சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/2

[2]

சங்ககிரிக்குப் பயணம்!

சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் சரியாக இரவு 8 மணிக்குக் கிளம்புகிறது. மூன்று பேரும் சரியாகக்கூட சாப்பிடவில்லை. “சாப்பிடக்கூட உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்படிச் சரியாக சாப்பிடாமல் பாட்டி வீட்டில் இருக்கக்கூடாது. அங்கே சமத்தாக இருந்து நல்ல பெயர் வாங்கிவரவேணும்” என்று கண்ணகியின் தாய் அவர்கள் மூன்று பேரிடமும் சொன்னாள்.

“அத்தை, கண்ணகி அழாமல் இருந்தால் போதும். நல்ல பெயர் வாங்கி விடுவோம்” என்றான் சுந்தரம்.

“சரிதாண்டா, கோமாளி, நீ உன்னுடைய கோமாளிப் பேச்சையெல்லாம் பாட்டியிடம் காண்பிக்காமல் இருந்தால் போதும்” என்றாள் கண்ணகி.

கண்ணகியின் தாயார் இவர்கள் பேசுவதை ரசித்துக் கொண்டே தான் தயார் செய்து வைத்திருந்த தேன்குழல், முதலிய பலகாரங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தாள்.

“அத்தை, இந்த சங்ககிரிப் பாட்டிக்குப் பல் உண்டா?” என்று கேட்டாள் சுந்தரம்.
“முறுக்கெல்லாம் உங்களுக்குத்தான். பாட்டியை அந்தப் பலகாரம் பண்ணிக்கொடு, இந்தப் பலகாரம் பண்ணிக்கொடு என்று நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அதற்காகத் தான் நானே நிறையச் செய்து வைத்திருக்கிறேன்” என்று பேச்சை முடிக்கு முன்னால் வெளியில் கார் சத்தம் கேட்டது.

“மாமா, வந்துவிட்டார். உடனே புறப்பட வேண்டியதுதான்” என்றான் சுந்தரம்.

மூவரும் படுக்கை பெட்டி முதலிய சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஜின்கா பலகார டப்பாவை தூக்கிக் கொண்டு ஓடிற்று. தங்கமணி ஜின்காவை விட்டுப் பிரிய மாட்டான் ஆகையால், அதற்கும் பயணச்சீட்டு வாங்கி யிருந்தார்கள்.

மூவரும் ஜின்காவுடன் குதூகலமாகப் புறப்பட்டு அதிகாலையில் சங்ககிரியை அடைந்தார்கள். அங்கே அதிக நேரம் நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்காதாகையால் வேகமாகச் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ரயிலைவிட்டு இறங்கி னார்கள்.

பாட்டி வீட்டிலிருந்து ஒரு வேலையாள் ரயிலடிக்கு வந்து அவர்களைச் சந்தித்தான். மாட்டு வண்டியில் பாட்டி வீட்டுக்குச் சென்றது மூவருக்கும் புதிய அனுபவமாக இருந்தது.

“பெட்ரோல் இல்லை. டயர் இல்லை - கியர் இல்லை - எத்தனை செலவு மிச்சம்” என்று பாட்டுப் பாடத் தொடங்கினான் சுந்தரம்.

அதைக் கவனியாமல், “சுந்தரம் அங்கே பார் - எவ்வளவு பெரிய மலை - அதுதான் சங்ககிரியா?” என்று கூவினாள் கண்ணகி.

அது வரையிலும் அவர்கள் அந்த மலையைக் கவனிக்கவே இல்லை. மூவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
“பெரிய சங்கு போல இந்த மலை காட்சி அளிக்கிறது. அதனால்தான் இதற்குச் சங்ககிரி என்று பெயர் வந்ததோ?” என்று ஆலோசனையோடு கேட்டான் தங்கமணி.

“சரி, சரி வந்தவுடன் உனது ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாயா? உன்னுடைய ஜின்காவைக் கேட்டுப்பார். குரங்குக்குத்தான் மலையெல்லாம் தெரியும்” என்று சுந்தரம் கேலி செய்தான்.

“நீங்கள் இந்த ஊருக்கு இதுதான் முதல் தடவை வருகிறீர்களா? என்று வேலைக்காரன் வண்டியை ஓட்டிக் கொண்டே கேட்டான்.

“ஆமாம். உனக்கு இந்த மலைக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டதன் காரணம் தெரியுமா?” என்று தங்கமணி அவனைக் கேட்டான்.

“எனக்கும் தெரியாது. நான் புதிதாக வேலைக்கு வந்திருக்கிறேன்” என்றான் வண்டிக்காரன்.

மெதுவாக வண்டி பாட்டி வீட்டை அடைந்தது. பாட்டி வாசலிலேயே நின்று இவர்களை அன்புடன் வரவேற்றாள்.