சிலப்பதிகாரம்/பதிகம்
சிலப்பதிகாரம்
தொகுபதிகம்
தொகு- (இணைக்குறள் ஆசிரியப்பா)
- குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
- குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
- குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
- பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
- ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)
- அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
- காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
- கட்புலம் காண விண்புலம் போயது
- இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென,
- அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)
- யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
- ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
- பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
- கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
- நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு(15)
- ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
- கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
- பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
- பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
- மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு (20)
- மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
- பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
- கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
- யாப்புறவு இல்லைஈங்கு இருக்கஎன்று ஏகிப்
- பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)
- கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
- வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
- சினையலர் வேம்பன் தேரா னாகிக்
- கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
- கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)
- கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
- நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
- பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
- முத்தார மார்பின் முலைமுகந் திருகி
- நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)
- பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
- வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
- வினைவிளைவு என்ன, விறலோய் கேட்டி
- அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
- கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)
- வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
- ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
- மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
- கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
- முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)
- முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
- சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
- சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
- இட்ட சாபம் கட்டியது ஆகலின்
- வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)
- ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
- வானோர் தங்கள் வடிவின் அல்லதை
- ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
- கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
- அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)
- உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
- ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
- சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
- சிலப்பதி காரம் என்னும் பெயரால்
- நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)
- முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
- அடிகள் நீரே அருளுகஎன் றாற்குஅவர்,
- மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
- மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
- மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)
- அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்,
- இந்திர விழவூர் எடுத்த காதையும்,
- கடலாடு காதையும்,
- மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந் திறுத்தென
- மாதவி இரங்கிய காதையும், தீதுடைக் (70)
- கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
- நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்,
- வேட்டுவ வரியும், தோட்டலர் கோதையொடு
- புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
- ஊர்காண் காதையும், சீர்சால் நங்கை (75)
- அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
- ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
- துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
- ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
- வழக்குரை காதையும், வஞ்சின மாலையும், (80)
- அழல்படு காதையும், அருந்தெய்வம் தோன்றிக்
- கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
- குன்றக் குரவையும், என்றுஇவை அனைத்துடன்
- காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
- வாழ்த்து, வரந்தரு காதையொடு (85)
- இவ்வா றைந்தும்
- உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
- உரைசால் அடிகள் அருள மதுரைக்
- கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
- இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)
பதிகம் முற்றியது.
- குறிப்பு
இப்பாடலுள், 68 ஆம் அடி கடலாடு காதையும் என்பது குறளடி;
85 ஆம் அடி வாழ்த்து வரந்தரு காதையொடு என்பது, சிந்தடி;
86 ஆம் அடி இவ்வா றைந்தும் என்பது குறளடி; ஏனயவை நேரடி யாகும்.
எனவே. இது இணைக்குறள் ஆசிரியப்பா.