தந்தை பெரியார், நீலமணி/போராட்டங்களும், எதிர்ப்புகளுமே பெரியாரின் அணிகலன்கள்

33. போராட்டங்களும்... எதிர்ப்புகளுமே- பெரியாரின் அணிகலன்கள்...

"ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில் தான், மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத் தொண்டு என்று வந்து விட்டால், அவை இரண்டையும் பார்க்கக் கூடாது."

- தந்தை பெரியார்

'பொழுது விடிந்தால், இன்றையப் போராட்டம் என்ன?'

இன்று எதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும், என்கிற எண்ணத்துடனேயே கண் விழிப்பது பெரியாருக்குப் பழகிப் போய் விட்டது. காரணம் - தமிழர்களின் நலனுக்காகப் போராடியும், எதிர்த்தும் சீர்திருத்த வேண்டிய எண்ணற்ற பணிகள், அவர் கண் முன்னே குவிந்து கிடந்தன. அவற்றைப் பற்றியே பெரியார் சதா சிந்தித்துக் கொண்டிருப்பார்.

1950 ம் ஆண்டு பெரியார் எழுதிய 'பொன்மொழிகள்' என்னும் நூலை அரசு தடைசெய்து; பெரியாருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதித்தது.

தமிழ் மக்களது கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு முறை இருந்து வந்தது.

இந்த முறை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பெரியார் வன்மையாகப் போராடினார். அத்துடன் -

இரயில் நிலையங்களின் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று போராடினார்.

இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்தனர்.

அதனால் -

இரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் முதலில் ஆங்கிலமும், அடுத்து தமிழும், கடைசியாக இந்தியும் இடம் பெற்றது. அதே போல -

ஹோட்டல்களின் பெயர்ப் பலகைகளில் இருந்த குறிப்பிட்ட சாதிப் பெயரையும் நீக்க வேண்டுமென்று எதிர்ப்புத் தெரிவித்தார். சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது. பெரியாரின் எண்ணம் ஈடேறியது.

1952 ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில், பெரியார் காங்கிரஸ் - வேட்பாளராக நின்ற இராஜாஜியை - ஆதரிக்காமல், கம்யூனிஸ்ட்டுக்காரருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துப் பிரசாரம் செய்தார். ஆனால், கம்யூனிஸ்ட் தோற்றது.

இராஜாஜி வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.

தமது ஆட்சியில், இந்தியைக் கொண்டுவர முயற்சி செய்தார். பெரியார் உடனே அதை எதிர்த்தார்.

மாணவர்களுக்குக் குலக்கல்வித் திட்டத்தைக் கொணர்ந்தார். அதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

- பாதி நாள் பள்ளியிலும், பாதி நாள் வீட்டிலும் இருந்து; பள்ளிப் படிப்புடன், தங்கள் குலத் தொழிலையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அத்திட்டம்.

இதற்கு மாணவர்களிடமிருந்தும், அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பிற்று.

அனைவரும், பெரியாரின் ஒத்துழைப்போடு அரசை தீவிரமாக எதிர்த்தனர்.

இதனால், இராஜாஜியின் மந்திரி சபை கவிழ்ந்தது. இராஜாஜி முதல் மந்திரிப் பதவியை இழந்தார் (குலக் கல்வித் திட்டம் கைவிடப் பட்டது). புராணக் கதைகளையும்; மக்களின் மூட நம்பிக்கைகளையும் இளம் வயதிலிருந்தே எதிர்த்து வந்தவர் பெரியார் -

1953 ஆம் ஆண்டு பிள்ளையார் விக்கிரக உடைப்புப் போராட்டத்தை நடத்தினார்.

தெய்வ நம்பிக்கை உடைய இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக, பெரியார் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

1954ல் அவ்வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டன.

1955 ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற புத்த மகாநாட்டின் அழைப்பை ஏற்று பெரியார் பர்மா சென்றார்.

பர்மாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட 'அவுஸ் சான்' னின் கல்லறைக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார்.

பர்மாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 17.1.1955 ல் சென்னை வந்தார்.

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்றும் -

கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்றும் பெரியார் தொடர்ந்து தனது கூட்டங்களில் பேசி வந்தார்.

27.12.1956 ஆம் ஆண்டு பெரியார் கண்ட கனவு நிறைவேறியது. பெரியார் விரும்பியபடியே தமிழை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேறியது. தமிழில் அர்ச்சனை செய்யவும் அரசு அனுமதியளித்தது.

பிறகு, சாதி முறைகளையும்; குல ஆசாரங்களுக்கும், பாதுகாப்புத் தரும் இந்திய அரசியல் சட்டத்தை பெரியார் எதிர்த்தார்.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதற்காக சிறை தண்டனை அடைந்தார் பெரியார்.