கவியகம், வெள்ளியங்காட்டான்/போதனை


போதனை

'எதற்காய் வாழுவ' தெனுமறி வில்லார்க்
கிருப்பதும் இல்லையடா - என்றும்
'இதற்காய் வாழுவ தென்பவர்க் கில்லா
திருப்பதும் இல்லையடா!

பொய்யிது வொன்று பொருந்திடின் போதும்,
பொலிவினைப் போக்கிவிடும்! - என்றும்
மெய்யிது வொன்றுனை மேவிடின் போதும்
மெலிவினை நீக்கிவிடும்!

நல்லவனாய்நாம் வாழ்வதி லொருதுளி
நாத்திகம் கிடையாது! - என்றும் அ
ல்லவனாய்நாம் வாழ்வதி லொருதுளி
ஆத்திகம் கிடையாது!

களவும் காவும் கற்றவன் இருளில்
காசினை எண்ணுகிறான்! - என்றும்
தெளிவும் திறவும் கற்றவன் அருளில்
தேசினை நண்ணுகிறான்!

செய்வதனைத்தும் செறிவுறச் செய்தால்
சிறுமையும் சென்று விடும் - என்றும்
உய்வதனைத்தும் உறவுறச் செய்தால்
உரிமையும் ஒன்றிவிடும்!



மனங்கம ழாத மலர்களில் மதுரம்
மாத்திரம் இல்லையடா - என்றும்
குணங்கம ழாத குலங்களில் குதிரும்
கோத்திரம் இல்லையடா!

காசொடு குலவும் கதியினைக் கண்ணில்
காண்பதை இழந்திடினும் - என்றும்
'மாசொடு குலவும் மதியின னெனநீ
மாண்பதை இழக்காதே!