கவியகம், வெள்ளியங்காட்டான்/வரவழைப்பு

வரவழைப்பு

வேலை வேண்டி யிருக்கவில்லை - வீட்டில்
வேலை வேறுவினாவதினால்,
மாலை நேரம் மனிதர்களின் - மனம்
மாற்றும் நல்ல மருந்தெனவே,
நீல வானில் கருமுகில்கள் - கூடி
நிறைந்திருந்தன. தாமெனினும்
சாலை யோடு நடந்துசென்றேன் - வாழ்வில்
சாந்தி தேடிச் சலிப்புடனே!

வயல்புறங்க ளிருமருங்கும் - பசும்
வண்ணம் காட்டி வயப்படுத்த
குயில்குரல்கள் குளுகுளென - மரக்
கொம்பு தோறும் செவிமடுக்க
வியக்கு மாறிரு பக்கலிலும் - உள்ள
வேலிப் பூக்கள் மணங்கமழ
இயற்கை யானஅச் சூழ்நிலையில் - என்றன்
இன்னல் வேர்கள் அறுந்தனவே!

ஆட வன்அதி லும்கவிஞன்-எனும்
ஆண்மை பீறிட் டெழுந்ததுகாண்!
பேடி யாயுளம் நொ ந்ததற்கும் - பின்னும்
பெரிதும் நாணிப் பிணிக்கலுற்றேன்.
ஊடிக் கூடி மனைவியுடன் - உறும்
உறவு பொதுவுல குக்கெனினும்
பாடி இன்புறும் பாவலர்கட் - கிதில்
பங்கும் பகுதி யெனப்பரிந்தேன்.

தனிமை நாடித் தவம்புரிந்து - வாழ்வுத்
தகுதி சுட்டிக் கவிபுனையும்
எனையும் கூட மயக்குவதே - இந்த
இன்ப துன்ப நினைவுகள்தாம்!
மனைவிக் காகவே வாழ்வதெனின் - அது
மணமி லாமல ராகுமெனும்
நனியு நல்லதோர் கற்பனையும் - தோன்றி
நலிவை நல்லதாய் நாட்டிடவே!

கலைஞ னென்ற கருத்துடனே - வந்து
கடித மொன்றை வரைந்துவிட்டேன்!
"மலரு மனைவியு மொன்றெனவே, என்றன்
மனத்தில் வைத்திருப் பேனெனினும்,
பலரைப் போலஇ ராமலினி - இந்தப்
பாரி லேதலை யாயயொரு
சிலரைப் போல இருந்துதவி - என்றன்
செயலைச் செம்மை படுத்திடுக!

அதுநிறைந்த மணமலரே - மனம்
மகிழ்ச்சி யூறு மருஞ்சுனையே!
புதிய யோசனை வேறெதையும் - இனிப்
புரிதல் விட்டுப் புறப்படல்செய்!
இதய மென்றஇம் மாளிகையைத் - திறந்
திங்கு காத்திருப் பேனுனக்காய்!
உதய மாவதைப் பார்த்திருக்கும் - நிசி
உறக்க மற்றதோர் வண்டெனவே!

எண்ணெ யாகவும் நானிருப்பேன் - திரி
என்ன நீயும் இணைந்திருந்து
கண்ணி னுக்கொளி யாயெரிந்து - அடி
கங்குல் தோறும் கவினுறின்நாம்
மண்ணில் வீடு மறுத்திடினும்-போற்றி
மக்கள் யாரும் மதித்திருக்கும்
விண்ணில் வீடு கிடைத்துவிடும் - இனி
விரைந்து வந்திங்கு சேரெனவே!