கவியகம், வெள்ளியங்காட்டான்/பிரிவு
பிரிவு
உன்னை ‘யுறுதுணை' யென்ன அடைந்தஎன்
உள்ள முடைந்திடவே - அடீ!
என்னரு மைத்துணை வீ!யெனை விட்டுநீ
யின்று பிரிந்தனையே!
வாழ்க்கை வறுமையில் வாடினும் வாழ்ந்தனை
வையகம் வாழ்த்திடவே! - அடீ!
ஊழ்கை கொடுக்க மறுத்திட்ட போதிலும்
உள்ள முவந்தனைநீ!
அருகி லிருந்தும் அறிய மறந்தவுன்
அன்பி னரவணைப்பை - இனி
உருகி நினைத்து நினைத்துக் கசிந்திடும்
உள்ள முருக்குலைந்தே!
வானெனும் வண்ணத் திரையினில் நின்வர
லாறு முழுவதையும் - எழில்
மீனெனும் நல்ல எழுத்துக்கள் கொண்டு
மிளிரப் புனைந்திடவோ?
கவிஞன் கரத்தினைப் பற்றி நீ காட்டிய
காட்சி முழுவதையும் - இந்தப்
புவியில்சொல் லோவிய மாகப் புனைந்துனைப்
புத்துயி ரூட்டிட வோ
நன்று விரிந்த மலர்களிலுள்ள
நறுமண மவ்வளவும்-உள்ளம்
ஒன்றி யிருந்தவள் வாழ்வில் கமழ
உலகம் வியந்திடுமோ!
அல்லி மலர்ந்து கமழ்கையில் வந்தொரு
அசடன் பறிப்பதுபோல் - காலம்
ஒல்லவே வந்துன் னுயிரைப் பறித்தது
வோஎன்னுயிர்த்து ணையே