சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/9

[9]

சங்ககிரிக் கோட்டை!

“அடே அப்பா எவ்வளவு பெரிய கோட்டைக் கதவு” என்று சுந்தரம் ஆச்சரியத்தோடு கூவினான். “பெரிய பெரிய பாராங்கல்லை யெல்லாம் வைத்து எப்படித்தான் இந்தச் சுவர்களைக் கட்டினார்களோ?” என்று கண்ணகி ஆச்சரியப்பட்டாள்.

“ஆங்கிலேயரை இந்த நாட்டிலிருந்து விரட்டி விடவேண்டும் என்று திப்புசுல்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய துணிச்சலுக்கும் வீரத்திற்கும் எல்லையே இல்லை. இருந்தாலும், அவனுடைய எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது” என்று தங்கமணி விளக்கினான்.

வேகமாக மலையில் ஏறி மலையின் மத்திய பாகத்தில் உள்ள குகையை அடைந்தார்கள். ஜின்காவுக்கு மலைமேல் ஏறுவதில் தனிப்பட்ட உற்சாகம்.

சுந்தரம் குகைக்குள் சில அடி தூரம் நுழைந்து பார்க்க முயன்றான்.

“சுந்தரம், முதலில் மலை உச்சிக்குப் போவோம். அங்குள்ளவற்றையெல்லாம் பார்த்து விட்டுத் திரும்பி வரும் போது இந்தக் குகையை ஆராய்வோம்” என்றான் தங்கமணி.

அவன் சொன்னபடியே எல்லாரும் சங்ககிரியின் சிகரத்தை நோக்கி விரைந்தார்கள், அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மலைச் சரிவு தென்பட்டது. அங்கே கொத்தளங்களை அமைத்து அவற்றில் பீரங்கியை வைத்து சுடுவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

“மலைச் சரிவின் வழியாக விரோதிகள் மேலே வரக்கூடும். அப்படி வந்தால் பீரங்கியைப் பயன்படுத்தலாம் என்று முன் யோசனையோடு செய்திருக்கிறார்கள்” என்று தங்கமணி விளக்கம் தந்தான்.

“அப்பா! இந்த இரும்பு குண்டு எத்தனை கனம்” என்று கண்ணகி கூவினாள். ஜின்கா அதை இரண்டு கைகளாலும் தூக்கிப் பார்த்து விட்டு தொப்பென்று கீழே போட்டது.

“பீரங்கியை எப்படியடா சுடுவார்கள்?” என்று சுந்தரம் கேட்டான்.

“இவையெல்லாம் அந்தக் காலத்து பீரங்கிகள், இவற்றை வைத்துக் கொண்டுதான் ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். திப்புசுல்தான் பிரெஞ்சுக்காரருடைய உதவியைக் கொண்டு பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வரவழைத்துத் தனது வீரர்களை அதில் பயிற்சியும் கொடுத்திருந்தான். இருந்தாலும் அவனால் ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை!” என்றான் தங்கமணி.

அதற்குமேல் தானியக் கிடங்குகளைப் பார்வையிட்டார்கள், ஒரு பக்கத்திலே கைதிகளை அடைத்து வைக்கும் இருட்டறை இருந்தது. உள்ளே செல்லுவதற்கு வேண்டிய வழி மேல் பாகத்தில் இருந்தது. அதை ஒரு பெரிய மரக்காதவால் மூடியிருந்தார்கள்.

மூன்று பேரும் மிகவும் சிரமப்பட்டு அதைத் தூக்கினார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. அதற்கு மேல் அதைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை.

தானியக் கிடங்கில் அரிசி, பருப்பு போன்ற உணவுக்கு வேண்டிய பொருள்களையோ அவற்றில் சேமித்து வைப்பதற்கு ஏற்றவாறு அவைகள் அமைந்திருந்தன.

“கோட்டையை முற்றுகையிட்டாலும் ஆறு மாதத்திற்கு உள்ளே உணவுப் பஞ்சம் ஏற்படாது” என்றான் தங்கமணி.

“அந்தக் காலத்தில் நாம் பிறந்திருக்க வேண்டும். அப்பொழுது நேராக எல்லாவற்றையும் பார்த்திருக்கலாம்” என்றான் சுந்தரம். “வேண்டவே வேண்டாம். சண்டையென்றால் எத்தனையோ பேர் சாவார்கள். நமக்குச் சமாதானம்தான் வேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு” என்று கண்ணகி கூறி முடிப்பதற்குள்,

“சரி, ஆரம்பித்து விட்டாயா உன் பிரசங்கத்தை? நான் ஏதோ தமாஷாகச் சொன்னால்....” என்று இழுத்தான் சுந்தரம்.

“உனக்கு எல்லாம் தமாஷ்தான் - வேறு என்ன தெரியும்?” என்று குத்தலாகப் பேசினாள் கண்ணகி.

“உனக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்று தெரியும்” என்று நகைத்தான் சுந்தரம்.

தங்கமணி இவர்கள் பேசுவதைக் கவனிக்கவே இல்லை. அவன் துருதுருவென்று சுற்றிலும் ஆராய்வதிலேயே நாட்டமாக இருந்தான்.

பிறகு அவர்கள் உச்சியில் இருந்த ஒரு சுனையைப் பார்த்தார்கள். அதன் மேல் ஒரு பாறை சுனையின் முக்கால் பாகத்தை மூடுவதுபோலக் கவிந்திருந்தது. அதனால் சுனையில் உள்ள சுத்தமான நீர் குளிர்ச்சியாக இருந்தது. குடிப்பதற்கும் நன்றாக இருந்தது.

அந்த சுனைக்குப் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தலானார்கள்.

“கண்ணுப் பாட்டி ரொம்ப ஜோர்; எல்லாம் நன்றாகத் தயார் செய்திருக்கிறாள்” என்றான் சுந்தரம்.

தங்கமணி உணவை வாயில் போட்டுக் கொண்டே ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.

“என்னடா, பெரிய யோசனை? கோட்டையைத்தான் பிடித்தாகி விட்டதே” என்று கேலி செய்தான் சுந்தரம். “கோட்டையைப் பார்த்து விட்டோம். ஆனால் புதையல் இருக்குமிடத்தை இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்யவில்லையே?” என்று தங்கமணி தனது யோசனையின் காரணத்தை விளக்கினான்.

“அதைத்தான் கோட்டை விட்டுவிட்டோம்” என்றான் சுந்தரம்.

“ஒரு வேளை புதையல் என்பதெல்லாம் வெறும் கற்பனையோ?” என்று சிந்தித்தான் தங்கமணி.

ஜின்கா வாயில் உணவைப் போட்டுக் கன்னத்தில் அடக்குவதும் பிறகு மெல்லுவதுமாக இருந்தது. அதற்கும் நல்ல பசி.

“காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் சுரங்க வழியில்தான் புதையல் இருக்க வேண்டும்” என்று கண்ணகி திடீரென்று சொன்னாள்.

“ஆகா இதோ ஒரு துப்பறியும் சாம்பு.-இல்லை சாம்பி. மிஸ் ஷெர்லக் ஹோம்ஸ்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.

“ஆகா எத்தனை பெரிய ஜோக் அடித்து விட்டான், உனக்கு ஜோக் சுந்தரம் என்று பட்டம் கொடுக்கலாம்” என்று கண்ணகி சளைக்காமல் பதில் அம்பு தொடுத்தாள்.

“எதற்கும் சீக்கிரமாக அந்தக் குகையைப் போய்ப் பார்த்து விடுவோம். ஒரு வேளை கண்ணகி சொன்னதே உண்மையாக இருக்கலாம்” என்று தங்கமணி கூறிவிட்டுக் காலியான இலைகளையெல்லாம் சுருட்டி, ஒரு பக்கத்தில் வீசினான்.