உமார் கயாம்/18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்
சுல்தான் மாலிக்ஷா அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிட வருவதாக இருந்த அன்று, அவர் காலையில் முதலில் மான்வேட்டை முடிந்தபிறகு மாலையில் அங்கே நேரே வருவதாக இருந்தது. மத்தியானத்துக்குப் பிறகு அந்த ஆராய்ச்சிக்கூடம் பார்ப்பதற்கு ஒரு கேளிக்கைக்கூடாரம் போல் காட்சியளித்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த தோட்டம் முழுவதும் தரையில் ரத்னக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருந்தன. மரத்தடிகளிலே, பலவிதமான கோப்பைகளிலே விதவிதமான கறிவகைகளும், சர்பத்தும், பிற உணவுப் பொருள்களும் வைத்துக்கொண்டு வேலையாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அடையாள முறைக் கணிதப் பேராசிரியரும், உமாரின் கணித ஆசிரியருமான அலி அவர்களும், பல்வேறு கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் தங்கள் அரசாங்க உடைகளையணிந்துகொண்டு அங்கு வந்து கூடினார்கள். பள்ளி வாசலிலிருந்து வந்த மதத் தலைவர்களான முல்லாக்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமலும், எவருடன் கலவாமலும் தனியே ஒரு புறத்தில் இருந்தார்கள். முல்லாக்களையெல்லாம் அவரவர்களுக்குரிய மரியாதையுடன் நிசாம் அவர்களே வரவேற்று, சுல்தான் அவர்களின் ஆஸ்தான மேடையின் அருகிலே உள்ள ஆசனங்களில் அமர வைத்தார். நாட்டிலே முழு ஆற்றலும் வாய்ந்த சமயப் பேரவையின் உறுப்பினர்களான அவர்களுடைய கருணை நிறைந்த ஆதரவு இருந்தால்தானே விஞ்ஞானம் பிழைக்க முடியும். அதற்காகவேதான் நிசாம் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார். அவர்களோடு பேசும்போது, நேர் எதிராக நின்று பேசுவது கூடாதென்றும், அது மரியாதைக் குறைவு ஆகுமென்றும், அவர்களின் பின் பக்கமாக நின்றுபேசவேண்டுமென்றும் உமாருக்கும் எச்ரிக்கை செய்தார். ஆனால், அவர்கள் அங்கே கருணை உள்ளத்தோடு வரவில்லை.
உமார் எதுவும் பேசக் கூடியவனாக இல்லை. யாரோ நடத்துகிற விருந்தில் கலந்து கொள்ள வந்த ஒருவனாகவே அவன் அங்கு நடமாடினான். வெளியிலே குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டதும் எல்லோருடைய கண்களும் தலைவாசல் புறம் திரும்பின. சுல்தான் வருவதை அறிந்ததும் உமாருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
அவர் குதிரையிலிருந்து இறங்கியதும் வேலைக்காரர்கள் அவசர அவசரமாக அரசர் எதிரில் ஒரு நடைவிரிப்பை விரித்தார்கள். தன்னுடைய வேட்டையாடும ஈட்டியை அருகில் இருந்த அடிமை ஒருவனிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கிய சுல்தான் மாலிக்ஷா உள்ளே வந்தார். அவர் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. களைப்பாக இருந்தாலும் அவர் களிப்பாக இருந்தார். இருப்பினும், இந்த நிசாமையும் வயது முதிர்ந்த முல்லாக்களையும் பார்க்க நேர்ந்ததில் அவர் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார் என்றே உமார் நினைத்தான். ஒரு மிருகம் நடப்பதுபோல் நடந்து வந்த மாலிக்ஷா தாம் பேசும்போது கைகளை அசைக்கவும் இல்லை. குரலை உயர்த்தவும் இல்லை.
அவருக்கு வணக்கம் கூறுவதற்காக நிசாம் உமாரை அழைத்து வந்தபோது, சுல்தான் அவனை உற்றுநோக்கிவிட்டு, ‘ஆம்! இவனேதான்!” என்று மெல்லிய குரலில் கூறினார்.
“இந்த உலகத்தையாளும் இறைவரே! தங்களின் வேலைக்காரன் நான்” என்று கூறி உமார் அடி வணங்கினான்.
“கொராசன் பாதையிலே, நான் தங்கியிருந்த இடத்திற்கு நீ வந்தாய்! என்னைப் பற்றிய ஒரு குறி கூறினாய். நீ கூறியபடி அது நிறைவேறி விட்டது. அதை நான் மறக்க வில்லை; என்றும் மறக்கவும் முடியாது. இப்பொழுது நீ என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்!” என்று அவனை சுல்தான் மாலிக்ஷா கேட்டார்.
“அரசே! தங்கள் பணியாளாக என்னை அமர்த்திக் கொள்ளும்படி வேண்டுகிறேன்!” என்றான் உமார். "அப்படியே ஆகட்டும்! சரி, இப்பொழுது நீ இங்கே என்ன செய்து வைத்திருக்கிறாய்? காட்டு!” என்றார் சுல்தான்.
உயர்ந்த பளிங்குத் தூண் கருவியையும், அங்கிருந்த வேறு விஞ்ஞானக் கருவிகளையும் அக்கறையோடு கவனித்தார். வயது முதிர்ந்த கணிதப் பேராசிரியனாகிய மைமன், அரசன் முன்னிலையில் நிற்கிறோமே என்ற பயத்தில் கை நடுங்கி, மெய்நடுங்கி, வாய் குளறி விளக்கம் சொன்னதைக் கேட்கப் பொறுக்காமல், சுல்தான் உமார் பக்கம் திரும்பி ‘நீயே விளக்கிக் கூறு’ என்றார். அந்த இளம் வானநூல் ஆசிரியரான உமாரின் தெளிவான சொற்களை அவர் பெரிதும் விரும்பினார். உமாருக்கு அப்பொழுது வயது இருபத்திரண்டு. சுல்தான் மாலிக்ஷாவுக்கோ இருபதுதான். அவர் உமாரின் ஆற்றலைக் கண்டு வியந்தார்.
விஞ்ஞானக் கருவிகளை சுல்தான் கருத்தோடு கவனிப்பதைக் கண்டு பொறுக்காத பெரிய முல்லா, தம்முடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் மதவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவும் முன்வந்தார்.
“கவனியுங்கள், நீங்கள் ஆண்டவனின் தொண்டர்களாய் இருந்தால் அவன் ஒருவனுக்கே அடிபணியுங்கள்! அவரால் படைக்கப்பட்ட கதிரவனையும் நிலாவையும் போற்றி வணங்காதீர்கள் என்று புனிதத் திருமறை புகல்கிறது” என்று கூவினார் பெரியமுல்லா.
திருக்குரானில் உள்ள இந்த வாக்கியங்களைக் கேட்டதும் வழக்கம்போல மற்ற முல்லாக்களும், தங்கள் ஒப்புதலை ஒத்த குரலிலே தெரிவித்தார்கள்.
“இரவும் பகலும் கதிரும் நிலவும் எல்லாம் ஆண்டவனின் படைப்புகளே! அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் தெளிவாக்கப்படாவிட்டால், அவற்றை (அவற்றின் பயனை) நாம் பெறமுடியுமா? இப்படியும் கூடத்தான் திருமுறை கூறுகிறது” என்று உமார் கூறினான்.
மாலிக்ஷா எதுவும் கூறவில்லை. அவரும் மத நம்பிக்கையுள்ள நிசாம் போலவே, மதப்பெரியோர்க்கு மிகவும் மரியாதை செலுத்துபவர். இந்த விஷயத்தில் அவர் எதுவும் பேசுகின்றாற்போல இல்லை. பெரியமுல்லா அவர்களிடம் சென்று மரியாதை செலுத்தி விடைபெற்றுக் கொண்டு குதிரையேறப் போனார். குதிரையில் ஏறி உட்கார்ந்ததும் உமாரை அருகில் அழைத்து, “அரசாங்க வானநூல் கலைஞராக உன்னையேற்றுக் கொள்ளும்படி அமைச்சர் நிசாம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஆணையிட்டிருக்கிறேன். நாளைக் கூடும் சபையில், உனக்கு அரசாங்க மரியாதையுடன் பதவி வழங்கப்படும். அடிக்கடி சபைக்குவா. என் அருகில் அடிக்கடி வந்து இரு. உண்மையான குறிகளை அவ்வப்பொழுது உணர்ந்து கொள்வதற்கு நீ என் அருகில் இருப்பது இன்றியமையாதது” என்று கூறிவிட்டு, கடிவாளத்தை ஒரு சுண்டு சுண்டிக் குதிரையைத் தட்டிவிட்டார். அவருடன் கூடவந்த, அலுவலர்களும், வேலையாட்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். குதிரையின் காலடி கிளப்பிய தூசியிலே அவர்கள் மறைந்து சென்றார்கள். ஆனால் நிசாம்தான் மனம் வருந்தினார்!
மறுநாள் நிசாம் உமாரைத் தனியாகச் சந்தித்தபோது, “நேற்று நீ மோசமாக நடந்து கொண்டாய். உலேமா முல்லாக்களுடன் இவ்வாறு எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது. உன்னுடைய பாதையில் அவர்கள் அடிக்கடி தடையெழுப்புவதற்கு வாய்ப்பளித்து விட்டாயே!” என்று வருந்தினார்.
“தந்தையே! என் வேலைக்கும் உலேமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று உமார் கேட்டான்.
“அவர்களுடைய ஆதரவில்லாத எந்தக் காரியமும் வெற்றிபெற முடியாது. நீ தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இப்பொழுது, அரச சபையில் நீ பதவியேற்கப் போகிறாய். வருடத்திற்குப் பனிரெண்டாயிரம் மிஸ்கல் நாணயங்கள்-வரியைக் கழிக்காமல் உனக்குச் சம்பளமாகக் கிடைக்கும். மாலிக்ஷா பிரியப்படுகிற போதெல்லாம் உனக்குப் பொன்னாக வாரிக் கொட்டுவார். அந்த வரும்படி வேறு கிடைக்கும்” என்று நிசாம் சொல்லிக்கொண்டு வரும்போதே உமார் அதிசயித்தான். இத்தனை பெரிய தொகையை அவன் எண்ணிக் கூடப் பார்த்ததேயில்லை.
“அவருடைய ஆதரவு உனக்கு இருக்கும்வரையிலே, வெகுமதிகளும் பரிசுகளும் விரும்பியபோதெல்லாம் கொடுப்பார். ஆனால் அவர் ஒருவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையுமானால், கொல்லும் கத்தி முனையைக் காட்டிலும் கொடுரமாக மாறிவிடுவார். அரசர்களின் போக்கே இதுதான். அன்பிருந்தால் ஒரேயடியாகத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். வெறுப்பிருந்தால் உயிருக்கு உலை வைக்கும் ஆயுதமாக அவர்களே மாறிவிடுவார்கள். அவருடைய கருணை உன்மீது என்றும் இருக்குமென்றே எண்ணுகிறேன். அப்படியே அல்லா அருள் புரிவாராக! ஆயினும் அவருடைய அரண்மனை முழுவதும் அவருடைய உளவாளிகள் தேனடையை மொய்க்கும் தேனீக்களைப் போல - எங்கும் சுற்றிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு எந்த விஷயமும் தப்பாது, உன்மீது வெறுப்பூட்டுவதற்குப் பலர் முயல்வார்கள். அவருடைய ஆதரவு இருக்கும் வரை உன் வாழ்வு இன்ப வாழ்வுதான். அது நீங்கியதோ, உன்னுடைய வாழ்வு பெருமை, செல்வம், உயிர் எல்லாம் அழிந்து போக வேண்டியதுதாம். என்னுடைய ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு. ஆண்டவன் அருளால் என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் யாருமே இப்போது இல்லை. மேலும் என்னுடைய அரசியல் செல்வாக்கிற்குக் காரணம் என்னுடைய பெரும் உழைப்புத்தான். இந்த சாம்ராஜ்யத்தை அமைப்பதில் நான் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு பலவிதமான உபதேசங்களைச் செய்து வந்த நிசாம், தமக்கு அந்த சாம்ராஜ்யத்தை படைப்பதில் நெடுநாளாக இருந்து வந்த பெரும் பங்கையும், தன் உழைப்பையும், அரசுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவருடைய விளக்கத்திலே மூன்று தலைமுறைகள் சரித்திரமே அடங்கி யிருந்தது. பழைய சுல்தான் ஆல்ப் அர்சலான் புயல் போலப் புகுந்து பல நாடுகளை வென்று பாக்தாதிலே வெற்றிக்கொடி நாட்டியதையும், அலெப்போ நகரையும் மெக்காவையும், மெதினாவையும் கைப்பற்றியதையும் சாமர்கண்டிலிருந்து, கான்ஸ்டாண்டி நோபில் வரை பரந்து கிடக்கும் அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அதன் ஏகபோகச் சக்ரவர்த்தியாக இப்போது விளங்கும் இளஞ் சிங்கம் சுல்தான் மாலிக்ஷாவின் நிலைமையையும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினான். உமார், இப்படிப்பட்ட ஓர் அரசனுக்குச் சேவை செய்வதில் பெருமை இருப்பதாகக் கருதினான். “அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் எகிப்து தேசத்தின் காலிப்பிடமிருந்து மூன்றாவது புண்ணியஸ்தலமாகிய ஜெருசலத்தைக் கைப்பற்றிக்கொள்ள சுல்தான் மாலிக்ஷா திட்டமிட்டிருக்கின்றார். வருகின்ற வாடைக் காலத்தில் அலெப்போ வழியாக நமது படைகள் ஜெருசலத்தின் மீது படையெடுக்கப் போகின்றன.” என்று நிசாம் கூறினார்.
நினைத்தவுடன் திட்டமிட்டு இப்படிப்பட்ட அழகிய நகரங்களைத் தம் சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடிய இந்தச் செல்வ நிலையை, அந்த நிலையின் வியத்தகு ஆற்றலை எண்ணி வியந்தான் உமார். நிசாம் அவர்கள் உமாரைத் தினந் தினமும் அழைத்து அவனுக்கு அரசாங்க விஷயங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சட்டங்களை அமுல் நடத்துவதும், வரி வசூலிப்பதும், படையமைப்பதும், ஒற்று ஆடலும் பற்றிய எல்லா விவரங்களையும் எடுத்தெடுத்துக் கூறினார்.
சுல்தான் மாலிக்ஷாவுக்கிருந்த ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றியும் நிசாம் தெளிவாகக் கூறினார். “வேட்டையாடுவதில் சுல்தானுக்கு விருப்பம் அதிகம். பெண்களை இதயமில்லாத அடிமைகளாக எண்ணி நடத்துவது அவருடைய வழக்கம். தெய்வீகத்திலும், அருள் வாக்குகளிலும் மூட நம்பிக்கை அதிகம் கொண்டவர். அவருடைய பாட்டன் அநாகரீகமான குடியைச் சேர்ந்தவன். சுல்தான் மாலிக்ஷா அவர்களின் பக்கத்தில் எவனாவது சோதிடர்களைக் கொண்டுவந்து எதிரிகள் வைத்து விட்டால் போதும், அந்தத் தெய்வீக நம்பிக்கையைக் கொண்டே அவரை அழித்து விட முடியும். அவ்வளவு தூரம் தெய்வீக விஷயங்களிலே மூட நம்பிக்கை கொண்டவர். இதை நினைவிலே வைத்துக் கொள்! உன்னுடைய செயல் மிகவும் கஷ்டமானது. ஜாதகங்களிலோ சோதிடத்திலோ உனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையில்லையென்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரையில் நட்சத்திரங்களின் ஒழுங்கான இயக்கமே, கடவுளின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு என்று நம்புகிறேன். சுல்தான் மாலிக்ஷா-ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியோ, ஏதாவது காரியம் மேற்கொள்ளுவதற்குரிய நல்ல நேரத்தைப்பற்றியோ, அந்தச் செயலால் ஏற்படும் வெற்றி தோல்வியைப் பற்றியோ உன்னுடைய யோசனையைக் கேட்டால், அவருடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு உண்மையான கணிதமுறையால் பலாபலன்களை வகுத்துச் சொல்லு. வேறொருவன், அவரைத் தன் வசப்படுத்தும்படி விட்டு விடாதே, உன்னையும் உன் செயலையும் பொறாமைக் கண்களுடன் கவனித்து வருபவர் ஏராளம் என்பதை எப்பொழுதும் மறந்து விடாதே.” இவ்வாறு நிசாம் அவனுக்குச் சொல்லி அவன் நிலையையும், வேலையையும் அதன் பொறுப்பையும் உணர்த்தினார்.
உமார் அவர் கூறியவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டான். மாலிக்ஷா ஏதாவது தெய்வீகக் குறிகளின் விளக்கத்தைக் கேட்டால், அதற்கு விடையிறுப்பது மிக எளியதே ! பழங்காலத்துச் சோதிடக் கலைஞர்கள் வகுத்து வைத்த விதிமுறைகளின்படி கணக்கிட்டு, அவற்றிற்கு குறிப்பிடப் பற்றுள்ள பலன்களை அப்படியப்படியே ஒப்பிக்க வேண்டியதுதான்.
அப்படிப்பட்ட குறிகளில் அர்த்தமில்லை என்றால் அதனால் என்ன வந்து விட்டது. நம்புகிறவர் நம்பிக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன நட்டம்? என்று நினைத்தான்.
“இன்னொன்று கூறுகிறேன். அரசாங்க விஷயமாக ஏதாவது ஆருடம் கேட்டால், நீ எனக்கு ஆளனுப்பு! விவரத்தைத் தெரிந்துகொண்டு அதற்குக் கூறவேண்டிய சரியான பதிலை நான் உனக்குத் தெரிவிக்கிறேன். ஏனெனில், அரசியல் போக்குப் பற்றி ஆருடம் கூறுவது முடியாத காரியம். அது, அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து சொல்ல வேண்டியது. அது என் ஒருவனால்தான் முடியும். ஏனெனில், அரசியல் முறையை வகுப்பதும் நடத்துவதும் என் கையிலேயிருக்கிறது. ஆகவே அந்த விஷயங்களில் என்னைக் கலந்துகொண்டு நீ சோதிடம் கூறலாம்” என்றார் நிசாம்.
உமார் அவரை வியப்புடன் நோக்கினான்.
“ஆண்டவன் அருளின் உதவியால், இரண்டு கைகள் இந்தப் பேரரசை ஆளுகின்றன. முடிபுனைந்த பேரரசின் கையொன்று; தலைப்பாகையணிந்த இந்த அமைச்சனின் கையொன்று, போரும் வெற்றியும் தண்டனையும் வெகுமதியும் அரசரின் கையால் ஆக்கப்பெறுவன. ஒழுங்கும், வரிமுறையும், அரசியல் கொள்கையும் அமைச்சரின் கையால் படைக்கப்படுவன. நான் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு உண்மையாகவே உழைக்கிறேன். என் உழைப்பின் பயனாகப் புதியதொரு சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைக்கப் பாடுபடுகிறேன். ஆகவேதான், அரசியல் கொள்கை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது மட்டும் நீ என்னைக் கலந்து கொள்ள வேண்டும் என்கிறேன், புரிகிறதா?” என்று கேட்டார் நிசாம்.
“அப்படியே!” என்று உமார் ஒப்புக் கொண்டான். கண்டிப்பு நிறைந்த இந்த மனிதருடைய முழு நம்பிக்கைக்குரியவனாகத் தான் மாறி விட்டதையுணர்ந்தான். தன்னைக் காட்டிலும், சுல்தான் மாலிக்ஷாவைக் காட்டிலும் இன்னும் சொல்லப் போனால் மதத் தலைவர்களான உலேமா சபையினரில் யாரையும் காட்டிலும் அறிவாளியான இவருடைய நம்பிக்கைக்குரியவனாகத் தான் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான். நிசாமும், தன்னுடைய நெடுநாளைய திட்டம், நிறைவேறியதையெண்ணி மகிழ்ந்தார்.
உமாரின் ஒப்புதல் கிடைத்த மகிழ்ச்சியில், நிசாம் டுன்டுஷ் பக்கம் திரும்பி, “இவனுடைய செல்வாக்கைக் கொண்டு நாம் மாலிக்ஷாவை வசப்படுத்திக் கொள்ளலாம்” என்றான். ஆனால், உமார் அடுத்துக் கூறிய விஷயம் அவருடைய மனக்கோட்டையைத் தகர்த்தது.
“இப்பொழுது ஒரு வருட காலத்திற்கு நான் இங்கே யிருக்கத் தேவையில்லை. ஏனெனில் தினந்தோறும், கால அளவைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டிய வேலைதான். அதைப் பேராசிரியர் மைமனும், மற்றவர்களும் கவனித்துக் கொள்ளுவார்கள். இந்த இடைக் காலத்தில், படையெடுத்துச் செல்லும் சுல்தான் மாலிக்ஷாவுடன், நான் மேற்குத் திசையிலே ஒரு பயணம் போய் வரப்போகிறேன். சுல்தானும், தன்னுடன் வரவேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.” என்று வான சாஸ்திரியான உமார் பதில் உரைத்தான்.
உண்மையில் உமார்தான் சுல்தான் மாலிக்ஷாவுக்கு மேற்றிசைப் படையெடுப்புப் பற்றிய எண்ணத்தை உண்டாக்கினான். ஏனெனில், மேற்றிசையில் பயணம் செல்லும் சாக்கில் தன் அன்புக்குரியவளான யாஸ்மியைத் தேடிப் பிடிக்கலாமல்லவா? இப்பொழுது அவள் எங்கிருந்தாலும், தேடிப்பிடித்து வரக்கூடிய நிலை அவனிடம் இருந்தது. பொருளும், ஆட்களும், அதிகாரமும், பலமிகுந்த சக்கரவர்த்தி ஒருவரின் பக்க பலமும் எல்லாம் அவனிடம் இருந்தன.
டுன்டுஷ், உமார் மேற்றிசை செல்வதன் நோக்கத்தை உடனே புரிந்து கொண்டான். யாஸ்மி என்ற அந்தச் சிறுமிக்காகத்தான் என்பது ஒற்றர் தலைவனாகிய அவனுக்கு எட்டாத விஷயமல்ல.
“இதே உமார், தப்பியோடியதற்காக என்னைக் கண்டித்தாயே, நாய் போல் அலையவிட்டாயே, கிழவா! இப்பொழுது, நீயே அவனை நழுவ விடப் போகிறாய்!” என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்ட அவன், வெளியில் கேட்கும்படி, பணிவுடன் “எழுதியபடிதானே நடக்கும்” என்று ஒரு மத நம்பிக்கையுள்ளவனுடைய குரலில் கூறினான்.