சாவின் முத்தம்/தேன் கூரை

தேன் கூரை

பயில்கின்ற தூக்கம் உன்னைப்
படைத்ததோ முகிலே? நீ தான்
வெயிலற்ற சிரிப்போ? நோயோ
குள்ளத்தின் அடைப்போ? சாவோ?
துயரங்கள் அனுப்பிவைத்த
ஒலையோ? கும்பிக் காடோ?
உயர மல்லாத நெஞ்சின்
தாக்கலோ? மதத்தின் ஏடோ?


காக்கையின் கழுத்து வண்ணக்
கருக்கலின் புருவமே! செந்
திக்குளிப் பாட்டு கின்ற
பரிதிக்கு, இதழ்கள் விற்று,
தேக்குகின் றாய்உ டம்பில்
செந்நிறப் புரட்சி! இன்று

ஆக்கிய சோறு போலே
அதற்குள்ளே வெளுக்கின் றாயே!

ஆரூகம், சமணம்,கண்ட
அதிர்ச்சியோ மின்னல்? "இந்து
ஒர்யுகம் முதிர்ந்தும் கொஞ்சம்
ஒடிந்ததா குறும்பு" என்று
நீர்வற்றி விட்டா யோநீ!
நிரீஸ்வர மதத்தைக் கண்ட
ஆர்வத்தில் பிறந்த தோஉன்
அழகிய பச்சை மேனி!


மாக்கோலக் கட்டி போன்ற
வானத்தில், குங்கு மம்போல்
பூக்கின்றாய்! முதல்சந் திப்பின்
பூரிப்பைத் தின்கின் றாய்! மின்
வாக்கிதோ! தந்தச் சிம் போ?
மகரமீன் துள்ளல் தானோ?
போக்கிடும் பார்வை, பிள்ளைத்
தொட்டிலோ? ரத்த ஊற்றோ?


நீர்விழுங் கட்டெ றும்பின்
நிழல்போன்ற இலைக்கூட் டத்தை
வாருந்தா மரையைக் கண்டு
வானில்உன் வடிவங் கண்டேன்!
சீர்வைத்துச் சிரிக்கும் தங்கச்
சிரிப்புக்குக் கொழுந்து போலே

யார்வைத்தார் நாமம்? கண்ணே
அதைமட்டும் எனக்குச் சொல்லு


ஓரிழை யாகி விட்ட
பெளத்தம்போல் இளைத்து, பாவுத்
தார்போலே மேடு காட்டிச்
சரிகின்றாய்! ஒட்ட கத்தின்
பேர்போன கூன லோடு
பறக்கின்றாய்! பட்டா ளத்துக்
கூர்மைபோல் மின்னு கின்றாய்
சிரிக்கின்றாய்! கூவு கின்றாய்!


அலைகளை அடுக்கி வைத்து
அனுப்புதல் போல, வானில்
கலையாத நடைபி ரிக்கும்
ஈரத்தின் பரப்பே! "வாழ்வை
விலைபோட்டு கடத்து கின் றார்
மாந்தர்கள்!" வறுமை வெப்பம்
கொலைசெய்து விட்ட தென்னை!
மறைந்துகொள் கடலுக் குள்ளே!


இசையவிழ் மணிக் குவட்டின்
இமையேகேள்! இயற்கைக் கூத்தின்
அசைவெலாங் தமிழன்! உந்தன்
அறிவெலாம் கரும்புத் தூற்றல்!
புசிக்காத இளமை யேநீ
போlபோ!!போ!!! மேல்நாட் டாரின்

திசைபார்த்து நடைது வக்கி,
தொழுநோய்போல் முகத்தை மாற்று!


ஏழ்மையின் குமுறலோ நீ
கொட்டிடும் சாரல்? "மக்கள்
வாழ்ந்திடத் தானே இந்த
வையமும்; உணர்வும்" குள்ளம்
'தாழ்ந்துபோ' எனினும், வெற்பின்
தலைக்குமேல் நிமிர்ந்தாய்! ஆனால்
வீழ்ந்திட்டான் மனிதன்! குள்ளம்
வீழ்ந்தது! நீதான் வென்றாய்!


மேய்க்கின்ற ஆதிக் கத்தை
வீழ்த்திடப் 'புரட்சி' ஒன்றே
'தாய்க்குலச் சரக்கு' என்று
சொல்கிறாய் முகிலே! நானும்
ஆய்ந்துதான் பார்த்தேன். உந்தன்
அழகுவில் சண்டைக் கென்றால்
நீயென்னே உணர்ச்சி அம்பாய்ப்
பளிச்சென்று அணைத்துக் கொள்ளேன்!


நடக்கின்ற உதட்டில் ஊறும்
கல்லிசை கேட்க, முல்லை
அடுக்குள்ள கூந்தலில் வண்
டடைகிடந் தால்நீ ஒடி
வெடுக்கென்று நனைப்ப தாசொல்!
பிடிபடோம் என நினைப்பா?

அடிக்கடி உன்னைத் தானே
சந்திக்கும் கிழிந்த உள்ளம்!

தேர்வைக்கும் சிங்கா ரத்தைத்
தெருவெல்லாம் நிரப்பு தல்போல்;
ஊர்ஊராய் அழகு வார்த்து
உடையின்றித் திரிகின்றாயே
ஓர்அணுவுக் கேனும் வெட்கம்
எழவில்லே உடம்பில்? பெண்கள்
நீரிலும் தன் அங்கத்தின்
நிலைகாட்டக் கூசு வார்கள்!


நிழலிலே அழுத்தி வைக்கும்
இருட்டுபோல், நீல மொட்டில்
குழிபோடும் வண்டு, நேற்று
கற்றது தமிழை, இன்று
பழச்சுளை இறங்கும் பாடல்
பலப்பல அதற்குச் சொந்தம்!
பிழையிலாத் தமிழி னோடு
பிறந்தென்ன முகிலே நீதான்!


இலவசத் தில் சிரிப்பைத்
தள்ளுதல், அழகின் மேலே
உலவிட வேசி வைக்கும்
உபாயம்!நீ உணர்வில் லாமல்
மலைமேலே மொய்த்து, நீரை
விதைக்கின்றாய் முத்து முத்தாய்
விலைமகள் அன்னாள்! கெட்டி
வெளுப்புடன் அங்கே போய்ப்பார்

ஒழுகாத நடத்தை இல்லை
       உன்னிடம் ! மணிபோல் ஏடு
கிழிக்கின்ற சிரிப்பு இன்னும்
      குறையவே இல்லை. சந்தை
வழியிலே போடு கின்ற
      வார்த்தை போற் பேசுகின்றாய்!
சுழிபோட்ட மூளை . நச்சுத்
      திரள் காட்டும் சட்டை மேனி

அடுக்கடுக் காய்ச்சிரித்து
       அலைகின்றாய். கரிசல் நிற்கும்
நடுச்சாமக் குளிரில் மேற்கே
       நடந்தாயாம்! மலையி டத்தில்
தொடுப்பாமே பள்ளி? எந்தன்
       சுகந்தின்னக் கடிதம் போட்டாய்.
கெடுகெட்டிக் கோரையே! உன்
       நெஞ்சுக்கு என்ன ஆழம்!

சிங்கத்தின் பிடரி போன்ற
       சோளத்தின் பட்டுக் குஞ்ச
அங்கத்தை, தடித்த காற்று
       அதட்டினால் கலைகின் றாய்நீ!
தங்கத்தை ஊது கின்ற
      நெருப்பே நான் இன்பச் சேதி
திங்களன்றே கொடுத் தேன்.
     செவ்வாய் தான் அனுப்பி வைத்தாய்!

நலமற்ற மரணச் சேதி
நறுக்கென்று கேட்ப தைப்போல்,
வெலவெலத் தேனே! சேதி
விரித்ததும் சரக்கே இல்லே!
‘நிலவிலே விழுந்தி ருக்கும்
அழுக்’கென்று சொல்லிக் கொண்டாய்
உலவுங்காற் றாடியே கேள்:
‘உலகமே இருட்டின் கூளம்!’


அனலுக்கு நீலக் கும்பிப்
புகையுண்டே! படிகம் போன்ற
புனலுக்கு நுரையில் லாமற்
போனதா? புல்லி தழின்
தனதின்றி வாழ்ந்திருக்கும்
மலர்உண்டா? கபிலச் சாந்தில்
நனைகின்ற விழிக்கு, கோடி
நொடிப்புகள் பார்த்த தில்லை!


சன்னமாய் எனக்கு வந்த
தகவலால், வீணைக் காடே!
என்னென்ன விதமோ உன்னை
இகழ்ந்திட்டேன். இருட் டிருந்தால்
உன்னதம் வருமா நெஞ்சில்?
உன் கடி தாசி கண்டு,
தின் பண்டம் ஆனேன். என்னைத்
திருடிக்கொள்! நடத்து லோகம்!


‘தேன்கூரை’ என்று தானே
சொன்னேன் நான்; முகஞ் சுளித்து;

‘ஏன் என்னை வைகின் றீர்கள்’
என்கின்றாய். வேண்டு மானால்
‘கூன்வளர்க் கும்நி லாவைக் .
கேட்டுப்பார்! முகிலே! என்றும்,
நான்கசந் தாலும் எந்தன்
நறுந்தமிழ் அமுதங் தானே!’



தூள்அடிக் கும்காற் றுன்னைத்
துரத்திடப் பறக்கின் றாய்.உன்
தோள்சுவை பார்க்கத் தானே
துடிக்கின்றேன். குனிந்து நீவா!
ஆள்தானே நான். எனக்கு,
ஆகாயம் தொடுவ தற்கு
நாள்படாப் புதிய கெஞ்சம்
மிகவுண்டு. கைதான் குட்டை!