ஔவையார் தனிப்பாடல்கள்/பாண்டியன் வருக!
24. பாண்டியன் வருக!
பாண்டியனும் சேர சோழரைப் போன்று பாரியைக் கொன்றதில் பங்கு கொண்டவன்தான். எனினும், பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவன் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. முறையற்ற ஒரு போரினை அறந்தவறாத பாண்டியர் குடிப்பிறந்த தான் நிகழ்த்தியதனை நினைந்து அவன் வருத்தம் கொண்டான். தன்னுடைய பிழையை உணர்ந்து வருந்தும் பெருந்தன்மை உடையவனாக விளங்கிய தென்னவனுக்கு, 'அதற்குப் பரிகாரமாக இப்பெண்களுக்குத் தருவதற்கான சீர்வரிசைகளுடன் வருவாயாக' என்று ஓலை விடுக்கின்றனர் ஔவையார்.
வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே - தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
ஈண்டு வருக வியைந்து.
"வையைத் துறைக்கு உரியவனே! மதுராபுரியில் இருந்து அரசியற்றும் தென்னவனே! பாரி மகளிருக்கு வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு இன்றைக்குப் பதினெட்டாம் நாள் இங்கே அடையும்படியாக வந்து சேர்வாயாக செய்யத்தகாத செயல் என்று கலங்கி, வராதிருந்து விடாதே" என்பது பொருள்.
சேர, சோழரின்பால் எதுவும் கொணரப் பணிக்காதவர் பாண்டியனிடம் மட்டும் சீர்வரிசைகள் கொணருமாறு கேட்கின்றார். இதனைக் கவனிக்க வேண்டும். பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பறம்பு நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அதனால் முறையாகப் பாண்டிய நாட்டவரான அவர்கட்குச் சீர் வழங்கும் பொறுப்பும் பாண்டியனுக்கே உளதாகும். இதனை மனத்துட்கொண்டே அவனுக்கு ஔவையார் 'வேண்டுவன கொண்டு வருக'. எனவே எழுதினார் போலும்!
‘விடியல் பதினெட்டாம் நாள்' எனவும், 'வருக விசைந்து' எனவும் பாடபேதங்கள் காட்டுவர், இறுதி அடிகளில்,