும் இறுகிய இரும்பு வார்ப்புப்போல கட்டித் தன்மையடைந்து விட்டது. பச்சைப்புல் தரைகள் பழுப்பு நிறமடைந்தன.

கோடை வெயிலின் கொடுமையும், இடைவிடாத அலைச்சலின் அயர்ச்சியும் சேர்த்து அவனை நோயில் கிடத்திவிட்டன. காய்ச்சலும் சள்ளைக்கடுப்பும் சேர்ந்து இரண்டு வாரங்கள்வரை அவனைப் படுத்த படுக்கையாகக் கிடத்திவிட்டன இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவன் எழுந்திருக்க முடிந்தபோது, அவனுடைய கால்களைத் தரையில் ஊன்றுவதற்குப் போதிய வலிவுகூட இல்லாதவனாக இருந்தான், மீஷித் நகரத்தைச் சேர்ந்த கருணையுள்ளம் படைத்த ஒருவன், அவனைத் தன் கழுதையின்மேல் ஏற்றி நிசாப்பூரில் கொண்டுவந்து விடுவதாகக் கூறினான். நோய் வந்துகிடந்து எழுந்தபிறகு அவன் மூளையில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இந்த மாதிரி ஊருக்கு ஊர் அலைந்து திரிவது உபயோகமற்றது என்பதை அவன் தெரிந்து கொண்டான். தன் உள்ளத்துக்குள்ளேயே வீற்றிருக்கும் அந்த வேதனையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஊர் ஊராக ஓடியலைந்ததாக அவனுக்குத் தோன்றியது. எங்கு ஓடினாலும் இருக்கிற வேதனையும் கூடவேதானே வருகிறது என்பது இப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு நாட்களுக்குள் யாஸ்மியிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும். தன் கோபுரத்திற்கு அவள் நிச்சயம் செய்தி யனுப்பியிருப்பாள். டுன்டுஷ் உடைய ஒற்றர்கள்கூட ஏதாவது கண்டு பிடித்திருக்கலாம். அங்கிருந்து வெளியேறியது எவ்வளவு முட்டாள் தனமாகிவிட்டது. இப்பொழுது திரும்ப நினைத்தாலும் உடனே திரும்ப முடியவில்லை. தேறுவதற்காகச் சிலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.