கவியகம், வெள்ளியங்காட்டான்/இதய வேட்கை
இதய வேட்கை
'இன்னமும் எத்தனைநாள் - தனியாய்
இங்கே இருப்பதுநான்?
'சின்னஞ் சிறுசெயலும் - தப்பாய்ச்
செய்தனை நீ'யென வே
என்னை அலட்டுகிறார் - அப்பா
என்றுமில்லாவிதமாய்!
தன்னந் தனிமையிலே - நொந்து
தவித்துப் புலம்புகிறேன்.
உண்ணப் பிடிக்கவில்லை - இரவில்
உறக்கம் வருவதில்லை!
கண்ணிற் படும்பொருளில் - நீரே
காட்சி யளிக்கிறீரென்
எண்ணம் அனைத்தினிலும் - நீரே
இரண்டற் றியங்குகிறீர்!
பெண்ணென் றிருப்பவரில் - யானோர்
பித்திகொ லோ அறியேன்!
கண்ணைப் பறிக்குமெழில் - இளங்
காரிகை யார்களித்துத்
தண்ணென் முழுநிலவில் - ஒன்றித்
தம்மை மறந்தவராய்
பண்ணின் குரலெழுப்பி - ஆடிப்
பாடி மகிழ்கையில்நான்
வெண்ணெய் எனக்கிடந்து - வீட்டில்
வெம்பி - உருகுகிறேன்!
'கன்னங் குழியும் எழில் - இனிய
கற்கண்டு போல் மொழிகள்
புன்னகை பூத்த முகம் - யாவும்
போக்கினை கெட்டெனவே
என்னருந் தோழியர்கள் - கூடி
ஏளனம் செய்வதெலாம்
பன்னி எழுதுவனேல் - அதுவோர்
பாரத மாகி விடும்!
பருவ மடைந்ததன்பின் - திருமணம்
பண்ணி முடிந்ததன் பின்
வரவும் செலவுமின்றிக் - கிடந்து
வாழ்க்கைத் துணைவர்களின்
பிரிவில் வருந்துகிற - அன்புப்
பெண்க ளனைவருக்கும்
இரவின் திரைமறைவில் - காலன்
இருப்ப தறிகிலிரோ!
காதல் கணவனுமைப் - பிரிந்து
கண்ணைக் கசக்குகிற
பேதை மதியுடைய - சொந்தப்
பெண்டின் துயரறியீர்!
'வேதனை விட்டிருநீ' - என்று
விளம்பல் எளிதுமக்கு
சாதல் அதைவிடவும் - எளிது
சதிகளுக் கென்றறிவீர்!
மதிய மெனைப்படுத்தும் - இந்த
மாபெருந் துன்பறவே
இதயந் தனை மலர்த்தும் - என்றன்
இன்பக் கதிரவனின்
உதயமு முண்டெனநான் - இன்னும்
உயிரைச் சுமந்திருப்பேன்!
விதியின் பயனெதுவோ - அதுவே
விளைக! இனியெனவே.