சொன்னார்கள்/பக்கம் 81-90

இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பான? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! இழிநிலே அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப் பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லே. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப்போகிறேன்.

—அரவிந்தர்


முஸ்லிம் என்ற முறையில் இஸ்லாமிய மதத்திலும், பண்பாட்டிலும் எனக்குத் தனிப்பட்ட அக்கறை உண்டு. அவற்றுள் எவ்விதக் குறுக்கீட்டையும் நான் பொறுக்க மாட்டேன். ஆனால் இவைகளுடன் கூட வேறு சில கொள்கைகளும் எனக்கு உண்டு. அவை இன்றைய வாழ்க்கை நிலையும் தரமும் என் மேல் சுமத்தியவை. இஸ்லாமியப் பண்பு அவற்றை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. வழி காட்டியாக அவற்றில் முன்னேற எனக்குத் துணையாய் நிற்கிறது. ஒரு இந்தியன் என்பதில் நான் பெருமையடைகிறேன். இந்தியாவின் புனரமைப்பில் எனக்குள்ள முக்கியப் பங்கை நான் கைவிடத் தயாராயில்லை.

—மெளலான அபுல்கலாம் ஆசாத்

(1940—ல் ராம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசியது)


ஒரு சர்க்கார் மாறி இன்னெரு சர்க்கார் வருவது என்பது, புத்தகத்தில் 66-ஆம் பக்கம் மாறி 67-ஆம் பக்கம் வருவதுபோலவே தவிர, புதிதாக எழுதிய புத்தகம் மாறுவது போல அல்ல.

6

—அறிஞர் அண்ணா (21-3-1967)

கலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்!

—அரு. ராமநாதன்


1946—ஆம் ஆண்டு. அப்போதுதான் திருமணம் செய்துகொண்ட என் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் தன் வீட்டிற்குப் புறப்பட்டார். அவர்களுடன் வந்த நானே வண்டியோட்டிக் கொண்டு கிளம்பினேன். எங்கள் எதிர் காலத்தைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு வந்தோம். அவரிடம் நான் சொல்லியதை இப்போது நினைவு கூர்கிறேன். நம் நாட்டில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டு எல்லாத் தொழில்களும் தேசியமயமாக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, என்னிடம் ஹெவி எண்டார்ஸ் மெண்ட் உள்ள மோட்டார் லைசன்சு இருக்கிறது. ஆக கம்யூனிச நாட்டிலும் வேலை கிடைக்கும் என்று கூறினேன்.

—நா. மகாலிங்கம்

(தொழிலதிபர்)


என் வாழ்க்கையில் ஆழ்ந்த பெருந்துன்பம் என்பது ஒரே ஒரு தடவைதான் வந்தது. அதாவது, என் மனைவி இறந்தபோது.

—டாக்டர் விஸ்வேஸ்வரையா


நான் சிறுவனாக இருந்தபோது தான் என் தகப்பனார் அல்லாமா ஆ, கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அரபு மொழியிலிருக்கும் குரானைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலையை எடுத்துக் கொண்டார். அவரோடு கூடவே இருந்ததனால் அதிலே எனக்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது. நாற்பது முறைகளுக்கு மேல் என் கையாலேயே குரான் முழுவதையும் எழுதியிருக்கிறேன்.

—முஸ்லீம் கட்சித் தலைவர் ஏ. கே. ஏ. அப்துல் சமத்

எனது ஊரில் இருந்து சினிமா பார்க்க மதுராந்தகமோ, அல்லது செங்கல்பட்டுக்கோ தான் வரவேண்டும். இரவோடு இரவாக சைக்கிளில் வந்துவிட்டு, இரவு காட்சியும் பார்த்தவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் வந்து படுத்துக் கொள்வேன். பார்த்த படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு பற்றியும் என் எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டு இருக்கும். உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, நாடகக்கதை ஆசிரியன் ஆகி சினிமா உலகுக்கு வந்தேன்.

—ஸ்ரீதர், திரைப்பட இயக்குநர் (14-1-1969)


என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால் திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையுமில்லை மூன்றாம் தேவையுமில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் சூம்பிப்போய், வயிறு மட்டும் பெருத்து வலுக்குறைந்து வாடியிருக்கும் தமிழ் நாடு வலுவடைய முடியும். திறமையற்றவர் களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதாவது செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் தூளாக்கிவிட அரசாங்கம் உத்திரவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், கட்டிடங்களிலிருந்த நிலத்தில் கலக்கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்கும் துணை செய்வதாகவுமிருக்கும்.

—கி. ஆ. பெ. விசுவநாதம்

1964 அல்லது 1965-ம் ஆண்டில் ஓய்வு பெற்று, ஐதராபாத்திலோ அல்லது வடக்கே எங்காவது ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றிருக்கிறேன்.

—கண்ணதாசன் (22-11-1962)

நான் அதிகமாகச் சொற்பொழிவாற்றுவதில்லை. நான் தலைவன் அல்லன். மனித சமுதாயத்தின் தொண்டன் நான்.

கான் அப்துல் கபார்கான் (8-10-1969)

இந்திய மண்ணிலிருந்து, 40 கோடி இந்தியர்களின் ஆதரவு இல்லாமலேயே தங்களுடைய எதிரிகளைத் தாக்கிப் போரிடப் போகிறோம் என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் நினைக்குமானால் அவர்களுக்கு அறிவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் போர் மக்களுடைய போர் என்ற எண்ணம் மக்களுடைய மனதில் உதிக்கவேண்டும். தங்களுடைய நாட்டுக்காகவும், தங்களுடைய சுதந்திரத்துக்காகவும் போரிடுவதாக அவர்கள் எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி மக்கள் நெஞ்சில் உண்டாகாத வரையில் எவ்வளவு தூரம் ரேடியோவிலும், பத்திரிகைகளிலும் பிரசாரம் செய்தாலும் பலன் இல்லை.

—சர்தார் வல்லபாய் பட்டேல் (8-8-1939)

(அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசியது.)

அபிவிருத்தி அடையாத தேசங்களுக்கு உதவி செய்யும் கொள்கைகளுக்கு-மார்க்கிசம், லெனிலிசம், ஸ்டாலினிசம், காரணம் என்று சொல்வதில் தவறில்லை.

—சர். சி. பி. ராமசாமி ஐயர், (6-6-1960)


தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே!

—ராஜாஜி (30.12.1942)

(காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.

இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திரபோஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது.

—நேரு (20.5-1928)

(பம்பாயில்)


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள்; அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.

—எம். ஆர். ராதா (31.8-1961)


கவசமிடப்பட்ட சாதனங்களில் அமர்ந்து மனிதன் வான வெளியின் தனிமையினுள் பறந்து செல்லும் ஒருநாள் விரைவிலேயே வரும். அப்போது அவன் உலகைச் சுற்றி வந்து செய்திகளை அனுப்புவான். ரப்பரால் ஆன உடையணிந்து முகமூடி தரித்து அவன் இவ்வாறு வானவெளியினுள் ஊடுருவிச் செல்லும்போது அது மனித சமுதாயத்தின் தலைவிதியையே மாற்றியமைத்து விடும்.

—எச். ஜி வெல்ஸ்.

பல பெரியோர்களால் பன்முறையும் நந்தனார் கல்லூரி விஷயமாகக் கேள்வியுற்றிருக்கிறேன். பல நாட்களாக இக்கல்லூரியைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் இருந்தும் வந்தது. இப்பொழுது இங்கு வரவேண்டுமென சுவாமி சகஜானந்தர் அன்போடு கேட்டுக் கொண்டமையால் வர நேரிட்டது. நந்தனார் வகுப்பினராகிய இச்சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமானால் அறிவோடும், அமைதியோடும் சமாதான வகையில் முயற்சிக்க வேண்டும். ஈண்டு அவ்வாறு நடைபெற்று வருகிறதெனத் தெரிந்து சந்தோஷமடைகிறேன். ஒரு வகுப்பினர் முன்னேற்றத்திற்கு எனைய வகுப்பினர் முயற்சிகள் செய்வதிலும், அந்த வகுப்பில் தோன்றியவர்களே முயற்சித்தால் விரைவில் பெரிதும் பயன்படும் என்பது எனது துணிபு. சுவாமி சகஜானந்தரைப் போல் பலர் தோன்ற வேண்டும். தற்போது இக்கல்லூரி ஓலைக்கட்டிடமாக இருக்கிறது. யான் இங்கு வந்தது மிகவும் ஆச்சரியமெனக் கூறினர். பெரு மாளிகையாயினும், சிறு குடிலாயினும் அன்பிருந்தாலொழியச் சிறப்புறாது. இங்கு அன்பு கமழ்வதால் பெரு மாளிகையினும் சிறப்பாகக் கருதுகிறேன்.

—இராமநாதபுரம் மகாராஜா ராஜா ராஜேஸ்வர சேதுபதி

(4-4-1927)

(சிதம்பரத்தில்)


அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டுமென்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடையார் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன். தமிழ் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும், அவற்றில் பழகல் வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல் தமிழரென்று வெளிக்குக் கூறிக் கொள்வோருக்கு வெட்கமில்லை யென்றே நான் கூறுவேன்.

— ஞானியாரடிகள்

(கந்தர் சஷ்டிச் சொற்பொழிவில்)

கவர்ன்மெண்டார் நமக்குச் செய்த நன்மைக்காக நாம் மிக்க நன்றி பாராட்டுகிரறோம். ஆனல் அவர்கள் எவ்வளவு நல்லெண்ணமுடையவர்களாயினும் அவர்களால் இராணுவ இலாகாவில் பயங்கரமானதும் சீர்ப்படுத்தக் கூடாததுமான தீங்கு நமக்கு ஏற்படும் பொழுது நாம் நன்றி பாராட்ட முடியாது. நம்முடைய சுபாவத்தைக் குறைத்து, வீர்யத்தை ஒடுக்கி க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த சூரர்களை குயில் பேனா ஓட்டும் ஆட்டு மந்தைகளாகச் செய்யும் பொழுது நாம் நன்றியுள்ளவர்களாயிருத்தல் அசாத்தியமானது.

—ராஜாராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாது காங்கிரஸ் மாநாட்டில்.)

பாரதத்தைப் போன்ற பெரியதொரு நாட்டில், அதிக உணவு உற்பத்திக்குத் திட்டமிடுவதைப் போன்றே, பிறப்பு விகிதத்திலும் ஒரு கண் வைத்திருப்பது அத்தியாவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

—டாக்டர் ராஜேந்திர பிரசாத்


மூச்சுவிடுதலின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சாதாரணமாக நாம் அறிவதில்லை. தடையில்லாமல் சரிவர சுவாசித்துக் கொண்டிருக்கும் வரையில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை. ஆனல் ஏதோ கோளாறினால் மூச்சுத் தடைபடும்போது, அதனால் ஏற்படும் சங்கடத்தை உடனடியாக உணருகிரறோம். அது அடியோடு நின்றுவிடுமானல், வாழ்வே நசித்துவிடுவதைப் பார்க்கிரறோம்; “மனிதன்” என்ற பெயரே போய் பிணம் என்ற பெயர் அதற்கு வந்துவிடுகிறது. அப்போதுதான் மனித வாழ்வுக்கு உயிர் நாடியாய் விளங்கிய மூச்சின் பெருமை நமக்கு விளங்குகிறது.

—கே. ராஜாராம் நாயுடு

(சென்னை பார்லிமெண்டரிக் காரியதரிசி)

சகல சம்பத்தையும் உடையவனுக்குச் சம்பந்தன்னனென்றே பேர். பிரபுவென்ற பேரில்லை. வித்தையை உடையவனுக்கு வித்துவானென்றே பேர். விவேகியென்ற பேரில்லே. கொடுக்கும் தகைமை உடையவர்கட்கே தாதாவென்றும், பிரபுவென்றும், வள்ளவென்றும் பேர்.

—சோ. வீரப்ப செட்டியார் (1902)

(நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)


கனவான்களே! என்னிடத்தில் எத்தனையோ பிழைகள் இருப்பினும், ஒரு சிறிது தைரியமும் இருக்கிறதென்று நினைக்கின்றேன். நான் இந்தியாவிலிருந்து மேற்றிசைக்கு ஒரு தூது மொழியுடன் சென்றிருந்தேன். அதை அமெரிக்கர் முன்னும் ஆங்கிலேயர் முன்னும் தைரியமாய் உரைத்தேன். இன்றைய விஷயத்தைத் துவக்குமுன் உங்கள் அனைவருக்கும் சில தைரியமான வசனங்களைச் சொல்ல விரும்புகிறேன். என்னை அதைரியப்படுத்தி, என் காரியவிர்த்தியை எதிர்த்து, கூடுமானல் என்னையும் நசுக்கி ஒழித்துவிட, சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இறைவன் திருவருளால் அவை ஒன்றும் சாயவில்லை. அத்தகைய முயற்சியின் பயன் எப்பொழுதும் அப்படித்தானே முடியும்.

—சுவாமி விவேகாநந்தர் (9–2–1897)

(சென்னை விக்டோரியா மண்டபத்தில்)


நான் ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக ஆறு டைரிகள் எழுதினேன். இப்போது ஒன்று தான் மிஞ்சி இருக்கிறது. டைரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால்தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்கு கிடைக்கவில்லை, திருவள்ளுவர் ஊர் எது என்று இன்னமும் தெரியவில்லை. திரு. வி. க., டாக்டர் வரதராஜுலு போன்றவர்களின் வரலாறு சரியாக கிடைக்கவில்லை.

— அறிஞர் அண்ணா (1 7-10-1967)

ஓணமும் தீபாவளியும் எனக்குப் பிடித்த பண்டிகைகள். அதற்கு அடுத்தபடி பொங்கல் நானே விமரிசையாகக் கொண்டாடுகிறேன். அதில், வேடிக்கை—உல்லாச அம்சங்கள் இல்லாததால், ஒரு தெய்வீகப் பண்டிகையாகக் கொண்டாடுகிறேன்.

—K. R. விஜயா


என்னுடைய பாட்டி, ஒரு மூட்டை நெல்லைக் குத்தி அரிசியாக்கிவிடுவார்கள். அவர்களுக்கு அவ்வளவு பலம் இருந்தது. ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் நோஞ்சான்களாக இருக்கிறார்கள். பின்னல் வேலைகள் செய்யும் அளவுக்குத்தான் அவர்கள் உடலில் பலம் இருக்கிறது. பெண்கள் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கடுமையாக உழைக்கவேண்டும். வீணாக அரட்டையடித்து நேரத்தை வீணக்கக்கூடாது. பக்தி புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிட வேண்டும்.

—முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் (29-12-1964

(சீர்காழியில் நடைபெற்ற மாதர் சன்மார்க்க சங்க மாநாட்டில்.)


மடங்கள் தம்முடைய நிலைமாறி வழக்குகளிலும் வியவகாரங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. அவைகளிலே அதிகமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவை வக்கீல்களின் பணப்பெட்டிகளாக இருக்கின்றன. நான் ஒரு மடத்து வக்கீலாக இருந்து கொண்டு மடத்து வக்கீல்களைக் குறை கூறுவது சரியில்லை யென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். மடங்களின் பழக்கம் ஏற்பட்டதனால் உண்மைகளை உணர்ந்து குறைகளை நீக்கிக் கொள்ளவேண்டும் என்றெண்ணியேதான் இதைச் சொல்கிறேன். மடங்கள் அறிவை விருத்தி செய்யும் விஷயங்களிலே பணத்தைச் செலவிடுவதுதான் நியாயம்.

—மதுரை மணி ஐயர் (1883-க்கு முன்)

(கும்பகோணத்திலுள்ள போர்ட்டர் டவுன் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)

எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.

— பெரியார் (1-1-1963)


சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நான், திரு. ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பாலமீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்து வந்தேன். காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துக்களையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களேப் போட்டிருக்கிறோம்.

— நடிகர் கே. சாரங்கபாணி (13-8-1972)


முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்சிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா? அல்லது வேறு ஏதேனும் சூழ்ச்சியினலா? என்றால், அருளும் அன்று; சூழ்ச்சியும் அன்று;முகமதியர் மட்டும் அல்லர், இந்துக்களும் திரெளபதை கோயில், முருகக் கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லே. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா. கையால் தீயை எடுக்கலாம்; ஆனல் அதனே வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும். காலில் தீயின் வெம்மை சிறிது தாழ்ந்தே சுடுமாதலின், அஃது இரண்டு மாத்திரை குடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம். தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.

— பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878-ஆம் ஆண்டில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_81-90&oldid=1009825" இலிருந்து மீள்விக்கப்பட்டது