சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/10



[10]

குகையின் ரகசியம்!

எல்லாரும் குகையை நோக்கி ஆவலோடு புறப்பட்டனர். கீழே இறங்குவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. மேலும் குகையைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தால் சீக்கிரமாகவே அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.

வெளியில் நல்ல வெளிச்சம் இருந்தும் குகைக்குள்ளே ஒரே இருட்டாக இருந்தது. தங்கமணி டார்ச் விளக்கைப் போட்டுக் கொண்டே உள்ளே எச்சரிக்கையாக நடந்தான். ஜின்கா அவனைத் தொடர்ந்து சென்றது.

கண்ணகி அடுத்தபடியாகச் சென்றாள். சுந்தரம் “நான்தான் பின்னணி மெய்காப்பாளன்” என்று கூவிக் கொண்டே பின்னால் நடந்தான் அவன். கூவியதின் எதிரொலி குகையில் உள்பக்கத்திலிருந்து பயங்கரமாகக் கேட்டது.

சில இடங்களில் குனிந்து செல்ல வேண்டியிருந்தது. ஓரிடத்திலே தண்ணீர் சொட்டிற்று. அதனால் அந்த இடத்திலே ஏதோ நெஞ்சு கலங்கும்படியான ஓர் ஒலி கேட்டது.

“அண்ணா” என்று கண்ணகி தங்கமணியின் கையைப் பற்றினாள்.

“அது ஒன்றும் இல்லை. தண்ணீர் சொட்டுவதால் உண்டாகும் சத்தத்தின் எதிரொலிகள் மாறிமாறி உள்ளேயே சுற்றுவதால் இப்படி வினோதமான ஒலி கேட்கிறது” என்று தங்கமணி அவளுக்குத் தைரியம் ஊட்டினான். அவனுடைய பேச்சும் விநோதமாக எதிரொலித்து அவன் கூறியதை உண்மையென்று காட்டிற்று.

வௌவால்கள் உள்ளிருந்து திடீர் திடீர் என்று பறந்து வெளியே ஓடின. ஆனால் அவை யார் மேலும் மோதாமல் அந்த இருட்டில் பறந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த ஊர்மக்கள் கூறியவாறு அங்கு கருவண்டுகள் ஒன்றுமே இல்லை. வௌவால்களைத்தான் அப்படி எண்ணினார்கள் போலிருக்கிறது.

குகைக்குள்ளே சுமார் 60 மீட்டர் சென்ற பிறகு ஒரு சிறிய திருப்பம் காணப்பட்டது. தங்கமணி ஆவலோடு அதில் நுழைந்தான், மற்றவர்களையெல்லாம் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு அவன் மட்டும் ஜின்காவோடு அதில் கொஞ்ச தூரம் சென்றான்.

ஆனால் அந்தத் திருப்பத்திற்குமேலே ஒரு மீட்டர் வரைதான் வழி இருந்தது. அத்துடன் குகை முடிந்துவிட்டது. விளக்கைப் போட்டு அவன் துருவித் துருவிப் பார்த்தான். அதற்குமேல் வெறும் பாறைதான் தென்பட்டது.

அவன் திரும்பி வந்து அனைவருக்கும் அந்த உண்மையைத் சொன்னான். எல்லாருடைய உற்சாகமும் திடீரென்று மங்கிவிட்டது.

“அந்தப் பூசாரி எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கிறான். சுரங்கப் பாதையென்று காட்டு மாரியம்மன் சிலைக்குப் பின்னால் இரண்டு மூன்று படிகளைக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் எத்தன் அவன்” என்றான் சுந்தரம்.

“நான் அப்பவே நினைத்தேன்” என்றாள் கண்ணகி.

“நினைத்து என்ன செய்கிறது? சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கோபித்துக் கொண்டான் சுந்தரம்.

“அவனுடைய கொடுவாள் மீசையைப் பார்த்து நான் பயந்து விட்டேன்” என்று விளக்கம் தந்தாள் கண்ணகி.

“சரி, குகைக்குள் இருந்துகொண்டே பேசினால் எதிரொலிக் குழப்பம்தான் காதில் விழுகிறது. முதலில் வெளியே போவோம். போகும்போது மற்றொரு தடவை குகையின் பாறைச் சுவர்களை நன்றாகப் பார்த்து விடுவோம்” என்று தங்கமணி கூறினான்.

“புதையல் எல்லாம் வெறும் கதை. கண்ணகிக்கு வைர மூக்குத்தி போச்சு” என்றான் சுந்தரம்.

“போடா அசடு - இந்தக் காலத்திலே யார் மூக்குத்தி போடுகிறார்கள்? அதிகமாக நகை அணிந்து கொள்வதே அநாகரிகம் - அதோடு புதையல் கிடைத்தால் அது அரசாங்கத்திற்குச் சேரவேண்டியது. நீயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே” என்று கண்ணகி முடிப்பதற்கு முன்னே “ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டாய். புதுமைப் பெண் வாழ்க” என்றான் சுந்தரம்.

தங்கமணி இவர்களுடைய பேச்சையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவன் டார்ச் விளக்கைப் போட்டு இரண்டு பக்கத்திலுமுள்ள குகையின் பாறைச் சுவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். சில இடங்களில் அங்கே கிடந்த சிறு கல்லைக் கொண்டு கீறிப் பார்த்தான்; தட்டித் தட்டியும் பார்த்தான்.

ஓரிடத்திலே பாறையிலே செங்கல் சுவர் வைத்திருந்தது. அதுவும் பாறையோடு பாறையாய் ஒரே கருப்பாகத் தோன்றினாலும் செங்கல் என்பதைத் தங்கமணி கண்டு கொண்டான்.

“இங்கே பார். இங்கே எதற்குச் செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்?” என்று தங்கமணி தன் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தை வெளிப்படையாகப் பேசினான்.

“திப்புசுல்தானைக் கேள்” என்றான் சுந்தரம்.

“அடடா இன்னும் ஒரு பெரிய ஜோக்” என்று கண்ணகி நகைத்தாள். தங்கமணி “சுந்தரம், கட்டப்பாறை இருக்கிறதா? இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேணும்” என்று ஏதோ ஆழ்ந்த யோசனையோடு கேட்டான்.

சுந்தரம் தன் கேலிப் பேச்சையெல்லாம் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினான். “கட்டப்பாறை இங்கு எப்படிக் கிடைக்கும்? நாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த கெட்டிபான கல் மூங்கில் கழி இருக்கிறது. அது உபயோகப்படுமா என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி காட்டிய செங்கல் சுவரை இடிக்க முயன்றாள்.

“அண்ணா , இங்கே ஒரு கல் கிடக்கிறது. அதைக் கொண்டு சுவரை இடிக்கலாமா பார்” என்றாள் கண்ணகி.

தங்கமணி அந்தக் கல்லைக் கொண்டு சுவற்றின் மேல் ஓங்கி ஓங்கி போட்டான். சுந்தரம் மூங்கிற்கழியால் குத்தினான்.

இருவருடைய முயற்சியால் செங்கல் சுவரின் கொஞ்சங் கொஞ்சமாகப் பிளவு உண்டாயிற்று. அந்தப் பிளவுக்குள்ளே, மூன்று மூங்கில் குச்சிகளையும் ஒன்றாகப் புகுத்தி நெம்புகோல் போலப் பயன்படுத்தி மூவரும் சேர்ந்து நெம்பினார்கள்.

செங்கல் சுவர் சுமார் அரை மீட்டர் அகலமிருக்கும். அது பெயர்ந்து தடாலென்று கீழே விழுந்தது.

நல்ல வேளை, மூவரும் குகையின் உள் பக்கத்தில் இருந்தார்கள். அதனால் அவர்கள் மேல் அது விழவில்லை. ஜின்கா மட்டும் மறுபக்கத்தில் நின்று இவர்கள் செய்வதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. சுவர் விழும்போது அது ஒரு தாவுத் தாவித் தப்பிக் கொண்டது.

“ஜின்கா, நீ சுவரின் அடியில் அகப்பட்டிருந்தால் சட்னி ஆகியிருப்பாய். தங்கமணி உயிரையே விட்டிடுவான்” என்று கூவினான் சுந்தரம். அதே வார்த்தைகளை குகை பல முறை எதிரொலித்தது.

மூவரும் சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது. என்று ஆவலோடு பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய குகை தென்பட்டது. தங்கமணி டார்ச் விளக்கை உள்ளே காண்பித்தான்.

அதை ஒரு சிறிய குகைபோலக் குடைந்து வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளே பெட்டி ஒன்று காணப்பட்டது. அந்தக் குகைக்குள்ளே யாரும் நுழைய முடியாது. அவ்வளவு சிறியது அது.

“ஜின்கா” என்று கூப்பிட்டுத் தங்கமணி ஏதோ சமிக்ஞை செய்தான். உடனே ஜின்கா உள்ளே புகுந்து அந்தப் பெட்டியைத் தூக்கி வந்தது.

“இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பாறையைக் குடைந்து அதற்குள் பெட்டியை வைத்துப் பிறகு எதற்காகச் செங்கல் சுவர் வைக்கிறார்கள்?” என்று தங்கமணி யோசனையோடு சொன்னான்.

“அதில்தான் புதையல் இருக்குமோ?” என்று சுந்தரம் கேட்டான்.

“புதையலாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் ஜின்காவால் அதை இவ்வளவு சுலபமாகத் தூக்கிக் கொண்டு வர முடியாது.” என்று தங்கமணி சொன்னான்.

பெட்டியைக் கண்டதும் மூவருக்கும் ஒரே உற்சாகம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் உற்சாகத்தைக் கண்டு ஜின்கா குதிக்கத் தொடங்கிற்று.

“நாம் பாட்டி வீட்டுக்குப் போய் இந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி அவசரம் அவசரமாகப் புறப்பட்டான்.