கவியகம், வெள்ளியங்காட்டான்/தடுமாற்றம்

தடுமாற்றம்

உயிருக் குயிரெனும் உத்தம
நண்பரெலாம், 'உணர்வில்
உயர்ந்தவன் நீயெனவே,
பெயரும் பொருளும் பெருமையும்
பேண வுறும் - பதவி
பெறமுய லென்றுரைத்தார்!
துயர முறாதநல் துயவான்
மீனினங்காள்! - உங்கள்
தோழமை வாய்க்குமருஞ்
செயல்களைச் செய்யஎன் சிந்தனை
செல்வதுமேன் - என்ன
செய்வதினியிதற் கே!

கூடப் பிறந்தச கோதரர்
கூறினர்காண்! - மாட
கூடங்க ளாயமைத்திங்
காடலும் பாடலும் மாகவாழ்
வோமெனவே; - ஒன்றி
அன்புட னாதரவாய்!
தேடக் கிடைக்காத தேசுடை
மீனினங்காள் - உள்ளம்
தெளிந்திட வில்லையிதில்!
நாடுவ னுங்களைப் போலொளி
நல்கிட வே - இந்த
ஞாலந் தனிலிருந்தே!

பெற்று வளர்த்தவர் பெரிதும்
விரும்பியது - செல்வம்
பேணிப் பெருக்கிய பின்,
குற்றங் குறையுமில் லாமல்பல்
லாண்டுகள்தான் - இந்தக்
குவலயத்தின்புற வே!
முற்றிலும் பொன்னுடல் பெற்றநல்
மீனினங்காள் - ஆசை
மூளவில் லையிதிலும்!
சுற்றமா யுங்களைப் பெற்றுச்
சுடருவதே - சாலச்
சுகமென எண்ணுகிறேன்!

'வாழ்விலும் தாழ்விலு மொட்டியே
வாழ்வெ'னென - வாய்த்த
வாழ்க்கைத் துணைவியவள்,
'ஏழ்கடல் வைப்பினி லுள்ளநல்
இன்பமெல்லாம் - இனி
ஈகுவ' னென்றுரைத்துத்
தாழ்வறு மேல்நிலை யில்சுடர்
மீனினங்காள்- பிரிவுத்
தழலினில் தள்ளிவிட்டாள்!
ஊழ்வினை கூட்ட மறுப்பினும்
நான் முயல்வேன் - உம்மோ
டொருவனா யொன்றுதற்கே!