கவியகம், வெள்ளியங்காட்டான்/வலைக்குள் கலை
வலைக்குள் கலை
நீல வானில் தவழும் பிறையோ
நீணீ லத்தில் நிலவ நினைத்து நான்
மேலும் மேலும் பயிலத் தொடங்கினேன்
மேதை யென்னுமப் பாதையை மேவவே!
ஆலை வாயில் கரும்பென நூல்களை
ஆய்ந்து சாறு பிழிந்திடும் வேளையில்,
வேலை யற்றெவ ரேனுமாங் குற்றிடின்
வெறுப்பு, வேதனை, வெஞ்சினம் மிஞ்சுமே!
நெஞ்சு ரம்மிதம் மிஞ்சி யிருந்ததோ
நேர்மை யோஅன்றிக் காரணம் வேறெதோ!
கொஞ்சம் கூடஅஞ் சாமல் சகோதரர்
கோபதாபம் பொருட்படுத் தாமலே
செஞ்சொல் கன்னித் தமிழைப் பயில்வதே
செயலெ னக்கொண் டொழுகியதால்தினம்
பஞ்சம், பட்டினி, ஏளனம், என்பாள்
பங்கில் தங்கிப் பலுகிப் பெருகவே!
நஞ்சி தென்ன ஒதுக்கி உறவினர்
நாளும் தப்புக் கணக்குகள் போட்டதால்,
பஞ்சின் மெல்லடிப் பாவைதா ராவுளம்
பதைபதைத்துயிர் சோர்ந்து வருந்தவே,
மஞ்சு சூழ்மலை யாய்மலைச் சாரலாய்
மனங்க வர்ந்த அருவிக ளாவியழில்
விஞ்சும் வெள்ளியங் காட்டினை விட்டுநானை
விரைந்து கோவையில் தங்கினேன் வேண்டியே!
கொலைக்குக் கூடத்தம் கூடப் பிறந்தவர்
கூடமாட உதவும் உலகினில்
கலைக்குக் கைதர முற்றும் மறுத்துநான்
கலக்க மின்றி முயன்றுமுன் னேறியும்,
மலைக்குள் சிங்கம் புலிகட்குத் தப்பியே
மகிழ்ச்சி கூர்ந்திடும் வேளை மறதியால்
வலைக்குள் பட்ட கலையென வேமண
வாழ்க்கை யால்தடு மாறி வருந்தினேன்.
ஒட்டை வீட்டில் ஒருசுவ ரோரமாய்
ஒஞ்சரித்திரு கண்களும் மூடியே,
மூட்டுந் துன்பப் பிசாசுகள் முன்வரின்
முறுவல் பூத்து விரட்டுக நீ'யெனப் பாட்டி
சொன்ன பழமொழி ஒன்றிலே
படிந்து நெஞ்சம் தடிந்து கிடக்கையில்
வீட்டு வாசலில், கிண்கி னெனும் ஒலி
விரைந்தெ ழுந்து விடும்படிச் செய்தது!
காக்கிச் சட்டையைப் போட்டகை யாலொரு
கடிதம் கதவின் இடுக்கில் நுழைந்தது;
சீக்கி ரம்அதை நோக்கி எடுத்துநான்
செய்தி காணச் சிறிது படித்ததும்
தாக்கி நெஞ்சைத் துளைத்திடும் அம்புகள்
தாமெ ழுத்துரு வத்தினில் தோன்றின.
நாக்கு லர்ந்தது: மூக்கும் உலர்ந்தது:
நடுங்க வந்தொடங் கிற்றுடல் யாவுமே!
இதயம் தன்னி லிருந்த நெருப்பினை
எடுத்துக் கொட்டி இருந்தனள் என்கிளி!
நதியின் போக்கில் புனையின் செல'வென
நன்மை தீமையும் நம்முயிர் வேட்கையின்
விதியை ஒட்டி விளைந்திடு மென்றஎன்
வீறு கோளுரை வெந்து கருகவே
புதிய வேதனை பொங்கி எழுந்தது:
புவியும் சக்கர வட்டம் சுழன்றதே!