சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/3

[3]

பாட்டியின் வரவேற்பு!

அவர்கள் எதிர் பார்த்தது போல் பாட்டி தள்ளாத கிழவியாய் இருக்கவில்லை. விவசாயத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டு உழைத்ததால் அவள் உடம்பு நல்ல வலிமையோடு இருந்தது. தலைமட்டும் நரைத்திருந்தது. வாயிலே பல் இல்லை. இருந்தாலும் அவள் ஆரோக்கியமாக இருந்தாள்.
“கண்ணுகளா, வாங்க” என்று கூறிக்கொண்டே அவள் அன்போடு எல்லாரையும் வரவேற்றாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய பொக்கை வாயைக் கண்டு மூவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வந்தது முதற்கொண்டே அந்த வீட்டில் அவர்கள் விருப்பம்போலக் குஷியாக இருக்கலாம் என்று மூவரும் நினைக்கும்படி பாட்டி செய்துவிட்டாள்.“ கண்ணுகளா, முதல்லே பல்தேய்த்துக் கொண்டால் காப்பி தயாராக இருக்கிறது. காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்” என்றாள் பாட்டி.

“கண்ணுகளா, அதோ அந்தக் கிணற்றில் வாளியை விட்டு ஜலம் இழுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் பாட்டி.

“கண்ணுப் பாட்டி, இங்கே குழாய் எல்லாம் இல்லையா” என்று கேட்டான் சுந்தரம்.

“அதென்னடா எனக்குக் கண்ணுப் பாட்டி என்று பெயர் போட்டு விட்டாய்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பாட்டி.

“பாட்டி, நீங்கள் எங்களை அன்போடு கண்ணுகளா, கண்ணுகளா என்று இதற்குள் பலதடவை சொல்லிவிட்டீர்கள். நாங்களும் உங்களைக் கண்ணுப்பாட்டி என்றே அழைக்க ஆசைப்படுகிறோம்” என்றான் சுந்தரம்.

இதைக் கேட்டுப் பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது. “சரி அப்படியே கூப்பிடுங்கள்” என்று அவள் பதில் சொல்லிவிட்டு “குறும்புக்காரப் பயல்” என்று சுந்தரத்தின் கன்னத்தை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள்.

“பாட்டி, உங்களுடைய பெயரை இங்கே வருகின்ற அவசரத்தில் அம்மாவிடம் கேட்க மறந்தே போனோம். இந்தக் கோமாளி வைத்த பெயர் எனக்கும் பிடிக்கிறது” என்றாள் கண்ணகி. தங்கமணி அங்குமிங்கும் ஆராயத் தொடங்கினன். சங்ககிரி அவனுடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. திப்பு சுல்தான் கோட்டைச்சுவர்களைக் காணவேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.

ஜின்கா கிணற்றுச் சுவர் மேல் தாண்டிக் குதிப்பதும், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டின்மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தது.

எல்லாரும் காப்பி அருந்தத் தொடங்கினர். ஜின்காவும் தங்கமணி அருகில் அமர்ந்து கொண்டது.

“தங்கமணி, அந்தக் குரங்கு காப்பி குடிக்குமா?” என்று கேட்டாள் பாட்டி.

“இந்தக் குரங்கு என்னவெல்லாம் செய்யுமோ அவையெல்லாம் அந்த ஜின்கா குரங்கும் செய்யும்” என்று சுந்தரம் தங்கமணியைத் தொட்டுக் காட்டிக்கொண்டு பேசினான்.

எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஜின்கா மேஜை மேல் ஏறிநின்று ஜிங் ஜிங் என்று குதித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

“நீங்கள் எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த வீட்டில் இப்படி சிரிப்பொலியைக் கேட்டு எத்தனையோ வருஷம் ஆகிவிட்டது. குழந்தைகள் எல்லாம் இப்படித் தான் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேணும்' என்றாள் பாட்டி.