குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/6 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்கு
1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)
1.1. நடத்தல் ஓடல் (Walk and Run)
ஒரே வரிசையில் - நீண்ட கோடு போல மாணவர்களை நிற்க வைத்து, நடக்க விடுதல், ஓட விடுதல்.
வட்டமாக மாணவர்களை நிற்க வைத்து வட்டமாக நடக்கச்செய்தல், ஓட விடுதல்.
வரிசையாக நிற்க வைத்து, குறுக்கும் நெடுக்குமாக (Zig Zag) நடக்க செய்தல், மெதுவாக ஓட விடுதல், வேகமாக ஓட விடுதல்.
1.2. தாண்டச் செய்தல் (Jump)
இரு கால்களையும் சேர்த்து நிற்கச் செய்து, முன்புறமாகத் தாண்டி நிற்றல், தாண்டித் தாண்டிச் செல்லுதல் (Forward) தாண்டி நின்ற இடத்திலிருந்து, அப்படியே பின்பக்கமாகத் தாண்டி நிற்றல். அப்படியே முன்போல, பின்புறமாகத் தாண்டித் தாண்டி வருதல் (Backward)
நின்ற இடத்திலிருந்து, அப்படியே பக்கவாட்டில், தாவித்தாவிச்செல்லுதல்
1.3. முன் பாதத்தால் (Sideward)
முன் பாதத்தால் நிற்க வேண்டும். முன் பாதங்களால் முதலில் நிற்க வேண்டும்.
நின்ற நிலையிலிருந்து, முன் பாதத்தால், முன்புறமாக, பக்கவாட்டில், பின்பக்கமாக நடத்தல்.
1.4 தடைதாண்டல் (Toes)
செங்கற்கள், அல்லது கட்டைகள் அல்லது சிறு சிறு பெட்டிகள், முக்காலிகள் போன்றவற்றை தடைகள் போல வழியில் நிறுத்தி வைத்து, தாண்டி ஓடுமாறு செய்தல்.
2. தாளலயப் பயிற்சிகள் (Rhythmics)
2.1. நாட்டியத்தில் பின்பற்றப்படுகிற நளினமான இயக்கங்கள், இந்தப் பயிற்சிகளில் இடம் பெற வேண்டும்.
நடத்தல், தாவுதல், தாண்டுதல், நடுதல், துள்ளிக் குதித்தல் போன்றவற்றைச் செய்யும் போது, இதமான தாளநயத்தோடு செய்தல்.முன்புறமாக குனிதல் (Bend)
முன்புறமாக நீட்டுதல் (Stretch)
உடலை முன்புறமாகத் தள்ளுதல் (Push)
உடலைக் கீழிருந்து மேலே உயர்த்துதல் (Pull)
உடலை பக்கவாட்டில் முறுக்குதல் (Twist)
மேலே கூறியவைகளை முதலில் தனித்தனியாகச்செய்யக் கற்றுத்தரவேண்டும்.
2.2 இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவுடன், திறன்களை இணைத்து, சேர்த்துச் செய்யும்படி கற்றுத்தரவும்.
1. நடந்து தாவல் (Walk and hop)
2. நடந்து துள்ளல் (Walk and leap)
3. தாவிக்குதித்து பக்கவாட்டில் நடத்தல் (Hop and side walk)
4. துள்ளிக் குதித்து ஓடி நடத்தல்(Galopardwalk)
5. குனிந்து நிமிர்ந்து நீளல் (Bend and stretch)
6. கைகளை வீசி முன்புறம் தள்ளல் (Swing and Push)
7. முன்புறம் தள்ளி நிமிர்ந்து நிற்றல்(Pushand Pull)
2.3 நடிப்புப் பாடல்கள் (Action Songs)
அறுவடை காலத்தில் பாடுகின்ற பாடல்கள்,
பால்காரிப் பாட்டு,
படகுப் பாட்டு
அந்தந்தக் கலாசாரத்தை இயல்பாக வெளிப்படுத்தும் பாடல்கள்.
முதலியவற்றைப் பாடி நடித்திட வேண்டும்.
3. பாவனை கதை நாடகங்கள், போலிக்குரல் எழுப்புதல் (Imitation, Mimicry)
3.1. போலியாக பாவனை செய்தல் (Imitation)
யானை, தவளை, முயல், சிங்கம், ரயில், மோட்டார் கார், துணி துவைப்பவன், ரிக்ஷாக்காரன், பந்து பிடித்தல், பந்து எறிதல், எஞ்சின் ஓடுதல் போன்றவற்றைப் போல, பாவனை செய்து காட்டுதல் (நடந்து காட்டுதல், ஓடிக்காட்டுதல்)
3.2 போலிக்குரல் எழுப்பல் (Mimicry)
குதிரை கனைப்பது போல, நாய் குரைப்பது போல; பூனை கத்துவது போல; வாத்து சத்தம் போல கரடி கத்துவது போல, யானை பிளிறுவது போல; குதிரை வண்டி ஒடும்போது உண்டாகும் சத்தம் போல; மாதா கோயில் மணி அடிப்பது போல; வீதியில் பொருட்களை விலை கூறி விற்பவர் போல; பஸ் கிளம்பும் ஒலி போல; ரயில் ஒடும் சத்தம் போல, ஏரோப்ளேன் சத்தம் போல; போலியாகக் குரல் எழுப்பிக் காட்டுதல்.
4.சிறு பரப்பு விளையாட்டுக்கள் (Small area games)
இந்த விளையாட்டுக்களின் போது தான், சிறுவர் சிறுமியர்களின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.
சிறு பரப்பளவு உள்ள விளையாட்டிடத்தில், சிக்கலற்ற, சாதாரணமாக உள்ள விளையாட்டுக்களையே, விளையாடச் செய்ய வேண்டும்.
அப்படி நடத்துகிற விளையாட்டுக்களில், ஓடுதல், விரட்டுதல், தொடப்படாமல் தப்பித்துக் கொள்ளுதல் போன்றவை இடம் பெறுவது போல், அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட்டாக வேண்டும் என்கிற பெரிய விளையாட்டுக்களை கற்றுத் தருவதை, தவிர்த்து விடவும்.
முடிந்தால், வசதியிருந்தால், பந்துகள், அடித்தாடும் மட்டைகள், மற்றும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குழந்தைகளை விளையாடச்செய்யலாம். குழந்தைகளை குழு குழுவாகப் பிரித்து, கூடி விளையாடச் செய்யவும். குழுவிற்கு 5 அல்லது 6 பேர் இருப்பது சிறப்பானதாகும்.
உங்களுக்கு உதவ, ஒரு சில விளையாட்டுக்களை விளக்கியிருக்கிறோம்.
4.1. எலியும் பூனையும் (Rat and Cat)
விளையாட வந்திருக்கும் சிறுவர்களை கோர்த்துக்கொண்டு வட்டமாக நிற்கச் செய்ய வேண்டும்.
அவர்களில் இருவரைத் தோந்தெடுத்து, ஒருவரை பூனையாகவும், இன்னொருவரை எலியாகவும் இருக்குமாறு கூறவேண்டும்.
ஆடுங்கள் என்று கூறியவுடன், பூனையாக இருப்பவள் எலியைத் தொடுவதற்காக முயற்சிக்க, எலியாக இருப்பவள், அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வட்டத்திற்கு உள்ளே புகுந்தும், வெளியே வந்தும் ஓடுவார். பூனையும் அவரை விரட்டித் தொட ஓடுவார்.
கைகோர்த்துக் கொண்டு நிற்பவர்கள், எலி வட்டத்திற்குள்ளே வரும் போதும், வெளியே போகும் போதும், கைகளை தாழ்த்தியும் உயர்த்தியும் வழி கொடுத்து உதவ வேண்டும். அதே சமயத்தில், பூனை வரும் போது வழி கொடுக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பூனை திண்டாடிப் போய், வழி பெற முயற்சித்து அவதிப்படுவது, குழந்தைகளுக்கு வேடிக்கையாக இருக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
எலி பிடிபட்ட பிறகு, வேறு இருவரை எலி பூனையாக இருக்கச் செய்து, ஆட்டத்தைத் தொடரவேண்டும்.
குறிப்பு : இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போடுகிற வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.
4.2 வாலைப்பிடி (Snatching the tail)
விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகள், தங்கள் இடுப்பின் பின்புறம் வண்ணக் காகிதத்தில் அல்லது வண்ணத் துணியில் நீட்டமுள்ளதாக எடுத்து, வால் போல செருகிக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வால் இருப்பதாக அர்த்தம்.
ஆசிரியர் விளையாடுங்கள் என்று விசில் கொடுத்தவுடன், ஒவ்வொருவரும், மற்றவர்களின் வாலை பிடுங்கிட முயற்சிக்க வேண்டும்.
அதே சமயத்தில்; தன் வாலை மற்றவர்கள் பறித்து விடாமல் காத்துக் கொள்ளவும் வேண்டும்.
வால் பிடுங்கப்பட்டவர், உடனே ஆட்டம் இழந்து விடுகிறார். அதிகமான வால்களைப் பறித்து, தன் வாலை இழக்காதவரே, விளையாட்டில் வெற்றி பெற்றவராவார். தன் வால் பறிபோகாமல் காத்துக்கொண்டு, பிறர் வால்களைப் பறிக்கும் கெட்டிக்காரத்தனம் இந்த விளையாட்டில் மெருகேறுகிறது.
இந்த விளையாட்டை இன்னொரு முறையிலும் விளையாடலாம்.
குழந்தைகளை சரிசம எண்ணிக்கையில் 4 குழுவாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு குழுவையும் ரயில் எஞ்சின் பெட்டிகள் போல, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிற்க வைத்து, முதலில் நிற்பவரை தலை என்றும், கடைசியில் நிற்பவரை வால் என்றும் கூறவேண்டும்.
ஆசிரியரின் விசில் ஒலிக்கு பிறகு, ஒவ்வொரு குழுவின் தலையாக இருப்பவர், மற்றக் குழுவின் வாலாக இருப்பவரைப் போய் தொட வேண்டும். ஒருவரை ஒருவர் பிடித்திருக்கும் பிடிவிடாமல், சங்கிலிமுறை அறுந்து போகாமல், எல்லோரும் ஒன்று சேர்ந்தே ஓடவேண்டும்.
மற்றக் குழுவினர், தமது வாலைத் தொட்டுவிடாமல், அதே சமயத்தில் மற்றவர் வாலை தாங்கள் பறிக்கிற வேலையை, துரிதமாகச் செய்ய வேண்டும்.
கடைசி வரை, தன் வாலை இழந்து விடாமல் காத்துக் கொண்டு, மற்ற வால்களில் அதிகமான எண்ணிக்கையில் பறித்த குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
குறிப்பு : எந்த சமயத்திலும் குழந்தைகளின் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.3 சிலைகள் (Statues)
விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகளில் ஒருவரை, தொடுபவராக (it) இருக்குமாறு, முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை முதல் விசிலுக்கு, குறிப்பிட்ட இடப்பரப்பிற்குள்ளே ஒடிக் கொண்டிருக்குமாறு கூறி, அடுத்த விசிலுக்கு, உடனே சிலை போல அசையாமல் நிற்குமாறு அறிவித்திட வேண்டும்.
விசில் சத்தம் கேட்டு, ஓடும் குழந்தைகளை தொடுபவர் பார்த்துக் கொண்டே நிற்க, அடுத்த விசில் ஒலி கேட்டவுடன், ஓடும் குழந்தைகள் திடீரென நின்று, சிலை போல அசையாமல் நிற்க வேண்டும்.
சிலையாக நின்ற பிறகும் அசைந்து கொண்டிருக்கிற சமநிலை இல்லாமல், தள்ளாடி நிற்கிற யாராவது ஒருவரை, தொடுபவர் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் ஆட்டமிழக்கிறார். தொடப்பட்டவர் அடுத்த தொடுபவராக மாற மீண்டும் ஆட்டம் தொடரும்.
குறிப்பு : சிலையாக நிற்பவர்கள், எந்த மாதிரி சிலையாக நிற்க வேண்டும் என்பதை ஆசிரியர் முன்னரே குறிப்பிட்டிருப்பதைத் தான் அனுசரித்து நிற்க வேண்டும். சிலை என்பது அசையாதது. குழந்தைகளும் அசையக் கூடாது என்பது தான் முக்கியம்.
4.4 வட்டத்திற்குள் ராஜா (King of Circle)
முதலில், குழந்தைகள் இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெரிய வட்டம் ஒன்று போட வேண்டும்.
விளையாட்டில் பங்கு பெறுகிற குழந்தைகள், வட்டத்திற்குள்ளே, வந்த பிறகு, ஒரு காலை பின் புறமாக மடித்து வைத்துக் கொண்டு, ஒரு காலில் நின்று கொண்டிருக்க வேண்டும்.
ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, ஒரு காலில் நிற்கிற குழந்தைகள், மற்ற குழந்தைகளை இடித்து, வட்டத்திற்கு வெளியே தள்ளிவிட வேண்டும்.
வெளியே தள்ளப்பட்ட குழந்தைகள் ஆட்டமிழந்து விடுகின்றார்கள். கடைசியில் வட்டத்திற்குள்ளே நிற்கும் குழந்தையே, வட்டத்திற்குள்ளே ராஜா என்று, மற்றவர்கள் கைதட்டலுடன் பெருமையடைகிறது. மீண்டும் பல முறை இது போல் ஆடச் செய்யலாம்.
குறிப்பு: எப்பொழுதும் குழந்தைகள் ஏதாவது ஒரு காலில் தான் நின்று கொண்டிருக்க வேண்டும். இடிபட்ட பிறகு தடுமாறி இருகால்களை ஊன்றினாலும், உடனே ஒரு காலில் நின்று விடவேண்டும். வட்டத்திற்கு வெளியே போய் விட்டால், மீண்டும் ஆட்டத்திற்குள் சேர்ந்து கொள்ள முடியாது.
4.5.தலைவரைப் பின்பற்று (Follow the leader)
வந்திருக்கும் குழந்தைகளில் ஒருவரை, தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்தத் 'தலைவர்' குழந்தை, என்னென்ன பாவனை செய்கிறதோ, அதனைசெய்து கொண்டு பின்பற்றுகிற செயலே, தலைவரைப் பின்பற்று என்னும் ஆட்டமாகும்.
தலைவர் காக்கா பறப்பதைப் போல, இருபுறமும், கைகளை அசைத்தல், கொம்புடன் மாடு குனிந்து கொண்டு ஒடுவது போல, ரயில் எஞ்சின் ஒட்டம் போல, பல பாவனைகளுடன் முன்னால் ஒடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் தொடர்ந்து, அதே பாவனைகளுடன் ஒடிட வேண்டும்.
குறிப்பு : அடிக்கடி பாவனைகளை மாற்றிக் கொண்டு ஓடும் போது, ஆட்டத்தில் உற்சாகம் அதிகமாகும் என்பதால், தலைவருக்கு, இந்தக் குறிப்பினை முதலிலேயே கொடுத்து விட வேண்டும்.
4.6. நரியாரே! நேரம் என்ன? (What is the time Mr. Fox?)
குழந்தைகளின் ஒருவர் நரியாகவும்; மற்றொருவர் தாய்க் கோழியாகவும்; மீதியுள்ள குழந்தைகள் அனைவரும் கோழிக்குஞ்சுகளாகவும், விளையாடுமாறு கூறிவிட வேண்டும்.
ஆடுகிற மைதானத்தில், ஒரு எல்லையில் ஒரு கோடும், மற்றொரு எல்லையில் ஒரு கோடும் போடப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு எல்லைக் கோடு நரியின் இடம் மற்றொரு எல்லைக் கோடு, கோழிகளின் இடம். இடைப்பட்ட இடத்தில் கோழிக்குஞ்சுகள் மேய்ந்து கொண்டிருப்பது போல, நடந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆசிரியர் விளையாடுங்கள் என்று கூறியவுடன், கோழி தன் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு, எல்லைக் கோட்டின் மேல் நிற்கும் நரியிடம் செல்ல வேண்டும்.
சென்றவுடன், தாய்க்கோழியானது, நரியாரே! நேரம் பன்ன? என்று கேட்க வேண்டும்.
இப்பொழுது காலை, மத்தியானம், சாயங்காலம், என்று ஏதாவது ஒரு பெயரை நரிசொல்லிக் கொண்டே வரும். கோழியும் குஞ்சுகளும் அங்கே நின்று போய் திரும்பி வந்தும், மீண்டும் மீண்டும் நேரம் என்ன என்று வந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் எல்லைக் கோட்டை அடைவதற்குள், எத்தனை பேரை நரி பிடிக்கிறதோ, அத்தனை பேர்களும், நரியின் சொந்தமாகிவிடுவார்கள். பிடிப்பட்ட குஞ்சுகள், நரி நிற்கும் எல்லைக் கோட்டின் பின்புறம் போய் நிற்க வேண்டும்.
மீண்டும் மற்ற குஞ்சுகளுடன் தாய்க் கோழி வந்து, நரியிடம் நேரம் கேட்க, ஆட்டம் தொடரும்.
ஒருவர் நரியாக 5 முறை ஆடுமாறு கூறி அதற்குள் எத்தனை குஞ்சுகளைப் பிடிக்கிறார் என்று கணக்கிட்டு வைத்துக் கொண்டு மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பளித்து, மிகுதியாக குஞ்சுகளைப் பிடித்த நரியாரையே, கெட்டிக்கார நரி என்று அறிவிக்க வேண்டும்.
இப்படியாக ஆட்டத்தை தொடரவேண்டும்.
4.7. மரம் தேடும் அணில் (Squirrel in a tree)
குழந்தைகளை மூவர் மூவராகப் பிரித்திட வேண்டும். ஒவ்வொரு மூவரும் ஒரு மரமாவர். அதாவது, இரண்டு பேர் கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்க, மத்தியிலே நிற்பவர் தான் அணில் கைகளைக் கோர்த்துக் கொண்டிருப்பவர்கள் மரம் ஆவர். இப்படியாக, மூன்று பேர்கள் உள்ள குழுவை, மைதானத்தில் ஆங்காங்கே, நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
மரம் இல்லாத அணில்களாக, இரண்டு பேரை, மைதானத்தின் ஒரு மூலையில் போய் நிறுத்தி வைக்க வேண்டும்.
ஆசிரியரின் விசில் ஒலிக்கு பிறகு, இருவருக்கு மத்தியில் அணிலாக நிற்கிற ஆட்டக்காரர்கள், தங்கள் இடத்தை விட்டு ஓடி, மற்ற மரத்தில் இடம் பிடிக்க வேண்டும். (கைகளுக்குள்)
இப்படி அணில்கள் இடம் மாறி மரம் பிடிக்கும் சமயத்தில், மரமில்லாத அணில்கள் இரண்டும், விரைவாக ஓடி, அணில் இல்லாத மரத்திற்குள் வந்து நின்று விட வேண்டும்.-
கடைசியில் இடம் கிடைக்காத அணில்கள், மூலையில் போய் நிற்க, மீண்டும் ஆட்டம் தொடரும்.
மரமாக நிற்பவர்கள், அசையாமல், ஓரிடத்தில் தான் நிற்க வேண்டும். அணிலாக இருப்பவர்கள் மட்டுமே, அங்கும் இங்கும் ஓடி மரம் தேட வேண்டும்.
மரம் கிடைக்காத அணில்கள், மீண்டும் தொடர்கிற ஆட்டத்தின் போது, இடம் தேடிக் கொள்ள வேண்டும். இதுவே ஆடும் முறையாகும். 4.8. என்னைப் பிடிக்க முடியாது முதலையே! (Crocodile cannot catch me)
குறைந்தது 50 அடி தூரமாவது மைதானத்தில் இருந்தால் நல்லது. இரண்டு கோடுகளை இரண்டு எல்லையிலும் குறித்து, நடுவில் ஓரிடத்தையும் குறித்திடவேண்டும்.
இரண்டு கோடுகளும் ஆற்றின் கரையாகும். நடு இடம் தான் முதலை வசிக்கும் இடம்.
முதலையாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நடுவில் நிற்கச் செய்ய வேண்டும். மற்ற குழந்தைகள், ஒருபுறம் உள்ள எல்லைக் கோட்டில் போய் நிற்க வேண்டும்.
ஆசிரியர் விசிலுக்குப் பிறகு, ஒரு கரையில் (கோட்டில்) நிற்கும் குழந்தைகள், மற்ற எல்லைக் கோட்டை நோக்கி ஓட வேண்டும். அவர்கள் அந்தக் கரையை அடையாமல், நடுவில் நிற்கிற முதலையானது, தொட்டோ அல்லது பிடித்தோ விட வேண்டும்.
முதலையிடம் தொடப்படாமல், அல்லது பிடிபடாமல் ஓடி, எதிரே உள்ள கரையைச் சேர் கிறவர்கள், வெற்றியாளர்கள் ஆவார்கள்.
குழந்தைகள் ஓடுகிறபோது, "முதலையே என்னைப் பிடிக்க முடியாது" என்று கத்திக் கொண்டே ஓட வேண்டும்.
இப்படியாக, இன்னொருவர் முதலையாக மாறிட, ஆட்டம் தொடரும்.
4.9. விரட்டித் தொடும் ஆட்டம் (Tag)
குழந்தைகளில் ஒருவரை விரட்டுபவராக (it) நியமிக்க வேண்டும். மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தான், எல்லோரும் ஓட வேண்டும் என்பதை, முதலிலே சொல்லி விட வேண்டும்.
ஆசிரியர் விசிலுக்குப் பிறகு, குழந்தைகள் ஒடிப்போக, அவர்களை விரட்டித் தொட, விரட்டுபவர் முயற்சிப்பார்.
தொடப்பட்டால், தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற. மீண்டும் ஆட்டம் தொடரும்.
இதை வேறு முறையிலும் விளையாடலாம்.
குழந்தைகள் விசில் ஒலிக்குப் பின் ஓடுகிற போது, விரட்டுபவர் ஒருவரைத் தொட்டவரோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் கை கோர்த்துக் கொண்டு, மற்றவரைத் தொட, அவரும் சேர்ந்து கொள்ள, இப்படியாக, தொடுபவர்கள் அணி பெரிதாகிக் கொண்டே போகும்.
கடைசியில் உள்ள ஒருவரைத் தொடும் வரை, இந்த ஆட்டம் தொடரும். குறிப்பு : தொடுபவர் அணி, கைகோர்த்துக் கொண்டு தான் பிடிக்க வேண்டும். பிடியினை விட்டு விட்டுத் தொட்டால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சேர்ந்து கைப்பிடித்துக் கொண்டு, தொடும் போது தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4.10 கண்மூடி ஆட்டம் (Blind Tribe)
குழந்தைகள் கைகளைக் கோர்க்காமல் தொடப்படுகிற அருகாமையில் நின்று கொண்டு, வட்டமாக நிற்க வேண்டும். அவர்கள் கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டும்.
வட்டத்தின் நடுவில், இரண்டு பேர், கால்களைத் துணியால் அல்லது கயிற்றால் கட்டிக்கொண்டு நிற்பர். அதாவது ஒருவரின் இடது காலும் மற்றவரின் வலது காலும் கட்டப்பட்டு, மூன்று கால்காரர்களாக (Three Legged) நிற்க வேண்டும்.
ஆசிரியரின் விசிலுக்குப் பிறகு, வட்டத்தில் நிற்பவர்கள் எச்சரிக்கையுடன் நிற்க; மூன்று கால் காரர்கள் இருவரும், வட்டத்தில் நிற்பவர்களால் தொடப்படாமல், வட்டத்திற்கு வெளியே வந்து விட வேண்டும்.
வட்டத்தில் நிற்பவர்கள், கண்களை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும். வட்டத்திற்கு வெளியே போகும் போது, தொடப்பட்டால், மீண்டும் அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்புத் தரப்படும். வெளியே போக விடாமல் தடுப்பதற்காக, வட்டத்தில் நிற்பவர்கள் கைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு நிற்பது நல்லது.
அவர்களைத் தொட்டவர்கள் , மூன்று கால்காரர்களாக ஆகிட, ஆட்டம் தொடரும்.
4.11. பந்தைப்பிடி (Ball Toss)
ஆசிரியர் தன் கையில் பந்தை வைத்துக்கொண்டு நிற்க, அவரைச் சுற்றி, குழந்தைகள் தயாராக நிற்க வேண்டும்.
விசிலுக்குப் பிறகு, பந்தை உயரமாக அவர் எறிய, குழந்தைகள் பந்தைப் பிடிக்க வேண்டும்.
அதிக உயரமாக எறியாமல், குழந்தைகள் திறமைக்கு ஏற்ப, பார்த்து, உயரம் எறிய வேண்டும்.
5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)
5 முதல் 8 வயது குழந்தைகளுக்கு, உடற்பயிற்சி உதவி சாதனங்கள் என்று, எதுவும் தேவையில்லை.
அவர்கள் உடல் இயக்கத்தில், ஒரு அழகு, ஒரு நளினம், ஒருங்கிணைந்த செயல்முறை இருப்பது போல் பயிற்சியளிக்கவேண்டும்.தசை நரம்புகள் சேர்ந்த சிறப்பான இயக்கம் அதிகமாவதுடன், உடலில் வலிமை, சமநிலை, நெகிழ்ச்சி ஏற்படவும், இந்த சீருடல் பயிற்சிகள் உதவுகின்றன.
5.1 பலவித இயக்கங்கள்
விசிலுக்குப் பிறகு, குழந்தைகள் ஒரு மூலையை நோக்கி ஓட வேண்டும்.
போய் நின்றதும், கைகளை சுழற்ற வேண்டும் (Swing)
முன் பாதங்களால் உயரமாக நிற்க வேண்டும். பிறகு, அப்படியே முன்பாதங்களால் குந்தியிருக்க வேண்டும். (Toes)
மரங்கள் கிளைகளைக் காற்றில் அசைப்பது போல, கைகளை விரித்து ஆட்டி அசைக்க வேண்டும்.
ஒரு காலில் நிற்க வேண்டும்.
தவளை தத்துவது போல தாண்ட வேண்டும்.
முன்புறமாகக் குட்டிக் கரணம் போட வேண்டும் (Forward Roll)
5.2. (ஒரு காலில்) நொண்டியடித்துக் கொண்டே, ஓடிக் கொண்டிருக்க வேண்டும். விசில் சத்தத்திற்குப் பிறகு, ஓடி வந்து வட்டமாக நிற்க வேண்டும். வட்டம் போட்டபடி, ஏரொப்ளேன் பறப்பது போலவும், திரும்புவது போலவும், திடீரென்று நிற்பது போலவும் பாவனை செய்ய வேண்டும்.
சைக்கிள் ஒட்டுவது போல, கால்களை அசைத்தல், உயரே போய் வருகிற பந்தைப் பிடிப்பது போல தாவிக் குதித்தல்
நான்கு நான்கு பேராக பக்கவாட்டில் சேர்ந்து நின்று, ஒரே வரிசையாக முன்புறம் நடத்தல். அது போல, பின்புறம் வருதல் போன்ற செயல்களை செம்மையாகச் செய்ய பயிற்சி தரவேண்டும்.
6. சிறுசிறு தனிப்போர் விளையாட்டுக்கள் (Simple Combatives)
தனிப் போர் விளையாட்டுக்கள் என்பது, தன்னம்பிக்கை, தற்காப்புத்திறமை, தைரியம், நீடித்துழைக்கும் ஆற்றல், நுண்திறன் போன்ற குணங்களை வளர்க்கும் வல்லமை வாய்ந்ததாகும்.
இவைகள் சுய வெளிப்பாடு உணர்வை (Self expression) வெளிப் படுத்தும் விசேஷத் தன்மை வாய்ந்தவைகளாக விளங்குகின்றன.
தனிப்போர் என்பது, எதிர்த்துப் போட்டியிடுபவரை தள்ளுதல், இழுத்தல், தள்ளிவிடுதல், போன்ற செயல்களாகும். எதிரே உள்ள எதிராளியுடன், மோதித் தமது திறமையை வெளிப்படுத்துகிற, தாக்கும் உணர்வின் வெளிப்பாடாகவே இப்போர் இருப்பதால், குழந்தைகளுக்கு நிறைவான குதுகலம் தரும் விளையாட்டுக்களாகவே இவை திகழ்கின்றன.
6.1. கையால் தள்ளுதல் (Hand Push)
இதில் கலந்து கொள்பவர் இருவர்
ஒருவருக்கொருவர் ஒரு அடி தூரம் இடைவெளி இருப்பது போல, அமர்ந்து, முன்புறம் உள்ள மேசை மீது வலது கையை முழங்கையில் ஊன்றி, பிறகு இருவரும் நன்றாக உள்ளங்கையால் பற்றிக் கொள்ள வேண்டும்.
தள்ளுங்கள் என்று கூறியவுடன், ஒருவருக்கொருவர் மற்றவர் கையை முன்புறமாகத் தள்ளி, அவரது சமநிலையை (Balance) இழக்கச் செய்திட முயல வேண்டும். இது தான் தனிப்போர் போட்டியாகும்.
சமநிலை இழந்து விடுகிறவர் அல்லது ஒருவரது கையைத் தள்ளிக் கொண்டே வந்து, தன் உடலுக்கருகில் தள்ளுமாறு விட்டு விடுகிறவள், தோற்றுப்போகிறவராகிறார். வலிந்து தள்ளிவிடுபவரே வெற்றி பெறுகிறார். 6.2 கையை இழுத்தல் (Hand Pull)
முன்பு கூறியது போலவே (6 - 1) இருவரும் தங்கள் கைகளை முழங்கையால் ஊன்றியவாறு, உள்ளங்கைகளைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
இழுங்கள் என்று கூறியவுடன், ஒருவரது கையை மற்றொருவர் தம் பக்கம் இழுத்துக் கொண்டு வருவது போல, இழுக்க வேண்டும்.
ஊன்றியுள்ள கையை இழுத்து, தரை மீது அல்லது மேசை மீது படுவது போல, படுக்க வைப்பவரே வெற்றி பெற்றவராகிறார்.
6.3 குச்சியை இழு (Wand Pull)
ஒரடி நீளம் உள்ள ஒரு குச்சியை, போட்டியிடும் இருவரும் இரு கைகளாலும், முதலில் பிடித்துக் கொள்ள வேண்டும். இழுங்கள் என்று கூறியவுடன், இருவரும் தங்கள் பக்கம் நோக்கி, அந்தக் குச்சியை வலிந்து இழுக்க வேண்டும்.
அவ்வாறு குச்சியை இழுத்து, எதிராளியை தம்பக்கமாக வருமாறு இழுத்துவிட்டால், அவரே வெற்றி பெற்றவராவார்.
குறிப்பு : இரண்டு கால்களையும் நன்றாக, தரையில் அழுத் தி ஊன்றித் தான், இழுத் தலை ஆரம்பிக்கின்றார்கள். அவர்களில் யாராவது ஒருவரின் ஒரு காலோ அல்லது இரு கால்களோ, நகர்ந்து முன்புறமாக வந்துவிட்டால், அவர் தோற்றவராகி விடுகிறாள்.
6.4. முதுகால் முதுகைத் தள்ளுதல் (Back to Back push)
போரிடும் இருவரும், தங்கள் முதுகுப் பக்கத்தைக் காட்டிக்கொண்டு, ஒட்டி நின்று, இரண்டு முழங்கைக்குள்ளும் கோர்த்துப் பிடித்துக் கொண்டு தயாராக நிற்க வேண்டும்.
அவரவர் முன்புறத்தில், 5 அடி தூரத்தில் ஒரு கோட்டினைக் கிழித்துக் குறித்து வைத்திருக்க வேண்டும்.
தள்ளுங்கள் என்று கூறியவுடன், இருவரும் தங்கள் முதுகினால், மற்றவர் முதுகைத் தள்ள வேண்டும். இவ்வாறு முனைந்து தள்ளிக் கொண்டே, முன்புறம் உள்ள கோட்டுக்கு எதிராளியைத் தள்ளி விடுகிற போட்டியாளரே, வெற்றி பெற்றவராவார்.
குறிப்பு: 1. முதுகினால் மட்டுமே தள்ள வேண்டும். 2. முதுகின் மேல் மற்றவரை ஏற்றிக் கொள்ளக்கூடாது. 3. முதுகின் மேல் ஏற்றாமல், தள்ளுவதற்கு மட்டுமே உரிமையுண்டு. 4. எதிரியின் முன்புறக் கோட்டை நோக்கியே தள்ள வேண்டும்.
6.5 முதுகின் மேல் தூக்கு (Back to Back lift)
போரிடும் இருவரும், தங்கள் முதுகுப்பக்கத்தை ஒட்டியவாறு, தங்கள் முழங்கைகளால் கோர்த்துக் கொண்டு முதலில் நிற்கவும்.
இருவரும் தயாராக நின்றவுடன், தூக்குங்கள் என்று ஆசிரியர் ஆணையிடுவார்.
ஒருவர் முன்புறமாகக் குனிந்து, மற்றவரை தன் முதுகின் மேல் தூக்க முயல்வார். இன்னொருவரும் மற்றவரை, தன் முதுகின் மேல் ஏற்ற முயல்வார்.
யார் முதுகின் மேல் மற்றவரை தூக்கிவிடுகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.6.6. பின்புறமாக குச்சியை இழு (Back to Back Stick Pull)
முன்னர் விளக்கிய தனிப்போரில் உள்ளது போல், போட்டியிடும் இருவரும், முதலில் வந்து முதுகுப்புறம் முதுகு இருப்பது போல நிற்க வேண்டும்.
அவர்களில் ஒருவர், தன்கையில் 3 அடி நீளமுள்ள ஒரு குச்சியை இருகைகளாலும் பிடித்திருக்க அவரைப் போலவே, மற்றவரும் அதே குச்சியை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். (முன் போட்டிகளில் முழங்கைகளால் கோர்த்துக் கொண்டிருந்ததை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்).
ஒவ்வொருவர் முன்புறத்திலும் இரண்டு அடி தூரத்திற்கு ஒரு கோடு போட்டிருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
இழுங்கள் என்று ஆணையிட்டவுடன், இருவரும், தங்களின் முன்புறக் கோட்டை நோக்கி, எதிரியை இழுக்க வேண்டும்.
யார் முதலில் நமது கோட்டுக்கு எதிரியை இழுத்து வந்து விடுகிறாரோ, அந்தப் போட்டியில் அவரே வென்றவராவார்.
மொத்தம் 3 முறை இவ்வாறு இழுக்க விட்டு, அதில் 2 முறை வெற்றி பெறுகிறவரை, வென்றவர் என்ற அறிவிக்க வேண்டும்.
6.7 வாலை எடுபார்ப்போம் (Take off the tail)
போட்டியிடுகிற இருவரும், தங்கள் பின்புறத்தில் வால் போல ஒன்றை செருகிக் கொள்ள வேண்டும்.
கைக்குட்டை, அல்லது சிறு துணி, அல்லது சிறு கயிறு ஒன்றை பின்புறக் கால் சட்டையின் (இடுப்புப் பகுதியில்) நுழைத்துக் கொள்ள வேண்டும். அதையே வால் என்கிறோம்.
எடுங்கள் என்று ஆணையிட்டவுடன், இருவரும் தமது எதிரிக்குரிய வாலை பிடுங்க முயற்சிக்க வேண்டும். எதிரியின் வாலை எடுத்தவரே வெற்றி பெற்றவராவார்.
அடுத்தவர் வாலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, தன் வாலையும் இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
3 முறை இப்படி நடத்தி, அதில் இரண்டு முறை வெல்கிறவரை, வென்றவர் என்று அறிவிக்கலாம்.
6.8. குழிக்குள் தள்ளி விடு (Push into the pit)
5 அடி விட்டமுள்ள ஒரு வட்டத்தை முதலில் போட வேண்டும். அந்த வட்டத்தைத்தான் குழி என்கிறோம்.போட்டியிடுகிற இருவரும் குழிக்கு 3 அடி தூரம் தள்ளி, நின்று கொண்டிருக்க வேண்டும்.
தள்ளுங்கள் என்று கூறியவுடன், ஒருவரை மற்றொருவர் இழுத்து வந்து, குழிக்குள் (வட்டத்திற்குள்) தள்ளிவிடவேண்டும். தான் குழிக்குள் வந்து (தெரியாமல்) விழுந்து விட்டால் கூட அவர் தோற்றவராகிறார்.
எதிரியை குழிக்குள் இழுத்து வந்து தள்ளி விடுகிறவரே, வெற்றி வீரர் ஆகிறார்.
7. உடல் நலம் (Health)
சில நன்மைகள்
உடல் நலத்தை குழந்தைகளுக்குப் போதிப்பதால் உண்டாகும் நன்மைகள்
7.1. உடல் நலம் பற்றிய அறிவில் தெளிவு ஏற்படுகிறது.
7.2. உடல் நலத்திற்காக உதவுகின்ற பழக்க வழக்கங்களின் தன்மைகளும், உண்மைகளும் அவர்களுக்கு புரிகிறது.
7.3. தான் நலத்துடன் இருக்க வேண்டிய அவசியம் பற்றி அறிந்து கொள்வதுடன், அதுவே சமூக நலமாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ள முடிகிறது. 7.4. தான் வாழும் சூழ்நிலைக்கேற்ப, உடல் நலம் தரும் பழக்க வழக்கங்களை எப்படி கடைபிடிக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதுடன்; அவற்றைத் திறமையாகக் கடைப்பிடித்து ஒழுகவும் கூடிய உள்ள எழுச்சியும், திண்மையும் உண்டாகி விடுகிறது.
7.5 எதிலும் எப்பொழுதும் சுத்தமாக இருத்தல்; தேவையான உடற்பயிற்சி, வேண்டிய ஒய்வு, நல்ல தூக்கம், நிமிர்ந்து நிற்கிற பழக்கம், நிமிர்ந்து உட்காருதல், நடத்தல் போன்ற வற்றில் அக்கறை செலுத்தி, ஏற்றபடி நடந்து கொள்வதுடன், உணவுப் பழக்கத்திலும் தூய்மையான வழிகளை மேற்கொள்ள, உடல் நலக் கல்வி உதவுகிறது.
7.6 நோய் வந்த பிறகு தடுப்பதைவிட, வருவதற்கு முன்னே வளமாக வாழ்கிற, தற்காப்பு உணர்வையும் மிகுதியாக இது வளர்த்து விடுகிறது.
7.2. குழந்தைகளும் உடல் நலப் பழக்கங்களும்
7.2.1 தன்னுடல் சுகாதாரம் (Personal Hygiene)
தனிப்பட்ட ஒருவரின் உடலுக்குரிய நலம் பற்றி விளக்குவதுதான் , தன்னுடல் சுகாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
தினந்தோறும் பல் விளக்குதல்; மலம் கழித்தல்; குளித்தல்; தலைக்கு எண்ணெயிட்டு, முடிவாரி திருத்தம் செய்தல் ; வளர்ந்து வரும் நகங்களை வெட்டி அழகுப்படுத்தல், கைகால்களின் அழுக்கைக் கழுவி தூய்மையாக வைத்திருத்தல் போன்றவை எல்லாம், தன்னுடல் சுகாதாரப் பழக்கங்களாகும்.
இந்தப் பழக்கங்களை பாட்டாக இயற்றி, இசையமைத்து, கூடிச் சேர்ந்து பாடும் கூட்டுப் பாடலாகக் கற்றுத் தரலாம். பாடிக் கொண்டிருக்கும்போதே, அவற்றை நடித்துக் காட்டவும் செய்தால், குழந்தைகள் மனதிலே சுகாதாரக் கருத்துக்கள் ஆழப்பதிந்து விடும்.
உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல், தேகப்பயிற்சி; ஒய்வு, உல்லாசமான பொழுது போக்கு; உறக்கம் ; கைகால் உடல் துாய்மை இவற்றின் சிறப்புகளையும் குழந்தைகளுக்குப் போதிக்கலாம்.
உணவு உட்கொள்ளும் போது, அவசரமில்லாமல், நன்கு மென்று அரைத்து, சுவைத்துத் தான் விழுங்க வேண்டும். நல்ல உணவாக, வெந்த உணவாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிடவும். சாப்பிடுவதற்கு முன் கைகால் கழுவி சுத்தமாகிக் கொள்ள வேண்டும்.
ஓய்வும் உல்லாசப் பொழுது போக்கும் உடலுக்கு நல்ல தெளிவைக் கொடுத்து, களைப்பிலிருந்து மீளச் செய்து, களிப்பைத் தருவதாகும். அதனால், உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனமும் உற்சாகமடைகிறது. இத்தகைய ஓய்வையும் பொழுதுபோக்கையும், நல்ல பயனுள்ள காரியங்களாகக் கண்டுணர்ந்து, பின்பற்ற வேண்டும்.
உறக்கம் என்பது உடலுக்கு ஓய்வும், மனதுக்கு அமைதியும் கொடுப்பதாகும். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 மணி நேரமாவது உறக்கம் வேண்டும். உறக்கத்தின் போது, தேய்ந்து போன திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பழுதான திசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
சுத்தமான படுக்கையில், காற்றோட்டமான இடத்தில், உறங்க வேண்டும்.
தினமும் குளிக்க வேண்டும். உடலிலுள்ள தோலின் அழுக்கைப் போக்கித் தூய்மைப்படுத்த, சோப்பினை பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது, உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை அளிக்கும்.
குளித்த பின், அழுக்கில்லாத ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். 'கந்தையானாலும் கசக்கிக்கட்டு' என்ற பழமொழி ஒன்று இருக்கிறது.
உடற்பயிற்சி தான் உடல் உறுப்புக்களை பதப்படுத்துகின்றன. பலப்படுத்துகின்றன. பாங்காக வேலைகளைச் செய்து பரிமளிக்கச் செய்கின்றன. அதனால் தினந்தோறும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். செய்தாக வேண்டும்.
அதன்படி, நிமிர்ந்து நிற்கும் தோரணை, நிமிர்ந்து உட்காரும் நிலை, நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல், எழுதுதல், சுமை ஏதாவது தூக்கும் போதும் நிமிர்ந்த உடல் கொள்ளுதல்.
(மேலே கூறிய பழக்கங்களையெல்லாம் , குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தரல் வேண்டும். செய்யுமாறு தூண்ட வேண்டும். செய்திடத் துணைபுரியவும் வேண்டும்.)
7.2.2. சுற்றுப்புற சுகாதாரம்
(Environmental Hygiene)
குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடங்கள் எதுவாக இருந்தாலும், அங்கெல்லாம் சுத்தமாகவும் துய்மையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே, சுற்றுப்புற சுகாதாரம் என்று சொல்லப்படுகிறது,
1. வீட்டில், தான் இருக்கும் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வது.
2. வகுப்பறையை சுத்தமாகப் பார்த்துக் கொள்வது.
3. மற்ற சிறுவர்களையும் வகுப்பறைக்குள் கிழிந்த பேப்பள், வேண்டாத குப்பைப் பொருட்களை, கண்ட இடத்தில் எறியாமல், தடுப்பது குறிப்பிட்ட குப்பைத் தொட்டியில், கொண்டு போய் போடச் சொல்வது.
4. விளையாடும் இடங்களில், ஆடுகளங்களில், கண்ட குப்பைகளைப் போடாமல், சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல்.
5. கண்ட இடத்தில் எச்சிலைத் துப்பாமல் இருக்கச் சொல்லுதல்.
6. பள்ளியைச் சுற்றி, கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்காமல் அசிங்கப்படுத்தாமல் கண்காணித்து கொள்ளுதல். இத்தகைய சுகாதாரப் பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பித்தால், அவர்களின் மனதில் தூய்மைக் காரியம், ஆழமாகவே பதிந்துவிடும். அவர்கள் வளர்கிறபோது, இந்தக் காரியங்களும் சேர்ந்து வளர்ந்து கொள்ளும்.
தனிப்பட்டவரின் பண்பாடுகள் தானே, சமுதாயக் கலாசாரமாகிறது! அதற்கு இந்த சுகாதாரப் பழக்கங்கள் நிச்சயமாக உதவும். நிறைவான நல வாழ்வையும் நல்கும்.