சாவின் முத்தம்/பிரேத ராஜ்யம்

பிரேத ராஜ்யம்

கொல்லப்புறத்தில் கோதை:

வஞ்சிஎன்று வீட ழைக்கும்;
வையத்தின் இரத்தின வாய்,
அஞ்சுகமே என்றழைக்கும் போது-அவள்
அன்புரைகள் சந்திக்கத் தப்பாது!

தோகை மயில் சாயலிலே
சுந்தரம் எழுதி, விழி
போகும்வழியே நடையை இட்டு - கலையாப்
புதுமையை அழகினாலே தொட்டு

முல்லையிலே ஓர் அழைப்பு;
வண்டழுந்தும் தேன் உதட்டில்
நல்ல இசை, நூலிடையில் மின்னல்-திறந்து,
இமைக்கும் தேன் பாதிரிப்பூக் கன்னல்

கொல்லையிலே, தென்றல் விடும்
கூவலிலே, ஏடு விழும்
வெல்ல அந்தி நேரம்; நிழவின் ஈரம்-பார்த்து
வஞ்சி குளிர்ந்தாள் சிரிப்பின் ஒரம்.

தையலாருடன் தாயின் விளையாட்டு

தேய்ந்திருக்கும் மெய்யு டம்பில்
தெம்புவந்து ஒட்டுதல் போல்

ஒய்ந்தசெயல் மீதுவிழும் ஊக்கம்; - தாயின்
உறைக்கின்ற நெஞ்சைப் புனலாக்கும்!

சுற்றி,யானைத் தோல்நி றத்துத்
திண்ணையிலே, பெண்க ளுடன்
வெற்றிலையை வாயில் ஏற்றிக் கொண்டு -
உதட்டை
விடுகதை பிடிக்கவிடல் உண்டு.

தின்றுதின்று அச்ச லிப்பைத்
தந்ததால் கதை விழாவை
அன்றுமட்டும் தூங்கவைத்து விட்டு-சோழி
ஆட்டத்தில் விழுந்தார் புரிபட்டு.

சோழி விளையாட்டிலே
சுருட்டி வைத்த நெஞ்சுதனை
நாழிசென்றும் நேர்ப்படுத்த வில்லை- பேச்சு
நடுவிலே சிரித்துவைப்பார் முல்லை!

பாய்க்காரனுடன் பாவையர் பேச்சு

பாய்கள் விற்றுக் கொண்டுஒரு
பையன்வந்தான் அந்தப் பக்கம்
தாய்செழித்த காது இசை மொள்ளும்!-வாய்
தம்பிவா இங்கே என்று அள்ளும்.

சேந்தும் விழி வீதியிலே
செல்ல, புதுச் சேதிதனை,
ஏந்திவரும் ஆர்ப்பாட்டங் கண்டு - விளை
யாட்டில்விழுந் ததுபல துண்டு!

முறிந்திடாத் தனிப் பருவம்;
முகத்து எழில்; நல்வார்த்தை;
வரிவரியாய்ச் செப்பனிட்டு வந்தான் - தன்
வரவேற்பைத் திண்ணையிலே தந்தான்.

தாய் "படுக்கை வகை எங்கே?
சரச விலைக்கு வருமா?
காய்கிடக்கு தம்பி இங்கே பாரு - ஒரே
நறுக்கில் விலைபிடித்துக் கூறு"

என்றாள். அங்கே சிலபெண்கள்,
இலவம்பூ வாய் பிரித்து,
“பின்னியது யார் இதனை?” என்பார்-அவன்
புதுப்பார்வை வாரிவாரித் தின்பார்.

தாய்:

“பாய்விரித்துக் காட்டு தம்பி!
பஞ்சு மெத்தை கீழ்பரப்ப,
ஆய்ந்ததுவாய், மெல்லியதாய்த் தேடு-விலை
வார்த்து உருவாக்கலாம் பிற்பாடு”

பாய்க்காரன்:

"மின்னல் கிறுக்கும் சிரிப்பு
மங்கையின் கொழுந் துடலைத்
தென்றல்முட்டினும் வருத்தம் செய்யும் -
படுத்தோர்
சித்ர'உடற் சுகம்' அதனை வையும்!

ஒரு பெண்:

"பூவிலே புரளு கின்ற
பொன்னு டலின் ஆதிக்கம்,
மாவேரைப் போன்றஇந்தப் பாயில்-
வந்தால்
மீளாது சாக்காட்டின் வாயில்!”

தாய்:

"இதைச் சொல்லு? அது அங்கே
இருக்கட்டும் என்ம களின்
சதைகரைந்து போனாலும் போகும் -
இது
திகைந்துவிட்டால் எல்லாமே ஆகும்!

விலையின் முனையை இழுத்து
விட்டுக் கொண்டிருக்க, வீட்டுத்
தலைமகளின் கொல்லை "நடை தாண்டல்' -
வந்து
சஞ்சரிக்கும் இருட்டுலகக் கூண்டில்!

அஞ்சுகத்திடம் அன்னையின் கொதிப்பு:

"சதங்கை இடும் கொழுஞ்சியடி
தண்டாமலே நடந்து வர
பதம்எங்கே போயிற்றடி உனக்கு? - மயிர்
பிளப்புதீமை இழைத்தாலும் எனக்கு!

போடிஅங்கே? அடுக் களையில்
போட்டது போட்டே கிடக்க,

வேடிக்கைக்குக் கண் அனுப்ப என்ன?-மண்
வீடுகட்டும் பேதையாநீ பெண்ணே!

மூட்டுவிடாப் பூக்கள், ரத -
'வீதியிலும் திரிந்தி டலாம்!
கூட்டுக்கிளி நீ!நகத்துக் கீறல், - இம்மி
கடந்தால்நம் தாழ்த்திக்கது ஊறல்!

"மூச்சு விதைக்காதே" என்று
மூண்டதழல் ஊற்றி, வெளிப்
பேச்சுத்தொடுக்க விரைந்து வந்தாள் -
திண்ணைப்
பெண்களுக்குச் சிலபேச்சுத் தந்தாள்!

ஒருத்தி:

"வண்ணம் இல்லையே ஐயா?
வஞ்சி கத்து வாளா?-"

பாய்க்காரன்:

"-உங்கள்
கன்னம்,இதழ், இதில் அழுந்தும் போது -
அந்தக்
கறையழகா காட்சிக்குப் போதாது!”

"இருள் விழுந்து விட்டதம்மா!
இளைப் பருந்த நேரமில்லை;
சுருள்படுத்தும் தாம்பூல ஈடு - போலே
தாங்கும் அடக்கம் லாபத்தோடு

பத்துப்பணம் வந்தால் இந்தப்
பாய் பிரியும்! 'தஞ்சையிலே'
முத்துமுத்தாய் எண்ணிவாங்கிக் கொண்
டேன் - இந்த
விட்டில் ஏதும் அதிகவிலை தண்டேன்."

மழைக்கூத்து:

வானதிர, தங்கத் திலே
வளரும்வரி மின் இறங்க,
தேன் கறக்கும் வாயிழையார் தங்கள் - வீடு
சென்றுவிட்டார்; எழுந்தது மங்கல்!

சிங்காரக் கடலின் தேமல்
இடுப்புபோல், முதிர் இருட்டுத்
தொங்குகின்ற மேகம்,குளிர் பிட்டு - மழை.
சித்தரித்துக் காட்டிற்று வாய்
தொட்டு!

தாயின் விருந்து:

"பப்பரிக்கும் இம்மழையில்
பயணம் வைத்தால் உன் உடம்பு
உப்புவிட்ட பாலைப்போலே ஆகும் - இங்கே
உறங்கிஎழுந் தால்மழையும் போகும்"

வயதிலே இளமை! கனி
வாய்க்கு நல்ல துணைதம்பி!
அயலில்தானே உந்தன் ஊரு என்ன? பெயர்
அளிப்பாயா எனக்குநீ முன்னே!"

பாய்க்காரன்:

“கீரையூரின் மூக்கில் ஏறி,
கொம்புபோல் கிடக்கும் ஆற்றின்
ஒரம்வந்தால் தோன்றும் நிலக்கூறு - அந்த
ஊருக்கு ‘மருதூர்' எனப்பேரு!

‘விடங்கன்’ என்று கூப்பிடுவர்.
வெந்தய நிறத்துக் கப்பித்
தடம்அலைந்த பாதம்நோகு தம்மா - ஒன்றுகந் தின்னாமலேதூங்குகிறேன்சும்மா”

தாய்:

"கொஞ்சம்புசி அப்பா! மழை
கொக்கரித்துக் கொட்டு துபார்!
நெஞ்சுங்குளிரும்; அமைதி வேகும் -
உண்டால்
நிற்கும் எல்லாம்! வெதவெதப்பு ஆகும்.


ஏழைகாங்கள் தம்பி! ஏதோ
இருப்பதுதான் அமுதம்! இந்த
வாழைஇளம் பிஞ்சிக்கூட்டு கைப்பா? -
கிழங்கு
மசியலுக்கு என்ன? பாகம் தப்பா?

முற்றிய தயிர் இரவில்
வேண்டுதல் தகாது; கீரை
வற்றலுண்டு; வேண்டியதைக் கேட்டு -
வயிற்றை
வஞ்சனை பண்னாமலேநீ தீட்டு!”

காற்ற மைக்கக் கைவிசிறி;
கனிசெய்த தேன் அடிசில்,
சேற்றில்கிடக்கும் ஆரல் போலே - கிடாரந்
தொக்குஊறு காயை இலைமேலே

குனிந்தபடி பரி மாறிக்
கொண்டிருந்தாள் அன்னை, உள்ளே,
நனைந்தகொதிப் பாலேவஞ்சி காந்த,-
“முல்லைப்
பூஉண்டோ” என்றான் சிரிப்பேந்த!

தாய்:

“பூஉண்டு காலத் தால்
பூத்ததுதான். கண்ணில் அந்த
ஒவியம் விழுந்தால் பறிபோகும்! - இளமை
சந்தித்தால்புதுப் பாகுகள வாகும்!”

தையல் எழுப்பிய தங்க நிலவு:

உச்சி அனுப்பும் மலைமேல்
ஒட்டும் நிலாப்போல்; குதிர்மேல்
கச்சிதம் எழுதும்முகம் தந்தாள்! - அந்தக்
காமரூபன் அழகிலே விடிந்தாள்!

தடுக்கி விழுந்தான் அழகில்!
தாவி எடுத்தாள் விழியால்!
கொடிக்குகொடி நூறுவிதம் மாறும் -
பார்வைத்
தொடர்ச்சியிலே ‘கேள்வி-பதில்’
தூறும்!

தொட்டுக் கிடக்கும் விழிகள்
தாய்கிமிரக் கூடு சென்று
கட்டிவைக்கும் சிட்டிறகைப் போலே
விளிம்பு
வெட்டும்வாயைத் தூர்த்திடும் தன்னாலே

“தெங்கிருக்கும் பாலை!” என்பான்
“சுவைதம்பி!” என்பாள் அன்னை.
“அங்கிருக்கே தேமதுரம்!” என்பான். “நாழி
ஆறிவிட்டால் தித்திக்காது!” என்பாள்.


விடங்கன்:

தொத்தும் மணிக் கிளிக்குத்
தோள்எழுப்பித் தந்தி டாமல்
வைத்திருந்தால் மனம்வெந்து சாகும்.
வீணாய்
மொட்டுப்பிரிந்த பசுமை வேகும்!"

பதிவுசெய்த அன்பு கண்டேன்.
பனிச் சிரிப்பிலே, வடியும்
நதிகண்டேன்! என்கோடி வார்த்தை
அம்மா
நனைப்போம் நாம் தூக்கத்தில் நேரத்தை!


சுவைப்பின் ஆழத்தில் மணிக்குயில்கள்:

மசிகூட்டும் துாக்கம், தாயின்
மணிபூட்ட; சேல் விழியில்
பசிகாட்டிக் கொண்டிருந்தாள் வஞ்சி! -
பறந்து
பாகுஊட்டினான் இதழைக் கொஞ்சி!

வைத்திருக்கும் வீணையிலே
வந்து படுகின்ற இசை
மெய்த்தமிழை கத்துவதைப் போலே-
இதயம்
மெய்யறம் வளர்க்கும் விரிவாலே!

அமுதநிலை தொட்டு, மேனி
ஆண்டு வரும்போது, அவள்
குமுதம் பிடிக்கின்ற இதழ்ஏடு- காதல்
கண்டுமுதல் பார்க்கும் கிளிக்காடு!

பலன்விழுந்த காட்டெ ருமைப்
பத்தை வயிற்றைப் போல
நிலத்திலே கிடக்கும் பெரும்பாறை- அதில்
நீண்டவாய் கிழித்துக்கொள்ளும்
தேரை!

எண்ணெ யிட்டுக் கொட்டைமுத்தை
எடுத்தழகு பார்ப்பது போல்
வண்ணநிறப் பாம்புஅதைத் தேடும்-பட
வாய்விரித்து ஊர்ந்துவந்து ஆடும்!

கங்கிலே கிடந்து 'பல -
கறைகடைத்தி' ரத்த இதழ்ப்
பங்குபிரிக் கின்றசுவை வேளை! - நஞ்சு
பட்டுக்கரிந்தார் 'வஞ்சி - காளை!'

இருட்டுலகம்! விடு தலையில்
ஏறுகின்ற வாள் உலகம்!
குருத்தில் உடல் இறக்கும் தேரை! பாம்பு!
சாவின்
மொட்டுக்களித்தன பிரேதக் காம்பு!